கல்வியின் திசைவழிகள் – கமலாலயன் (கல்வியின் செல் நெறி : கல்வி நூல்கள் தொடர் – 04)

வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

இந்தியாவில் கல்வி குறித்துப் பேச முற்படும் எவர் ஒருவரும் முதலில் நினைவு கூர்ந்தே தீர வேண்டிய சில பெயர்களுள் மகாத்மா ஜோதிராவ் பூலே, அன்னை சாவித்ரிபாய் பூலே ஆகிய இருவரும் முக்கியமனவர்கள். அதே போல, தமிழ் நாட்டில் அயோத்திதாசப் பண்டிதர், கர்னல் ஆல்காட், பேராசிரியர் பி.லட்சுமி நரசு ஆகியோரைக் குறிப்பிட வேண்டும். இவர்கள் மேற்கொண்ட தொடக்ககால முயற்சிகள் இன்று நாம் அறியாதவை; அறிய விரும்பாதவை. அறிந்திருந்தாலும் அவற்றைப்பற்றி பொதுவெளியில் நாம் பேசுவதேயில்லை.

இவர்களைக் குறித்து இக்கட்டுரையின் பிற்பாதியில் விரிவாகக் காணலாம். சங்க இலக்கியங்களில் தொடங்கி, தமிழ் மண்ணில் கல்வி குறித்த சிந்தனைகள் எந்தெந்த நூல்களில் எந்த அளவுக்குப் பதிவாகி இருக்கின்றன என்பதைப் பற்றி நாம் கடந்த பகுதிகளில் ஒரு பருந்துப் பார்வையைப் பதிவு செய்திருக்கிறோம். இன்னும் ஆராய வேண்டியவை ஏராளம்.

தமிழ்மொழியின் இலக்கிய வளம் பற்றி சொல்லித்தீராது. ஒற்றை வரி ஆத்திச்சூடி, இரண்டு வரிகளில் திருக்குறள், மூன்று வரிகளில் திரிகடுகம், நான்கு வரிகளில் நாலடியாரும்- பழமொழி நானூறும் , ஐந்து வரிகளில் சிறுபஞ்ச மூலம் – இப்படியே படிப்படியாகத் தொடரும் பாவகைகளில் சுருங்கச் சொல்லியும் பிற பா வடிவங்களில், குறிப்பாக ஆசிரியப்பாவில் விரிந்து பரந்த வடிவில் பெருங்கதையாடல்கள் மூலம் விளங்க வைத்தும் நமது முன்னோடிக் கவிஞர்களும், புலவர்களும் பெரும் சேவையாற்றிச் சென்றுள்ளனர்.

கற்றல், அதுவும் கசடறக்கற்றல் முக்கியம். கற்ற பின் அந்த நெறிகளில் நின்று செயல்புரிவது அதைவிட முக்கியம் என வலியுறுத்துவது குறள். வாழும் மனிதருக்குக் கண்களே எண்ணும் எழுத்தும் என்பதுவும் குறளே. படிக்காதவர்கள் முகங்களில் இருப்பவை கண்களல்ல; அவை முகத்திரண்டு புண்களே என்கிறது. ஆற்று மணற் பரப்பில், தோண்டத் தோண்டத்தான் ஊற்று நீர் சுரக்கும்; அதைப்போல் நூல்களைப் படிக்கப்படிக்கத்தான் அறிவு பெருகும். கேடில்லா விழுச்செல்வம் என்று ஒன்று உலகில் இருக்கிறது எனில், அது கல்வி மட்டுமே என்கிறது அது.

கல்லாதவர்கள் மேற்குடிகளில் பிறந்திருப்பினும் அதனால் பயன் கிடையாது; ஒருவர் தன் சூழ்நிலை காரணமாகப் படிக்காமல் கூட இருக்க நேரலாம்; ஆனால், கற்றவர்கள் சொல்லும் நல்ல செய்திகளைக் கேட்கக் காதுகளைத் திறந்து வைத்திருப்பதே அவருக்கு வாழ்க்கைப் பாதையில் வழிகாட்டும் துணையாக அமையும் என்பதும் குறளே. கற்றல், கேட்டல், வாழ்வில் பட்டுப் பட்டுப் பெறுதல் –இம்மூன்று வழிகளிலும் மனிதர்கள் அறிவைத்தேடிப் பெற்று விடுவார்கள் எனில், அவர்களிடம் எல்லாச் செல்வங்களும் குவிந்திருப்பதாகப் பொருள்; அறிவிலார் வசம் உலகின் செல்வங்களெல்லாம் குவிந்து கிடப்பினும், அவர்கள் எதுவுமில்லாத வெற்று ஆள்கள்தாம் என்கிறார் வள்ளுவப் பெருந்தகை.

மனிதருக்கு அழகு எது? பின்வரும் நான்கு அடிப்பாடல் சொல்லுவதைக் கேளுங்கள். இதை மட்டும் நாம் சரியாக உள்வாங்கிக் கொண்டால், நவீன அழகு சாதனங்கள் எல்லாவற்றையும் வாங்கி மேனியில் பூசிப் பகட்டு மினுக்குடன் போக நினைக்க மாட்டோம். மாறாக, கல்வி-கேள்விகளால் பெற்ற அறிவுடன், ‘என் நெஞ்சறிய நல்லவராக வாழ்கிறேன்’ என்ற பெருமிதத்தாலேயே பொலிந்து பிரகாசிக்கும் அழகுடன் திகழ முடியும்தானே?

இதோ அந்தப்பாடல் :

குஞ்சி அழகும் கொடுந்தானைக் கோட்டழகும்
மஞ்சள் அழகும் அழகல்ல ; நெஞ்சத்து
நல்லம் யாம் என்னும் நடுவு நிலைமையால்
கல்வி அழகே அழகு.   ( நாலடியார் : 141 )

“கல்வி கரையற்றது; அது இவ்வுலக வாழ்க்கைக்குப் பயன் தரும். வாரி வாரி அதை மற்றவருக்குக் கொடுத்தாலும் குறையாத செல்வம் அது. அள்ள அள்ளக் குறையா அமுதசுரபியைப் போன்றது அது என்கிறது நாலடியார். படிக்காமல் வீணாகக் கழிக்கிற ஒவ்வொரு நாளும் நம்மைப் பண்புக் குறைவாக நடந்து கொள்வதற்கு இட்டுச்செல்லும் என எச்சரிப்பதும் நாலடிதான். படி,படி என்று பெரியோர் படித்துப்படித்துச் சொல்லுவார்; அந்தச் சொல்லைக் காதில் வாங்காமல் திரிந்தால் அவ்வாறு போகிறவரின் நிலை என்னாகும் என்பதையும் சொல்லுகிறது நாலடி. பச்சை ஓலைகளை மிதித்தால் அவை ஓசையெழுப்பா; ஆனால், காய்ந்த பனையோலைகள் இலேசாகக் காற்று அடித்தாலே கரகரவென இரைச்சலிடும். கற்றறிந்த சான்றோர் வெற்று ஆரவாரம் செய்ய மாட்டார்கள்–என்று நாலடிப்பாடல்கள் கல்வி பற்றி திரும்பத் திரும்ப சலிக்காமல் சொல்லிக் கொண்டேதான் இருக்கின்றன.

மூன்றுரை அரையனார் தொகுத்த பழமொழி நானூற்றுப் பாடல்களிலும் கல்வி- கல்வி பெறாதவர்கள் பற்றிய பதினாறு பாடல்கள் இடம் பெறுகின்றன. மக்கள் நடுவே காலம் காலமாகப் புழங்கிக் கொண்டிருக்கும் அனுபவ மொழிகளான பழமொழிகள் இந்தப்பாடல்கள் ஒவ்வொன்றிலும் இடம் பெறுகின்றன. “நிறைகுடங்கள் தளும்புவதில்லை” என்பது ஓர் எடுத்துக் காட்டு. அறியாமையால் வரும் கேடுகள், கல்வி என்னும் ஓடத்தைக் கை விடுவோர் அடையும் துன்பங்கள், தீமைகளையும், வாழ்வின் வேறு பல அம்சங்களையும்  மூன்று மூன்றாக அடுக்கிச் சொல்லும் மற்றோர் இலக்கியமே திரிகடுகம்.

மேற்கண்டவை மிகச்சில எடுத்துக்காட்டுகள் மட்டுமே. சங்க இலக்கியங்களும் சங்கம் மருவிய காலத்தில் தோன்றிய இலக்கியங்களும் முன்வைக்கும் கல்விச் சிந்தனைகளை ஒரு பருந்துப் பார்வையில் படித்துப் பார்த்தாலே ஒரு விஷயம் தெளிவாகும் : “கல்வியின் முக்கியத்துவம் குறித்து மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே சிந்தித்தும், செயலாற்றியும், தன் அனுபவங்களைப் பதிவு செய்து பிறருக்குச் சொல்லியும் வந்திருக்கும் சமூகம் தமிழ்ச்சமூகம்” – என்பதுதான் அது !

இவ்வளவெல்லாம் இருந்தும், தமிழ்ப்பண்பாட்டின் ஊடே ஊடுருவிய வடவர் பண்பாட்டின் விளைவாகவும், மேலோர்- கீழோர் என்கிற பாகுபாட்டுச் சிந்தனைகளின் விளைவாகவும் என்றைக்குச் ‘சாதி’ என்ற கோட்டுக்குள் தமிழ்ச்சமூகம் அடைபட்டதோ அன்றிலிருந்து கல்வி அனைத்து மக்களுக்கு மானதாக நடைமுறையில் தொடரவில்லை என்ற குரூரமான யதார்த்தம் நமது  நெஞ்சைச் சுடுகிறது. இந்தியா என்ற ஒரு தேசம் பிரிட்டிஷாரின் ஆளுகைக்குப் பின் உருவான பின்பு, கல்வியும், பிற உரிமைகளும் மறுக்கப்பட்ட ஒரு மாபெரும் மக்கள் திரளைக் கண்ணெடுத்தும் பாராமல் புறக்கணித்து வந்த மேல்தட்டு வர்க்கத்தினர் தங்களின் சுய நலனுக்காகவே அவர்களையும் சுதந்திரப் போராட்டங்களில் இணைத்துக் கொண்டதைக் காண்கிறோம். இந்த அவல நிலையைக் கண்ட சில மேன்மை மிக்க போராளிகள் ஒடுக்கபட்ட மக்கள் நலனுக்காகப் போராட முற்பட்டனர். அந்தப் போராட்டத்திற்கு முதல் ஆயுதமாக அவர்கள் கைகளில் ஏந்தியது கல்வி !

வடக்கே மராட்டிய மண்ணில், மகாத்மா ஜோதிராவ் பூலே, அன்னை சாவித்ரிபாய் பூலே, அண்ணல் அம்பேத்கர் ஆகியோர் வாயில்லாத அப்பாவி  சனங்களின் உரிமைகளுக்காகக் குரல்களை எழுப்பியவர்களில் முதன்மையானவர்கள். தமிழ்நாட்டில் பண்டிதர் அயோத்திதாசரும், அவரின் சமகாலத்தவரான ரெட்டைமலை சீனிவாசனும் இங்கே வாழ்ந்த ஆதி திராவிட மக்களின் உரிமைகளுக்காகக் குரல் எழுப்பிய போராளிகள்.

மகாத்மா ஜோதிராவ் பூலேவும், அன்னை சாவித்திரிபாயும் பூனே நகரில், பெண்களுக்கான முதல் பள்ளியை 1848-இல் தொடங்கியதை நாமறிவோம். இந்திய அளவில், அன்னை சாவித்திரிபாய்தான் சாதாரண, ஏழை எளிய, ஒடுக்கப்பட்டவர்களுக்கான பெண்களுக்குக் கல்வி கற்பித்த முதலாவது ஆசிரியர். தமிழ்நாட்டில், 1845-இல் பிறந்தவரான கவிராஜ அயோத்திதாசப் பண்டிதர், 1870-களில் தொடங்கி, தன் நண்பரான ரெவெரெண்ட் ஜான்ரத்தினம் அவர்களுடன் இணைந்து சமூக விடுதலைக்காகச் செயலாற்றத் தொடங்கியவர். மாலைநேரப் பள்ளிகளைத் திறந்து தலித் மக்களிடையே கல்வி விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கிறார். 1890-களில் ஆதி திராவிடர் மகாஜன சபை என்ற அமைப்பு உருவாகிறது. அடுத்த இரண்டாண்டுகளில், 1892–இல், திராவிட மகாஜன சபையை அயோத்திதாசர் உருவாக்குகிறார். அதே ஆண்டில், சென்னை மகாஜன சபையினர் நடத்திய கூட்டம் ஒன்றில், நீலகிரி மாவட்டப் பிரதிநிதியாகக் கலந்து கொள்கிறார். அவர், “தாழ்த்தப்பட்ட குலத்து சிறுவர்களுக்கு கிராமங்கள் தோறும் கல்விச்சாலைகள் வைத்து, இலவசமாக கல்வி கற்க வைக்க வேண்டும். மேலும், வெற்றுத்தரிசு நிலங்களாகக் கிடக்கும் பகுதிகளை ஏழை கிராமவாசிகளுக்குக் கொடுக்க வேண்டும்…” என்று வலியுறுத்திப் பேசியிருக்கிறார். இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி முன்மொழியப்பட்ட தீர்மானங்களை அங்கு அயோத்திதாசர் வழி மொழிந்து ஆதரித்துள்ளார்.

அடையாறு பெசண்ட் நகரில் இன்றளவும் இயங்கி வரும் கர்னல் ஆல்காட் பள்ளியின் ஆசிரியர்கள் வெளியிட்ட அறிக்கையொன்று, 1914-இல்  சென்னையில் ஹெச்.எஸ்.ஆல்காட் நிறுவியுள்ள ஐந்து பள்ளிகளுக்கும் அயோத்திதாசரே  மூல காரணகர்த்தா என்று கூறுவது நமது கவனத்திற்கு உரியது. ஆல்காட், பிளாவாட்ஸ்கி, அன்னி பெசண்ட் உள்பட அன்றைய சென்னைப் பிரமுகர்கள், ஆங்கிலேய அரசு ஆகியோரின் துணையோடு சென்னை நகரின் பல பகுதிகளிலும் பத்துக்கு மேற்பட்ட பள்ளிகளை அயோத்திதாசர் தொடங்கியிருக்கிறார்; பிறர் தொடங்குவதற்கு ஒரு கிரியா ஊக்கியாகவும் இருந்துள்ளார். தான் பேச்சிலும், எழுத்திலும் பரப்புரை செய்து வந்திருந்த கருத்துகளை நிதர்சனமாகச் செயல்வடிவில் அவர் செய்து நிறுவிக் காட்டியிருக்கும் விதம், மலைக்க வைக்கிறது. மக்களுள் பெரும்பான்மையோர் அடிப்படை எழுத்தறிவு கூட இல்லாதோர் என்ற காரணத்தினால், பொதுக் கூட்டங்களுக்கு வருவோர் நடுவே பாமரத் தமிழில் தான் பேசியிருக்கிறார் அவர். கல்வியறிவு பெற்றவர்களின் நடுவே பேசும் போதும், பத்திரிகைகள்-புத்தகங்களில் எழுதும் போதும் பண்டிதத் தமிழைப் பயன்படுத்தி வந்தவர் அயோத்திதாசர். 1875 முதல், அவர் மறைந்த 1914-ஆம் ஆண்டுவரை, அயோத்திதாசர் தமிழ்மண்ணில் விதைத்த சிந்தனைகளின் மறுமலர்ச்சியும், வளர்ச்சியும் அவருடைய சமகாலத்திலும், அவருக்குப் பின்பும் ரெட்டைமலை சீனிவாசன், எம்.சி.ராஜா, பேராசிரியர் பி.லட்சுமி நரசு, பேராசிரியர் என்.சிவராஜ் போன்ற பல தலித் தலைவர்கள் உத்வேகத்துடன் பணியாற்றுவதற்கான உந்துசக்தியாக அமைந்தது எனலாம்.

1885-ஆம் ஆண்டு ஆங்கிலேயரான விக்டர் ஹியூம் போன்றவர்களின் முன் முயற்சியால் தொடங்கப்பட்ட இந்திய தேசிய காங்கிரஸ் மீது, மகாத்மா ஜோதிராவ் பூலே, அயோத்திதாசர், அம்பேத்கர் போன்றோர் அவநம்பிக்கையை வெளிப்படுத்தி வந்தனர். அவர்கள் ஐயம் எவ்வளவு சரியானது என்று வெகு விரைவில் நிரூபணம் ஆயிற்று. அன்றைய விடுதலைப் போராட்டத் தலைவர்கள் மேல்சாதி, உயர்வர்க்கத்தினரின் நலன்களையே முன்னிலைப் படுத்தி போராடியவர்கள். அதற்கு வலுச்சேர்க்கும் விதமாகவே ஏழை எளிய, தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்டவர்களையெல்லாம் மாபெரும் மக்கள் திரளாகத் திரட்டினர். அந்த மக்கள் சக்தியை ஆங்கில அரசிடம் பேரம் பேசுவதற்குப் பயன்படுத்திக் கொண்டிருந்தனர். இந்த உண்மையை வரலாறு மிகத்தெளிவாக இன்றைக்கு நம் முன்வைத்துள்ளது. ஓர் எடுத்துக்காட்டாக, தமிழ்நாட்டு விடுதலைப் போராட்டத்தில் சுதேசி இயக்கப் போர்வாளாகக் கருதப்பட்ட சுதேசமித்திரன் நாளிதழில் வெளியிடப்பட்ட ஒரு கடிதத்தைக் கூற முடியும்.

“ஐயோ, அநியாயம், அநியாயம் !” என்ற தலைப்பில் 26.01.1908-இல் வெளியான அந்தக் கடிதம் பின்வரும் குரலை எழுப்புகிறது : “இழிந்தோர் பலர், கல்வி கற்றுக்கொண்டு, இந்தியாவின் சாதி வித்தியாசங்களைப் பற்றியும், மற்றும் பெரியோர்களைப் பற்றியும் வாயில் வந்தபடி பேசுவதும் எழுதுவதுமாக இருக்கிறார்கள்”. இது யாருடைய நலன்கள் பற்றிய குரல் என்பதற்கு விளக்கம் தேவையா?

அயோத்திதாசரின் மறைவுக்குப் பின், பி.எம்.ராஜரத்தினம் கோலார் தங்க வயலில் சித்தார்த்தா பதிப்பகத்தைத் தொடங்கி அயோத்திதாசர் எழுதிக்குவித்திருந்த ஏராளமான நூல்களையும், ‘தமிழன்’ பத்திரிகைக் கட்டுரைகளையும் மீண்டும் சிறு சிறு பிரசுரங்களாக வெளியிட்டு விற்பனை செய்திருக்கிறார். பல பதிப்புகளை வெளியிடும் அளவுக்கு அந்த நூல்களுக்குப் பெரும் வரவேற்பு இந்தியாவிலும், தமிழர்கள் வாழ்ந்திருந்த கடல் கடந்த நாடுகளிலும் கிடைத்திருக்கிறது. பல்லாயிரம் பிரதிகளை அனுப்பும்படி அவருக்கு பல நாடுகளில் இருந்தும் அனுப்பாணைகள் கிடைத்துள்ளன. (ஆதாரம் : ஞான.அலாய்சியஸ், அறிஞர் அன்பு பொன்னோவியம் உள்ளிட்ட பலரும் அயோத்திதாசர் குறித்து எழுதிய கட்டுரைகள் )

பேரா.லட்சுமி நரசுவின் தலைமையில் சென்னையில் 1917-ஆம் ஆண்டிலும், பெங்களூரில் 1920-இலும் நடைபெற்ற இரண்டு பொது மாநாடுகளில் தாழ்த்தப்பட்ட மக்கள், பவுத்தர்களின் பிள்ளைகளுக்குக் கட்டாய இலவசக்கல்வி வழங்கப்பட வேண்டும் என்ற தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளனர். முதல் மாநாடு பற்றி அன்றைய ’மெட்ராஸ் மெயில்’ னாளேடு வெளியிட்டுள்ள பின்வரும் செய்தியின் ஓரிரு பத்திகளைப் பாருங்கள் : “ சென்னை, நவம்பர் 5, 1917 –தன்னாட்சிக்கு இந்தியா இன்னும் முதிர்ச்சி அடையவில்லை என்று இந்த மாநாடு கருதுகிறது. ஆனால், உரிய காலத்தில் தன்னாட்சி வழங்கப்படுவதற்கு ஓர் ஆயத்தச்செயலாக, இலவசக் கட்டாயத் தொடக்கக் கல்வி அனைவருக்கும்  வழங்கப்பட வேண்டும் .”

எவ்வளவு தீர்க்கமான பார்வை! ஒரு நாடு அந்நியர் ஆட்சியிலிருந்து விடுதலை பெற்ற சுதந்திர நாடாக, தன்னைத்தானே ஆளும் தகுதி பெறுவதற்கு அந்த நாட்டு மக்கள் அனைவருக்கும் கட்டாய இலவசக் கல்வி வழங்குவதை ஒரு முன் நிபந்தனையாக வைத்திருப்பது எவ்வளவு முதன்மையான அம்சம்!                            .

கமலாலயன்,
03-06-2021
ஓசூர்

முந்தைய பதிவுகள்: https://www.panchumittai.com/tag/edu_books/

Leave a comment