க்ரெஃபல்லோ: அனைவரும் விரும்பும் பூதம் – பஞ்சு மிட்டாய் பிரபு

வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

சிறார் புத்தகங்களில் தொடர் சங்கிலி கதைகள் என்றொரு வகை உண்டு. இரண்டு வயது குழந்தைகூட கதையினை நினைவில் வைத்துக்கொள்ளும். அதிலிருக்கும் தொடர்ச்சி, குழந்தையைப் பெரிதாக ஈர்க்கும். நமது நிலப்பரப்பில் நிறைய நாடோடி கதைகள் இந்த வகைமையில் அமைந்திருக்கும். “வாலு போச்சு கத்தி வந்தது..டும் டும் டும்” என்ற புகழ்பெற்ற நாட்டுப்புற கதை இந்த வடிவில்தான் இருக்கும். நமது நாட்டுப்புற கதைகள் மட்டுமல்ல, உலகிலுள்ள நிறைய நாடோடிக் கதைகளில் இந்த அம்சம் உண்டு.

அப்படி சீனாவில் சொல்லப்பட்ட கதையைப் புத்தகமாக மாற்றும் முயற்சியில்தான் க்ரெஃபல்லோ உருவாகியது என்கிறார் கதையின் ஆசிரியர் ஜூலியா. பசி கொண்ட புலி ஒன்று சிறுமி ஒருத்தியைத் துரத்துகிறது. அந்தச் சிறுமி தனது புத்திசாலிதனத்தால் புலியிடமிருந்து தப்பித்துச் செல்கிறாள். இந்தக் கதையில் சிறுமிக்குப் பதிலாக எலி இருக்கிறது, புலிக்குப் பதிலாக ஒரு கொடூரமான மிருகத்தை உருவாக்கத் திட்டமிட்டு அதுவே க்ரெஃபல்லோவாக உருமாறியுள்ளது. சரி வாருங்கள், சுருக்கமாக க்ரெஃபெல்லோ கதையைப் பார்ப்போம்.

Book: The Gruffalo Author: Julia Donaldson, Illustrator: Axel Scheffler First Edition: 1999

எலி ஒன்று காட்டினுள் நடந்து செல்கிறது, எலியினைக் கண்ட நரி அதனைத் தனது உணவாக்கி கொள்ள திட்டமிடுகிறது. நரி, எலியிடம் சென்று மதிய உணவிற்கு தன் வீட்டிற்கு அழைக்கிறது. நரியின் சதி திட்டத்தைப் புரிந்துகொண்ட எலி, தான் க்ரெஃபல்லோவை சந்திக்கப் போவதாக சொல்கிறது.

“க்ரெஃபல்லோ? அது என்ன ? “ என்று நரி கேட்க.

“க்ரெஃபல்லோவை தெரியாதா? அதுக்கு பெரிய நகம் உண்டு. அதுக்கு நரி வறுவல் என்றால் ரொம்ப பிடிக்கும்” என்று கற்பனையாகச் சொல்ல.

நரி, தப்பித்தால் போதுமென்று ஓடிவிடுகிறது.

நரியிடம் தப்பித்த எலி மேலும் காட்டுக்குள் செல்ல அடுத்ததாக ஆந்தை வருகிறது, அதன் பிறகு பா

ம்பு வருகிறது. ஒவ்வொருவரிடமும் தனது கற்பனையில் பயங்கரான உருவத்தை க்ரெஃபல்லோவை வர்ணிக்கிறது. இப்படியாக மூவரிடமிருந்த தப்பித்த எலி அடுத்ததாக நிஜமாகவே அது சொன்ன உருவத்திலே க்ரெஃபல்லோவை சந்திக்கிறது.

எலி கற்பனையில் உருவாக்கிய கதாப்பாத்திரம் நிஜத்தில் வருவதே இந்தக் கதையின் சுவாரஸ்யமான விசயம். க்ரெஃபல்லோ தற்போது எலியைச் சாப்பிட நினைக்கிறது. அதனைப் புரிந்துகொண்ட எலி, அதனிடம்…”இந்தக் காட்டிலே நான்தான் பயங்கரமான மிருகம். என்னைக் கண்டாலே அனைவரும் நடுங்குவார்கள்” என்று சொல்ல க்ரெஃபல்லோ சிரிக்கிறது. உடனே எலி க்ரெஃபல்லோவிடம் “நீ வேண்டுமானால் என்னுடன் வா, உனக்குக் காட்டுகிறேன்” என்று காட்டினுள் நடக்கிறது.

முதலில் பாம்பை சந்திக்கின்றனர், “ஆஹா! சொன்ன மாதிரியெஎ க்ரெஃபல்லோவை எலி கூட்டிட்டு வந்திடுச்சே” என்று பாம்பு நடுநடுங்கிப் போகிறது. அதுபோல ஆந்தையும் நரியும் பயந்து நடுங்கி செல்ல, க்ரெஃபல்லோ எலியை நினைத்து பயப்படுகிறது. பயந்து காட்டினுள் ஓடி ஒளிந்துகொள்கிறது.

எலி நிம்மதி பெருமூச்சுடுன் தனது உணவான பழ கொட்டையச் சாப்பிடுவதாகக் கதை முடிகிறது.

இந்தப் புத்தகம் வெளியாகி 34 வருடங்கள் ஆகியும், இன்றும் இந்தப் புத்தகம் குழந்தைகள் மத்தியில் பிரபலாக உள்ளது. இதுவரை 100மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு, சுமார் 17மில்லியன் (சுமார் 1.7 கோடி) புத்தகங்கள் விற்பனையாகியுள்ளது. அதோடு மட்டுமல்லாமல், இந்தக் கதை அதிகமாக நாடக வடிவிலும், பாடலாகவும், ஏன் திரைப்படமாகவும் வெளிவந்துள்ளது.

ஆரெஞ்சு நிற கண்கள், பெரிய நகம், அதன் மூக்கின் மேலே விஷ மரு ஒன்றும் உண்டு, முட்கள் நிரைந்த முதுகு ..இப்படியாக பெரும் பயத்தினை தரும் உருவம் என்றாலும் அதனை அனைவரும் விரும்பும் பூதம் என்று குறிப்பிடுகிறார் புத்தகத்தின் ஆசிரியர் ஜூலியா டொனால்ட்சன். கதையின் ஆசிரியர் மற்றும் ஓவியரும் ஒரு குழுவாக இணைந்து வேலைச் செய்தால் எவ்வளவு பெரிய வெற்றியைப் பெறலாம் என்பதற்கு இந்தப் புத்தகமும் ஓர் உதாரணமாக இருக்கிறது.

இந்தக் கதைக்கான க்ரெஃபல்லோவை பல்வேறு உருவங்களாகக் கற்பனை செய்து முயற்சித்துள்ளார் ஓவியர் ஆக்செல். எழுத்தாளர் ஜீலியாவும் ஓவியர் ஆக்செலும் இங்கிலாந்துதான் என்றாலும், அவர்கள் இருவரும் சற்று தொலைவில் வசித்ததால் கடிதம் வழியாகவே தொடர்புக்கொண்டு க்ரெஃபல்லோவின் இறுதி உருவை முடிவுசெய்துள்ளனர். (இதை வாசித்ததும், குழந்தை கவிஞர் அழ.வள்ளியப்பாவின் வாழ்கை அனுபவங்கள் நினைவிற்கு வந்தது, அதுமட்டுமல்ல தற்காலத்தில் சிறார் கலை இலக்கியத்தில் இயங்கும் நண்பர்கள் அனைவருமே நினைவிற்கு வந்தனர்) ஓவியர் முயற்சித்த சில மாதிரிகளை பிரிட்டிஷ் நூலகம் ஆவணமாக தங்களது இணையத்தில் வைத்துள்ளது. கடிதங்களின் வழியே எப்படியெல்லாம் தொடர்புகொண்டு இதனைச் செய்திருப்பார்கள் என்பது மிகவும் ஆச்சரியமாக உள்ளது.

இந்தப் புத்தகத்தைத் தொடர்ந்து அவர்கள் மீண்டும் சில வருடங்கள் கழித்து, “க்ரெஃபல்லோவின் பிள்ளை” என்ற புத்தகத்தை உருவாக்கினார். தனது அப்பாவின் அறிவுரையை மீறி க்ரெஃபல்லோவின் பிள்ளை எலியைச் சந்திக்க காட்டிற்குள் செல்வதாகக் அமைந்திருக்கும். தனது கற்பனையில் உருவாகியிருந்த எலியின் உருவத்தை நேரில் காணும் பயணமே இந்தக் கதை. மிகவும் அழகான ஒரு தொடர்ச்சி இந்தக் கதை.

ஜூலியா டொனால்ட்சான் – சுமார் 200 புத்தகங்களை எழுதியிருக்கிறார். எழுத்தாளர்களுக்குத் தரப்படும் உயரிய விருதுகளின் ஒன்றான “Children’s Laureate” விருதினை 2011-13க்கான வடருத்தில் பெற்றார். இவரது குழந்தைப் பருவம் லண்டனில் அமைந்தது. சிறுவயது முதலே பாடல்களிலும் ஆர்வம் கொண்டவராக இருந்தார். ஆசிரியராக பணிபுரிந்துக்கொண்டே, கதைகள் எழுதுவது, குழந்தைகளுக்கான பாடல்கள் உருவாக்குவது என சிறார் கலை-இலக்கியம் சார்ந்தும் இயங்கினார். பிபிசி தொலைக்காட்சிக்காக இவர் பாடிய A Squash and a Squeeze என்ற பாடல் 1993ஆம் அண்டு புத்தகமானது. அதற்கும் ஓவியர் ஆக்சல் அவர்களே வரைந்தார். அதன் பிறகு அவர் பள்ளிகளுக்காக பல நாடகங்களை உருவாக்கினார். அதன் பிறகு 1999 ஆம் ஆண்டிலே க்ரெஃபல்லோ உருவாகி அவரது வாழ்வில் பெரும் திருப்பத்தை உருவாக்கியது. ஜூலியா டொனால்ட்சான் படக் கதைகள் எழுதுவது போலவே டீன் குழந்தைகளுக்கும் கதைகள் எழுதியுள்ளார். கல்வி சார்ந்தும் புத்தகங்களை உருவாக்கியுள்ளார். அது மட்டுமல்ல அவர் சிறந்த கதைச் சொல்லி மற்றும் நாடகக் கலைஞரும் கூட. தற்போது அவரது இணையத்தில் நிறைய வீடியோக்களைப் பதிவு செய்துவருகிறார், தொடர்ந்து பயணித்தும் வருகிறார்.

ஜூலியா மற்றும் அக்சல் இருவரும் இணைந்து மட்டும் 20க்கும் மேலான புத்தகங்களை உருவாக்கியுள்ளனர். இவரது கதைகள் அனைத்துமே குறைந்த வரிகள் கொண்டவை. ஓவியங்கள் வழியே நிறைய பேசக் கூடியவை. இவரது கதைகள் தற்போது குறும்படமாகவும் கிடைக்கின்றன. இவரது படைப்புகளில் முக்கியமான சில படைப்புகள்,

1. The Gruffalo
2. The Gruffalo’s child
3. Zog
4. Zog and the Flying Doctors
5. The Highway Rat
6. The Snail and the whale
7. Room on the broom
8. The ugly five
9. The smeds and smoos
10. Stick Man

இந்தக் கதையின் வரி அமைப்பு ரெமிங் வடிவத்திலும், மீண்டும் மீண்டும் சில வரிகள் தொடர்ந்து வருவதாகவும், சங்கிலி தொடராக மிருகங்களைச் சந்தித்து பேசுவதாக இருப்பது இந்தப் புத்தகத்தின் வெற்றியின் ரகசியம். ஆங்கிலத்தில் ஒரு கதை வெற்றி அடைந்துவிட்டால் அந்தப் புத்தகம் பல வடிவங்களில் வெளிவரும். அதுவும் குழந்தைகளின் படப் புத்தகம் என்றால் கேட்கவா வேண்டும். என்னிடம் உள்ளப் புத்தகத்தில் பொம்மலாட்டம் வடிவில் கதையைக் குழந்தைகள் சொல்லும் விதமாக, காட்டினைக் கொண்ட பின்புற அமைப்பு அட்டையுடன் வந்திருந்தது. எலி, நரி, ஆந்தை, பாம்பு மற்றும் க்ரெஃபல்லோ தனியே நிற்கும்விதமாகக் கொடுத்திருந்தனர். கதையை வாசித்து முடித்ததுமே எங்கள் வீட்டில் அழகான பொம்மலாட்டமும் அரங்கேறியது. குழந்தைகள் தாங்களாகவே ஒரு கதையைக் கேட்டதும் அதனை மீள் உருவாக்கம் செய்வது என்பது எவ்வளவு பெரிய வெற்றி. அந்த வெற்றிக்கு முழு சொந்தகாரர்களாக ஜூலியாவும் ஆக்செல்லும் இருக்கிறார்கள்.

குறிப்பு:

  • www.bl.uk
  • www.gruffalo.com
  • www.juliadonaldson.co.uk
  • axelscheffler.com
  • https://www.youtube.com/@GruffaloWorld

Leave a comment