லண்டன் அருகே டோவர் என்ற ஊரிலுள்ள வெயிட் க்ளிஃப் என்ற சுற்றுலா தளத்திற்கு சென்றிருந்தோம். வெயிட் க்ளிஃப் என்பது வெந்நிற சுன்னாம்பு நிறைந்த செங்குத்தான மலை. 350அடி உயரமும் 13கிமீ அகலமும் கொண்ட மலை. மலை ஏற்றம் செய்ய அழகிய பாதையும் அமைத்திருந்தார்கள். குழந்தைகளுடன் 30நிமிடத்தில் ஏறிடலாம். கடலை ஒட்டிய மலை என்பதால், கப்பல்கள் வந்துபோவதை அழகாக ரசிக்க முடியும். டோவர் என்ற இடம் ப்ரான்ஸ் நாட்டை நோக்கி அமைந்திருக்கும். அதனால் அங்கிருக்கும் கப்பல் துறைமுகம் மிகவும் பரப்பரப்பாக இயங்கும். கடலில் பெரிய மதில்சுவர் அமைந்திருக்கும். அதனுள் கப்பல்கள் வருவதும் போவதுமாக இருக்கும். கடலையும் கப்பல்களையும் ரசித்துக்கொண்டே மலை எறினோம். மலை ஏறி சிறிது தூரம் நடந்ததும் ஒரு கஃபே இருந்தது. அருகில் சென்றதும் களைத்திருந்த கால்களுக்கு ஓய்வு கொடுக்கலாம் என்று பார்த்தால், அங்கு பழைய புத்தகங்களைக் காட்சிப்படுத்தி வைத்திருந்தனர். ஒவ்வொரு புத்தகத்திற்கும் விலையை அவர்களே குறித்து வைத்திருந்தனர். நுழைவாயிலில் ஒரு உண்டியலும் இருந்தது. காசை உண்டியலில் போட்டுவிட்டு, புத்தகங்களை நாமே எடுத்துக்கொள்ளலாம். அப்படி சுற்றுலா சென்ற இடத்தில் எங்களுக்குக் கிடைத்தப் புத்தகம்தான் “Pink is for Boys”.
பிங் – பெண்களுக்கான நிறம் என்பதை இந்தச் சமூகம் தொடர்ந்து பல்வேறு விதமாகக் குழந்தைகளின் மனதில் அழுத்தமாகப் பதிவு செய்கிறது. அதே போல் விளையாட்டுகளிலும் கார் பொம்மை என்றால் ஆண் குழந்தைகளுக்கு என்றும் அதுவே சமையல் சொப்பு சாமாண்கள் என்றால் அது பெண் குழந்தைகளுக்கு என்றும் மீண்டும் மீண்டும் சொல்லி தருகிறோம். நமது ஊரில்தான் இப்படியென்றால் இலண்டன் போன்ற வளர்ந்த நாடுகளிலும் இதே நிலையே உள்ளது. இலண்டன் பள்ளிகளில் வருடந்தோறும், புத்தகத் தினம் கொண்டாடப்படும். குழந்தைகளைப் புத்தகத்தில் வரும் பிடித்தமான கதாப்பாத்திரத்தினை வேசமிட்டு வரச் சொல்வார்கள். நான் கவனித்த வரையில், பெண் குழந்தைகள் என்றாலே டிஸ்னி இளவரசிகளாகவும், ஆண் குழந்தைகள் என்றால் சூப்பர் ஹீரோக்களாகவும் அதிகம் வேசமிட்டு வருகின்றனர். நீண்ட நாட்களாகவே இதுப்போன்ற Steriotypeகளை உடைக்கும் படைப்புகள் தேடிக்கொண்டேயிருந்தேன். அப்படியான ஒரு புத்தகம்தான் இது. அதுவும் 5வயதினருக்கான புத்தகமாக வந்திருப்பது இதன் கூடுதல் சிறப்பு.
“பிங் நிறம் என்பது ஆண்களுக்கும் பெண்களுக்கும் மற்றும் புஸ் என்றிருக்கும் ஆடைகளுக்கும்”
“நீல நிறம் என்பது பெண்களுக்கும் ஆண்களுக்கும் மற்றும் விளையாட்டு அணி சீருடைக்கும்”
என ஒவ்வொரு பக்கத்திலும் ஒவ்வொரு நிறமும் அதற்கான விசயங்களும் இடம் பெற்றிருக்கும். பிங், நீலம், மஞ்சள், பச்சை, சிவப்பு, ஆரெஞ்சு, ஊதா, ப்ரெவுன், கருப்பு-வெள்ளை என ஒவ்வொரு நிறத்தைக் குறிப்பிடும்போது அது “is for Boys and Girls” என்று மீண்டும் மீண்டும் வருவதாக இருக்கும். வாசிப்புப் பழக்கத்தில் துவக்க நிலையிலுள்ள குழந்தைகளும் இதனை ரசித்து அவர்களே வாசிக்கத் தூண்டும் வகையில் வடிவமைத்திருப்பார்கள்.
இறுதியாக, அனைத்து நிறங்களும் அனைவருக்குமானது, ஆண்கள், பெண்கள், பூக்கள், வண்ணத்துப்பூச்சிகள் மற்றும் வானவில் என அழகாக முடித்திருப்பார்கள். இந்தப் புத்தகத்தை குழந்தைகள் வாசித்து முடிக்கும் போது, “அட ஆமாம்! எல்லா நிறங்களும் எல்லோருக்கும்தானே” என்று அவர்களாகவே கட்டாயம் சொல்வார்கள்.
சரி வாருங்கள், நிறம் தொடர்பாக இன்னொரு புத்தகத்தையும் இந்தக் கட்டுரையில் பார்த்துவிடலாம்.
“இந்தச் சிறார்ப் புத்தகத்தை நீங்கள் அவசியம் படிக்க வேண்டும். மிகவும் அற்புதமான புத்தகம்” என்று நூலகத்தின் மேற்பார்வையாளர் தனது சக நண்பரிடம் சொன்னது என் காதில் விழுந்தது. “அப்படியென்ன புத்தகம் அது” என்ற ஆர்வம் என்னுள் தொற்றிக்கொண்டது. ஆர்வம் தாளாது அவரிடமே சென்று அது என்ன புத்தகம் என்று கேட்டுவிட்டேன். அவரும் ஒரு புன்னகையுடன் எனக்கு அறிமுகம் செய்த புத்தகம்தான் “The Day the Crayons Quit”. வெள்ளை நிற பின்னனியில் நான்கு க்ரேயான்கள் போராட்ட பதாகைகளைத் தாங்கிப் பிடித்துக்கொண்டிருப்பதாக இருக்கும் அட்டைப்படத்தைப் பார்த்ததுமே வாசிக்க தூண்டியது. அமெரிக்காவைச் சேர்ந்த எழுத்தாளர் ட்ரூ டேவால்ட் மற்றும் ஓவியர் ஓலிவர் ஜெஃப்ர்ஸ் என்பவரும் இணைந்து இந்தப் புத்தகத்தை உருவாக்கியுள்ளனர். மேலும் சிறுவர்களின் ஓவியங்களையும் பயன்படுத்தியுள்ளதாக ஓவியர் குறிப்பிட்டுள்ளார். உண்மையில் குழந்தைகளின் ஓவியங்கள் இந்தப் புத்தகத்திற்கு அழகாகப் பொருந்தியுள்ளன.
டன்கன் என்ற சிறுவன் தனது க்ரேயான்களை காணாமல் தேடுகிறான். கிரேயான்கள் இருந்த இடத்தில் அவனது பெயரிட்ட சில கடிதங்களே அவனுக்குக் கிடைக்கின்றன. ஒவ்வொரு க்ரேயானும் இனி தாங்கள் வரைய போவதில்லை என்று டன்கனுக்குக் கடிதம் எழுதி வைத்து சென்றுவிட்டன. அப்படி க்ரேயான்கள் தனித்தனியே எழுதிய கடிதங்களே இந்தப் புத்தகம். ஒரு பக்கம் க்ரேயான் எழுதிய கடிதம், இன்னொரு பக்கம் அந்த க்ரேயான்களைப் பயன்படுத்தி குழந்தைகள் வரைந்த ஓவியங்கள் என புத்தகம் மிகவும் அழகாக இருக்கும். கடிதம் என்பதால் ஓவியரே தனது கைப்பட ஒவ்வொரு வண்ண க்ரேயான்களைப் பயன்படுத்தி எழுதியிருப்பார்.
முதலில் சிவப்பு க்ரேயான் எழுதிய கடிதம்;
ஹே டன்கன்,
நான்தான் சிகப்பு க்ரேயான். நாம் இதை பேச வேண்டும். நீ என்னை மற்ற க்ரேயான்களை விடவும் அதிகமாக வேலை வாங்குகிறாய். வருடம் முழுதும் தீயணைப்பு வண்டி, ஆப்பிள், ஸ்ட்ராபெரி மற்றும் அனைத்துவிதமான சிவப்பு பொருட்களுக்கும் வண்ணம் தீட்டி தீட்டி நான் சோர்ந்து போய்விட்டேன். விடுமுறை நாட்களில்கூட நான் வேலைப் பார்க்கிறேன். கிருஸ்துமஸில் கூட கிறுஸ்துமஸ் தாத்தாவிற்கு வண்ணம் தீட்டச் செய்கிறாய்.
எனக்கு ஓய்வு வேண்டும்!
உனது அன்புள்ள அதிகமாக வேலை செய்த நண்பன்,
சிவப்பு க்ரேயான்.
அடுத்து ஊதா க்ரேயான் – ட்ராகனுக்கு வண்ணம் தீட்டும் போது கோட்டைவிட்டு வெளியே வண்ணம் தீட்டுவதாகக் வருத்தப்படுகிறது. அடுத்து Biege வண்ண க்ரேயான். அனைவரும் தன்னை Light Brown என்று அழைப்பது பிடிக்கவில்லை என்கிறது. வெள்ளை நிற க்ரேயான் தன்னை யாருமே பயன்படுத்துவதில்லை என்கிறது. இப்படியாக Grey, கறுப்பு, பச்சை, மஞ்சள், ஆரெஞ்சு, நீலம், Pink, Peach நிறம் என ஒவ்வொரு பக்கமும் ஒவ்வொரு கடிதமாகப் புத்தகம் நகர்கிறது. அடுத்து என்ன என்ற ஆர்வத்தை வாசகர்களுக்கு இந்தப் புத்தகம் ஒவ்வொரு பக்கமும் தொடர்வது மிகவும் சுவாரஸ்யமானது.
எனக்கு மிகவும் பிடித்தது, மஞ்சள் நிறமும் ஆரெஞ்சு நிறமும் தாங்கள்தான் சூரியனின் நிறம் என்று விளையாட்டாகச் சண்டைப் பிடிக்கும் கடிதங்கள். அதற்கடுத்துக் கறுப்பு க்ரேயான் எழுதும் கடிதமும் சுவாரஸ்யமானது, அதென்ன என்னை வைத்து கடற்கரையில் விளையாடும் பந்தை (Beach Ball) வரைந்துவிட்டு, அதற்கு பல வண்ணங்களில் வண்ணம் தீட்டுகிறாய்? என்னை மட்டும் வண்ணம் தீட்ட தவிர்த்துவிடுகிறாய். என்றாவது ஒரு நாள் கடற்கரை பந்திற்கு கறுப்புநிறத்தை வண்ணம் தீட்டிருக்கிறாயா? என்று கேட்பதாக அமைந்திருக்கும்.
கடைசியாக வரும் க்ரேயானான பீச் நிற கிரேயான் டப்பாவினுள்ளே அமர்ந்து எட்டிப்பார்ப்பதாக இருக்கும். அதன் கடிதத்தில்,
ஹே டன்கன்,
நான்தான் Peach நிற க்ரேயான். என் மீது ஒட்டப்பட்டிருந்த பேப்பரை ஏன் கிழித்தாய்? நான் ஆடையில்லாமல் இருக்கிறேன். என்னால் டப்பாவைவிட்டு வெளியே வரமுடியவில்லை. எனக்கு உள்ளாடைகூட இல்லை. ஆடையில்லாமல் உன்னால் பள்ளிக்குச் செல்ல முடியுமா என்ன? எனக்கு முதலில் ஆடை வேண்டும். உதவி செய்யவும்.
இப்படிக்கு,
உனது ஆடையில்லாத நண்பன்,
Peach கிரேயான்.
அதன்பிறகு டன்கன் யோசிக்கிறான், அனைத்துக் கிரேயான்களையும் மகிழ்விக்கும் வகையில் ஒரு பெரிய ஓவியத்திற்கு வண்ணம் தீட்டுகிறான். அதில், வானம் மஞ்சள் நிறத்தில் இருக்கிறது, வானவில் கறுப்பு நிறத்தில் இருக்கிறது, திமிங்கலம் ஆரெஞ்சு நிறத்தில் இருக்கிறது. அவனது வண்ணம் தீட்டலுக்கு வகுப்பில் அழகிய ஸ்டார் ஸ்டிக்கரும் பரிசாகக் கிடைக்கிறது என்று கதை முடிகிறது.
2013ல் வெளியான இந்தப் புத்தகத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது, சிறந்த படப் புத்தகத்திற்கான விருதையும் பெற்றுள்ளது. இந்தப் புத்தகத்தைத் தொடர்ந்து, இதேப்போன்று கடித வடிவில் THE DAY THE CRAYONS CAME HOME என்ற புத்தகமும் வெளியாகியுள்ளது. இந்தப் புத்தகத்தினை ஒரு பள்ளியில் நாடகமாக நடத்தியிருந்த வீடியோ ஒன்றைப் பார்த்தேன். மிகவும் அருமையாக இருந்தது. நாடகத்திற்கு ஏற்ற புத்தகம் இது.
இந்த இரண்டு புத்தகங்களும், வாசிக்கும் போது குழந்தைகளுக்கு மிகவும் பரவசம் தருவதாக் இருக்கும். எனது முதல் நாவலான “எனக்குப் பிடிச்ச கலரு” புத்தகமும் இதே பாணியில் வண்ணங்களின் மாய உலகிற்கு குழந்தைகளை அழைத்துச் செல்லும்விதமாக அமைந்திருக்கும். அந்த வகையில் இந்த இரண்டு புத்தகங்களுமே எனக்கு மிகவும் நெருக்கமாக இருந்தன. அதுவும் குறிப்பாக “Pink is for Boys” புத்தகத்தைப் பார்த்ததுமே, பஞ்சு மிட்டாய் சிறார் நிகழ்விற்காக நாங்கள் உருவாக்கிய பாடல் நினைவிற்கு வந்தது. நிறம் என்பது அனைவருக்கும் பொதுவானதே! என்பதை ஒரு குதூகலமான பாடலாக எழுதி ஆடிப் பாடி மகிழ்ந்த தருணங்கள் கண் முன்னே விரிகிறது.
பார்பி பொம்மை யாருக்கு பிடிக்கும் ? – ராஜேஸ்
அவனுக்கு பிடித்தது பார்பியாம்
அவளுக்கு பிடித்தது குட்டி கார்
பிங்க் வண்ண நிறத்திற்கு
சிறுவன் சிறுமி ஒன்றே தான்
அறிவும் அழகும் பொதுவாகும்
இதுவே இயற்கை விதியாகும்
அழகு தோகை ஆண் மயிலாம்
பாயும் வேட்டை பெண் சிங்கம்
அம்மா வேலைக்கு சென்றிடலாம்
அப்பா வீட்டில் சமைத்திடலாம்
எதுவும் எவரும் செய்திடலாம்
அனைவரும் சமமாய் வாழ்ந்திடலாம்
பல்லாங்குழி சொக்கட்டான்
சிறார் ஆடும் விளையாட்டாம்
பச்சை குதிரை கிரிக்கெட்டு
கலந்து நாமும் ஆடிடலாம்!