புதிய கல்வி ஆண்டில் பயணிக்கவுள்ள மாணவச் செல்வங்களுக்கு வாழ்த்துகள்!
’ஒரு மனிதன் தனது இருப்பு, செயல் திறன், ஆற்றல் ஆகியவற்றைக் குறித்து சரியாகப் புரிந்துகொள்ள கல்வி மட்டுமே உதவும்’ – பாபாசாகேப் அம்பேத்கர்.
இந்த உலகில் சூரியனைவிட அதிக வெளிச்சம் தரும் ஒன்று என்றால், அது கல்விதான். அதனால்தான், கற்பித்தலும் கற்றலுக்கும் நம் தமிழ்ச் சமூகம் எல்லா காலத்திலும் அதிக முக்கியத்துவம் தந்து வந்திருக்கிறது. அது இப்போதும் தொடர்கிறது. இந்திய அளவில் உயர்கல்விக்குச் செல்லும் மாணாக்கர் விகிதம் அதிகம் உள்ள மாநிலம் தமிழ்நாடுதான். கரோனா பொது முடக்கக் காலத்தில் கல்வியில் இருந்த தேக்கநிலை மெல்ல மெல்ல நீங்கி வருகிறது.
கல்வி சிறந்த தமிழ்நாட்டில் புதிய கல்வி ஆண்டு தொடங்கியுள்ளது. மாணக்கர்கள் தங்கள் புதிய வகுப்பறையை, புதிய ஆசிரியரை, புதிய நண்பர்களைச் சந்திக்க ஆவலோடு இருக்கின்றனர்.
தோழமையின் கனிவோடு பாடங்கள் கற்பிக்கும்போது, அதை மனத்தில் இருத்திக் கற்றுக்கொள்ளும் சூழலும் இயல்பாக அமையும். இதை நன்கு உணர்ந்த ஆசிரியர்களும் பாடத்தோடு பல்வேறு விஷயங்களைக் கற்றுகொடுக்கத் தயாராக இருக்கின்றனர்.
தொடங்கியுள்ள புதிய கல்வி ஆண்டில் நம்பிக்கையோடு கற்பித்தலிலும் கற்றலிலும் நுழைந்துள்ள ஆசிரியர்கள் – மாணாக்கர்களுக்கு தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் மனப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துகொள்கிறது.
கற்றுக்கொள்வதற்கு எல்லையே கிடையாது என்பதால், மாணக்கர்களின் வாசிப்புப் பழக்கத்தை மேம்படுத்த தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை, தேன்சிட்டு, ஊஞ்சல் இதழ்கள், பாடநூல்கள் கடந்தும் வாசிப்பதற்கான தனி நூல்களையும் வெளியிட்டுள்ளது. அதை முறையாகக் கொண்டுச்செல்ல வாசிப்பு இயக்கம், சிறார் இலக்கியத் திருவிழா, திரைப்படம் திரையிடல் எனப் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. அதற்காக பாராட்டுகளையும் நன்றிகளையும் தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் தெரிவித்துக்கொள்கிறது.
அரசின் இந்த முயற்சிகள் எல்லாம், மாணவர்களைத் திசைதிருப்ப வைக்கும் பல்வேறு தீயப் பழக்கங்களில் இருந்து விடுபட வைக்கும் என்ற நம்பிக்கையும் பிறந்துள்ளது. எனவே, இந்தத் திட்டங்களையும் இவை போன்ற புதிய திட்டங்களையும் இந்த ஆண்டிலும் முழுவீச்சில் செயல்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.
நன்றி.
உதயசங்கர்,
தலைவர், தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம்
சாலை செல்வம்,
செயலாளர், தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம்