சிறார் இலக்கியம் எதிர்கொள்ளும் சவால்கள் – விஷ்ணுபுரம் சரவணன்

வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

தமிழ் இலக்கியத்தின் மற்ற வகைமைகள்போலவே தமிழ்ச் சிறார் இலக்கியமும் நூற்றாண்டு வரலாறு கொண்டது. தமிழில் முதன்முதலாக அமைப்பு உருவாக்கப்பட்டு இலக்கிய உரையாடல்களையும் செயற்பாட்டையும் முன்னெடுத்தது சிறார் இலக்கியத்தில்தான். ஆம். 1950 ஆம் ஆண்டே அழ. வள்ளியப்பா உள்ளிட்டோரால் ’தமிழ் சிறுவர் எழுத்தாளர் சங்கம்’ தொடங்கப்பட்டு சிறுவர்களிடையே இலக்கியத்தை கொண்டு சேர்த்தது. அந்தச் சங்கம், கிட்டத்தட்ட ஐம்பதாண்டுகள் உயிர்ப்போடு செயல்பட்டது. எட்டு மாநில மாநாடுகளை நடத்தியது. பிறகு, பல்வேறு காரணங்களால் அது இயங்க முடியாமல் போனது.

கவிதை என்றால் வைரமுத்து, பா.விஜய் என்பதோடு மற்றவர்களை யோசிக்கும் தலைமுறையினரைப் போல, சிறார் இலக்கியம் என்றால் அழ. வள்ளியப்பாவை தவிர வேறு பெயர்கள் தெரியாதவர்கள் இருக்கிறார்கள். எழுத்தாளர்களிலும் பலர் இருக்கிறார்கள் என்பதுதான் சோகம். 

ஓர் எழுத்தாளர் என்பவர் சமகாலத்தில் இயங்கும் ஓவியம், நாடகம், நாட்டார் கலை, சினிமா, அரசியல் உள்ளிட்டவற்றோடு நல்லதொரு தொடர்பில் இருக்க வேண்டும். குறைந்த பட்சம் அவற்றைப் பற்றிய அறிமுகமாவது கொள்ளுதல் அவசியம். அதேபோல, சிறார் இலக்கியத்தில் என்ன நடக்கிறது என்பதை அறிந்துகொள்வதும் முக்கியமானதே. சிறார் இலக்கியத்தில் எதுவும் நடக்க வில்லையா, ஏன் எதுவும் நடக்க வில்லை என்பது குறித்தும் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம் என்றே நம்புகிறேன். ஏனெனில், அந்த எழுத்தாளரின் எழுத்துகளை வாசிப்பதற்கு இன்னும் பத்தாண்டுகள் கழித்து வாசகர்கள் அங்கிருந்துதான் வரப்போகிறார்கள். 

இன்று ஆக்கப்பூர்வமாக எழுதிகொண்டிருக்கும் எழுத்தாளர்கள், செயற்பாட்டாளர்களுக்கு தங்கள் சிறுவயதில் படித்த புத்தகங்கள் நினைவில் இருக்கும். குறிப்பாக சோவியத் மாஸ்கோவில் பதிப்பான குழந்தை நூல்கள். 

அந்தப் பதிப்பகம் பற்றி எழுத்தாளர் பூவண்ணன் எழுதிய நூலில் சுவாரஸ்யமான செய்தி ஒன்றைக் குறிப்பிடுகிறார். அந்தப் பதிப்பகத்தைத் தொடங்குவதற்கு முன், எழுத்தாளர் மாக்ஸிம் கார்கி பத்திரிகைகளில் ஒரு விளம்பரம் தருகிறார். குழந்தைகள் தங்களுக்குப் பிடித்தமான கதைகளின் வகைகள் பற்றி கடிதம் எழுதச் சொன்னார். நம்பவே முடியாது. குழ்ந்தைகளிடமிருந்து 2000க்கும் மேற்பட்ட கடிதங்கள் வந்ததாம். ’அவற்றை வாசித்தத்தின் அடிப்படையிலேயே அந்தப் பதிப்பகத்தை உருவாக்கினார் கார்கி’ என்கிறார் பூவண்ணன். 

அந்த நூல்களே நமக்கு அருமையான மொழிபெயர்ப்பில் நமக்கு கிடைத்தன.  அந்த நூல்களால் கிடைத்த வாசனையை நுகர்ந்தபடித்தான் மாபெரும் இலக்கியத்திற்குள் காலடி வைத்திருக்கிறோம். அதுவே வாசிப்பு, எழுத்து, செயல்பாடு என்று உந்தித் தள்ளியிருக்கும். இந்த இழையைக் காப்பாற்றி அடுத்த தலைமுறைக்கு கடத்துவது மிகவும் அவசியமானது. ஏனென்றால், வெறுமனே வாசகர்கள் என்று மட்டுமே  சுருக்கிப் பார்க்க வில்லை. அவர்கள்தான் அறிவுத்தளத்தில் ஈடுபட போகிறவர்கள். அதுவும் வதந்திகளால் வரலாற்றைக் கட்டமைக்கப்படும் இந்த சோஷியல் மீடியாக் காலத்தில் சிறுவர்களை வாசிப்பை நோக்கி இழுப்பது மிக அவசியமானது. 

தமிழில் சிறார் இலக்கியத்தைப் பொறுத்தவரை மாபெரும் தொடர்பு நமக்கு இருக்கிறது. அழ வள்ளியப்பா, கல்கி கோபாலகிருஷ்ணன், ரேவதி, பூவண்ணன் என்று பெரிய பட்டியலே இருக்கிறது. அவற்றில் பெரும்பாலும் நன்னெறி கதைகளும் புராண கிளைக்கதைகளுமே இருக்கின்றன என்று ஒருசாரார் ஒதுக்கித் தள்ளுவதை நாம் பார்க்க முடிகிறது. அதை நம்மால் முழுமையாக மறுக்க முடியாதுதான். 1954 ஆம் ஆண்டே வேள்பாரி கதையை எழுதிய கி.வா.ஜ, கங்கையில் பாவத்தைப் போக்குவது எப்படி என்றும் எழுதியுள்ளார். இம்மாதிரியானவற்றை மீறி நல்லவையும் நடந்திருக்கின்றன. 

1979 ஆம் ஆண்டில் ஹரிஹரன் எனும் ரேவதி எழுதிய ’கொடிகாட்ட வந்தவன்’ நாவலைக் குறிப்பிட வேண்டும். 1930களில் குற்றாலத்தில் தலித்துகளை குளிப்பதற்கு இருந்த தடையைப் பற்றி பேசுகிறது. காந்தி அங்கு வந்து குளிக்காமல் திரும்பிச் சென்றதை விவரிக்கும் நாவல் சாதிய ஏற்றத்தாழ்வுகளைப் பற்றி விரிவாகப் பேசுகிறது. துரதிர்ஷ்டம் என்னவென்றால் அதன் பிரதியே இப்போது கிடைப்பதில்லை. 

கு.அழகிரிசாமி என்றதுமே ’ராஜா வந்திருந்தார்’ கதையே பலரும் சொல்வார்கள். ஆனால், அவர் ’மூன்று பிள்ளைகள்’, ’காளிவரம்’ என்று இரண்டு சிறார் நூல்களை எழுதியுள்ளார். 

இந்திய விடுதலைக்கு முன் ஒரு கிராமத்தில் முதன்முறையாகப் பேருந்து வருகிறது. அதில் பயணம் செய்ய ஒரு சிறுமி ஆசைப்படுகிறாள். இதை வைத்து அழகான காலக்கட்டத்தையும் ’பெரிய மனுஷி’ எனும் கதையில் பதிவு செய்திருப்பார் வல்லிக்கண்ணன். கிருஷ்ணன் நம்பி உள்ளிட்ட எழுத்தாளர்களின் சிறார் இலக்கிய பங்களிப்பு ஒரு கட்டத்தில் தேக்கம் அடைந்து விட்டது என்பது பெரும் சோகம். 

ஆயினும் 2005 க்குப் பிறகு தமிழ் சிறார் இலக்கியம் புதிய வேகத்தில் பயணம் செய்கிறது.  இதற்கு முக்கியமான காரணம் சிறார் நூலுக்கு என்றே பாரதி புத்தகலாயதம் தொடங்கிய புக் ஃபார் சில்ட்ரன். 

கைகளால் மலம் அள்ளும் தொழிலாளியை மாமா என்று ஒரு குழந்தை அழைத்ததால் ஏற்பட்ட விளைவுகளை பற்றி கொ.மா.கோ. இளங்கோ எழுதிய ’சஞ்சீவி மாமா’ நாவல் பேசுகிறது. ஏகலைவன் கதையை மறு உருவாக்கம் செய்து பழங்குடிகள் பலி கொடுக்கப்பட்ட கதையை உதயசங்கரின் ’கட்டை விரல்’ பேசுகிறது. குழந்தைகள் உடல்மீதான பாலியல் அத்துமீறல்களை யெஸ்.பாலபாரதியின் ’மரப்பாச்சி சொன்ன ரகசியம்’ பேசுகிறது. ஜாலியன் வாலாபாக்கில் கொல்லப்பட்டவர்களின் கதையை விழியனின் ’1650 முன்ன ஒரு காலத்துல’ நாவல் பேசுகிறது. எண்ணெய் நிறுவனத்தால் ஒரு கிராமத்தின் சூழலே மாறிப்போனதை விஷ்ணுபுரம் சரவணனின் ’ஒற்றைச் சிறகு ஓவியா’வும், சாதிய வன்முறையில் தீக்கு இரையான ஒரு கிராமத்தில் சிக்கிய ஒரு சிறுமியின் கதை ’நீலப்பூ’வும் பேசுகின்றன. இயற்கையை நாம் எவ்வளவு தவறாகப் புரிந்து வைத்திருக்கிறோம்… எப்படி சரி செய்து கொள்வது என்பதைப் பேசும் நக்கீரனின் ’பசுமைப் பள்ளி’யும், ஒரு பள்ளிக்கு தலித் தலைமை ஆசிரியராக வந்தபோது அந்தக் கிராமம் எப்படி எதிர்கொண்டது என்பதைச் சொல்லும் யூமாவின் ’தூயக்கண்ணீரும்’ என இந்தப் பட்டியலை இன்னும் நீட்டித்துக்கொண்டு போகலாம். தரமான நல்ல படைப்புகளைச் சொல்லிக்கொண்டே போகலாம். சமீபமாக ஆசிரியர்களும் சிறார் இலக்கியத்தில் நுழைந்திருப்பது ஆக்கப்பூர்வமான மாற்றம். புதிய வரவுகளில் தென்படும் நல்ல மாற்றங்களை அடுக்கிக்கொண்டே போகலாம். 

ஆனாலும் தமிழ்ச் சிறார் இலக்கியம் சமகாலத்தில் முக்கியமான சில சவால்களை எதிர்கொண்டுள்ளது. அதை நான் அகம், புறம் என்று வகுத்துக்கொள்கிறேன். முதலில், அகம் சார்ந்த சவால்களைப் பார்ப்போம். 

1.தமிழ் சிறார் இலக்கியத்தில் ஆகச் சிறந்த நூல்கள் மீள் உருவாக்கம் செய்யப்படாமல் இருப்பது புதிதாக எழுத வருபவர்களுக்கு மாபெரும் சவால். ஏனெனில், தமிழில் சிறுகதை எழுத வரும் ஒருவருக்கு புதுமைப்பித்தன் தொடங்கி இன்று கரீம் வரை எழுதியுள்ள ஆயிரக்கணக்கான சிறந்த சிறுகதைகள் வழிகாட்டி உள்ளன. அவற்றைப் படிப்பதிலிருந்து சிறுகதை எனும் உள்ளடக்கத்தை அவரால் புரிந்துகொள்ள முடியும். கவிதை, நாவல் போன்ற வகைகளுக்கும் அப்படித்தான். ஆனால், சிறார் இலக்கியம் எழுத வருபவர்களுக்கு அப்படியான சூழல் இல்லை. அதன் விளைவு மோசமானதாகவே மாறும் அபாயம் உள்ளது.   

சமூக ஊடங்களில் கிடைக்கும் திடீர் வெளிச்சத்தால் சிறார் இலக்கியத்திற்குள் பலரும் எழுத முற்படுகிறார்கள். இருகரம் நீட்டி வரவேற்போம். ஆயினும் பாடுபொருட்களிலும், எழுதும் விதத்திலும் நோக்கத்திலும் இன்னும் அக்கறை கொள்ள வேண்டியதாக உள்ளது. ஆனால், ஃபாஸ்ட் புட் போல புகழும் விருதுகளும் கிடைக்கும் அமுதசுரபியாகப் பலரும் சிறார் இலக்கியத்தை நினைப்பதும் நடக்கத்தான் செய்கிறது. இவர்களை இலக்கிய சார்ந்த, சமூகம் சார்ந்த ஓர்மைக்குள் நகர்த்துவது என்பது சமகாலத்தில் மாபெரும் சவாலாக நம் முன் நிற்கிறது.

2.டிஜிட்டல் யுகத்தில் கதைப் புத்தகம் படிப்பதா? பாடல்கள் படிப்பதா? என்றெல்லாம் கேள்விகள் எழுப்பப்படுகின்றன. அவற்றைத் தாண்டியும் நாம் கொண்டு சேர்க்க வேண்டியது நம் முன் இருக்கும் முக்கியமான சவாலாக இருக்கிறது. 

3.சமகால சிறார் இலக்கியத்தில் முற்போக்கு அம்சம் நிறைந்த கதை மையங்கள் எழுதப்படுகின்றன என்றாலும், சதவிகித அடிப்படையில் குறைவே. இதுதான் நாம் எதிர்கொள்ளும் மிக முக்கியமான சவால். ஏனெனில், எழுதுபவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கிறது என்று மகிழ்ச்சி அடையும்போது, பழைய நீதிக்கதைகளின் மறுவடிவமாக அவை இருப்பதைக் கண்டு அதிர்ச்சிதான் ஏற்படுகிறது. இந்தக் கருத்திலிருந்தே நான் சிறார் இலக்கியம் புறம் சார்ந்து எதிர்கொள்ளும் சவாலுக்குச் செல்கிறேன். 

1.தமிழ் படிக்கும் சிறுவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் குறைந்துகொண்டே போகிறது. அரசுப் பள்ளிகளிலும் தமிழ் வழிக்கல்வி சேர்க்கை குறைந்துபோய் ஆங்கில வழிக்கல்வியில்தான் சேர்க்கை அதிகமாகி வருகிறது. தாய்மொழிக் கல்வியிலிருந்து விலகும் குழந்தைகள் சுயசிந்தனையிலிருந்தும் விலகும் அபாயம் இருப்பதாகவே கல்வியாளர்கள் எச்சரிக்கிறார்கள். சிறார் இலக்கியத்திற்கான வாசகர்கள் குறைகிறார்கள் என்பதாக இதைப் பார்க்காமல், சுயசிந்தனையாளர்களின் எண்ணிக்கை குறைவதாகப் பார்க்க வேண்டியுள்ளது. 

 2.அடுத்து, பிற்போக்கு, மூட நம்பிக்கையை வலியுறுத்துபவர்கள் மிக வேகமாக குழந்தைகளை நெருங்குகிறார்கள். ஏனெனில், அவர்களின் தற்போதைய செயல்பாடே அடுத்த இருபது ஆண்டுகளை மனதில் வைத்தே இருக்கும். காலங்காலமாக நீதிக்கதைகள் எனும் பெயரில் புராண, சடங்குகளை நியாயப்படுத்தும் பணிகள்தானே நடந்தன. இப்போதும் அது தொடரத்தானே செய்கிறது.  

பல பள்ளிகளில் வலதுசாரி அமைப்புகளில் பயிற்சி பட்டறைகள் நடந்திருப்பதை செய்திகளில் அடிக்கடி பார்த்திருப்பீர்கள். வெறுமனே ஒருவர் வந்து பேச மட்டுமா செய்திருப்பார். அவர்களுக்கு கையேடு, தொடர்ச்சியாக வாசிக்க புத்தகங்கள் என தொடர் செயல்பாட்டில் ஈடுபட்டிருப்பார்கள். ஆன்மிகம் சார்ந்த புத்தகங்கள் வாசிப்பதற்கு பெற்றோர் தரப்பிலும் பெரிய எதிர்ப்பு இருக்காது. எனவே, அவர்களின் வேலை மிக எளிதாக மாறிவிட்டது. இதை நாம் எவ்வாறு எதிர்கொள்வது?

வலதுசாரி தலைவர்கள் பற்றிய ஒரு பகுதி உண்மைகளைத் தாங்கிய வரலாற்றைத் திணிக்கும் பணி தொடங்கி விட்டதாகவே அறிகுறிகள் தெரிகின்றன. குறிப்பாக, நேரு மீதான மதிப்பீடுகளை குலைக்கத் தொடங்கி விட்டனர். நேரு மீதான எதிர்மறையான பார்வை வேகமாக விதைக்கப்படுகிறது. நேரு மீதான விமர்சனம் நமக்கும் இருக்கும். ஆனால், தற்போது நடப்பது வேறு. குளத்தில் யாரேனும் தவறி விழுந்தால்கூட நேருவே காரணம் என்ற கருத்தாக்கம் உருவாக்கப்படுகிறது. இதேபோல, காந்தி பற்றிய பேச்சே ஒழிக்கப்படுகிறது. அம்பேத்கருக்கு வேறொரு சாயம் பூசப்படுகிறது. இவர்களுக்குப் பதிலாக படேல், சாவர்க்கர் உள்ளிட்ட இன்னபிற தலைவர்களை பொதுவெளியில் நாயகப் பிம்பம் ஏற்றப்படுகிறார்கள். இதெல்லாம் வெறும் அரசியல் வெளியில் மட்டுமல்ல, பள்ளி, கல்லூரிகளில் அவர்களைப் பற்றிய கட்டுரைப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. அதற்கு மாணவர்கள் தயாராக, அவர் குறித்த நூல்கள் எழுதப்படுகின்றன. அவை வாட்ஸப்களில் பரப்பப் படுகின்றன. அதை நம்பிய பலரும் அதில் ஈர்க்கப்படுகின்றனர். இப்படி ஒரு தொடர்ச்சியான பணியாக நடைபெறுவதை நாம் கவனித்துப் பார்க்க வேண்டிய காலம் இது. 

இதை எதிர்கொள்ளும் செயல்திட்டங்களை நோக்கி நகரவேண்டியது காலத்தின் கட்டாயம்.  

நீதிக்கதைகள் என்ற பெயரில் புராண, மூடநம்பிக்கை கருத்தியல் கதைகளுக்குப் பதிலாக முற்போக்கு கதைகள் தருவது சரியா? இரண்டும் ஒருவகையில் திணிப்புதானே? என்ற உரையாடல்கள் எழுகின்றன. இந்த இடத்தில் நாம் ஏட்டிப்போட்டியாக செயல்பட வேண்டாம். ஆனால், தற்காப்பு ஆட்டமாக, உண்மைகளைச் சொல்லும் படைப்புகளைத் தரலாம் என்பதே என் கருத்து. இந்திய சுதந்திரப் போராட்டத்தை வலதுசாரிகள் முன்னின்று நடத்தினர் என்று வரலாறு மாற்றப்படும்போது, ஜாலியன் வாலாபாக் படுகொலையை சொல்லும் விழியன் எழுதிய ’1650’ நூல் போன்று எழுதலாம். 

முதலில் செய்ய வேண்டிய ஒரு விஷயம் உள்ளது, முற்போக்கு அமைப்புகளில் உள்ள தோழர்களின் வீடுகளில் உள்ள குழந்தைகளுக்கு புத்தகத்தை வாசிக்க கொடுப்போம். மாதந்தோறும் இலக்கிய நூல்களை விமர்சனம் செய்யும் கூட்டம் நடத்துவதைப் போல சிறுவர் நூல்களை தங்கள் வீட்டு குழந்தைகள் எப்படி படித்தார்கள், என்ன புரிந்துகொண்டார்கள் என்பதை தெரிந்துகொள்ள வேண்டியது அவசியமானது. அது குறித்த உரையாடல்களை குடும்பத்திலும் அமைப்பிலும் அதிகரிக்கச் செய்ய வேண்டியது.  

இன்னும் வெளிப்படையாகச் சொன்னால் இன்று சிறார் இலக்கியத்தை அக்கரையோடு வளர்த்து எடுக்காவிட்டால், இன்னும் பத்தாண்டுகளில் பெரியவர்களுக்கான இலக்கிய, அரசியல் அரங்குகளை சரியான நபர்களால் நிறைப்பதற்கு சிரமப்பட வேண்டியிருக்கும். 

(மார்த்தாண்டத்தில் நடந்த தமுஎகச மாநில மாநாட்டில் வாசிக்கப்பட்ட கட்டுரை)

Leave a comment