பஞ்சு மிட்டாய் – பேருக்கு ஏத்தமாதிரி புக்கும் இனிக்குது!

வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

சிறார் கதைகள் குறித்த கூட்டமொன்று திருவாரூரில் சில வருடங்களுக்கு முன் நடந்தது.அந்தக் கூட்டத்தின் வழியாகத்தான் முதன் முதலில் பஞ்சுமிட்டாய் பிரபு தோழரை சந்தித்தேன்.

பெங்களூரில் ஒரு அபார்ட்மென்ட்டில் இருந்த குழந்தைகளுக்காக சிறு சிறு கூட்டங்களை நடத்தி அதன் தொடர்ச்சியாக குழந்தைகளது படைப்புகளை தொகுத்து மின்னிதழாக வெளியீட்டு குழந்தைகளை உற்சாகப்படுத்திய அவரது முயற்சி பெரும் பாராட்டுக்குரியது.இன்று அவரது முயற்சியால் பஞ்சுமிட்டாய் இதழ் 14 ஐ வந்தடைந்துள்ளதில் மகிழ்ச்சி.

இதற்குமுன் சில பஞ்சுமிட்டாய் இதழ்களையும் இந்த மாதம் இரு இதழாக வந்துள்ள 13,14 இதழ்களை மட்டுமே வாசித்து உள்ளேன்.
குழந்தைகளது படைப்புகளால் மட்டுமே பெரும்பாலான பக்கங்கள் நிரம்பி இருக்கின்றன.2 வயது குழந்தைகள் முதல் 14 வயது வரையுள்ள குழந்தைகளது உணர்வுகள் படைப்புகளுக்கான தளமாக பஞ்சுமிட்டாய் இருக்கிறது.

எளிமையாக ஒரே வாசிப்பில் குழந்தைகள் வாசித்து முடித்துவிடும் வகையில் இதழ் இருப்பது சிறந்த சிறார் இதழுக்கான வெற்றி.அப்படியான குழந்தைகளது வாசிப்பு அனுபவத்தை பெற்றஇருக்கும் இதழ் பஞ்சுமிட்டாய்.

13,14 இதழ் வெளியீட்டை திருவாரூர் கூத்தாநல்லூர் நூலகத்தில் குழந்தைகள் நடத்தியிருந்தார்கள்.நூலகர் திரு செல்வக்குமார் அவர்கள் வழிநடத்தியிருந்தார்.30 குழந்தைகள் கூடிய அந்த சிறுநிகழ்வில் ஒவ்வொரு குழந்தைகளது வாசிப்பு அனுபவமும் பகிர்வும் சிறப்பாக இருந்தது.வார்த்தைகளால் இங்கு அதனை நிரப்புவது எனக்கு கடினமே.அப்படியொரு வாசிப்பு அனுபவ கூட்டம் அது.குழந்தைகளை வாசிக்க வைப்பதே சிக்கல் என்று கவலைப்பட்டுக்கொள்ளும் நேரத்தில் ஒரு எளிமையான இதழ் சர்வசாதாரணமாய் அதனை செய்து முடித்துள்ளது.நிகழ்வை அவர்கள் துவங்குவதற்கு முன் சில குழந்தைகள் தானாக நண்பர்களுக்குள் சில பாடல்களை பாடி சந்தோசப்பட்டுக் கொண்டிருந்தார்கள்.வாசிப்பு அனுபவங்களை அலங்காரமற்ற மேடைக்கேற்ற எந்தவித பேச்சு நடையுமின்றி எதார்த்தமாய் இதழ் குறித்து பேசிக்கொண்டிருந்தார்கள்.

டேய் எனக்கு இதுதான்டா ரொம்ப பிடிச்சிருக்கு. எதுடா இதுதான். இங்கா சொல்லு… அவர்கள் சொல்லிக்கொண்டார்கள். அவர்கள் ஒரு புத்தகம் குறித்து எவரின் வலியுறுத்தலுமின்றி பேசிக்கொண்டிருந்தார்கள்.அந்த வகையில் குழந்தைகளுக்கு ஏற்ற ஒரு சிறார் இதழாக பஞ்சுமிட்டாய் உள்ளது என்பது உண்மை.

அதன் வடிவமைப்பும் கலர் கலரான பக்கங்களும் குழந்தைகளுக்கு பிடித்திருக்கிறது. ஒரு குழந்தை சொன்னான் புக்கு பளபளன்னு தொட்டா வழுக்கி விழுறமாதிரி நல்லா இருக்குனு… எதையெல்லாம் அவர்கள் ரசிக்கிறார்கள் என அன்று எனக்குபட்டது.

இந்த புத்தகமும் எனது பாடப்புத்தகத்தை போல இல்ல.எனக்கு பிடிச்ச மாதிரி இருக்கு, இதை படிச்ச பிறகுதான் தோனுச்சு நாமளும் கதை எழுதலாமே பாட்டு எழுதலாமேனு… இதுல உள்ள பாட்டும் கதையும் ஒன்னும் அவ்வளவு கஷ்டமில்ல.டக்குன்னு படிச்சுட்டேன்…

இப்படி பல விமர்சனங்களை நான் கேட்டேன்.வந்திருந்த அனைத்து குழந்தைகளும் சொல்ல ஏதேனும் ஒரு விசயம் பஞ்சுமிட்டாயில் இருந்தது.
ஒரு சிறுவன் இப்படி சொன்னார்.பஞ்சுமிட்டாய் நாளை வருது. எல்லாரும் வாங்கிட்டு வீட்டுக்கு போங்கன்னு செல்வக்குமார் சார் சொன்னார். நான் மிட்டாய்னுதான் நினைச்சேன். ஆனா அது புக்கு… பேருக்கு ஏத்தமாதிரி புக்கும் இனிக்குது…

– மனத்துணைநாதன்

அரசுப் பள்ளி ஆசிரியர்

Leave a comment