வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற சிறுகதை எழுத்தாளரான சதத் ஹசன் மண்டோ தன்னுடைய கல்லறை வாசகத்தைத் தான் இறப்பதற்கு முந்திய வருடத்தில் அதாவது 1954 ஆம் ஆண்டு ஆகஸ்டு 18 ஆம் தேதி இப்படி எழுதி வைத்திருந்தார்,

“இங்கே கிடக்கிறான் சதத் ஹசன் மண்டோ. அவனுடன் சேர்ந்து சிறுகதைக்கலையின் அத்தனை மர்மங்களும், கலைத்திறன்களும் புதைக்கப்பட்டு விட்டன. டன் கணக்கிலான மண்ணுக்கடியில் கிடக்கும் அவன், கடவுளை விட மிகச்சிறந்த சிறுகதை எழுத்தாளன் அவன்தானோ என்று வியந்து கொண்டிருக்கிறான்..”

அவர் இறந்த 1955-ஆம் ஆண்டு தன்னுடைய புகழ் பெற்ற கதைகளில் ஒன்றான தோபா தேக் சிங் என்ற கதையை எழுதி வெளியிட்டார். உலகத்தின் மிகச்சிறந்த எழுத்தாளர்களில் ஒருவரும், ஆசியக்கண்டத்தின் ஈடு இணையற்ற எழுத்தாளருமான சதத் ஹசன் மண்டோ 1912-ஆம் ஆண்டு மே மாதம் 11–ஆம் தேதி பஞ்சாபிலுள்ள லூதியானா மாவட்டத்திலுள்ள சம்ராலா என்ற நகருக்கு அருகிலுள்ள பாப்ரௌடி என்ற கிராமத்தில் பிறந்தார். இளமையிலிருந்தே இலக்கியத்தின் மீது ஈடுபாட்டுடன் இருந்த மண்டோ, கல்லூரி முடித்தபிறகு, விக்டர் ஹியுகோவின் The last days of a condemned man என்ற நாடகத்தை உருதுவில் மொழிபெயர்த்தார். அதை லாகூரிலுள்ள லாகூர் புக் ஸ்டோர் என்ற நிறுவனம் ஒரு கைதியின் கதை என்ற பெயரில் வெளியிட்டது. அதன் வெற்றியினால் அவர் ஆஸ்கர் வைல்டின் வேரா அல்லது நிகிலிஸ்டுகள் என்ற நாடகத்தை 1934–இல் மொழிபெயர்த்தார். அந்த நாடகம் அவருக்கு மிகப்பெரும் உத்வேகத்தைக் கொடுத்தது. மாவீரன் பகத்சிங்கும் அவரை மிகவும் பாதித்திருந்தார். மண்டோ ஆரம்பம் முதலே ஒரு இடதுசாரியாகவும் சோசலிஸ்டாகவும் வளர்ந்தார்.

மண்டோ மிக விரைவிலேயே திறமையான எழுத்தாளராகப் பரிணமித்தார். அவருடைய முதல் கதையாகச் சொல்லப்படுகிற தமாஷா என்ற கதை ஜாலியன் வாலாபாக் படுகொலையைப் பின்னணியாகக் கொண்டது.

 “என் கதைகளை உங்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லையென்றால் நம்முடைய காலத்தைத் தாங்கிக் கொள்ள முடியவில்லையென்றே அர்த்தம். என் கதைகளில் தவறு என்று சொல்லப்படுவனவெல்லாம் உண்மையில் அழுகிப்போன இந்தச்சமூக அமைப்பினையே குறிக்கிறது. என் இலக்கியத்தை எதிர்ப்பதைக் காட்டிலும் இப்படிப்பட்ட இலக்கியங்கள் உருவாவதற்கு ஏதுவாக இருக்கும் சூழ்நிலையை மாற்ற முயற்சி செய்யுங்கள். அதுதான் சிறந்த வழி..” என்று நெஞ்சுரத்துடன் பதிலளிக்கிறார் மண்டோ.

மண்டோ மட்டுமே இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை நடந்த இருண்டகாலத்தின் கதைகளைப் பதிவு செய்தவர். மதம் என்ற நம்பிக்கை மனித உயிர்களை எப்படியெல்லாம் பலி வாங்கியிருக்கிறது என்பதைத் தன்னுடைய படைப்புகளில் வாசகனும் உணரும்படிச் சொல்லியிருக்கிறார்.  சாமானியர்கள், விளிம்புநிலை மக்கள், பாலியல் தொழிலாளிகள், அடித்தட்டு மக்கள், என்று சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் உலகை அப்படியே வெளிச்சம் போட்டுக் காட்டியவர் மண்டோ. அவர்களுடைய வாழ்வின் அவலங்களை, ஆசாபாசங்களை, வக்கிரங்களை, வாசகமனம் அதிரும்படி எழுதியர் மண்டோ. சமன் குலைந்த சமூகத்தில் சமன் குலையச் செய்யும் எழுத்தை எழுதியவர் மண்டோ. தன்வாழ்நாள் முழுவதும் கலகக்காரராகவே வாழ்ந்தார் மண்டோ. சமூகத்தின் எல்லாவிதமான அதிகாரங்களையும்,  போலித்தனமான ஒழுக்கக் கோட்பாடுகளையும் கேள்வி கேட்டார் மண்டோ.

ஒருவகையில் தோபா தேக் சிங் என்ற இந்தக் கதை பிரிவினை கால இந்தியா – பாகிஸ்தான் மக்கள் சமூகத்தில் என்ன நடந்தது என்பதற்கான இலக்கிய வரலாற்று ஆதாரம். திடீரென ஒரு நாள் நம்முடைய ஊர் எங்கே இருக்கிறது என்று தெரியாமல் போனால் என்ன ஆகும்? நிலமும் எல்லைகளும் எப்படி மனிதர்களைக் கூறுபோட்டது என்பதற்கான உணர்ச்சிப்பதிவு. மண்டோவின்  சிறுகதைகள் உலக இலக்கியத்தில் வைத்துப் போற்றப்பட வேண்டியவை. அவரை மீண்டும் மீண்டும் வாசிப்பதன் மூலமே நம்முடைய பொதுச்சமூகம் தன்னுடைய மனப்பிறழ்வுகளைக் கண்டுணர்ந்து சரி செய்து கொள்ள முடியும்.

எல்லாரும் சகோதரத்துவத்துடன், சமத்துவத்துடன் வாழ்வதற்கு மண்டோவை வாசிக்கவேண்டும்.

மீண்டும் மீண்டும் மண்டோவை வாசிப்போம்.

உதயசங்கர்

Amazon : https://www.amazon.in/dp/B0B1C2S65P

குறிப்பு:
சிறார் இலக்கியத்தில் வயதுக்கேற்ப படைப்புகள் வெளியாக வேண்டும் என்கிற கோரிக்கை நீண்ட நாள்களாகவே உள்ளது. அதற்கான முயற்சிகள் அவ்வப்போது நடந்தும் வருகின்றன. அதன் தொடர்ச்சியாகவே ‘ஓங்கில் கூட்டம்’ இயங்கிவருகிறது. நண்பர்களுடன் இணைந்து, கூட்டுழைப்பின் வழியாக பதின்பருவத்தினருக்கான புத்தகங்களை ஓங்கில் கூட்டம் தொடர்ந்து வெளியிட்டுவருகிறது. வாசிப்புப் பழக்கம் நோக்கி சிறாரை நகர்த்த அறிவியல், சமூகம், சூழலியல், ஆளுமைகளின் வாழ்க்கைச் சித்திரம் என வெவ்வேறு தலைப்புகளில் சிறுசிறு புத்தகங்களாக ஓங்கில் கூட்டம் கொண்டுவருகிறது. இப்படி தமிழ், ஆங்கிலம் என இரண்டு மொழிகளில், எளிமையான மொழிநடையில், அழகிய ஓவியங்களுடன் புத்தகங்களை வெளியிட்டுவருவது வரவேற்பைப் பெற்றுள்ளது. ‘பஞ்சு மிட்டாய்’ பிரபு ஒருங்கிணைக்க எழுத்தாளர் கமலாலயனின் மேற்பார்வையில் எழுத்தாளர்கள், ஓவியர்கள், வடிவமைப்பாளர்கள் எனப் பலரது துணையோடு ஓங்கில் கூட்டம் இயங்கிவருகிறது.

தொடர்புக்கு: editor.oongilkootam@gmail.com

வெளியீடுகள்: https://amzn.to/3vfOvqX

Leave a comment