குழந்தைகளுக்கு வரலாற்றை ஏன் சொல்ல வேண்டும்? – இ. பா. சிந்தன்

வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்
குழந்தைகளுக்கு கடந்தகால வரலாற்றை சொல்லிக்கொடுத்தால் தான் நாம் இன்றைக்கு அனுபவிக்கிற விடுதலையும் அறிவியலும் தொழிற்நுட்பமும் சுதந்திரமும் எப்படி வந்தது என்கிற உண்மைகள் அவர்களுக்குப் புரியும். அப்போது தான் அவர்கள் வளர்ந்துவரும்போதும் இதையெல்லாம் கட்டிக்காக்க வேண்டும் என்கிற பொறுப்பும் அக்கறையும் கூடவே வரும்.

கடந்த காலத்தை சொல்லிக்கொடுப்பதென்றால் எப்படி?
12 வயதுக்கு கீழுள்ள சிறுவர்களைப் பொறுத்தவரையிலும் வரலாற்று நாயகர்களைப் பற்றியும் வரலாற்றுச் சம்பவங்களைக் குறித்தும், முடிந்தவரை கதைகளாகவோ சிறிய கட்டுரைகளாகவோ சொல்வது சரியாக இருக்கும். ஆனால் அதுவே 12 வயதுக்கு மேற்பட்ட வளரிளம் பருவத்தினருக்கு சொல்லும்போது, நாம் சொல்வதைவிடவும் அந்த வரலாற்று நாயகர்களே நேரடியாக எழுதிய நூல்களை வாசிக்கத் தருவது அதிக நம்பகத்தன்மையைக் கொடுக்கும். ஏனெனில் உண்மைகளை நேருக்கு நேராக சந்திக்கிற வயதை அவர்கள் தொட்டுவிடுவதால், அவர்களிடம் பூசிமொழுகாமல் வரலாற்றுத் தலைவர்கள் எழுதிய நூல்களையே வாசிக்கச் சொல்வது தான் சரியாக இருக்கும்.
இருப்பினும் அதில் ஒரு சிறிய சிக்கலும் இருக்கத்தான் செய்கிறது. வரலாற்று நாயகர்கள் எழுதிய நூல்களில் அவை எழுதப்பட்ட காலத்தின் அரசியல், எழுத்து வடிவம், வார்த்தைப் பிரயோகம் போன்றவை பயன்படுத்தப்பட்டிருக்கும். இன்றைய காலகட்டத்திற்கு அவை கொஞ்சம் அந்நியமாக இருக்கவும் வாய்ப்புண்டு. அப்படியான சூழலில் எந்தப் பின்னணிப் புரிதலும் இல்லாமல் அந்நூல்களை 12 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் வாசிக்கையில் மிகவும் கடினமாக இருக்கவும் வாய்ப்பிருக்கிறது. அதனால் அப்படியான நூல்களை வாசிப்பதையே தவிர்த்துவிடுவார்கள்.
சரி, இதை எப்படி சரி செய்வது?
அது ஒரு இமாலயக் கேள்வி. அந்தக் கேள்விக்கு யாருடைய மனதையும் புண்படுத்தாமல் ஒரு விடையைத் தேடவேண்டுமே என்கிற அச்சத்திலேயே பெரும்பாலும் அதில் கைவைக்காமலேயே இருந்துவிடுவோம். வரலாற்றின் மிகமுக்கிய நாயகர்களான அம்பேத்கர், பெரியார், பகத்சிங், காந்தி, நேரு போன்ற பலரும் ஏராளமான நூல்களை எழுதியிருக்கின்றனர். அவற்றை இன்றைய காலத்திற்கு ஏற்றவாறு தற்காலத்தன்மையுடன் கூடிய மொழியில் மீண்டும் எழுதவேண்டும். அத்தலைவர்களுக்கு பங்கம் விளைவிக்காமலும் அவர்களின் கருத்துகள் திரிக்கப்படாமலும் எழுதவேண்டியது அவசியம் என்பதை மட்டுமே கவனத்தில் கொண்டால் போதும்.
இந்திய சுதந்திரப் போராட்டத்தின் நாயகர்களில் ஒருவரும் எப்போதும் இளைஞர்களை ஈர்க்கும் விதமாக இருப்பவருமான பகத்சிங் எழுதிய “நான் ஏன் நாத்திகன் ஆனேன்?” என்கிற நூல் மிகமுக்கியமான நூல். சுமார் 92 ஆண்டுகளுக்கு முன்னர் இந்திய விடுதலைக்காகப் போராடிய காரணத்திற்காக ஆங்கிலேயர்களால் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது, தூக்கிலிட்டு கொல்லப்படப் போகிறார் என்பது அவருக்குத் தெரிந்துதான் இருந்தது. அப்போதும் கூட ஆங்கிலேயர்களிடம் மன்னிப்புக் கேட்டால் விடுதலையாகிவிடலாம் என்கிற வாய்ப்பிருந்தும், அவர் ஆங்கிலேயர்களின் காலில் விழந்தோ மன்னிப்புக் கடிதம் எழுதியோ உயிர்ப்பிச்சை கேட்கவில்லை.
சிறையில் இருக்கிற காலத்திலும் சிறைவாசிகளின் சுகாதாரத்திற்காகவும் உரிமைகளுக்காகவும் போராடினார். சிறையில் இருக்கும்போதே அவர் எழுதிய நூல் தான் “நான் ஏன் நாத்திகன் ஆனேன்” என்கிற நூல். முற்போக்கு வட்டங்களில் புதிதாக வரும் எவருக்கும் பரிந்துரைக்கப்படும் முதல் பத்து நூல்களில் நிச்சயமாக இது இருக்கும்.
சிறுவயதில் குழந்தைகளுக்கு இருக்கும் மில்லியன் டாலர் கேள்வி என்ன தெரியுமா?
“கடவுள் இருக்கா இல்லையா?”
இந்தக் கேள்வியைக் கேட்கவே விடாமல் ஒருகுறிப்பிட்ட கடவுளின் மீதான நம்பிக்கையை கட்டாயப்படுத்தி திணிப்பது பல குடும்பங்களில் நடக்கும். ஆனால் உண்மையில் குழந்தைகளை சுதந்திரமாகக் கேள்வி கேட்க வைத்து, அதற்கான பதில்களை விவாதமாகக் கொடுக்க முடிந்தால், “கடவுள் இருக்கா இல்லையா” என்கிற கேள்விக்கான விடையை குழந்தைகளே கண்டுபிடித்துவிடுவார்கள்.
“உனக்கு கடவுள் நம்பிக்கை எப்படி இல்லாமல் போனது?” என்று என்னிடம் நிறைய நண்பர்கள் கேட்டிருக்கிறார்கள்.
அப்போதெல்லாம், “பல நூல்களைத் தேடித்தேடிப் படித்து அந்த முடிவுக்கு வந்தேன்” என்பேன்.
அவர்களிடம் திரும்பவும், “உங்களுக்கு எப்படி கடவுள் நம்பிக்கை வந்தது?” என்று கேட்டால், அவர்கள் என்ன பெரும்பாலும் என்ன சொல்வார்கள் தெரியுமா?
“வீட்டில் சின்ன வயசுல இருந்தே சொன்னார்கள். நம்பினேன்”
“நீ பல நூல்களைப் படிச்சேன்னு சொன்னல்ல. நான் ஒரே நூலை மட்டும் தான் படிச்சேன். அதான் எங்களுக்கு கடவுள் நம்பிக்கை இருக்கு” என்கிற இரண்டு பதில்கள் தான் அதிகமாக வந்திருக்கின்றன.
கடவுள் நம்பிக்கை இருக்க வேண்டுமா இருக்கக் கூடாதா என்பதெல்லாம் முக்கியமல்ல. எது சரி எது தவறு என்கிற விவாதத்தை நடத்துவதற்கான வாய்ப்பு வழங்க வேண்டும். அதனை மிகச்சரியாக செய்த நூல் தான் பகத்சிங் எழுதிய “நான் ஏன் நாத்திகன் ஆனேன்” என்கிற நூல். கடவுள் நம்பிக்கை சரியா தவறா என்று நமக்கு எழும் கேள்விகளுக்கான பதில்களாகவே போகிறபோக்கில் பேசிக்கொண்டே இருப்பதைப் போன்ற ஒரு வழிமுறையில் அந்த நூலை எழுதியிருப்பார் பகத்சிங். அதனால் தான் இத்தனை வருடங்களுக்குப் பிறகு இன்றைக்கும் அந்நூல் நிலைத்து நிற்கிறது. இப்போதும் பேசப்படுகிறது.
இந்த நூலை வளரிளம் பருவத்தினருக்காக திட்டமிட்டு பகத்சிங் எழுதவில்லை. அவர் எழுதியதே பெரியவர்களுக்குத் தான். அதாவது இன்றைய நம்முடைய மொழியில் சொல்ல வேண்டுமென்றால் 18 வயதுக்கு மேற்பட்டோருக்காகத் தான் எழுதியிருக்கிறார்.

பகத்சிங் இந்நூலை எழுதி 92 ஆண்டுகள் ஆகிய நிலையில், அதனை வளரிளம் பருவத்துக் குழந்தைகளுக்கான ஒரு நூலாக மாற்ற வேண்டும் என்று இதுவரை யாருமே செய்யாத ஒரு பணியை செய்யவேண்டும் என்கிற சிந்தனை உதித்ததற்கே நூலாசிரியர் சிவ சுப்பிரமணியம் அவர்களுக்கு வாழ்த்துகள்

வாசகர்களுடன் உரையாடுவதைப் போலவே “நான் ஏன் நாத்திகன் ஆனேன்” நூலை பகத்சிங் எழுதியிருப்பார். ஆனால் நூலாசிரியர் சிவா அதனை அப்படியே குழந்தைகளுக்காக மாற்ற முடிவுசெய்து, சில கதாபாத்திரங்களை உருவாக்கி, கட்டுரை நூலாக இருந்ததை ஒரு உரையாடல் வடிவிலான கதையாக மாற்றியிருக்கிறார். மலர் என்பவருக்கு அன்றில் என்கிற ஒரு பெண் குழந்தை இருக்கிறாள். அவள் 6ஆம் வகுப்பு இறுதித்தேர்வு முடிந்து விடுமுறையில் இருக்கிறாள். அவர்களுடைய வீட்டிற்கு 8ஆம் வகுப்பு விடுமுறையில் இருக்கும் அவர்களின் உறவுப் பையனான ஆதன் என்கிற சிறுவன் வருகிறான். அவனுக்கு மலர் சித்தி முறை வேண்டும். அவர்கள் வீட்டில் இருக்கிற வீட்டு நூலகத்தில் மலர் வேலைக்கு சென்றபிறகு, “நான் ஏன் நாத்திகன் ஆனேன்” நூலை எடுத்து படித்துப் பார்த்து எதுவும் புரியவில்லை என்கிற முடிவுக்கு வருகின்றனர் ஆதனும் அன்றிலும். மாலை சித்தி வீட்டுக்கு வந்தபிறகு, மலருக்கு இது தெரியவருகிறது. உடனே அன்று இரவே அந்நூலை மிகவும் சுவாரசியமான உரையாடல் வழியாக குழந்தைகளுக்குப் புரிய வைக்கிறார் மலர். இது தான் இந்நூலின் கதைச்சுருக்கம்.
அந்த உரையாடலில் என்னென்ன கேள்விகளை யார் யார் கேட்கிறார்கள், அதற்கு மலர் எப்படியான பதில்களை சொல்கிறார், அது குழந்தைகளுக்குப் புரிந்ததா இல்லையா என்பதையெல்லாம் நூலைப் படித்துத் தெரிந்துகொள்ளுங்கள்.
ஆனால் நூலின் சில முக்கியமான அம்சங்களை மட்டும் இங்கே கோடிட்டுக் காட்ட ஆசைப்படுகிறேன். பொதுவாக வரலாறு, சமூகம், அரசியல் போன்றவை குறித்து குழந்தைகளுடன் பேசுவது ஆண்கள் தான் என்பது காலங்காலமாக பொதுப்புத்தியில் ஏற்றப்பட்டுக்கொண்டே இருக்கிறது. குழந்தைகளின் நூல்களைக் கூட எடுத்துப்பாருங்க. வீட்டில் இருக்கும் அப்பாக்கள் மட்டும் தான் நாளிதழ் படிப்பதாக படங்கள் வரையப்பட்டிருக்கும். அம்மாக்கள் சமையலறைகளில் இருப்பது போன்று தான் வரைந்திருப்பார்கள். ஆனால் இந்த நூலில் பகத்சிங் குறித்தும், சுதந்திரப் போராட்டம் குறித்தும், நாடுகள் எப்படி உருவாகின என்பது குறித்தும் மிக அழகாக குழந்தைகளுக்கு விவரிப்பதாக மலர் என்கிற கடவுள் நம்பிக்கையற்ற ஒரு பெண் கதாப்பாத்திரத்தை உருவாக்கியிருக்கிறார்.
அதேபோல மற்றொன்றையும் குறிப்பிட்டே ஆக வேண்டும். பெரியவர்களுக்காக எழுதப்பட்ட ஒரு நூலினை குழந்தைகளுக்காக மாற்றும்போது, நூலின் பட இடங்களில் வலுக்கட்டாயத் திணிப்பாக இல்லாமல் மிக நுணுக்கமாக குழந்தைகளின் பார்வையாக பல நிகழ்வுகளை இணைத்திருக்கிறார்.
வெளியே போய் விளையாடாமல் வீட்டில் இருப்பதற்கான காரணமாக சொல்லப்பட்டது, பெரியவர்களின் நூலை எடுக்கக் கூடாது என்கிற தடை இருப்பதால் அதனை உடைப்பதற்காகவேனும் நூல்களை எடுத்துப் படிக்க ஆர்வமாவது, அங்கு இருக்கும் ஏராளமான நூல்களில் மிகவும் குறிப்பாக பகத்சிங்கின் நூலை தேர்ந்தெடுத்ததற்கான காரணமாக ஒன்றைச் சொன்னது, நூலை சித்தி விளக்குவதற்கு முன்னால் அந்த நூல் எழுதப்பட்ட காலத்தையும் அரசியலையும் நாடுகள் குறித்து சிறுகுறிப்பையும் அழகாகச் சொல்வது, பகத்சிங்கின் அன்றைய செயல்பாடுகளை தீவிரவாதமாக இன்றைய குழந்தைகள் பார்த்துவிடக்கூடாது என்பதற்காக விரிவான விளக்கம் சொல்லப்பட்டது, கடவுள் நம்பிக்கை இருக்கிற குழந்தையின் பார்வையில் பல கேள்விகளை முன்வைத்தது, கடவுள் நம்பிக்கையை உடனே கழட்டியெறிய வேண்டும் என்று குழந்தைகளுக்குக் கட்டளையிடாமல் விவாதமாகவே கொண்டுசென்றது, என்னென்ன நூல்களையெல்லாம் படிப்பது நல்லது என்று போகிறபோக்கில் சொல்லிவிட்டுச் சென்றது என பல இடங்களில் மெனக்கெடல் நன்றாகவே தெரிகிறது.
இந்நூலை 12 வயதுக்கு மேற்பட்ட வளரிளம் பருவத்துக் குழந்தைகளுக்கான நூலாக மட்டுமே நான் பார்க்கவில்லை. புதிதாக வரலாற்றையோ அரசியலையோ படிக்க விரும்பும் பெரியவர்களுக்கும் இந்நூல் மிகமுக்கியமான நூல். பகத்சிங் எழுதிய “நான் ஏன் நாத்திகன் ஆனேன்” நூலை முதல்முறையாகப் படிக்கப்போகிற ஒவ்வொருவரும் அதற்கு முன்னர் இந்த நூலை ஒருமுறை படித்துவிட்டால் எளிமையாக இருக்கும்.
தமிழகத்தின் முற்போக்கு மாணவர் மற்றும் இளைஞர் அமைப்புகளின் ஒவ்வொரு கிளையிலும் இந்நூலை வைத்துக்கொண்டு வாசிப்பு நிகழ்வுகள் நடத்தலாம். வெறுமனே 70 பக்கங்கள் தான். ஒரே நாளில் ஒரு மணி நேரம் கூட்டமாக உட்கார்ந்து வாசித்தால் முடித்துவிடலாம்.

அட்டைப்படமும் உள்ளே வரையப்பட்டுள்ள ஓவியங்களும் அருமை. ஓவியர் அப்துலுக்கு வாழ்த்துகள்

வெளியிட்ட ஓங்கில் கூட்டம் அமைப்பிற்கும், முன்னுரை எழுதிய தோழர் கமலாலயன் அவர்களுக்கும் நன்றி. இந்நூல் தற்போது அமேசான் கிண்டிலில் கிடைக்கிறது. வாய்ப்பிருக்கும் அனைவரும் வாசியுங்கள். உங்கள் வீட்டுக் குழந்தைளுக்கு வாசிக்கக் கொடுங்கள்.

Leave a comment