நூற்றாண்டுக்கு முன் வாழ்ந்த ரொக்கேயா பேகத்தின் ‘பெண்ணியக் கனவு’ இந்த சுல்தானாவின் கனவு. இந்தியப் பெண் ஒருவர் எழுதிய முதல் அறிவியல் புனைவும்கூட. இந்தியன் லேடீஸ் மேகசின் இதழில் 1905ம் ஆண்டு வெளியான கதை இது. கதையில் பெண்களைப் பூட்டிவைக்கும் ஜெனானாவுக்கு எதிராக ஆண்களைப் பாதுகாக்கும் மர்தானா, நீரை வெளிமண்டலத்திலிருந்து நேரடியாக குழாய்கள் மூலம் உறிஞ்சி ராட்சத பலூன்களில் சேகரிக்கும் பெண்கள், வீட்டுக்குள் சமையலுக்குச் சூரிய ஒளி என அன்றைய பெண்களின் ரகசிய ஆசைகள், கற்பனைகளை உலகறியச் சொன்ன புனைவுக் கதை சுல்தானாவின் கனவு.
நூற்றாண்டுக்குப் பின்னர் தமிழாக்கம் காணும் மிக முக்கியமான படைப்பை ஓங்கில் கூட்டம் வெளியிட முன்வந்திருப்பது உண்மையில் பெரும் உவகையைத் தருகிறது. எழுத்தாளர் திவ்யா பிரபு குழந்தைகளுக்கும் புரியும் வண்ணம் மிக எளிய நடையில் ருசிபடச் சொல்லியிருக்கிறார். கதை சொல்லத் தொடங்கும் முன்னரே ரொக்கேயாவின் வாழ்க்கைக் குறிப்பை சுருங்கச் சொல்லிவிடுகிறார். ஜெனானாவுக்குள் சிறைபட்டுக்கிடந்த சராசரிப் பெண்ணான ரொக்கேயாவுக்குக் கிடைத்த கல்வி அவரை நூற்றாண்டு தாண்டியும் நம் முன் உயிர்ப்புடன் வைத்திருக்கிறது எனப் புரிந்துகொள்ள நூலின் முதல் பகுதி உதவுகிறது.
சுல்தானாவின் கனவைப் புரிந்துகொள்ள அன்றைய வங்கப் பகுதியையும் நாம் புரிந்துகொள்ளுதல் அவசியம். பெரும் நிலச்சுவான்தார்கள்கூட தங்கள் வீட்டுப் பெண்களை அடிமைப்படுத்தி வைத்திருந்தனர்; ஏழைப் பெண்களையோ கேட்கவே வேண்டியதில்லை எனலாம். இப்படியான சூழலில் பெண்களையே தலைமைப் பீடமாகக் கொண்ட அதிசய உலகம் ஒன்றைப் பற்றி எழுத ரொக்கேயாவால் மட்டுமே முடிந்திருக்கிறது. ஆங்கில மூலத்தில் வசனங்களும் விவரணைகளும் சரிசமமாகக் கதையோட்டத்துடன் பயணிப்பது போலவே இந்த ஆக்கத்திலும் துல்லியமாக திவ்யா தந்துள்ளார். ‘இது பெண்ணிய தேசம்… அறமே இங்கு ஆட்சி செய்கிறாள்’, என சாரா விளக்கும் இடத்தில் அறம் நம் தோளில் அமர்ந்துகொண்டு அந்த மாய உலகத்துக்குள் நம்முடன் பயணிக்கிறாள்.
ரொக்கேயாவின் மூலப் பதிவில் ஆணாதிக்கத்துக்கு எதிரான கருத்து முன்வைக்கப்பட்டிருக்குமே அன்றி ஆண் வெறுப்பு மொழி தென்படாது. அதையே நூலாசிரியர் இதிலும் கவனமாகச் செய்திருக்கிறார். ஆண்களும் இதை வாசித்து, புரிந்துகொண்டு தங்களுக்குள் விவாதித்து மாற்றங்கள் காணவேண்டும் என்ற ஆவலில் ரொக்கேயா அவ்வாறு எழுதியுள்ளார். இந்நூலை வாசிக்கும் ஆண் குழந்தைகள் அதை கட்டாயம் உணர்வார்கள் என்பதை நூலின் மொழி நமக்கு உணர்த்துகிறது. பெண்களின் சமயோசித அறிவு அங்கங்கே நூலில் மிளிர்வதை உணர முடிகிறது. போரில் தோல்வியடைந்து விடுவோம் என்ற சூழலில் வீட்டுக்குள் முடங்கிக்கொள்ள ஒப்புக்கொள்ளும் ஆண்கள், ‘தேவை ஏற்பட்டால் மீண்டும் அழைப்பதாகச்’ சொல்லப்பட்டு வீடுகளுக்குத் திருப்பி அனுப்பப்படும் ஆண்கள் என ஆண்கள் பொதுவெளியில் இல்லாத வாழ்க்கைக்கு மாய உலகப் பெண்கள் தங்களைப் பழக்கிக்கொள்ளும் பகுதிகள் அருமையாகச் சொல்லப்பட்டுள்ளன.
நூலின் பெரிய பலம் அதன் ஓவியங்கள். அழகியல் உணர்வுடன் காட்சிகளைத் தத்ரூபமாக நம் கண்முன் கொண்டுவந்து நிறுத்துகின்றன. பூக்களும் நட்சத்திரங்களும் பெண்களும் கண்களையும் மனதையும் நிறைக்கின்றன. கருப்பு வெள்ளையில் இத்தனை பொருள் பொதிந்த ஓவியங்களைக் கொண்டுவந்திருப்பது சிறப்பு.
நூலின் பின் இணைப்பாகக் கொடுக்கப்பட்டுள்ள ரொக்கேயாவின் ‘உண்மையான விடியல்’ கட்டுரை சரியான இடத்தில் விழிப்புணர்வு புகட்ட வைக்கப்பட்டுள்ளது. சுல்தானாவின் கனவின் இறுதியில் விழிப்பாயிருக்கவேண்டும் என்பதற்கான காரணங்களை விளக்கும் கட்டுரையைச் சேர்த்திருப்பது கூர்மை! மீம்ஸ் வடிவில் இறுதிப் பகுதி! புத்தகம் வாசிக்கும் சிறார் கவனத்தைக் கட்டாயம் ஈர்க்கும் என்பதில் ஐயமில்லை. ஒரு முழுமையான குறுநூலாகக் கிடைத்திருக்கும் பொக்கிஷம் இது. நூற்றாண்டுக்குப் பிறகு சுல்தானாவின் கனவைத் தமிழ்ச் சிறாரிடம் சேர்ப்பிக்கவிருக்கும் ஓங்கில் கூட்டத்துக்கும் திவ்யா பிரபுவுக்கும் வாழ்த்துகளும் அன்பும்.
-நிவேதிதா லூயிஸ்