அனுபவத்தால் பெறும் அறிவியல் அறிவு: ஆதி மனிதன் கல்லை உரசி நெருப்பைக் கண்டுபிடித்தான். விலங்குகளின் எலும்புகளைக் கூராக்கி ஆயுதம் செய்தான். அன்று முதல் மனிதனின் அறிவியல் தேடல்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. நமது அன்றாடச் செயல்களில் ஆழமாகப் பொதிந்துள்ளவற்றை விஞ்ஞான ரீதியாக பார்ப்பதையே அறிவியல் பேசுகிறது. அப்படியானால் மனிதனுடைய ஒவ்வொரு செயற்பாடுகளிலும் அறிவியல் பொதிந்திருக்கிறது என்பதுதானே உண்மை.
நம்மைச் சுற்றியுள்ள அனைத்தையும், உலக இயக்கத்தையும், இயற்கை பற்றிய புரிதல்களையும் வளர்த்துக்கொள்ள, மனிதன் அறிவியல் கண்ணோட்டத்துடன் தொடர்ச்சியாக ஆயிரமாயிரம் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறான். அறிவியல் என்பது அனுபவம் கற்றுத்தரும் விளக்கம் (empirical) எனலாம்.
பழைய சித்தாந்தங்களை, மூட நம்பிக்கைகளை, பொய்ப் பரப்புரைகளை, உண்மைக்குப் புறம்பான கருத்துத் திணிப்புகளை பலகட்ட சோதனை முயற்சி மூலம் மனிதன் உண்மை தவறெனப் பகுத்து, உலகுக்குச் சொன்னவை அனுபவம் தந்த அறிவியல் அறிவின் வெளிப்பாடு.
ஆராய்ச்சி முடிவுகள் சொல்லும் உண்மை: பூமி பிறந்த கதை, மனிதன் தோன்றிய வரலாறு என்னவென்று இன்றும் நம் மத்தியில் பலவேறு பரப்புரைகள் உண்மைக்குப் புறம்பாக கற்றுத்தரப் படுகின்றன என்பது மிகவும் வருந்தத்தக்க செய்தி. பரிணாம வளர்ச்சிக் கொள்கையின்படி பச்சை கடல்பாசியில் இருந்துதான் பூமியின் முதல் உயிர் பிறந்தது என்கிறார்கள். உண்மையில் அறிவியல் வலைக்குள் சிக்காதவை எதுவும் அண்டத்தில் இல்லை என்பதால் இன்று உலகையே பிரம்மிக்க வைக்கும் அளவிற்கு அபரீத வளர்ச்சி கண்டுள்ளது.
கிரகணத்தன்று தாம்பூலத்தட்டில் நிற்கும் உலக்கை, பசுவின் கோமியம் குடித்தால் நோய்கள் தீரும் என்ற கருத்துகள், பில்லி சூனிய நம்பிக்கைகள், பண்டைய பண்பாட்டின் பெயரால் திணிக்கப்படும் போலி அறிவியல் நீண்ட காலமாக மக்கள் மனங்களில் மிக ஆழமாக விதைக்கப் பட்டுள்ளன. சூழலின் தேவையை உணர்ந்து உண்மையான அறிவியலாளர்கள் மக்களுடன் ஒருங்கிணைந்து அதை முறியடிப்பதற்கு முன்வந்து செயல்பட்டுவருகிறார்கள்.
எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும் – அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு
குறள் வழி, வள்ளுவர் சொன்ன பகுப்பறிவு, அறிவியல் சோதனகளுக்கும் பொருந்தும். அறிவியலின் அடிப்படை விதியும் அதுவே. அறிவியல் என்றால் ஆயிரம் கேள்விகள். ஆயிரம் விடைகள்.
நாமெல்லாம் இயற்கையின் ஓர் அங்கம்தான் என்கிறது அறிவியல். நம் முன்னோர்கள் தம் அறிவுக்கு எட்டிய அறிவியல் சிந்தனைகளின் அடிப்படையிலே விவசாய நடவடிக்கைகள் மேற்கொண்டனர். காற்றின் திசை அறிந்தும் மழையின் தன்மை கற்றும் காலநிலைக்கு ஏற்றபடி பயிர்செய்தார்கள். மண்ணைச் சோதித்து, பருவகால மாறுதல்களை கணக்கிட்டு விவசாயம் செய்த தமிழர் மத்தியில் அறிவியல் செலுத்திய ஆதிக்கம் எத்தனை நூற்றாண்டுகளாகத் தொடர்கிறது என்பதை அண்மைய ஆராய்ச்சி முடிவுகள் தெளிவுபடுத்துகின்றன.
சிறார் உலகின் அறிவியல் வளர்ச்சி: முதன்முதலில் மனிதச் செயல்பாடுகள் ஓர் உத்தேசத்தின் (hypothesis) அடிப்படையிலேயே அமைந்தன. அறிவியல் அறிவு வளர்ச்சியின் பயனாகவும் அறிவியலாளர்களின் ஆராய்ச்சியின் விளைவாகவும் அவற்றின் உண்மைத்தன்மை கண்டறியப்பட்டு உறுதி செய்யப்பட்டது.
“தற்போதுள்ள நமது கல்விமுறை குழந்தைகளுக்கு நியாயம் வழங்குவதாக இல்லை. ஏனெனில் அவர்களுக்கு உரிய வாய்ப்பு அளிக்கப்படுவதில்லை. நடைமுறையில் அறிவியல் உண்மைகள் மாணவர்களுக்கு மனிதநேயக் கண்ணோட்டத்தில் கற்பிக்கப்படுவதில்லை” என்கிறார் அறிவியல் மேதை ஜே.பி.எஸ். ஹால்டேன்.
நாம் நமது அன்றாடச் செயல்களில் ஒளிந்துள்ள அறிவியலை, நம்மைச் சுற்றி நடக்கும் மாறுதல்கள் நிகழ்த்தும் அறிவியல் உண்மைகளை குழந்தைகளுக்குக் கற்றுத்தர வேண்டும். அதற்கான முயற்சிகளை தமிழ் நாடு அறிவியல் இயக்கம், விஞ்ஞான் பிரச்சார் போன்ற அமைப்புகள், தேர்ந்த கல்வியாளர்கள், அறிவியல் ஆசிரியர்கள் எல்லோரும் தொடர்ந்து முனைப்போடு தன்னார்வத்துடன் செயல்படுத்தி வருகிறார்கள்.
அறிவுப் பெருக்கத்தின் ஆயிரம் வாசல்: இந்து தமிழ் நாளிதழில் திசைகாட்டி பகுதியில் இ.ஹேமபிரபா அவர்கள் ‘அறிவுக்கு ஆயிரம் கண்கள்’ தலைப்பில் எழுதிய அறிவியல் தொடர் கட்டுரைகள் எளிய மொழியில் அனைவரையும் வாசிக்கத் தூண்டும் வகையில் புரியும்படியாகவும் சுவாரஸ்யம் கலந்தும் எழுதப்பட்டுள்ளன. மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பும் பாராட்டுதல்களும் பெற்றன. அறிவியலில் முனைவர் பட்டம் பெற்றவரான ஹேமபிரபா கடந்த ஆறு ஆண்டுகளாகத் தமிழில் அறிவியல் கட்டுரைகள், கதைகள், பிற படைப்புகளை எழுதி வருகிறார். இஸ்ரேல் டெக்னியான் தொழில்நுட்ப நிறுவனத்தில் பொருள்சார் அறிவியல் துறை ஆராய்ச்சியாளராக பணிபுரிகிறார்.
அவர் எழுதிய மிகமுக்கியமான கட்டுரைகள் கற்றுத்தரும் அறிவியல் நாம் இதுவரை அறியாதவை. அரண்மனை எப்படி இருக்கும் என்று அறியாத குழந்தைகள்கூட கடற்கரை மணலில் எழுப்பும் மணற்கோட்டைபோல ஒவ்வொரு அறிவியல் செயல்பாடுகளையும் நம்மைச் சுற்றி நடக்கும் எளிய நிகழ்வுகளோடு ஒப்பிட்டுச் சொல்லும் கலை நம்மை வியப்புக்குள்ளாக்குகிறது. அப்படியான சில அறிவியல் கட்டுரைகள் இதோ!
‘பொரியும் கடுகும் சீறும் ஏவுகணையும்’ கட்டுரையைப் பார்ப்போம். விண்ணில் பாயும் ஏவுகணைப் பயணத்தை சமயலறையில் பொரியும் கடுகுகளோடு தொடர்புபடுத்தி எழுதியுள்ள விளக்கம், அடிப்படை அறிவியலை எளிய உதாரணத்துடன் கற்றுத் தருகிறது. எண்ணெய்யில் கடுகை இட்டுத் தாளிக்கும்போது, கடுகு சூடேறி அதற்குள் இருக்கும் நீர் ஆவியாகும். அந்த நீராவி, கடுகின் தோலைப் பிய்த்துக்கொண்டு வெளியே வருவதால் கடுகு வெடிக்கிறது. கடுகில் ஏற்படும் துவாரம் சற்றுப் பெரிதாக இருந்தால், விரைவில் நீராவி வெளியேறிவிடும், கடுகால் பறக்க முடியாது. ஆனால், நுண்ணிய துவாரமாக இருந்தால், நீராவி சிறிது சிறிதாக வெளியேறும். அப்படி வெளியேறும் நீராவியால் தனக்குக் கிடைக்கும் உந்துவிசையால் முன்னேறி கடுகு மேலே பறக்கும். ஓர் ஏவுகணை மேலே செல்ல வேண்டுமென்றால், எரிபொருள் தேவை. ஏவுகணை ஏவப்படும்போது எரிபொருள் எரிக்கப்படும். அப்போது வெளியாகும் வாயுக்களால் அழுத்தம் உண்டாகி, அதன்மூலம் கிடைக்கும் உந்துவிசையைப் பயன்படுத்தி ஏவுகணை முன்னேறிப் போகிறது என்ற விளக்கம் போதுமானதாகவே இருக்கிறது.
துணி காய்தல், கிரிக்கெட் முடிவு, இரண்டையும் தீர்மானிக்கும் ஒரே ஆயுதம் ஈரப்பதம் ஒன்றுதான் என்கிறார் ஹேமபிரபா. துவைத்துக் காயப்போடும் ஈரத்துணிகள் எப்படிக் காய்கின்றன? காற்றில் இருக்கும் ஈரப்பதத்துக்கும் துணி காய்வதற்கும் முக்கியத் தொடர்பிருக்கிறது. நனைந்த துணியில் ஈரப்பதம் இருக்கும். அதேபோல் காற்றிலும் ஈரப்பதம் இருக்கும். இந்த இரண்டிலும் இருக்கும் ஈரப்பத அளவுகளுக்கு இடையே நடைபெறும் போட்டியில்தான், துணி விரைவாகவோ தாமதமாகவோ காய்கிறது. காற்றில் இருக்கும் ஈரப்பதம் குறைந்தால், தன்னிடம் இருக்கும் ஈரப்பதத்தைக் காற்றுக்குத் துணி வழங்கும். காற்று நகரும். அந்த இடத்தை நிரப்புவதற்கு வரும் புதிய காற்று துணியிடம் இருக்கும் ஈரத்தை வாங்கிக்கொள்ளும். இதுதான் உதாரணம். கிரிக்கெட் போட்டிகளில் யார் முதலில் ஆடுவது என்பதையும் காற்றின் ஈரப்பதம் ஓரளவு முடிவு செய்கிறது. காற்றில் ஈரப்பதம் அதிகமிருந்தால் சுழற்பந்துவீச்சாளர்களுக்கு பெரும் பிரச்சினை. புற்களின் மீது பனித்துளி அதிகரித்து, மண் ஈரமாகும். இப்படித்தான் ஹேமபிரபா ஈரத்துணிக்காயும் அறிவியல் மூலம் கிரிக்கெட் விளையாட்டு போட்டி முடிவுகள் எப்படி நிர்ணயிக்கப்படுகின்றன ‘துணி காய்தலும் கிரிக்கெட் முடிவுகளும்’ என்ற கட்டுரை வழியே எளிதாக விளக்குகிறார் ஆசிரியர்.
வண்டிக்கு பெட்ரோல், செயற்கைக்கோளுக்கு? பூமியைச் சுற்றிவரும் செயற்கைக்கோள்களுக்கு எரிபொருள் தேவையில்லை. ஒரு கயிற்றில் கல்லைக் கட்டிச் சுழற்றினால், இரண்டு சுற்றுக்கு அப்புறம் சீரான வேகத்தில் கல்லானது கயிற்றின் அளவிற்கு ஏற்ப வட்டமடிக்கும். குறிப்பிட்ட வேகத்தில் சுற்றிக்கொண்டிருப்பதால், கல்லால் பூமியின் ஈர்ப்பு விசையை மீறி கீழே விழாமல் இருக்க முடிகிறது. இப்படித்தான் பூமியைச் சுற்றும் செயற்கைக்கோள்களும் பூமியின் ஈர்ப்புவிசையை மையமாக வைத்துச் சுற்றி வருகின்றன. அதை ஒரு குறிப்பிட்ட வேகத்தில் சுற்ற வைத்தால், அந்த செயற்கைக்கோள் வட்டப்பாதையை மீறிச் செல்லாது. பூமியில் காற்று இருப்பதால் கையால் கல்லைச் சுற்றும்போது காற்று தடையை ஏற்படுத்தலாம். ஆனால் செயற்கைக்கோள், காற்றுமண்டலத்தைத் தாண்டிப் போய்விடும். அங்கே காற்று இல்லாததால், செயற்கைக்கோள் சுற்றுவதற்குத் தடை இருக்காது. எரிபொருள் தேவை இல்லாமலேயே எப்போதும் சுற்றிவரும். குழந்தைகளுக்குக்கூட புரியும் விதத்தில் ஹேமா எவ்வளவு அழகாகச் சொல்லிவிட்டார் பாருங்கள்!
நடைப்பயிற்சி செய்வோருக்கு கைபேசி வரப்பிரசாதம் ஆகியுள்ளது. எத்தனை காலடிகளை எடுத்துவைத்தோம் என்பதை மின்னணு சமிக்ஞைகளாகக் கைபேசி உணர்கிறது. இந்தப் பணியைச் செய்வதற்காக, கைபேசியில் ‘அழுத்தமின் விளைவுப் பொருள்கள்’ (piezoelectric materials) பயன்படுத்தப்படுகின்றன. நடக்கும்போது, ஓடும்போது கைபேசி அதிர்வுக்கு உள்ளாகிறது. இது ஓர், இயந்திர இயக்கம் (mechanical action). இந்த இயந்திர இயக்கத்தின் மூலம் உண்டாகும் அழுத்தத்தை மின்னூட்டமாக மாற்றக்கூடியவை அழுத்தமின் விளைவுப் பொருட்கள். மின்னூட்டம் உணரப்பட்டு, அதன்மூலம் நாம் எத்தனை காலடிகளை எடுத்துவைத்தோம் என்று கைபேசிகள் கண்டுபிடித்துவிடுகின்றன என்ற அறிவியல் உண்மையை எளிமையாக விளக்குகிறது ‘நடந்தால் மின்சாரம், நிமிர்ந்தால் மின்சாரம்’ என்ற கட்டுரை.
மெழுகுவர்த்தி எரிகிறது. பார்க்கிறோம். எப்படி எரிகிறது? தந்துகிக் கவர்ச்சி (capillary action) என்றால் என்ன? மரங்களுக்கும் மெழுகுவர்த்திக்கும் உள்ள ஒற்றுமை என்ன? என்றெல்லாம் நாம் தெரிந்துக்கொள்ள வேண்டாமா? மெழுகுவர்த்தியில் திரியைப் பற்ற வைத்ததும், அந்தச் சூட்டினால் மெழுகு திரவமாகி ஒரு குளம்போல் தேங்கி நிற்கும். திரவ நிலையில் இருக்கும் இந்த மெழுகு, திரி வழியாகச் சிறிதுசிறிதாக மேலேறி, திரியின் நுனிக்குப் போகும். அங்கே, மெழுகு ஆவியாகிறது. இப்படி, ஆவியாகும் மெழுகுதான் எரிகிறது. திரி வழியே புவியீர்ப்பு விசைக்கு எதிராக ஒரு திரவம் மேலே செல்லும் பண்புக்குத் தந்துகிக் கவர்ச்சி என்று பெயர். இதே இயக்கத்தின் அடிப்படையில்தான் செடியின் கீழ்ப்பரப்பில் இருக்கும் வேர்கள் நீரை உறிஞ்சி, மேலே இருக்கும் இலைகளுக்கும் தண்டுகளுக்கும் அனுப்புகின்றன என்ற உண்மையை தெளிவாக விளக்கிறார் விஞ்ஞானி.
பிரேசில் நெற்று விளைவு (Brazil nut effect) என்றால் என்ன? இந்த விளவால் சிப்ஸ் பாக்கெட்டில், பருப்புப் பொட்டலத்தில் என்ன நிகழ்கிறது? இதற்கும் ஆற்றங்கரை நிகழ்வுகளுக்கும் உள்ள ஒற்றுமை என்ன? தொல்பொருள் ஆராய்ச்சி கற்றுத் தரும் பாடம் என்ன? நிலத்தட்டு நகர்வுக்கு உள்ள தொடர்பு என்ன? அடிப்படை உண்மைகளை விளக்கும் கட்டுரை ‘சிப்ஸை அடுக்குவதும் மருந்து ஆராய்ச்சியும்’
தூய்மையான அறை (clean room) என்று எதை அழைக்கிறோம்? காற்று வடிகட்டப்பட்டு அனுப்பப் படுமா? அறையின் சுவர் முழுக்க வடிகட்டிகள் பொருத்தி அவற்றின் வழியே செல்லும் காற்றிலிருக்கும் தூசு நீக்கப்பட்டுவிடும். அறையில் உள்ள காற்றில் தூசின் அளவு எவ்வளவு இருக்க வேண்டும்? அத்தகைய வடிகட்டிகளில் மைக்ரோமீட்டர் அளவில் நுண்ணிய இழைகள் இருக்கும். பாக்டீரியா, வைரஸ் போன்ற 0.3 மைக்ரோமீட்டர் அளவில் இருக்கும் நுண்ணுயிரிகளையும் இவற்றால் வடிகட்டிவிட முடியும்.இவ்வளவு தூய்மையான அறைகளில்தான் நவீன மின்னணு இயந்திரத் தயாரிப்பும், ஆய்வுகளும் நடைபெறுகின்றன. தீவிர சிகிச்சைகள் செய்யப்படும் மருத்துவமனைகளிலும், வைரஸ் போன்ற நுண்ணுயிரிகள் குறித்த ஆய்வகங்களிலும் இந்த வகைத் தூய்மையான அறைகள் இருக்கும் என்ற அறிவியல் தகவல்கள் உள்ளடக்கிய கட்டுரை ‘மின்னணுக் கருவிகளின் இயக்கத்தை நிறுத்தும் தூசு’.
ஒரு துளி காபியைச் சிந்திவிட்டு, அது காயும்வரை வேடிக்கை பார்ப்போம். அந்த இடத்தில் என்ன நடக்கிறது? விளிம்பில் குறைவான திரவமும், நடுப்பகுதியில் அதிகளவு திரவமும் இருக்கும். ஆக, குறைந்த திரவம் இருக்கும் விளிம்புப் பகுதி எளிதில் ஆவியாகும். திரவம் காய்ந்தவுடன், அதில் கலந்திருந்த காபித்தூள் அங்கேயே தங்கிவிடும். இதைத்தான் காபி வளைய விளைவு (coffee-ring effect) என்கிறோம். இந்த உத்தியைப் பயன்படுத்தி, ஓவியத்தை மெருகேற்றுவார்கள். தண்ணீர் தோய்ந்த வண்ணத்தை ஒரு கோடு இழுத்தால் போதும். சாயத்தூள் விளிம்பில் காய்ந்து அழகான இதழ்களைத் தானாகவே உருவாக்கிவிடும். வண்ணத்துக்குப் பதிலாக, தாமிரம் போன்ற மின்கடத்தித் துகள்களைக் கலந்து தூரிகையால் வரைந்தால், திரவம் காய்ந்தவுடன் அங்கே தாமிரம் மட்டும் தங்கிவிடும். மின் இணைப்பு கிடைக்கும். ஒரு கண்ணாடியின்மீது இது போன்ற மின் இணைப்பை உருவாக்கினால், ஒளி ஊடுருவும் மின் பொருள்களைத் தயாரிக்க முடியும். இதுபோன்ற ஆய்வுகள் வழியே உலக மின் தேவையை பூர்த்தி செய்வதற்காக முயற்சிகளில் ஆராய்ச்சியாளர்கள் இறங்கி உள்ளார்கள் என்பது நம்பிக்கை தரும் செய்திதானே.
கடலில் சிலவகை திமிங்கிலங்கள் எப்படி தங்களுக்கான உணவைச் சேகரிக்கின்றன தெரியுமா? திமிங்கிலங்கள் மூச்சுவிட கடலின் மேற்புறத்துக்கு வந்து, நுரையீரலில் காற்றை நிரப்பிக்கொண்டு மீண்டும் கடலுக்குள் சென்றுவிடுகின்றன. அவற்றின் நுரையீரல் மிகப் பெரியது என்பதால் நிறைய காற்றை உள்ளிழுத்துக்கொள்ள முடியும். திமிங்கிலங்கள் தங்களுக்குள் தொடர்புகொண்டு வட்டம் அமைத்து, ஒரே நேரத்தில் மூச்சுக்காற்றை வெளிவிடும். அப்போது, கடல் நீரில் பெரிய காற்றுக்குமிழிகள் உருவாகி தண்ணீரின் பரப்புக்கு வந்து உடையும். கடலில் இருக்கும் குட்டி மீன்கள் தங்களைச் சுற்றி ஏதோ வெடிக்கிறது என்னும் பய உணர்வில் திமிங்கிலங்கள் வெளியேற்றிய குமிழி வட்டத்துக்குள் கூட்டாகத் திரளும். இப்படித் திரண்டிருக்கும் குட்டி மீன்களைத் திமிங்கிலங்கள் உணவாக்கிக்கொள்கின்றன. இது, குமிழி வலை (bubble net) முறையில் மீன் பிடித்தல் என்று விளக்குகிறது ‘திமிங்கிலங்களின் காற்று வலை’ என்ற கட்டுரை.
சூரியன் எதைச் சுற்றிவருகிறது, தெரியுமா? இரவு-பகல் எதனால் வருகிறது? இந்தப் பிரபஞ்ச இயக்கத்தின அடிப்படை என்ன? வின்வெளிக் கூட்டத்தின யின் மையப்புள்ளி எது? கருந்துளையின் ஈர்ப்புவிசை! பால்வீதியின் மையப்புள்ளியைச் சூரியன் முழுமையாகச் சுற்றிவர கிட்டத்தட்ட 20 கோடி ஆண்டுகள் ஆகும். ஒருமுறை சூரியன் பால்வீதியின் மையத்தை சுற்றிவருவதற்குள்ளே டைனோசர் தோன்றி அழிந்து விட்டன போன்ற சுவாரஸ்யமான தகவல்களுடன் செயலற்ற பொருட்களுக்கும் இயக்கம் உண்டு என்பதை ‘சூரியன் எதைச் சுற்றிவருகிறது, தெரியுமா?’ என்ற கட்டுரை மூலம் தெளிவு படுத்துகிறார் ஹேமப்பிரபா.
ஆச்சரியமூட்டும் இயற்கையின் ரேகைகள், பொரியும் பாப்கார்னும் விரியும் தாவர ராஜ்ஜியமும், தோசைக்கல் நீர்க்குமிழிகளும் மருத்துவ ஆராய்ச்சிகளும், தீச்சுடரின் வண்ணங்கள், ஆயிரம் சுவைகளும் அறிவியல் பின்னணியும் போன்ற கட்டுரைகள் வழியே, எளிய விளக்கங்களுடன் எல்லோருக்கும் புரியும் விதத்தில் நம் அன்றாடச் செயல்களில், நம்மைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளுக்குப் பின்னால் உள்ள அறிவியலை தெளிவாக விளக்கி இருக்கிறார் அறிவியலாளர் ஹேமபிரபா. அவர் தொடர்ந்து இதுபோல நூற்றுக்கணக்கான அறிவியல் கட்டுரைகளை நமெக்கெல்லாம் தருவார் என்று உறுதியாக நம்புகிறேன். வாசித்துப் பயன்பெறலாம். வாழ்த்துகள் நண்பர்களே!
நன்றி,
கொ.மா.கோ.இளங்கோ
கட்டுரை இணைப்புகள்:
1. பொரியும் கடுகும் சீறும் ஏவுகணையும்:
https://www.hindutamil.in/news/supplements/thisai-katti/658429-missile.html
2. துணி காய்தல், கிரிக்கெட் முடிவு: இரண்டையும் தீர்மானிக்கும் ஒரே ஆயுதம்:
https://www.hindutamil.in/news/supplements/thisai-katti/661263-clothing-cricket-results.html
3. வண்டிக்கு பெட்ரோல், செயற்கைக்கோளுக்கு?
https://www.hindutamil.in/news/supplements/araam-arivu/666864-petrol-for-the-car.html
4. பொரியும் பாப்கார்னும் விரியும் தாவர ராஜ்ஜியமும்
https://www.hindutamil.in/news/supplements/araam-arivu/669564-frying-popcorn.html
5. தோசைக்கல் நீர்க்குமிழிகளும் மருத்துவ ஆராய்ச்சிகளும்
https://www.hindutamil.in/news/supplements/araam-arivu/672139-medical-research.html
6. நடந்தால் மின்சாரம், நிமிர்ந்தால் மின்சாரம்
https://www.hindutamil.in/news/supplements/araam-arivu/674597-electricity.html
7. சிப்ஸை அடுக்குவதும் மருந்து ஆராய்ச்சியும்
https://www.hindutamil.in/news/supplements/araam-arivu/677227-drug-research.html
8. புவி என்னும் பெரும் காந்தம்
https://www.hindutamil.in/news/supplements/araam-arivu/679769-magnet.html
9. கொதிக்கும் எண்ணெய்யும் மேக வடிவமாதிரிகளும்
https://www.hindutamil.in/news/supplements/araam-arivu/682246-boiling-oil.html
10. புவியீர்ப்பை எதிர்த்து எரியும் மெழுகுச் சுடர்
https://www.hindutamil.in/news/supplements/araam-arivu/684905-gravity.html
11. மின்னணுக் கருவிகளின் இயக்கத்தை நிறுத்தும் தூசு
https://www.hindutamil.in/news/supplements/araam-arivu/687382-electronic-tools.html
12. மின்சாரம் கடத்த உதவும் காபி வளைய விளைவு
https://www.hindutamil.in/news/supplements/araam-arivu/689956-a-thousand-eyes-for-knowledge.html
13. நுண்ணுயிர்கள் தீண்டத்தகாதவையா?
https://www.hindutamil.in/news/supplements/araam-arivu/692667-microbes.html
14. திமிங்கிலங்களின் காற்று வலை
https://www.hindutamil.in/news/supplements/araam-arivu/695235-a-thousand-eyes-for-knowledge.html
15. சூரியன் எதைச் சுற்றிவருகிறது, தெரியுமா?
https://www.hindutamil.in/news/supplements/araam-arivu/697673-arivukku-100-kangal.html
16. ஆச்சரியமூட்டும் இயற்கையின் ரேகைகள்
https://www.hindutamil.in/news/supplements/araam-arivu/700596-lines-of-nature.html
17. சூரியனின் வெப்பத்தையும் விஞ்சும் மின்னல்
https://www.hindutamil.in/news/supplements/araam-arivu/703253-lightening.html
18. தீச்சுடரின் வண்ணங்கள்
https://www.hindutamil.in/news/supplements/araam-arivu/705906-arivukku-aayiram-kangal.html
19. ஆயிரம் சுவைகளும் அறிவியல் பின்னணியும்
https://www.hindutamil.in/news/supplements/araam-arivu/708439-arivukku-aayiram-kangal.html
20. வான் மேகங்களே
https://www.hindutamil.in/news/supplements/araam-arivu/710912-arivukku-aayiram-kangal.html