உதயமானது சிறார் எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்

வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

’குழந்தைகள் வாழும் சூழல் சார்ந்த படைப்புகள் தேவை’  – ச.தமிழ்ச்செல்வன் வலியுறுத்தல்

தமிழில் சிறாருக்காக எழுதும் படைப்பாளிகள், செயற்பாட்டாளர்கள், ஆசிரியர்கள், கதைசொல்லிகள் இணைந்து ‘தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் – கலைஞர்கள் சங்க’த்தை ஞாயிற்றுக்கிழமை தொடங்கியிருக்கிறார்கள். அதன் அமைப்பு மாநாடு இணையம்வழியே நடைபெற்றது.

மாநாட்டுக்குத் தலைமையேற்ற எழுத்தாளர் உதயசங்கர், சங்கத்தின் தேவையையும் படைப்பாளிகள் ஒன்றிணைவதன் அவசியத்தையும் விளக்கினார். சங்கப் பொதுச்செயலாளர் விழியன், ‘குழந்தைகள் மீது எந்தவிதமான வன்முறை நிகழ்த்தப்பட்டால், அதற்கு எதிராகவும் குழந்தைகளின் நலன் சார்ந்தும் சங்கத்தின் குரல் ஒலிக்கும். குழந்தைகளின் வாசிப்புத் திறனை அதிகரிப்பதோடு, அவர்களை எழுதத் தூண்டும் செயல்களை இச்சங்கம் முன்னெடுக்கும். எழுத்தாளர்கள் எழுதுவதற்கு உரிய களனையும் கல்வியில் கலை இலக்கியத்தின் பங்களிப்பை அதிகரிக்கவும் சங்கம் செயல்படும்’ என்றார்.

வாழ்த்துரைகள்:

த.மு.எ.க.ச.வின் மதிப்புறு தலைவர் ச.தமிழ்செல்வன் தனது வாழ்த்துரையில், ‘குழந்தைகள் நகரம், மாநகரம், கிராமம் உள்ளிட்ட பல அடுக்குமுறைகளில், மாறுபட்ட வாழ்க்கைச் சூழல்களில் வளர்கிறார்கள். அச்சூழலுக்கு ஏற்ற படைப்புகள் நமக்குத் தேவை. குழந்தைகளை கேள்வி கேட்கத் தூண்டினாலே போதும். மேலும், தங்கள் உலகத்துக்கு அந்நியமானவற்றையும் அங்கீகரிக்க, சமமாக நடத்தும் குணத்தை வளர்த்தெடுக்கும் படைப்புகளை உருவாக்க வேண்டியது இக்காலத்தின் அவசியம்” என்று தெரிவித்தார்.

க.இ.பெ.மன்றத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் இரா. காமராசு, “இந்தப் பெருந்தொற்றுக்காலத்தில் ஆக்கபூர்வமான இந்த முயற்சி பாராட்ட வேண்டியது, வாழ்த்துக்குரியது” என்று வாழ்த்தினார். வி.க.இ.மன்றத்தின் மாநிலச் செயலாளர் யாழன் ஆதி, “புகழ்பெற்ற அரசியல் ஆளுமை எம்.சி.ராஜா சிறுவர்களுக்கு அற்புதமான பாடல்களை எழுதியிருக்கிறார். அவற்றைத்தான் நாங்கள் சிறுவயதில் பாடியிருக்கிறோம்” என்று, அது குறித்து சிறப்பான அறிமுகத்தை வழங்கினார். பால சாகித்ய புரஸ்கார் விருது பெற்ற ஆயிஷா இரா.நடராசன் பேசுகையில், மற்ற மொழிகளில் சிறார் இலக்கியம் என்னவிதமான போக்குகளில் எழுதப்படுகின்றன என்பது குறித்து விரிவாக விளக்கினார்.

மலையாள எழுத்தாளர் பி.வி.சுகுமாரன், கோவா எழுத்தாளர் ராஜஸ்ரீ ஆகியோர் தமிழ்நாட்டில் உருவாகும் புதிய சங்கத்திற்கு தமது வாழ்த்துகளைப் பகிர்ந்துகொண்டார்கள். எழுத்தாளர் ஏ.எஸ். பத்மா சிறாரிடையே உள்ள பல்வேறு அடுக்குகளையும் படைப்புகளில் வெளிப்பட வேண்டிய அடிப்படைகள் குறித்தும் பகிர்ந்துகொண்டார். முனைவர் அருணா ரத்னம், கொ.மா.கோதண்டம், முனைவர் ராமானுஜம் உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர்.

கலந்துகொண்டோர்:

இணைய வழியே நடந்த இந்த மாநாட்டில் 250க்கும் அதிகமானோர் பங்குபெற்றனர். கல்வியாளர்கள், ஆசிரியர்கள், எழுத்தாளர்கள், இணையவழி சிறார் குழுக்கள், சிறார் செயற்பாட்டாளர்கள் பார்வையாளர்களாகக் கலந்துகொண்டனர்.

சங்கத்தின் நோக்கங்கள்:

குழந்தைகளின் முழுமையான ஆளுமை வளர்ச்சி சார்ந்து, குறிப்பாகக் கலை, இலக்கிய மேம்பாடு சார்ந்து செயல்படுவது முதன்மையான நோக்கம்.
அனைத்துக் குழந்தைகளும் மகிழ்ச்சியாகவும் பாதுகாப்பாகவும் வாழ்வதற்கான அடிப்படை உரிமைகள் கிடைக்க வேண்டும். இந்த நோக்கில் எழுத்து, கலை சார்ந்த முயற்சிகளில் சங்கம் தொடர்ந்து முனைப்புடன் ஈடுபடுதல்.
குழந்தைகளின் மீது செலுத்தப்படும் வன்முறை, ஒடுக்குமுறை, பாரபட்சமான அணுகுமுறை ஆகியவற்றுக்கு எதிராக எழுத்து, கலை சார்ந்த செயல்பாடுகளில் சங்கம் ஈடுபடுதல்.
மரபு, வரலாறு, பொருளியல், அறிவியல், சூழலியல், அரசியல், பண்பாடு, கலைகள் சார்ந்து கடந்த காலம் – சமகாலத்தை வெளிப்படுத்தக்கூடிய குழந்தைகளுக்கான கலை, இலக்கியப் படைப்புகளைப் படைப்பது, வாசிப்பது, பரவலாக்குவது உள்ளிட்ட முயற்சிகளை முன்னெடுத்தல் ஆகியவை உட்பட குழந்தைகள் நலன் சார்ந்து பல நோக்கங்களை சங்கம் கொண்டுள்ளது

சங்க செயல்பாடுகளாக திட்டமிடப்பட்டுள்ளவை:

  • குழந்தைகளின் மகிழ்ச்சிக்கும், முன்னேற்றத்துக்கும் வழிவகுக்கும் கலை இலக்கியப் படைப்புகளை உருவாக்கித் தருதல்.
  • படைப்புகளைத் தமிழில் இருந்து பிற மொழிக்கும் பிறமொழியில் இருந்து தமிழுக்கும் கொண்டுவருவதில் முனைப்பு
  • நூலகங்களில் சிறார் புத்தகங்களை கொண்டுசேர்த்தல்
  • இளம் எழுத்தாளர்களுக்கு பயிலரங்குகள்
  • சிறார் இலக்கிய, கலைப் படைப்புகளுக்கான ஓர் இணையத்தளத்தை சங்கத்தின் சார்பில் உருவாக்கி, நிர்வகித்தல்
  • கல்வியில் கலை இலக்கியத்தை இணைக்க முயற்சி மேற்கொள்ளுதல்

நிர்வாகிகள்:

சங்கத்தின் தலைவராக சிறார் எழுத்தாளர் உதயசங்கரும், பொதுச்செயலாளராக விழியனும், துணைத்தலைவராக சுகுமாரனும், துணைச்செயலாளராக சாலை செல்வமும், பொருளாளராகப் பிரபுவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்த சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்களாக மூத்த எழுத்தாளர் கமலாலயன், எழுத்தாளர் – கதைசொல்லி நீதிமணி, பாவேந்தர் தமிழ்வழிப் பள்ளியின் முதல்வர் வெற்றிச்செழியன், சிறார் எழுத்தாளர் – மொழிபெயர்ப்பாளர் கொ.மா.கோ.இளங்கோ, ஆசிரியர் சுடரொளி, பாரதி புத்தகாலயம் பதிப்பக நிர்வாகி நாகராஜன், வானம் பதிப்பக நிறுவனர் மணிகண்டன், ஆசிரியர் சிவா, கதைசொல்லி வனிதாமணி, குழந்தைகள் நல செயற்பாட்டாளர் இனியன், சிறார் அறிவியல் செயற்பாட்டாளர் அறிவரசன் உள்ளிட்டோர் செயற்குழு உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

நன்றி,
விழியன்
செயலாளர்
தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம்.

சங்கம் தொடர்புக்கு – contact.tncwaa@gmail.com, (விழியன் – +91 90940 09092 / சாலை செல்வம் – +91 94438 81701)

மாநாடு 2021 (ஜூன் 13 2021) : https://youtu.be/q1XF4WeGIdM

ஊடகத்தில் வெளியான செய்திகள்:

தமிழ் இந்து: https://www.hindutamil.in/news/supplements/maya-bazar/682304-books-for-children.html

விகடன்: https://www.vikatan.com/news/literature/child-literature

வணக்கம் லண்டன்: https://vanakkamlondon.com/literature/ilakiya-saral/2021/06/116798/

Tamil.News.18: https://tamil.news18.com/news/tamil-nadu/launch-of-tamil-nadu-children-writers-artists-association-ekr-482031.html

தினமணி: https://www.dinamani.com/tamilnadu/2021/jun/14/childrens-writers-artists-association-emerged-3641649.html

tamil.abplive.com: https://tamil.abplive.com/news/tamil-nadu/tamilnadu-children-writers-and-artists-association-inaugurated-6171

ETV: https://react.etvbharat.com/tamil/tamil-nadu/state/chennai/launch-of-tamil-nadu-writers-artists-association-for-children/tamil-nadu20210614170235318

பாரதி: https://bookday.in/tamil-nadu-childrens-writers-artists-association-opening-ceremony-conference/

NamTamilMedia: http://www.namtamilmedia.com/2021/06/childwriterssangam.html

Leave a comment