நீட் நுழைவுத் தேர்வு தேவையற்றது – தசிஎகச அறிக்கை

வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்
தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் – கலைஞர்கள் சங்கமானது குழந்தைகளின் நலனில் அக்கறைக்கொண்டு உருவாக்கப்பட்டது. குழந்தைகளின் நலன் எங்கெல்லாம் பாதிப்புக்காகிறதோ அங்கே எங்கள் சங்கம் குழந்தைகளுக்கு ஆதரவாக குரல் கொடுக்கும். அவ்வகையில் நீட் தேர்வுகள் குறித்த எங்கள் கருத்துக்களை, தங்களிடம் பதிவு செய்வது அவசியம் என்று கருதுகிறோம்.

1. நீட்: சமூக நீதிக்கு எதிரானது.
சமமற்ற கல்விச்சூழலில் நீட் நுழைவுத் தேர்வு முறை, மேலும் சமமற்ற தன்மையினை உருவாக்கும். பன்முகத் தன்மை கொண்ட சமூகத்தில் ஏழை எளிய மக்களுக்கு பிடிமானமும் முன்னேற்றத்திற்கான வழியாக கல்வி மட்டுமே இருக்கிறது. இந்த நிலையில், உயர்கல்வி பெற அனைத்திலும் வசதி வாய்ப்பு பெற்ற மாணவர்களுக்கும், பொருளாதாரத்தில் சமூக அடுக்கிலும் கீழ் மட்டத்தில் உள்ளவர்களின் பிள்ளைகளுக்கும் ஒரே தேர்வு முறை என்பதும் சமூக நீதிக்கு எதிரானது. மேலும், அடிப்படை உரிமையான கல்வியைத் தொடரமுடியாத நிலைக்கும் எளிய மாணவர்களை இழுத்துச் செல்கிறது.
2. மாணவ பருவத்தினைச் சிதைக்கும் நுழைவுத்தேர்வுகள்
நுழைவுத்தேர்வுகள் மற்றும் பொதுத்தேர்வுகளை பதின்பருவத்தில் தொடர்ந்து எதிர்கொள்வதால், அவர்களின் முக்கியமான வாழ்க்கை பகுதியினை டியூசன் மற்றும் பள்ளி புத்தகங்களோடு மட்டுமே கழிக்கின்றனர். சக மாணவர்களுடன் பேசவும் பழகவும் நேரம் இருப்பதில்லை. வாழ்வில் எந்தக் கலையையும் ரசிக்கவும், அக்கலையில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ள முயன்று பார்க்கவும் அவகாசம் இருப்பதே இல்லை. எந்நேரமும் படிப்பு படிப்பு என மிக குறுகிய வட்டத்திலேயே அவர்கள் சுழல வேண்டியிருக்கின்றன இந்தப் பொதுத்தேர்வுகள். இந்தச் சூழ்நிலையை இன்னும் இறுக்கமாக்கி விடுகிறது நீட் போன்ற தேர்வுகள்.
3. இன்னும் ஒரு தேர்வுக்கு அவசியமே இல்லையே!
ஏற்கெனவே 12 ஆம் வகுப்புப் பொதுத்தேர்விற்கு கடுமையாக படிக்கிறார்கள். சில ஆண்டுகளாக 11 ஆம் வகுப்பிலும் பொதுத்தேர்வு எழுதி வருகிறார்கள். 11 மற்றும் 12 –ம் வகுப்பு பாடங்களை நன்கு கற்கும் சூழல் இருக்கிறது. அவற்றைத் தேர்வுகளில் வெளிப்படுத்தவு செய்கிறார்கள். அப்படி இருக்கும்போது நீட் எனும் பெயரில் இன்னுமொரு தேர்வு அவசியமற்றது. நீட் தேர்வால் பலரும் 11 மற்றும் 12-ம் வகுப்பு பாடங்களில் முழுமையாகக் கவனம் செலுத்த முடியாத நிலை இருப்பதையும் காண முடிகிறது. சமச்சீர் பாடப்புத்தகத்தில் பயிலும் மாணவர்கள் நீட் கேள்வித்தாளில் இருந்து அந்நியப்படுவதால் மொத்த தமிழகமும் புறக்கணிக்கப் படுகிறது.
4. வணிகமயமாகி விட்ட கல்வி
கல்வி வணிகமயமாக்கலை நீட் தேர்வு முறை ஊக்குவிக்கிறது. பள்ளிகள், பயிற்சி மையங்கள் அனைத்தும் வணிக நோக்குடன் செயல்படுகின்றன. இந்தப் போக்கைத் தடுக்க வேண்டியது அரசின் கடமை. தகுதியான மருத்துவர்களை உருவாக்குவதே நீட் தேர்வின் நோக்கம் என்று சொல்கிறது ஒன்றிய அரசு. ஆனால், குறைந்த மதிப்பெண் பெற்றவர் பணம் இருந்தால் இப்போதுகூட மருத்துவராக முடியும். ஆக, நீட் தேர்வின் நோக்கமே ஒன்றிய அரசு சொல்வதே சிதைந்துவிடுகிறது.
5. கடும் பாதிப்பிற்கு உள்ளாகும் கிராமப்புற அரசுப்பள்ளி மாணவர்கள்
மருத்துவத்தை தொழிலாக அல்லாமல் அர்ப்பணிப்பு மிக்க சேவையாகப் பார்க்கும் மருத்துவர்களை உருவாக்க நீட் தடையாக இருக்கிறது. பெரும் பணம் செலவழித்து தேர்வு எழுதும் மாணவர்களுக்கு கிராமத்தின் கட்டமைப்பும் எளிய மக்களின் வாழ்நிலையும் தெரிய வாய்ப்பில்லை. கல்விக்காக முதலீடு செய்த பணத்தினை சம்பாதிப்பதில்தான் முழு கவனமும் இருக்கும். மாறாக, கிராமத்திலிருந்து செல்லும் மாணவர்கள் தங்கள் சுற்றத்தின் வாழ்க்கையைப் புரிந்துகொண்டு கிராமத்துக்கு பணிபுரிய வருவார்கள். அப்படிப்பட்ட மாணவர்களின் மருத்துவக் கனவுக்கு குறுக்கே நிற்கிறது நீட்.
6. சிதையும் மருத்துவக் கட்டமைப்பு
தமிழ்நாட்டின் மருத்துவக் கட்டமைப்பினைப் பாராட்டாதவர்களே இல்லை. கொரோனாவின் நெருக்கடிக் காலத்தில் பெரிய சிக்கல்கள் வந்த போதும் சமாளிக்க முடிந்ததற்கு காரணம் தமிழ்நாட்டின் வலுவான மருத்துவ கட்டமைப்பு. முக்கியமாக, கிராமப்புறங்களில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவமனைகளும் அதில் பணியாற்றும் மருத்துவர்களின் பங்கு அளற்பரியது. நீட் தேர்வினால் கிராமப்புறங்களில் பணிபுரிய மருத்துவர்கள் முன்வருவது கேள்விக்குறியதாக மாறிவிடும். இப்போதுள்ள வலுனான மருத்துவக் கட்டமைப்பும் சிதைக்கப்படும் வாய்ப்பு மிக மிக அதிகமாக உள்ளது.
7. நீட் : ஓர் அநீதி
தமிழ்நாட்டு மாணவர்களில் 67% வரையிலான மாணவர்கள் அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகளிலேயே பயின்று வருகிறார்கள். கொரொனா பேரிடர் காலத்திற்கு பிறகு, அந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்து வருவதை கண்கூடாகப் பார்க்க முடிகிறது. இந்நிலையில் லட்சக்கணக்கில் பணம் செலவழித்து ‘நீட்’ தேர்வுகான பயிற்சியைப் பெறுவது இந்த மாணவர்களுக்குச் சாத்தியமே இல்லை. அனைத்துப் பகுதி மாணவர்களுக்கு இலவச பயிற்சி அளிப்பது சாத்தியமற்றது. மேலும், வசதிப்படைத்தவர்களின் குழந்தைகளால் நீட் தேர்வில் தோல்வி அடைந்தாலோ, மதிப்பெண் குறைந்தாலோ பலமுறை எழுத முடியும். ஏழை வீட்டு மாணவர்களால் முடியாது. எனவே, பொருளாதாரத்தில் உயர்ந்தவர்களுக்கு மட்டுமே நீட் எளிதாகச் சாத்தியம் என்பது சமூக அநீதியாகவே புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. நீட் தேர்வு சமவாய்ப்பையும் மறுக்கிறது.
8. ஆளுமைச்சிதைவை ஏற்படுத்துகிறது:
நீட் தேர்வில் வெற்றி பெறுவது மட்டுமே லட்சியமாக மாறிவிடும்போது மாணவர்களின் விளையாட்டு, கலையுணர்வு, சமூக உறவு, ஓய்வு, போன்றவை கடுமையான பாதிப்புக்குள்ளாகிறது. அதனால் சமூக உணர்வு குறைந்து (Socialization) சுயநல உணர்வு மிகுந்து விடுகிறது. குறுக்கு வழிகளில் எப்படியாவது வெற்றி பெற முயற்சிக்கும் மனோபாவம் வளர்கிறது. அதனால் நீட் தேர்வு குழந்தைகளிடம் ஆளுமைச்சிதைவை ஏற்படுத்துகிறது என்பதால் நீட் தேர்வு தேவையில்லை.
9. கல்வித் தரத்தைச் சிதைக்கும் நீட்
நீட் தேர்வினால் இந்தியா முழுக்கவே பாதிப்பு இருந்தாலும், தமிழ்நாடு மட்டுமே குரல் கொடுக்கிறது. மற்ற மாநிலத்தினரும் நீட் தேர்வின் உண்மை நிலையை விரைவில் உணர்வார்கள். தவிர, நீட் தேர்வில் மட்டுமே மாணவர்கள் கவனம் செலுத்துவதால், பள்ளித்தேர்வில் குறைந்த மதிப்பெண்களே பெறுகின்றனர். இதனால் கல்வித் தரம் சிதையும் அபாயமும் இருக்கிறது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.
இனிவரும் காலங்களில் நீட் போன்ற நுழைவுத் தேர்வுகள் இல்லாமல், மாணவர்களின் உயர்கல்வியை எவ்வித சிக்கலுமின்றி தொடரவும் கல்வியை மாநிலப் பட்டியலின் கீழ் கொண்டுவர வேண்டும். அதன்மூலம் சமூக நீதி காத்திட மாநில அரசு துரிதமாக செயல்பட வேண்டும் என தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் – கலைஞர்கள் சங்கம் சார்பாக வலியுறுத்துகின்றோம்.
நன்றி,
தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம்.
23/06/2021
குறிப்பு: நீட் தேர்வின் தாக்கம் குறித்து தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்ட நீதிபதி ஏ.கே.ராஜன் அவர்களின் தலைமையிலான உயர்நிலைக்குழுவிடம் தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் – கலைஞர்கள் சங்கம் சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை.

Leave a comment