சார்லி சாப்ளின் நடித்து இயக்கிய ஒரு படத்தைப் பற்றி, அதில் வரும் சர்வாதிகாரியின் பாத்திரப்படைப்பு பற்றி எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் தனது ‘எசப்பாட்டு’ நூலில் குறிப்பிட்டிருக்கிறார். அதைப் படித்துவிட்டு பத்திரிகையாளரும், சூழலியல் எழுத்தாளருமான ஆதி வள்ளியப்பன் அந்தப் படத்தை மீண்டும் தேடிப்பார்க்கிறார். அதில் அந்த சர்வாதிகாரியின் வேடத்தில் தவறுதலாகக் கொண்டுபோய் நிறுத்தப்படும் ஒரு முடிதிருத்துநரின் உரையைப் படித்துப் பார்க்கிறார். இந்த வாசிப்பு, உரையைக் கேட்க நேர்ந்த அனுபவம் எல்லாமுமாகச் சேர்ந்து அவரது சிந்தனையைத் தூண்டியுள்ளன.
ஒரு படைப்பு, அதில் தூண்டும் சிந்தனைப்பொறி, அதன் விளைவாகப் பற்றிக்கொள்ளும் ஆர்வ நெருப்பு என்னென்ன செய்யும்? உங்கள் கைகளில் ’சர்வாதிகாரி’ என்றொரு புத்தகத்தைக் கொண்டுவந்து சேர்க்கும். வெறும் முப்பத்திரண்டு பக்கங்களே கொண்ட ஒரு சிறிய நூலின் செய்திகள் நமது மனங்களில் சுதந்திர வேட்கையை, சர்வாதிகாரிகளுக்கு எதிரான ஓர் அறச்சீற்றத்தை, அடிமைப்பட்டு ஒடுங்கிக்கிடக்கும் மக்களின் உள்ளங்களில் நம்பிக்கை ஒளியை விதைக்கும். ஒரு கலைப்படைப்பு, அது எவ்வளவு தூரம் உண்மையின் வலிமையுடன் வெளிப்பட்டு நிற்கிறதோ, அந்த அளவுக்கு அதன் தாக்கம் வாசகர் மனங்களில் மேற்சொன்னவாறு தொடர்விளைவுகளை ஏற்படுத்துகிறது.
குறிப்பிட்ட அந்த நூலை அல்லது திரைப்படத்தை நாமும் தேடத் தொடங்குகிறோம். இந்தச் சிறுநூலில், தான் இதை எழுத முற்பட்டதற்கான காரணத்தைச் சொல்லிவிட்டு, ‘தி கிரேட் டிக்டேட்டர்’ படத்தின் திரைக்கதையைச் சுருக்கமாகத் தந்திருக்கிறார் ஆதி வள்ளியப்பன். படத்தின் இறுதிக் காட்சியில் சர்வாதிகாரி ஹைன்கெல் பேசுவதாக அனைவரும் நம்பிக்கொண்டிருக்கையில், அவருக்கு பதிலாக முடிதிருத்துநர் அங்கே பேசுகிறார். முந்தைய அரசின் கொள்கைகள் அனைத்தும் மாற்றப்பட்டு விட்டதாகவும், இனி ஆஸ்டர்லீஷ் நாடும் டுமானியாவும் சுதந்திர நாடுகள் எனவும் அவர் அறிவிக்கிறார்.
”நான் யாரையும் ஆட்சிபுரியவோ, வெற்றிகொள்ளவோ விரும்பவில்லை. நான் பேரரசனாக விரும்பவில்லை. யூதர்கள், மதிப்பிற்குரியவர்கள், கறுப்பினத்தவர்கள், வெள்ளையர்கள்–என யாராக இருந்தாலும் சரி, எல்லாருக்கும் உதவத்தான் விரும்புகிறோம். மனிதர்கள் அப்படித்தானே இருக்க முடியும்?”
இந்தப் புவியில் செழித்துக்கிடக்கும் வளங்கள், இங்கு வாழும் மனிதர்கள் அனைவருக்கும் பகிர்ந்து வழங்கப் போதுமான அளவில் இருக்கவே செய்கின்றன. ஆயினும், ஆளும் வர்க்கங்களும், அவர்களை அண்டிவாழும் ஒட்டுண்ணி வர்க்கங்களும் தங்கள் சுயநலனுக்காக அனைத்து வளங்களையும் ஒரு சிலரின் கைகளிலேயே குவித்து வைத்துக்கொண்டு, பெரும்பாலானோரைப் பிச்சைக்காரர்களாக – மற்றவர்களின் தயவையே எதிர்பார்த்து நிற்பவர்களாக ஆக்கிவிடுகின்றனர். இந்த அவலங்களைச் சகித்துக்கொள்ள முடியாமல் மக்கள் திரள் எதிர்ப்புக்குரலை எழுப்பும்போது, அனைத்து அதிகாரங்களையும், ராணுவம், காவல்துறை, நீதித்துறை போன்ற ஒடுக்குமுறை இயந்திரங்களையும் பயன்படுத்தி மக்களை அடக்குகின்றனர். இந்த ஒடுக்குமுறையை அவர்கள் மிகவும் தந்திரமாக ஜனநாயகத்தின் பெயராலேயே செய்கிறார்கள் என்பதுதான் சோகம்.
இந்த உண்மையை சார்லி சாப்ளின் தனது படத்தின் மூலம் மிகவும் கலைநேர்த்தியுடன் வெளிப்படுத்தியுள்ளார். இது மிகப்பெரிய அரசியல் விமர்சனப் படம். காலந்தோறும் புதியபுதிய நயங்களை, அர்த்தங்களை வெளிப்படுத்தும் ஓர் அழியாக் கலைப்படைப்பாகத் திகழ்கிறது என்கிறார் ஆதி வள்ளியப்பன். ஹிட்லர் உள்ளிட்ட சர்வாதிகாரிகளை எதிர்த்து உலகின் பல மூலைகளில் இருந்தும் கலைப்படைப்புகளும், எழுத்தோவியங்களும் தோன்றிக்கொண்டேதான் இருந்துள்ளன. எனினும், அவையெல்லாம், ‘தி கிரேட் டிக்டேட்டர்’ போல, தாம் சொல்ல வந்த கருத்தை எல்லாத் தரப்பு மக்களையும் சென்றடையும் வகையில் வெளிப்படுத்தவில்லை என்பது அவர் கருத்து.
பேசும்படம் கண்டுபிடிக்கப்பட்டு பரவலாகப் பேசும்படங்கள் வந்த பிறகும்கூட மௌனப்படங்களையே தயாரித்து இயக்கிவந்த சார்லி சாப்ளின், ‘தி கிரேட் டிக்டேட்டர்’ படத்தில்தான் அந்த மௌனத்தைக் கலைத்துக்கொண்டு, உரத்துக் குரல் எழுப்பியிருக்கிறார். ஹிட்லரின் சர்வாதிகாரத்தை விமர்சிக்கவும், அவருக்கு எதிராக உலகில் கருத்தை உருவாக்கவுமே சாப்ளின் தன் மௌனத்தைக் கலைத்திருக்க வேண்டும் என்பது ஆதி வள்ளியப்பனின் கருத்து.
இந்தப் படத்தில் வரும் கதாபாத்திரங்களும் இடங்களும் கற்பனைப் பெயர்களையே கொண்டிருக்கின்றன. ஆனால், அவை அனைத்தும் நிஜமான மனிதர்களின், இடங்களின் பெயர்களை நூறு சதவிகிதம் பிரதிபலிப்பவையாக இருக்கின்றன: ஹைன்கெல் (ஹிட்லர்), டுமானியா (ஜெர்மனி), நபலோனி (முசோலினி), கார்பிட்ஸ் (கோயபல்ஸ்), ஆஸ்டர்லீஷ் (ஆஸ்திரியா), இரட்டைச்சிலுவை (ஸ்வஸ்திக்) சின்னம் –இப்படிக் கூறிக்கொண்டே போகலாம்.
இந்தப் படத்தையும், ஆனி ஃபிராங்கின் டைரிக் குறிப்புகள் நூலையும் ஒப்புநோக்கி நூலாசிரியர் கூறும் ஒரு கருத்து மிகவும் முக்கியமானது: “ஹிட்லரின் வதைமுகாம்கள் குறித்து ஒரு குழந்தை மனது என்ன நினைத்தது என்பதைப் பற்றிய நிஜப்பதிவாக ‘ஆனி ஃபிராங்கின் டைரிக் குறிப்புகள்’ அமைந்திருந்தன. ‘தி கிரேட் டிக்டேட்டர்’ படமோ ஹிட்லரை விரட்டிவிரட்டிக் கேலி செய்திருக்கிறது.”
நவீன கலைப்படைப்புகள் மீது நல்ல அபிப்பிராயம் கொண்டிராத ஹிட்லர், மனிதகுல மேன்மைக்காகவும் நன்மைக்காகவும் உழைத்த ஜெர்மானிய விஞ்ஞானிகளை ஒடுக்கினார்; அவர்கள் நோபல் பரிசுகளைப் பெறக் கூடாது என்று தடுக்கவும் செய்திருக்கிறார். ஜெர்மனியில் பிறந்த யூதரான ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் அமெரிக்காவில் பணியாற்றப் போனபோதுதான் ஜெர்மனியில் ஹிட்லர் ஆட்சிக்கு வந்தார். அதன்பிறகு ஐன்ஸ்டீன் தன் தாய்நாட்டுக்குத் திரும்பவே இல்லை.
இந்தக் குறிப்புகளைத் தரும் ஆதி வள்ளியப்பன், முடிவாகக் கூறும் படிப்பினைகள் மிக முக்கியமானவை: “இத்தகைய சர்வாதிகாரிகள், மனிதகுல வரலாறு நெடுக மோசமான நிகழ்வுகளின்வழி பெரும் அச்சுறுத்தல்களாக இருந்துகொண்டே இருக்கின்றனர். ஆனாலும் வரலாறு திரும்பத்திரும்ப ஹிட்லர்களையும், கோயபல்சுகளையும் ஒவ்வொரு நாட்டிலும் உற்பத்தி செய்துகொண்டேதான் இருக்கிறது. குறைந்தபட்சம், மக்களாவது இம்மாதிரித் தலைவர்களை உற்பத்தி செய்துகொண்டேதான் இருக்கிறார்கள். ஜனநாயகத் தேர்தல்களில் போட்டியிட்டுத்தான் இத்தகையோர் நாட்டின் அதிபர்களாக ஆகின்றனர். பதவிக்கு வந்த பின்போ, அனைத்துவிதமான ஒடுக்குமுறைகளையும் பிரயோகித்து சர்வாதிகாரிகளாகி விடுகின்றனர். இந்தியாவிலும் அந்த வரலாறு திரும்பியுள்ளது. ஜனநாயகத் தேர்தல்களின் மூலம் ஆட்சிக்கு வந்தவர்கள் ஒற்றை மொழி, ஒற்றைத் தேசியம், ஒற்றைப் பண்பாடு போன்றவற்றை நம் நாட்டிலும் நிறுவிவிட வேண்டுமென்று பெருமுயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். அவற்றைத் தடுப்பது நமது கைகளில்தான் இருக்கிறது. மக்கள் அளிக்கும் அதிகாரம் இல்லாமல் சர்வாதிகாரிகள் உருவாவதில்லை; அல்லது, மக்கள் எதிர்ப்பு இல்லாததால்தான் அவர்கள் உருவாகி நிலைபெறுகிறார்கள்…”
சர்வாதிகாரி என்ற இந்தச் சிறிய நூல், ஒரு வலிமைமிக்க கருத்தாயுதமாகத் திகழ்கிறது. நாட்டின் இன்றைய அவலநிலையைப் பற்றி மக்களிடம் பேசப்போகும் களப்பணியாளர்கள் இத்தகைய சிறுநூல்களை மக்களிடம் அறிமுகப்படுத்தி, அவர்களைப் படிக்கத் தூண்டினாலே நாம் எதிர்பார்க்கும் மாற்றங்களை நோக்கி நகர்த்தலாம். பத்திரிகையாளர் ஆதி வள்ளியப்பனின் மொழிநடையும், கருத்துகளும் மிகவும் செறிவானவை. குறிப்பாக, படத்தின் இறுதியில் முடிதிருத்துநரின் உரையைப் படியுங்கள். என்ன ஓர் அறிவார்ந்த, சுதந்திரத் தாகம் மிக்க, கனவுகள் நிரம்பிய உரை!
பஞ்சு மிட்டாய் குறிப்பு: இந்தப் புத்தகமும், திரைப்படமும் இளம் பருவ குழந்தைகளுக்கும், பெற்றோருக்கும் ஏற்றதாக இருக்குமென கருதுகிறோம்.
புத்தகம் : சர்வாதிகாரி – சார்லி சாப்ளின், தமிழில் : ஆதி வள்ளியப்பன் | பாரதி புத்தகாலயம்