அமைப்பாக ஒன்றிணைவோம், வாருங்கள்! – சுகுமாரன்

வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

தாய் மொழியின் வளர்ச்சியை நேசிப்பவர்கள், தமிழ்ச் சிறார் கலை இலக்கியத்தின் வளர்ச்சியை விரும்புகிறவர்களாகத்தான் இருப்பார்கள். அப்படி தமிழ் இலக்கியம், பண்பாட்டின் செழுமைக்கும் அடிப்படையாக இருப்பது சிறார் கலை இலக்கியமே. இன்று சிறார் கலை இலக்கியம் பெருமளவு புறக்கணிக்கப்பட்டுள்ளது. இந்நிலை மாற வேண்டும். அரசு, பெற்றோர், ஆசிரியர், நூலகத் துறை, ஊடகத் துறை என்று அனைத்துத் தரப்பினரும் சிறார் கலை இலக்கியத்தின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ள வேண்டும், அதற்கான முயற்சிகளை அதிகரிக்க வேண்டும். அதற்கு ஓர் அமைப்பு தேவைப்படுகிறது.

தற்கால தமிழ்ச் சிறார் கலை, இலக்கியத் துறைகள் சந்திக்கும் பிரச்சினைகள், சவால்கள் சாதாரணமானவை அல்ல. இதில் மொழி விடுதலை, குழந்தைகளை ஏற்றத்தாழ்வுடன் கூறு போடும் கல்வி முறைக்கு ஆகியவற்றுக்கு எதிரான போராட்டங்களுக்கான தேவை இருக்கிறது. அதனால் சமூக அக்கறை, குறிக்கோளுடன் கூடிய இயக்கம், கூட்டுச் செயல்பாட்டின் மீது நம்பிக்கைக் கொண்ட அமைப்பு தேவைப்படுகிறது. இதுவே தமிழ்ச் சிறார் கலை இலக்கியத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் செல்லும்.

இன்றைக்குப் புதியவர்கள், இளைஞர்கள், குழந்தைகளுக்கான கலை-இலக்கியம் படைப்பதற்கு வந்திருக்கிறார்கள். ஏற்கெனவே படைத்துவருகிறவர்களும் இருக்கிறார்கள். அவர்கள் அனைவரையும் திரட்டி ஓர் அமைப்பை உருவாக்க வேண்டியுள்ளது. தமிழ்ச் சிறார் கலை இலக்கியம் நல்ல விளைச்சலைத் தருவதற்கான நிலத்தைத் தயார்படுத்துவது பெரும் பணியாகும். பெரும் பணியை தனி மனிதர்களன்றி, அமைப்பாலேயே செய்ய முடியும். கடந்த கால அனுபவத்தை உட்செரித்துக்கொண்டு நிகழ்கால நிதர்சனத்துடன் ஒப்பிட்டு, எழுத்தாளர்களுக்கும் கலைஞர்களுக்கும் தரப்படும் பயிற்சிகளே காலங்களைக் கடந்து பேசப்படுகிற படைப்புகளை உருவாக்குகின்றன. அத்தகைய பயிற்சிகளைத் தரும் களமாக எழுத்தாளர் & கலைஞர் சங்கங்கள் உலகம் முழுதும் செயல்பட்டுவருகின்றன. அது தமிழுக்கும் தேவை. அதை முன்னிட்டே தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள், கலைஞர்கள் சங்கம் உருப்பெற்றிருக்கிறது.

‘தட்டு நிறைய லட்டு, எல்லா குழந்தைகளுக்கும் உண்டு’ என்கிற மரபில் வந்தவர்கள் நாம். ஓர் எழுத்தாளர், ஒரு கலைஞர் படைப்பு மூலமே வெளிப்படுகிறார். அந்தப் படைப்புகள் பேசப்பட வேண்டும். அதை முன்னிட்டே தமிழ்ச் சிறார் எழுத்தாளர்கள்-கலைஞர்கள் சங்கம் அமைகிறது.

இந்தச் சங்கம் மூலமாக புத்தக வாசிப்பைக் குழந்தைகளிடம் ஊக்குவிக்கப் போகிறோம். குழந்தைகளுக்கான கலைகளை கொண்டுபோய் சேர்க்கப் போகிறோம். வாசிப்பு தரும் புது வெளிச்சத்துடன், கலைகள் வளர்த்தெடுக்கும் ரசனை அனுபவங்களுடன் உருவாகும் கலை இலக்கிய படைப்பாளிகளை வளர்க்கப் போகிறோம். இச்செயல்களுக்கு அமைப்பு தேவை.

வளர்ச்சியடைந்த நாடுகளில் வளமான கலை-இலக்கியப் படைப்புகள் தரும் அனுபவங்களோடு குழந்தைகள் வளர்கிறார்கள். அதுபோல், பொது நூலகங்களிலும் வகுப்பறைகளிலும் கலை-இலக்கியங்களோடு குழந்தைகளின் வளர்ச்சிக்கு உதவும் செயல்திட்டங்களை அரசு வகுக்க சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் அக்கறையுடன் எடுத்துச் சொல்லும்.

இந்த உலகில் நாம் தனித்தவர்கள் அல்ல; பிற மொழிகள், நாடுகளின் சிறார் அமைப்புகளுடன் ஊடாட, உறவாட நமக்கு அமைப்பு தேவை. அத்தகைய தேவையை சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் நிறைவேற்றுகிறது.

மேலே கூறப்பட்ட குறிக்கோள்களுடன் சமூக மாற்றத்திற்காக எழுத்தைப் பயன்படுத்துவது, ‘புதியதோர் உலகம் செய்வோம்’ அவ்வுலகில் தமிழ்க் குழந்தைகளுக்கு மகிழ்ச்சியையும் பாதுகாப்பையும் உறுதிசெய்யும் கலை, இலக்கியத்தைப் படைக்க ஓர் அமைப்பாக ஒன்றிணைவோம், வாருங்கள்!

Leave a comment