எல்லோருக்குமான பூமியிது – விழியன்

வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்

வாசிப்பு உலகின் பிரம்மாண்டத்தை, அழகியலை, ஆழங்களை, அற்புதங்களை, மனிதன் கடந்து வந்த பாதைகளைப் படம்பிடித்துக் காட்டும். “ஆழ்கடல் – சூழலும் வசிப்பிடங்களும்” நிச்சயம் ஒரு பிரம்மாண்டத்தைக் கொடுக்கும். எளிதாக அறிந்துகொள்ள முடியாத செய்திகள். ஒரு நீர்மூழ்கிக் கப்பலில் பயணம் துவங்குகின்றது, பல்வேறு ஆழ்கடல் வாழ்விடங்களுக்கு நம்மைக் கைப்பிடித்து அழைத்துச்செல்கின்றது. வாசிப்பவருக்குப் புதிய உலகினை காட்டும்.

“நாம் வாழும் பூமியில் இப்படி ஓர் இடமா?” என ஆச்சரியப்பட வைக்கும், சிலிர்க்க வைக்கும், வாய்பிளக்க வைக்கும், ‘ஓ’ என ‘உம்’ கொட்ட வைக்கும், புதிதா இருக்கிறதே என யோசிக்க வைக்கும், “இப்படியென்றால் என்ன?” எனத் தேட வைக்கும். ஆம் இவை எல்லாமே இந்தக் குறுநூல் செய்ய வைக்கும். மிக முக்கியமாக கடைசியில் எல்லா வாழிடங்களைப் பற்றியும் சொல்லிவிட்டு இறுதியாக முடித்திருக்கும் இடம் அபாரம். இந்த பூமி எல்லோருக்குமானது. மனிதனுக்கு மட்டுமே அல்ல, நிலங்களில் வாழும் உயிரினங்களுக்கும், கடலில் வாழும் உயிரினங்களுக்கு, ஆழ்கடலில் வாழும் அதிசய பிராணிகளுக்குமானது. இயற்கைக்கு எதிரான நம் ஒவ்வொரு செயலும் எங்கோ யாரையோ பாதித்துக்கொண்டே இருக்கின்றது. இயற்கையை இன்னும் நேசிக்க, புரிந்துகொள்ள, அருகே செல்ல இந்த நூல் கண்டிப்பாக உதவும்.

யாரும் தொடாத புதிய புதிய தலைப்புகளில் தொடர்ந்து எழுதிவரும் நாராயணிக்கு பாராட்டுக்கள். இளையோருக்காக புத்தம் புதிய துறையை தமிழிற்கு திறந்துவிட்டிருக்கும் ஓங்கில் கூட்டத்திற்கு ப்ரியங்கள்.

  • விழியன்
அமேசான் கிண்டிலில் பெற : https://www.amazon.in/dp/B0BFM2PL71
புத்தகம்: ஆழ்கடல் – சூழலும் வாழிடங்களும்
ஆசிரியர்: நாராயணி சுப்ரமணியன்
வெளியீடு: ஓங்கில் கூட்டம்

Leave a comment