உங்களுக்குத் தெரிந்த விஞ்ஞானியின் பெயரைச் சொல்லுங்கள் என்று கேட்டால், ஐன்ஸ்டீன், எடிசன் என்பார்கள். ‘இந்திய’ விஞ்ஞானி என்று கேட்டால் சர் சி வி ராமன், அப்துல் கலாம் பெயரைக் குறிப்பிடுவார்கள். சரி, பெண் விஞ்ஞானி யாராவது தெரியுமா என்றால், மேரி கியூரி என்று சொன்னபின்… ரொம்பவும் யோசித்து விண்வெளி வீராங்கனையான கல்பனா சாவ்லாவைச் சொல்வார்கள்.
இப்படி யாரோ ஓரிருவரை மட்டுமே மக்கள் அறிந்துவைத்திருப்பதில் சிக்கல் இருக்கிறது. “விஞ்ஞானி என்றால் கோடியில் ஒருவர் – அறிவு ஜீவி – அதிசயப் பிறவியாக இந்த உலகுக்கு வந்திருக்கிறார் –நமக்குத் தேவையானவற்றைக் கண்டுபிடித்துத் தர பிறப்பெடுத்திருக்கிறார்” என்பது போன்ற கற்பனைகளைப் பொதுப் பார்வையில் உருவாக்கிவிடுகிறது. இத்தகைய பிரம்மாண்ட எண்ணங்களால் விஞ்ஞானி என்பவரும் சாதாரண மனிதர்தான் என்பதை மறந்துவிடுகிறோம். நம்மூரில் இருக்கும் ஒருவர் மருத்துவர் ஆனார் என்பதைக் கேள்விப்படும் வளரிளம் பருவத்தினர், தன்னாலும் மருத்துவர் ஆக முடியும் என்று நம்புவார்கள். நமக்கு அருகிலிருக்கும் ஒருவர் அறிவியல் ஆய்வாளராக இருக்கிறார் என்பதைப் பேசும்போதுதான் தன்னாலும் ஒருநாள் விஞ்ஞானி ஆக முடியும் என்பதை சிறார்கள் யோசிப்பார்கள் .
‘ஜானகி அம்மாள்’ குறித்து வளரிளம் பருவத்தினருக்காக எழுதப்பட்டுள்ள இந்தப் புத்தகம் அப்பணியைச் சிறப்பாகச் செய்கிறது. இந்தியாவின் கரும்புப் பெண்மணியான ஜானகி அம்மாள் வாழ்வின் பிறப்பு, பெண் கல்வி மறுக்கப்பட்ட காலத்திலும் கல்வி ஒன்றே போதும் என்று கண்ணாய் இருந்து, கடல் கடந்து சென்று படித்து எப்படி ஆய்வாளர் என்பதைச் சொல்கிறது. ஓர் ஆய்வாளர் ஆனாலும், நம் நாட்டின் சாதிய அடக்குமுறையும், ஆணாதிக்கமும் நம் நாட்டின் அறிவு வளத்தை நாட்டை விட்டே துரத்திவிட்ட வலிமிக்க கதையைக் கூறுகிறது. இத்தகைய எதிர்ப்பிருந்தாலும், இன்றும் தாவரவியல் துறையினர் கையேடாகப் பயன்படுத்தும் ஜானகி அம்மாளின் புத்தகத்தைப் பற்றிச் சொல்கிறது.
சிறார்கள் வாசிப்பதற்கேற்ற வகையில் இந்நூலை எழுதியிருக்கிறார் சிந்தன். ஒவ்வொரு விஷயத்தைத் தொடங்கும்போதும் “அது ஏன் தெரியுமா?” என்ற கேள்வியைக் கேட்கும்போது அடுத்த பகுதியைப் படிக்கும் ஆர்வம் தானாக வந்துவிடுகிறது. சிறார்களுக்காக பல்வேறு செயல்பாடுகளைத் தொடர்ந்து நிகழ்த்திவரும் சிந்தன், இன்னும் பல புத்தகங்களைத் தருவார் என்பதில் சந்தேகமில்லை. காலத்துக்குத் தேவையான நூல்களைத் தொடர்ந்து வெளியிட்டு வரும் ஓங்கில் கூட்டத்தினருக்கு வாழ்த்துகள். ஓங்கில் கூட்டத்தின் புத்தகங்களின் மற்றொரு சிறப்பு – ஓவியங்கள். இப்புத்தகமும் அதில் விதிவிலக்கில்லை.
இந்திய விஞ்ஞானிகளைப் பற்றிப் பேச வேண்டும் என்னும் ஊக்கத்தைக் கொடுக்கும் படைப்பு இது.
-ஹேமபிரபா
குறிப்பு:
சிறார் இலக்கியத்தில் வயதுக்கேற்ப படைப்புகள் வெளியாக வேண்டும் என்கிற வலியுறுத்தல் நீண்ட நாள்களாகவே உள்ளது. அதற்கான முயற்சிகள் அவ்வப்போது நடந்தும் வருகின்றன. அதன் தொடர்ச்சியாகவே ‘ஓங்கில் கூட்டம்’ இயங்கிவருகிறது. நண்பர்களுடன் இணைந்து, கூட்டுழைப்பின் வழியாக பதின்பருவத்தினருக்கான புத்தகங்களை ஓங்கில் கூட்டம் தொடர்ந்து வெளியிட்டுவருகிறது. வாசிப்புப் பழக்கம் நோக்கி சிறாரை நகர்த்த அறிவியல், சமூகம், சூழலியல், ஆளுமைகளின் வாழ்க்கைச் சித்திரம் என வெவ்வேறு தலைப்புகளில் சிறுசிறு புத்தகங்களாக ஓங்கில் கூட்டம் வெளியிட்டுவருகிறது. இப்படி தமிழ், ஆங்கிலம் என இரண்டு மொழிகளில், எளிமையான மொழிநடையில், அழகிய ஓவியங்களுடன் புத்தகங்களை வெளியிடுவது வரவேற்பைப் பெற்றுள்ளது. ‘பஞ்சு மிட்டாய்’ பிரபு ஒருங்கிணைக்க எழுத்தாளர் கமலாலயனின் மேற்பார்வையில் எழுத்தாளர்கள், ஓவியர்கள், வடிவமைப்பாளர்கள் எனப் பலரது துணையோடு ஓங்கில் கூட்டம் இயங்கிவருகிறது.
தொடர்புக்கு: editor.oongilkootam@gmail.com
வெளியீடுகளைப் பெற: https://amzn.to/3vfOvqX