நம் தமிழ்க் குழந்தைகளுக்கு அறிவியலை எழுதுதல் என்பது தலைப்பு. பொதுவாக அறிவியல் எழுதுதல் என்பதே ஒரு சவாலான விஷயம். அதிலும் குழந்தைகளுக்கு அறிவியல் எழுதுதல் என்பதில் கூடுதல் சவால் உள்ளது.
குழந்தைகளுக்கான அறிவியல் எழுத்துகளின் தேவை
பள்ளியில் பாடப்புத்தகங்களில் குழந்தைகள் படிக்கும் அறிவியலுக்கும், இதழ்களில், புத்தகங்களில் குழந்தைகளுக்காக எழுதப்படும் அறிவியலுக்கும் வித்யாசங்கள் உள்ளன. இந்த வித்யாசங்கள் மொழிநடை சார்ந்தவை மட்டுமல்ல. அறிவியலை எளிமையாக பல்வேறு வடிவங்களில் குழந்தைகளுக்கு எடுத்துச் செல்வதில் அறிவியல் இதழ்களின் பங்களிப்பு முக்கியமானது. அந்த வகையில் பாடப்புத்தகத் தன்மையற்ற ஒரு மொழியில் நம் குழந்தைகளுக்கு அறிவியல் எழுதுதல் அத்தியாவசியமாகிறது. பாடப்புத்தகங்களில் எழுதப்படும் அறிவியலை மேலும் ஆழமாக, சுலபமாக குழந்தைகள் அணுகுவதற்கு அறிவியல் இதழ்கள் உதவ வேண்டும்.
கவிதை, சிறுகதை, நாவல், அபுனைவு வகைமை எழுத்துகள் முழுக்க கற்பனை சார்ந்தவையாக இருக்கலாம். அல்லது ஒரு சம்பவத்தை, நிகழ்வை, வரலாறை நமது கற்பனையுடன் கலந்து எழுதலாம். ஆனால் அறிவியல் எழுத்துகளைப் பொருத்தவரை உள்ளடக்கம் கற்பனையானதல்ல. உண்மையை அடிப்படையாகக் கொண்டது. பிற வகை எழுத்துகளுக்கு வடிவம், உள்ளடக்கம், மொழி, எழுத்துநடை இவை போதுமானவை. அறிவியல் எழுத்துகளுக்கு கூடுதலாக ஒன்று தேவைப்படுகிறது. அதுதான் ஆதாரம். ஆதாரம் இல்லாமல் அறிவியலை எழுத இயலாது. அறிவியல் எழுத்துகள் உண்மையை அடிப்படையாக கொண்டிருக்க வேண்டும். ஆதாரங்கள் எதுவும் இல்லாமல், “அந்தக் காலத்திலேயே” அறிவியல் கண்டுபிடிப்புகள் நிகழ்ந்துவிட்டன என்பது போன்ற புராணப் பரப்புரைகளைப் புறந்தள்ளுவதோடு, தேடல் சார்ந்த உண்மையான அறிவியலை நாம் எழுதவேண்டியுள்ளது. அதுவும் நம் காலத்துக் குழந்தைகளுக்கு எழுதப்படும் அறிவியல் எழுத்துகள், அவர்களின் அறிவியல் அறிவின் வளத்தை மேம்படுத்துவதோடு, அவர்களிடையே அறிவியல் மனப்பான்மையை வளர்த்தெடுக்கும் விதமும் கட்டாயம் எழுதப்பட வேண்டும்.
எப்படி எழுதலாம்
குழந்தைகளுக்கு அறிவியல் எழுதும்போது எந்த வயதுக் குழந்தைகளுக்கு எழுதுகிறோம் என்பதில் கவனம் தேவை. ஒரே படைப்பில் அதிகமான விஷயங்களைக் கூற முற்படாமல் 3,4 விஷயங்களை மட்டுமே சொல்ல முயலலாம். வாக்கியங்களை சுருக்கமாகவும், எளிமையாகவும் அமைப்பது முக்கியம். கட்டுரைகளை ஆங்காங்கே சிறு சிறு பத்திகளாகப் பிரித்து துணைத் தலைப்புகள் கொடுக்க வேண்டும். இது வாசிப்பவருக்கு அயர்ச்சி தராமல் இருக்கும். அறிவியல் எழுதுதலைப் பொறுத்தவரை, என்ன எழுதுகிறோம் என்பதைத் தாண்டி அந்தப் படைப்பிற்குத் தேவையான படங்கள், எத்தனை பக்கங்கள் எழுதப் போகிறோம் போன்ற விஷயங்களை மனதில் திட்டமிட்டுக் காட்சிப்படுத்துதல் முக்கியம். எந்தத் துறையைப் பற்றி எழுதுகிறோமோ அந்தத் துறை சார்ந்த கலைச்சொற்களை அறிந்திருக்க வேண்டும். குழந்தைகளின் புரிதல் நிலையைத் தாண்டி எழுதுவதை தவிர்க்க வேண்டும்.
மேலும், குழந்தைகளுடன் தொடர்ச்சியாக உரையாடும்போது பலவிதமான உத்திகள் தோன்றும். குழந்தைகளிடத்தில் அறிவியல் சார்ந்த உரையாடல்கள் நிகழ்த்துவது அவர்களுக்கான அறிவியலை எழுதுவதில் முக்கிய அம்சம். வடிவங்களை பொறுத்தவரையிலும் கூட, உரையாடல் வடிவம் குழந்தைகளுக்கு அறிவியல் எழுத ஓர் உகந்த வடிவம்.
இவையெல்லாம் குழந்தைகளுக்கான அறிவியல் படைப்புகளை சில வருடங்களாக (‘துளிர்’ வாயிலாக) எடிட் செய்யும் வாய்ப்பைப் பெற்றதால் எனக்குத் தோன்றும் சில எண்ணங்கள். ஏற்கனவே குழந்தைகளுக்கு அறிவியல் படைப்புகளை எழுதிக் கொண்டிருக்கும் எழுத்தாளர்களுக்கு கூடுதலாக பல விஷயங்கள் நிச்சயமாகத் தெரிந்திருக்கும். அந்த வகையில் இச்சிறு குறிப்புகளின் நீட்சியாக மேலும் விரிவான சில படைப்புகள் இந்தத் தலைப்பில் வெளிவரும் என்று எதிர்நோக்குகிறேன்.
சிறார் எழுத்தாளர்கள் – கலைஞர்கள் சங்கம் சார்பாக சிறார் கலை இலக்கியச் சந்திப்பு இணைய வழியே நடைப்பெற்றது. மொத்தம் 10 அமர்வுகள், 20க்கும் மேலான சிறப்புரைகள் என மிகவும் சிறப்பாக நடைப்பெற்றது. நிகழ்வின் உரைகளை இங்கு பஞ்சுமிட்டாய் இனையத்தில் ஆவணப்படுத்துகிறோம்.
எழுத்தாக்கம் மேற்பார்வை : கமலாலயன்
காணொலி பதிவு :
வீடியோ பதிவுகளாக காண: Click here.
கட்டுரைகளுக்கு : Click here.