பள்ளிகளில் வாசிப்பு இயக்கம் – தசிஎகச வரவேற்கிறது

வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்
சிறாருக்குக் கூர்மையான அறிவையும் அகன்ற பார்வையையும் அளிப்பவை புத்தகங்கள். ஆனால், கெடுவாய்ப்பாக பாடத்திட்டம் தாண்டிய நூல் வாசிக்கும் வாய்ப்பு பெரும்பான்மையான சிறாருக்குக் கிடைப்பதே இல்லை. பள்ளிகளின் வழியே அப்படியான வாய்ப்பை வழங்க முடியும் என்று பலரும் யோசனை தெரிவித்து வந்தனர்.

தமிழ்நாடு சிறார் எழுத்தாளர் – கலைஞர்கள் சங்கமும், கல்வித் துறைக்கு கடந்த ஆண்டு முன்வைத்த பரிந்துரைகளில், ’வாரம் ஒரு புத்தகத்தை ஒவ்வொரு மாணவரும் வாசித்து. அது குறித்து வகுப்பறையில் பேசும் விதமாக பாடவேளை அட்டவணை அமைய வேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தோம். ஏனெனில், கதை, பாடல், நாடகம், அறிவியல் நூல்கள் வாசிப்பது பாட நூல்களைக் கற்கவும் உதவும் என்பதால், அதை வலியுறுத்தியிருந்தோம். இந்த அரசு, இம்மாதிரியான கோரிக்கைகளை ஆராய்ந்து ’பள்ளிகளில் வாசிப்பு இயக்கம்’ எனும் திட்டத்தை செயல்படுத்தியிருப்பது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது.

இந்தப் பணியைச் செய்ய முடியும் என்பதை உணர்ந்து தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை, கடந்த ஆகஸ்ட் 17ஆம் தேதி   ‘பள்ளிகளில் வாசிப்பு இயக்க’த்தைத் தொடங்கியிருப்பது மிகுந்த ஆரோக்கியமான முன்னெடுப்பு. நூல்களை வாசிக்கும்  மாணவர்களை பள்ளி, வட்டார, மாவட்ட, மாநில அளவில் தேர்ந்தெடுத்து சிறப்பிக்க உள்ள முறை வரவேற்கத்தக்கது. முத்தாய்ப்பாக, ‘இறுதியில் தேர்வாகும் மாணவர்களை வெளிநாட்டிற்கு அழைத்துச் சென்று, புகழ்பெற்ற நூலகங்களைப் பார்வையிட வைப்பது சிறப்பானது. அதே நேரம், இந்தச் செயல்பாடு வழக்கமான போட்டிகளில் ஒன்றாக மாறிவிடுவதும் கூடாது என்பதை கவனத்தில் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

பள்ளிகளில் வாசிப்பு இயக்கம் எனும் இந்தத் திட்டத்தை தமிழ்நாடு சிறார் எழுத்தாளர் – கலைஞர்கள் சங்கம் மகிழ்ச்சியோடு வரவேற்கிறது. அதேபோல, மாநில அளவில் தேர்வான மாணவர்கள், குழந்தை எழுத்தாளர்களோடு உரையாட வாய்ப்பு ஏற்படுத்தப்படும் என்றும் கூறியிருப்பது மாணவர்களை அடுத்தக் கட்டத்திற்கு அழைத்துச் செல்லும் நல்ல முயற்சி, அதை மனதார பாராட்டுகிறோம். பள்ளிக்கல்வித் துறையோடு கைக்கோத்து செயல்படவும் விரும்புகிறோம்.

இந்தத் திட்டம் 6ஆம் வகுப்பிலிருந்து தொடங்குகிறது என்று உள்ளது. விரைவில் தொடக்கப் பள்ளி வகுப்புகளுக்கும் இத்திட்டம் நீட்டிக்கப்படும் என்று நம்புகிறோம்.  மேலும் போட்டிகள் என்பது உந்து சக்தியாக இருக்கமட்டுமே, போட்டி முடிந்தாலும் வாசிப்பு தொடர உறுதி செய்ய வேண்டும். இந்த சரியான சந்தர்ப்பத்தில் பள்ளிகளுக்கு நூலகரை நியமிப்பது, நூலகத்திற்கு என்று போதிய ஏற்பாடு, புதிய புத்தகங்களுக்கான வழிமுறைகளையும் ஏற்படுத்த வேண்டும்.

பள்ளிகளில் வாசிப்பு இயக்கம் எனும் இந்தத் திட்டம் கல்வியிலும் மாணவர்களின் சிந்தனை திறனை வளர்த்தெடுப்பதிலும் மகத்தான சாதனையை நிகழ்த்தும் வகையில் அமையும் என்று நம்புகிறோம். இதனை  முன்னெடுக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மாண்புமிகு அன்பில் அன்பில் பொய்யாமொழி அவர்களுக்கும், தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறைக்கும் எங்கள் சங்கத்தின் பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கணம்,
தமிழ்நாடு சிறார் எழுத்தாளர் – கலைஞர்கள் சங்கம்

Leave a comment