யார் எது குறித்து பேசுகிறோம் மற்றும் யாருக்காகப் பேசுகிறோம் என்பது எல்லா காலகட்டத்திலும் முக்கியமான ஒன்று. கடந்த இரண்டு ஆண்டுகளாக நாம் கடக்கும் இந்த நோய்மையின் காலம் சமூகத்தின் எல்லா அடுக்குகளின் மனிதர்களின் மீதும் வயது, கல்வி, செயல்திறன், செல்வநிலை இவற்றின் பாலான எந்தவிதமான வேறுபாடுமின்றி அவரவர் அளவில் தனது பாதிப்பினை செலுத்தியுள்ளது.
குறிப்பாக பள்ளி செல்லும் குழந்தைகள், பதின்பருவத்தினர் மீது இக்காலம் ஒரு செயலாற்றாவியலா கொடும்பனியை இறக்கி இருக்கிறது. இந்நிலையில் இக்குழந்தைகளின் குரலாய் வெளிப்பட்டு, அவர்களின் மீதான குளிர்காய் நெருப்பை அளித்து கதகதப்பை அளித்திருக்கின்றன இக்கவிதைகள் என்றால் மிகையன்று.
பதின் பருவத்தினரை குறித்தே இவை பேசுகின்றன. அவர்களின் உலகத்தினை, அதில் ஏற்படும் உடல் மற்றும் மன ரீதியான பருவமாற்றங்களை, பெரும்பாலும் தங்கள் முழு வாழ்விற்கான கல்வி, நட்பு மற்றும் லௌகீகப் புரிதல்கள் தொடங்கும் வயதாக இந்தப் பதின்பருவம் இருக்கும். இந்நிலையில் அவர்களது மாபெரும் கற்றுக் கொள்ளும் இடமான கல்விச்சாலைகள் இருவருடங்களாக தொடர்ந்து மூடியிருந்த நிலை.
உளவியல் ரீதியாக வீட்டினுள்ளே அடைந்து கிடப்பதில் உள்ள சிக்கல்கள். அவர்கள் மனம் எழுப்பும் கேள்விகள், அவற்றுக்கான பதில்களற்றுப் போதல் போன்றவற்றை பேசுகின்றார் கவிஞர்.
பெண் குழந்தைகளின் மனநிலை குறித்து பேசும் கவிதைகளில் ‘வகுப்பறை விலக்கு கவிதையில் வரும் நாப்கின் மலர்ச்சியைத் தந்தது திடீர் மாதவிலக்கின் பதற்றத்தை சொல்லிச் செல்கிறது.
நினைவு, டியர் வாகினி ரகசியப் பொய் முதலிய கவிதைகள் நட்பின் தேவையை அதன் இடத்தின் முக்கியத்துவத்தைப் பேசுகின்றன.
சுற்றுச்சூழல் சார்ந்து ‘வேடிக்கை ருசி ‘குளோரின் நீர்’, ‘ஊஞ்சல்’, ‘கடலெனும் அற்புதம்’ தம் உரை பொருளை முன் வைக்கிறார் கவிஞர்
இவையெல்லாம் வெறும் உதாரணங்களே, பிரதி இன்னும் பலவற்றை தன்னுள் பொதிந்து வைத்துள்ளது.
மொத்தம் இருபத்தி ஐந்து கவிதைகள் கொண்ட இந்த தொகுப்பினில் இயன்றவரை பதின் பருவத்தில் உள்ள ஆர்வம், ஆர்வக் கோளாறுகள், ஆசைகள், கனவுகள், இப்பருவத்திற்கே உண்டான குழப்பம் முடிவெடுக்க முடியாமை போன்ற பல்வேறு நிலைகள் குறித்த கவிதைகளை தன்னால் இயன்ற அளவு கவிஞர் பேசியிருக்கிறார்.
பெண்ணின் பார்வையில் பார்க்கையில் இன்னும் கொஞ்சம் பெண் குழந்தைகளுக்கான பிரத்யேகக் கவிதைகள் அவற்றின் தேவை இன்று அதிகமாக இருக்கையில், எண்ணிக்கையிலும் அதிகமாக இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று தோன்றியது.
முன்பே சொன்னது போல யாருக்காக எதனைப் பேசுகிறோம் என்பதும், அதற்கான தேவை என்ன என்பதும் மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று.
அவ்வாறான நிலையில் கவிஞர் ந.பெரியசாமி அவர்களின் இந்தக் கவிதைகள் இக்காலகட்டத்திற்கான மிக முக்கியத் தேவையான ஒரு பாடுபொருளாகும். அதனை திறம்பட கையாண்டு நாளைய சமூகத்தின் இன்றைய முக்கிய வேர்களைப் புரிந்து கொள்ள இக்கவிதைகளை வாசிப்போருக்கு இன்று ஒரு வழிகாட்டியினை கையளிக்கிறார். தொடர்ந்து கவிதைகளில் இது போன்ற பேசுபொருள்கள் நம் எதிர்கால சந்ததிகளை வளமாக்க உதவும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.
என்றென்றும் அன்புடன்,
தேவசீமா
சென்னை
கடைசி பெஞ்ச் அமேசான் சுட்டி : https://www.amazon.in/dp/B09PBMGSH2
குறிப்பு:
சிறார் இலக்கியத்தில் வயதுக்கேற்ப படைப்புகள் வெளியாக வேண்டும் என்கிற வலியுறுத்தல் நீண்ட நாள்களாகவே உள்ளது. அதற்கான முயற்சிகள் அவ்வப்போது நடந்தும் வருகின்றன. அதன் தொடர்ச்சியாகவே ‘ஓங்கில் கூட்டம்’ இயங்கிவருகிறது. நண்பர்களுடன் இணைந்து, கூட்டுழைப்பின் வழியாக பதின்பருவத்தினருக்கான புத்தகங்களை ஓங்கில் கூட்டம் தொடர்ந்து வெளியிட்டுவருகிறது. வாசிப்புப் பழக்கம் நோக்கி சிறாரை நகர்த்த அறிவியல், சமூகம், சூழலியல், ஆளுமைகளின் வாழ்க்கைச் சித்திரம் என வெவ்வேறு தலைப்புகளில் சிறுசிறு புத்தகங்களாக ஓங்கில் கூட்டம் வெளியிட்டுவருகிறது. இப்படி தமிழ், ஆங்கிலம் என இரண்டு மொழிகளில், எளிமையான மொழிநடையில், அழகிய ஓவியங்களுடன் புத்தகங்களை வெளியிடுவது வரவேற்பைப் பெற்றுள்ளது. ‘பஞ்சு மிட்டாய்’ பிரபு ஒருங்கிணைக்க எழுத்தாளர் கமலாலயனின் மேற்பார்வையில் எழுத்தாளர்கள், ஓவியர்கள், வடிவமைப்பாளர்கள் எனப் பலரது துணையோடு ஓங்கில் கூட்டம் இயங்கிவருகிறது.
தொடர்புக்கு: editor.oongilkootam@gmail.com
வெளியீடுகளைப் பெற: https://amzn.to/3vfOvqX