குழந்தைகளின் படைப்புலகம் – பஞ்சு மிட்டாய் பிரபு

வாசிக்கும் நேரம்: 11 நிமிடங்கள்

குழந்தை இலக்கியத்தை குழந்தைகளுக்கான இலக்கியம், குழந்தைகளைப் பற்றி பெரியவர்களுக்கான இலக்கியம், குழந்தைகளே படைக்கும் இலக்கியம் என்று மூன்றாகப் பிரிக்கலாம். குழந்தைகளின் படைப்புலகம் என்ற தலைப்பு “குழந்தைகளே படைக்கும் இலக்கியம்” என்பதையே குறிக்கிறது.

குழந்தைகளின் படைப்புலகை மூன்று பிரிவுகளாக நான் பார்க்கிறேன்;

 1. வலிகளைப் பேசும் படைப்புகள்
 2. மேதமை படைப்புகள்
 3. எதேச்சையான படைப்புகள் / குழந்தைகளின் இயல்பான படைப்புகள்

இந்தப் பிரிவுகளோடு வயது வாரியான பிரிவுகளையும் கணக்கில் கொண்டு இந்தக் கட்டுரை உரையாட இருக்கிறது. தமிழ் சிறார் இலக்கியத்திற்கே குறைவான கவனம் இருக்கும் சூழலில் அதில் குழந்தைகளின் படைப்புலகம் என்பது இப்போதுதான் அரும்பத் தொடங்குகிறது என்று சொல்லலாம். குழந்தைகளின் படைப்புலகத்திற்கு என்ன மாதிரியான தளம் இங்கு இருக்கிறது என்பது முதல் கேள்வி. குழந்தைகளின் படைப்புலகத்தில் வீடும் பள்ளியும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவை, அதைப் பற்றி ஜான் ஹோல்ட் தனது புத்தகத்தில் இவ்வாறு கூறுகிறார்;

பெரியவர்களின் மதிப்பீடுகளுக்குக் குழந்தைகள் மிகவும் உணர்வுபூர்வமாக இருக்கிறார்கள். ஒரு குழந்தை தான் வரைந்த ஒரு ஓவியத்தைத் தம் ஆசிரியரிடமோ அல்லது பெற்றோரிடமோ காட்டுகிறது. அவர்கள் அதைப் பார்த்தும் எந்த உற்சாகமுமில்லாமல் கடமைக்காகஆஹா.. எவ்வளவு நன்றாக இருக்கிறது ?’ என்கிறார்கள். ஆனால் அதே பெற்றோரும் ஆசிரியரும் வீட்டுப்பாடங்களை முடிக்கும் குழந்தையைப் பார்த்து உண்மையிலேயே மகிழ்ச்சியும் உற்சாகமும் அடைகிறார்கள்விரைவில், வீட்டுப்பாடங்கள் ஓவியங்களை ஓரம் கட்டிவிடுகின்றன.

வீட்டுப்பாடங்களும் பெற்றோரின் அவதானிப்பும் ஓவியங்களை மட்டுமல்ல குழந்தைகளின் கற்பனை உலகையே மொத்தமாக ஓரம் கட்டிவிடுகின்றன. இதையும் கடந்து மாற்றுச் சிந்தனையோடு இயங்கும் பெரியவர்கள் மத்தியில் வாழும் சிறுவர்கள் தங்களது ஆற்றலை வெவ்வேறு தளங்களில் வெளிப்படுத்தியுள்ளனர்.தமிழ்ச் சிறுவர் இலக்கியத்தில் மட்டுமல்ல; உலகளாவிய சூழலிலும் வெளிப்படுத்தியுள்ளனர். அவற்றை மேலே சொன்ன பிரிவுகளோடு சேர்த்து வயது வாரியாக பதின் பருவம், சிறுவர் மற்றும் மழலையர் என்ற வரிசையில் பார்ப்போம்.

வலிகளைப் பேசிய படைப்புகள்:

ஆனி பிராங்கின் டைரிக்குறிப்புகள்: ஆனி பிராங்க் என்ற சிறுமி தனது 13வது அகவையில் தனக்குப் பரிசாகக் கொடுக்கப்பட்ட டைரியில் எழுதிய குறிப்புகள் உலக வரலாற்றின் கருப்புப் பக்கங்களை அவளுடைய பிஞ்சு விரல்களால் பதிவு செய்தவையாக இருக்கின்றன.. ஹிட்லரின் யூத வேட்டையின் போது பலரும் ரகசியமாக ஒளிந்துகொண்டு தங்களது வாழ்வை போர் முடிவிற்கு வரும் வரை எப்படியாவது கடத்திவிட வேண்டுமென்று இருந்தனர். அதில் ஆனி பிராங்க் குடும்பமும் அடங்கும். அந்த ரகசிய இடத்தில் வாழும் போது ஆனி பிராங்க் எழுதிய டைரிக் குறிப்புகள் அவர் இறந்து, உலக யுத்தங்கள் முடிந்ததும் வெளி வந்தன. நாட்குறிப்பு இலக்கியத்தில் மிக முக்கியமான படைப்பாகவும் இது கருதப்படுகிறது. ஆனி குடும்பத்துடன் இன்னொரு குடும்பமும் இருந்துள்ளது. ஆனிக்கும் அவரது தாய்க்குமான உறவுச் சிக்கல், ஆனியின் ரகசியக் காதல், பருவ மாற்றம், உயிர் வாழ்தலுக்கான தேடல் என பலவற்றை ஒரு குழந்தையின் பார்வையிலிருந்து பார்க்கும் போது வலி நம்முள் பல மடங்கு அதிகரிக்கிறது.

“Paper has more patience than people”

“I am bird without winds which can’t escape. Voice inside me cries, “Let me out! I want to go into the fresh air. I want to hear people laughing. I don’t answer the voice but just lie down on the sofa. Sleep makes time go more quickly”

ஆனியின் இந்த வாக்கியங்களை வாசித்துப் பல நாட்கள் கடந்தும் மனதை இன்னும் நெருடிக் கொண்டிருக்கிறது.

ஆனி பிராங்க் ​​டைரிக் குறிப்புகள் – ஆனி பிராங்க் | தமிழில் – உஷாதரன் | எதிர் வெளியீடு

“Diary of a young Pakistani girl” – மலாலா: மலாலா மீது தீவிரவாதம் செலுத்திய வன்முறை நாம் அனைவரும் அறிந்தது. அதன் பிறகு அவரது 16வது வயதில் வெளியான புத்தகம் உலக அரங்கில் மிகப்பெரிய கவனத்தைப்பெற்றது. ஆனால் மலாலா தனது 12வயதில் பிபிசி உருது இணைய இதழில் நாட்குறிப்பாக எழுதியது தான் “Diary of a young Pakistani girl” படைப்பு. அது பிபிசி ஆங்கில இணையத்திலும் வெளியானது. பெண் பிள்ளையாகப் பள்ளிக்குச் செல்லும் தனது அனுபவத்தையும் அங்கு நிலவிய பெண் கல்விக்கு எதிரான மனநிலையையும் ஒரு சிறுமியின் பார்வையிலிருந்து தொடர்ந்து மூன்று மாதங்கள் பதிவு செய்துள்ளார். தீவிரவாதத்தின் மிரட்டல்களைத் தாண்டி அங்கிருந்த கல்வி நிலையங்கள் இயங்குவது பற்றியும், எப்போது வேண்டுமானாலும் பள்ளி மீது குண்டு விழலாம் என்ற சூழலையும், பள்ளிச் சீருடைகளை அணிய முடியாமல் திருட்டுத்தனமாகச் செல்லுதல் பற்றியும், அடுத்த நாள் பள்ளி நடக்குமா என்ற கேள்வியுடனே பள்ளியில் இருத்தல் என நாட்குறிப்பு பல விசயங்களைக் கண் முன்னே நிறுத்துகிறது. மலாலா 12வயது சிறுமியாக தனது நாட்குறிப்பில் அதிகமாகப் பயன்படுத்தியிருக்கும் சொற்கள் இவை தாம் :  “Army, Taliban, Rocket, artillery, Shelling, police, helicopter, dead & injured”.

மூன்று மாதங்களுக்குப் பிறகு, மலாலாவின் குடும்பத்தினர் அங்கு நிலவிய அச்சமான சூழல் காரணமாக பல்வேறு இடங்களுக்கு மாறினர். அதன் பிறகும் தொடர்ச்சியாக பெண் கல்வி உரிமை குறித்து பல இடங்களில் மலாலாவும் அவரது தந்தையும் பேசியுள்ளார்கள். பெண் கல்வி உரிமைக்காக எழுப்பப்பட்ட அந்தச் சிறுமியின் குரலுக்குக் கிடைத்த பரிசு தான் துப்பாக்கிக் குண்டுகள்.

மகர்கள் மற்றும் மாங்கர்களின் துயரங்கள்முக்தா சால்வே : சாவித்ரிபாய் மற்றும் ஜோதிபா பூலே ஆகியோரின் மாணவியான முக்தா சால்வே,1855 ஆம் ஆண்டில் தியானோதயா என்ற பத்திரிகையில் இந்தக் கடிதத்தை வெளியிட்டார். கல்வி – இன்றைய நிலைக்கும் நூறு வருடங்களுக்கு முந்தைய நிலைக்கும் எவ்வளவு வேறுபாடுகள்? பெண்களுக்குக் கல்வியைத் தர வேண்டும் என்று சாவித்ரிபாய் பூலேக்கு தோன்றியதும் இந்தச் சமூகம் அதை ஏன் ஏற்க மறுத்தது? அவர் மீது ஏன் சாணியை கரைத்து ஊற்றியது? அதையும் கடந்து அவர் ஏன் செயல்பட்டார்? இது போன்ற கேள்விகளுக்குப் பதில் தரும் வகையில் முக்தா சால்வேயின் இந்தக் கடிதம் அமைந்துள்ளது. இந்தக் கடிதத்தை எழுதியபோது முக்தா சால்வேயின் வயது 14. சிறுமியாக இருந்த போதும் சாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிரான ஆதங்கமும் கோபமும் அவருடைய எழுத்திலுள்ள ஒவ்வொரு வரியிலும் பிரதிபலிப்பதைப் பார்க்கும் போது ஜோதிபா & சாவித்ரிபாய் அவர்களின் உழைப்பின் வீச்சைப் புரிந்து கொள்ள முடிகிறது. இலக்கிய வரலாற்றில் பதிவு செய்யப்பட்ட முதல் பெண் தலித் எழுத்தாளரின் படைப்பாக இந்தக் கடிதம் குறிப்பிடப்படுகிறது. சாதியப்படிநிலையில் காலம் காலமாக ஒடுக்கப்பட்ட தமது மக்களுக்காகப் பேசிய ஓர் உரத்த குரலாக இந்தக் கடிதம் அமைந்துள்ளது. இந்தக் கடிதம் A Forgotten Liberator: The Life and Struggle of Savitribai Phule என்ற புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.

தற்போது தமிழில் திவ்யா அவர்களது மொழிபெயர்ப்பில் ஓங்கில் கூட்டம் வெளியீடாக (கிண்டில் புத்தகமாக) வெளியாகியுள்ளது.

கிரெட்டா துன்பர்க் : 2003ஆம் ஆண்டு பிறந்த கிரெட்டா துன்பர்க் தனது 8வது வயதில் மிகுந்த மன வருத்தத்திற்கு உள்ளாகிறார். பருவ நிலை மாற்றம் குறித்த செய்திகள் இவரை வேறு எந்தவிதச் செயலிலும் கவனம் செலுத்தவிடாமல் தடுக்கின்றன. பிறகு பெற்றோரின் துணையோடு களப் போராளியாக மாறுகிறார். பள்ளிக்குச் செல்லாமல் எதிர்ப்பைப் பதிவு செய்வதிலிருந்து களப் போராட்டத்தைத் தனது 15வது வயதில் தொடங்கினார். மெல்ல மெல்ல இவரது போராட்டங்கள் உலக அரங்கில் கவனத்தை ஈர்க்கவே, 2018 United Nations Climate Change Conferenceயில் இவர் ஆற்றிய உரை மிகப் பெரிய அளவில் பேசப்பட்டது. “No one is small to make make a difference”, “How dare you!”, “we can’t change the world by playing by the rules, because the rules have to be changed.”, “I don’t want you to be hopeful. I want you to panic. I want you to feel the fear I feel every day. And then I want you to act. I want you to act as you would in a crisis. I want you to act as if the house was on fire—because it is” என இவரது பேச்சுகள் அனைத்தும் அனல் பறக்கும் விதமாகவும், அதிகாரத்தை எதிர்க்கும் விதமாகவும், மேதமை நிறைந்ததாகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

கிரெட்டா துன்பர்க் பூவுலகைக் காக்கப் புறப்பட்ட சிறுமி – ஆதி வள்ளியப்பன் – எதிர் வெளியீடு,

நம் வீடு பற்றி எரிகிறது!: கிரெட்டா துன்பர்க் உரைகள் – தமிழில்: அருண் பிரசாத் – கிண்டில் புத்தகம்

My Book for kids with cansur – Jason Gaes : புற்று நோயால் அவதிப்பட்டு மீண்டு வந்த 8வயது சிறுவன் எழுதிய புத்தகம் தான் இது. தனது சக நண்பர்களுக்கு புற்று நோயிலிருந்து மீண்டு வந்த தனது அனுபவத்தையும், புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதுகுறித்த விழிப்புணர்வையும், நம்பிக்கையையும் விதைக்கும் விதமாக இந்தப் புத்தகம் அமைந்திருக்கிறது. இந்தப் புத்தகத்தில் எழுத்துப்பிழைகள் திருத்தப்படாமலே அச்சிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இதே போன்று எழுத்துப்பிழைகளுடன் அச்சிடப்பட்ட இன்னோர் ஆங்கிலப் புத்தகம் 1890யில் வெளியான “The Young Visiters”.  Daisy Ashford என்ற பெண் எழுத்தாளர் தனது 9 வயதில் எழுதிய புத்தகம் இது. இவர் வளர்ந்து எழுத்தாளராக ஆன பிறகு சோதனை முயற்சியாக சிறுவயதில் எழுதிய நாவலை அப்படியே (எழுத்து & இலக்கண பிழைகளுடன்) வெளியிட்டார். வெளியிட்ட முதல் ஆண்டிலேயே 18 பதிப்புகள் கண்டுள்ளது இதன் சிறப்பாகும். இது பின்னர் நாடகமாக னடத்தப்பட்டுள்ளது.

மேதமை படைப்புகள்: 

மேதமை படைப்புகள் என்பது அந்தந்த வயதினைக் கடந்த கருத்துகள் குழந்தைகளின் படைப்புகளில் இருப்பதை வைத்துக் குறிப்பிடப் படுகின்றன.ஆங்கிலத்தில் “யூத்ஸ் பிகேவியர்” என்ற புத்தகம் 1643ல் வெளியானது. இதனை மொழிபெயர்க்கும்போது ஆசிரியரின் வயது 12. அந்த வயதிற்கு மேலான மேதமையுடையதாகவே இந்தப் படைப்பு கருதப்படுகிறது.

ஆண்டாள் பாசுரங்கள்: 12 ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள் 7ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். இறக்கும் போது இவரது வயது 15 ஆகும். இவர் திருப்பாவை, நாச்சியார் திருமொழி என்னும் இரண்டு நூல்களை இயற்றியுள்ளார். இறைவனைத் தனது துணையாக நினைத்துப் பாடிய பாடல்கள் இவை. திருப்பாவையில் 40 பாடல்களும், நாச்சியார் திருமொழியில் 143 பாடல்களும் உள்ளன. இந்தப் படைப்புகள், இலக்கியச் செழுமை, தத்துவம், பக்தி,கவித்துவம் ஆகியவற்றுக்காக அனைவராலும் போற்றப்படுகின்றன. இதிலுள்ள கருத்துகள் வயதுக்கு மீறிய மேதமை நிலையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

பாரதியார்: பாரதியாரின் சின்ன சங்கரன் கதை அவரது சிறுவயது அனுபவங்களே என்ற கருத்தினை பலரும் குறிப்பிட்டுள்ளனர். பாரதியார் தனது கதாபாத்திரத்தை “பிஞ்சிலே பழுத்தது” என்றே குறிப்பிடுகிறார். பாரதியார் வரலாற்றை வாசிக்கும் போது இதனுடன் தொடர்புபடுத்திப் பார்க்கவும் முடியும். சுப்பிரமணியன் என்ற இயற்பெயர் கொண்ட இவருக்கு, 11 வயதில் எட்டையபுர அரச சபையில் கவி அரங்கில் இடம் கிடைக்கிறது. அங்கு நிலவிய போட்டிகள் பொறாமைகளின் ஊடே தனது கவி பாடும் திறமையை அவர் வெளிக்காட்டியதற்குக் கிடைத்த பட்டமே “பாரதி” என்பது. தனது சின்ன சங்கரன் கதையில் அவர் இந்தச் சம்பவங்களை குறிப்பிடும் போது, அவை வயதிற்கு மீறியவை என்றே குறிப்பிடுகிறார்.

// தமிழில் சங்கரன் பலபல நுல்கள், பலபல காவியங்கள் படித்து முடித்திருந்தான். இவை பெரும்பாலும் “சிருங்கார” ரஸம் மிகுந்திருப்பன. //

பாரதியார் பற்றி பேசும் போதெல்லாம் அவரது சிறுவயது புலமை பற்றிய குறிப்புகள் இடம் பெறுவது வழக்கம்.   வ.ரா எழுதிய பாரதியார் வாழ்க்கை வரலாற்றில் இவ்வாறு குறிப்பிடுகிறார்:

// கணக்குப் போடப் பையனைத் தகப்பனார் கூப்பிட்டால், பாரதியார் மனத்துக்குள்ளேயே, கணக்கு, பிணக்கு, வணக்கு, மணக்கு, ஆமணக்கு என்று தொடர் அடுக்கிக் கொண்டே போவார். //

// ஏதோ ஒரு சமயம், கணக்குப் போடாமல் பாரதியார் விழித்துக்கொண்டிருந்ததைத் தகப்பனார் கண்டார். இது என்ன விழி? என்றார். உடனே பாரதியார் உரக்கவே, “விழி, பழி, வழி, பிழி, சுழி” என்று கூறிக் கணக்கிலே சுழி போட்டுவிட்டாராம். பையனுக்குச் சித்தப் பிரமையோ என்று எண்ணித் தகப்பனார் மனம் ஏங்கிப் போனார். //

இவை அனைத்துமே பாரதியார் எழுதிய சின்ன சங்கரன் நூலிலும் இடம்பெறும் நிகழ்வுகள் என்பது குறிப்பிடத்தக்கது. 1882 இல் பிறந்த பாரதியின் முதல் படைப்பு 1904ஆம் ஆண்டு விவேகபானு இதழில் “தனிமை இரக்கம்” என்ற தலைப்பில் வெளியாகியதாக வரலாற்று ஆவணங்கள் குறிப்பிடுகின்றன. ஆனால் அவர் சிறுவயதிலே தனது வயதிற்கு மிஞ்சிய கருத்துகள் சார்ந்து கவி பாடியுள்ளார் என்பதற்கு சாட்சியாக வாய்மொழிச் செய்திகளும் அவரது சின்ன சங்கரன் கதையும் இருக்கின்றன.

வாயும் மனிதர்களும்அபிமன்யூ (தமிழில்: உதயசங்கர் | வெளியீடு வானம் பதிப்பகம்) : மலையாள சிறார் இலக்கியத்திலிருந்து நமக்கு கிடைத்த மிக முக்கியமான படைப்பு இது. 1997இல் – அபிமன்யூ என்ற 8வயது சிறுவன் வெளியிட்ட புத்தகம். ஒவ்வொரு கதையும்   வெவ்வேறுவிதமான உணர்வைத் தருகிறது. அவை அழகியலாக மட்டும் இல்லாமல், நெஞ்சை நெருடும் விதமாகவே இருக்கின்றன. வாய்கள் எல்லாம் சேர்ந்து மாநாடு போடும் கதையில் வாய்கள் எல்லாம் தப்பித்து ஓடுகின்றன. இன்னொரு கதை மரணத்தைப் பேசுகிறது. சூரியனுக்கு அருகே பறந்து சென்ற கிளிகள் கருகி இறப்பதாக ஒரு கதை வருகிறது. இவை அனைத்துமே சிறு வயதில் அந்தச் சிறுவனுள் இருந்த மேதமையை உணர்த்துவதாக இருக்கின்றன.

 எதேச்சையான படைப்புகள்:

இதுவரை வலிகளைப் பேசிய படைப்புகளையும், மேதமைத் தன்மையுள்ள சிறுவர்களின் படைப்புகளையும் பார்த்தோம். இந்த இரண்டு பிரிவுமே தனித்தன்மையானவை. ஒரு சிலரால் மட்டுமே இந்தச் சூழலில் இருந்து படைப்புகளை உருவாக்கிட முடியும். ஆனால் தற்போது நாம் காணப் போகும் பிரிவு குழந்தைகள் படைத்த எதேச்சையான  படைப்புகள். இவை குழந்தைகளின் இயல்புகளைப் பிரதிபலித்த படைப்புகள். குழந்தை உலகின் அழகியலை, சின்னச் சின்ன உணர்வுகளை பெரியவர்களுக்குக் காட்டும் கண்ணாடியாக இந்தப் படைப்புகள் இருக்கும்.

சென்ற தலைமுறையில் சிறார் இதழ்கள் குழந்தைகளைப் படைப்புலகிற்கு அழைத்து வந்த வேலையை மிகப் பெரிய அளவில் செய்துள்ளன. இன்றும் பல எழுத்தாளர்கள் தங்களது படைப்புகள் முதன் முதலாக சிறுவர் இதழில் வெளியாகியிருந்ததாக அழகிய நினைவுகளைப் பகிர்கின்றனர். (குறிப்பாக கண்ணன், கோகுலம் போன்ற இதழ்களின் பெயர்கள் அதிகளவில் பகிரப்படுகின்றன, அதே போல கையெழுத்துப் பத்திரிகைகளும் நிறைய இருந்துள்ளன). தமிழ்ச் சிறார் உலகில், இதழ்கள் றெக்கை கட்டிப் பறந்த காலம் அது. ஆனால் அதிலும் அதிகமாக பதின் பருவச் சிறுவர்களே இடம் பெற்றிருந்ததைக் கவனிக்க முடிகிறது. ரேடியோ(எஸ்.செளந்திரராஜன் – வயது 16), டிங்டாங் (பி.வெங்கடராமன் வயது 15) இதழ்களின் ஆசிரியர்களாக பதின் பருவச் சிறுவர்களே இருந்துள்ளனர். பதின் பருவக் குழந்தைகளுக்கான போட்டிகளைத் தொடர்ந்து பல்வேறு சிறுவர் இதழ்கள் நடத்தி வந்துள்ளன. அதன் வழியே பல படைப்பாளிகளையும் உருவாக்கியுள்ளனர்.

கடந்த 5 வருடங்களாக தொய்விலிருந்து மீண்டு முன்னேற்றப் பாதையில் பயணிக்கும் சிறார் இலக்கியத்தில் இயல்பான குழந்தைகளின் படைப்புகள் அதிகரிக்க தொடங்கியுள்ளன. அதுவும் பதின் பருவ சிறுவர்களிடம் மட்டுமே இருந்த குழந்தைகளின் படைப்புலகம் தற்போது 4 வயது குழந்தைகள் வரை சென்றிருப்பது மிக முக்கியமானது. இதற்கு குழந்தைகள் செயற்பாட்டாளர்களின் பங்கும் ஆசிரியர்களின் பங்கும் மிக முக்கியமானவை. அதீத கவனத்துடனும் அக்கறையுடனும்  குழந்தைகளுடன் பழகி, தங்களது செயற்பாட்டின் வழியே இயற்கையான சூழலிருந்து படைப்புகளைப் பெற்று புத்தகமாக கொண்டு வருவது மிக முக்கியமான வேலை. சில படைப்புகள் போட்டி வடிவத்திலும் ஒருவித நிர்ப்பந்தத்தின் பெயரிலும் பெறப்பட்டவையாகவும் இருக்கின்றன. அவை தவிர்க்க முடியாதவையும் கூட. தொடர்ந்து நடக்கும் உரையாடல் மூலமாகவும் அனுபவங்களைப் பகிரும் வழியாகவும் மட்டுமே இவற்றை முழுக்க முழுக்க குழந்தைகளின் இயல்பிற்கு அருகில் சென்று படைப்பூக்கத்திற்கான ஓர் அழகிய தளத்தினை அமைத்திட முடியும். அதற்கு நிறையப் பொறுமையும், அன்பும், புரிதலுக்கான கவனிப்பும் தேவையாக இருக்கின்றன. இவற்றையெல்லாம் கடந்து இதுவரை வெளியான குழந்தைகளின் இயல்பான படைப்புகளை இங்கு பட்டியல் இடுகிறேன்.

 1. வானவில் – பா.நந்தினி (வயது : 9) – ஆசிரியர்களின் உதவியோடு இந்தப் புத்தகம் வெளியாகியுள்ளது
 2. மந்திர மரம் – முருகபூபதி (செயற்பாட்டாளர்) – தனது செயற்பாடுகளின் வழியே குழந்தைகளின் படைப்புகளைத் தொகுத்துள்ளார் – வெளியீடு: பாரதி புத்தகாலயம்
 3. தம்போய் கதைகள் – (கம கம பண்டிதர், பலே திருடன், காகங்களின் ஆசை, பச்சை நிறத்தில் ஒரு யானை, சிறுவனும் நாதஸ்வரமும், காளையைத் தூக்கிச் சென்ற கழுகு, அருவியில் குளித்த ஐஸ் ) என அறிவியல் இயக்க செயற்பாட்டின் வழியே ஆசிரியர் சுடர் ஒளி மற்றும் ஈஸ்வர சந்தானமூர்த்தி அவர்களும் தொகுத்த புத்தகம். வெளியீடு: பாரதி புத்தகாலயம்
 4. எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் தனது மகனுக்கு ஏழு வயதாகும் போது, மகனின் கதைகளைச் சேர்த்துப் புத்தகமாக வெளியிட்டுள்ளார். “எனக்கு ஏன் கனவு வருகிறது”, “காசு கள்ளன்”, “லாலி பாலே”, “எழுதத் தெரிந்த புலி”, “நீள நாக்கு”, “பாம்பழாமம்”, “தலையில்லாத பையன்” என கதைக்கம்பளமாக வெளியிட்டுள்ளார்.
 5. Nothing but Water – ஆங்கில மொழியாக்கம் – சைதன்யா – வயது 10 (எஸ்.ராவின் கால் முளைத்த கதையை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த சிறுமி) | வெளியீடு : வம்சி
 6. எதிர்பாராமல் பெய்த  மழை – மலையாள மூலம் : சிபிலா  மைக்கேல் (வயது 13), தமிழில் : சுகானா, வயது 13 | வெளியீடு : வம்சி
 7. சிச்சுப்புறா – மலையாள மூலம் : அல்கா (வயது 13), தமிழில் : சுகானா, வயது 13 | வெளியீடு : வம்சி
 8. அமிழ்து – கதை சொல்லி வனிதா மணி – வெளியீடு கதைக்களம் அமைப்பு.
 9. ஒரு சின்ன விதை, வண்ணமரம், பேசும் புத்தகம் – குட்டி ஆகாயம் வெளியீடு
 10. இதழ்கள்:

இதழ்கள் வழியே நிறைய குழந்தைகளின் படைப்புகள் வெளிவருவதைக் கவனிக்க முடியும். மாயாபஜார், பட்டம், சுட்டி விகடன், பெரியார் பிஞ்சு, துளிர், சம்பக் போன்ற பெரிய பத்திரிக்கைகள் குழந்தைகளின் ஓவியங்கள், கதைகள், கேள்விகள், நேர்காணல்கள் என தொடர்ந்து வெளியிட்டு ஊக்கப்படுத்தி வந்துள்ளனர். தற்போது மேலும் மகிழ்ச்சி தரும் விதமாக குழந்தைகளுக்கான சிறு பத்திரிகைகள் (பஞ்சு மிட்டாய், குட்டி ஆகாயம், சுட்டி யானை, தேன் சிட்டு போன்றவை) தொடங்கி அவை பெரும் அளவில் குழந்தைகளின் இயல்புலகில் கவனம் செலுத்தி வருகின்றன.

பஞ்சு மிட்டாய் செயற்பாடுகள்: இந்த இடத்தில் பஞ்சு மிட்டாய் செயற்பாடுகள் குறித்து சுருக்கமாக எனது அனுபவத்தை இரண்டு-மூன்று வரிகளில் பதிவு செய்ய விரும்புகிறேன். 2015 ஆம் ஆண்டு 5-6 குழந்தைகளுக்கான கதை சொல்லல் நிகழ்வாக தான் பஞ்சு மிட்டாய் செயற்பாடுகள் தொடங்கின. அதில் கிடைத்த அனுபவமும், பெற்றோராக உணரப்பட்ட சில தேவைகளும், குழந்தைகளின் மகிழ்ச்சியும் ஊக்கமும் தான் இதழாக உருமாறி தொடர்ந்து செயல்பட வைக்கிறது. சிறார்களின் படைப்புகளுக்கு தனி இடம் அமைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் பஞ்சு மிட்டாய் இதழ் இயங்கி வருகிறது. அந்த வகையில் இதுவரை பல்வேறு நண்பர்களின் உதவியுடன் 12 இதழ்கள் (2021 -ஏப்ரல்) வரை வெளியாகியுள்ளன. இதழில் 4 வயது சிறுவர்களின் படைப்புகளும் இடம்பெற்றுள்ளன. ஓவியம், கதை, பாடல், கட்டுரை, அனுபவ பகிர்வு என அனைத்துப் படைப்புகளும் குழந்தைகள் இயல்பாகப் படைத்தவை. குறிப்பாக, பெரியவர்களின் தலையீடுகள் ஏதுமில்லாத வண்ணம் படைப்புகள் இருப்பதை இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.

 தேன் சிட்டு: (ஆசிரியர்: ரமணி வயது 12, பதிப்பாசிரியர்: ரமணா வயது 6). சென்னையிலிருந்து சிறுவர்கள் சேர்ந்து நடத்தும் இதழான தேன் சிட்டு 2020 குழந்தைகள் தினம் அன்று தோன்றி மாத இதழாக வருகிறது. இதழின் ஆசிரியர் ரமணி தொடர்ந்து தனது சகவயது நண்பர்களிடம் படைப்புகளை சேகரித்து அழகாக தொகுத்து வருகிறார்.

குட்டி ஆகாயம்: கோவையிலிருந்து இந்த இதழ் வெளியாகிறது. சென்ற வருடத்திலிருந்து இதழின் ஆசிரியராக இருந்து வருகின்றனர். குழந்தைகளின் படைப்புகளுக்கு அதிகம் முக்கியத்துவம் தரும் இதழ்களில் குட்டி ஆகாயம் முக்கியமானது.

 2020-2021இல் வெளியான குழந்தைகளின் படைப்புகள்:

2020 கொரோனா காலத்தில் குழந்தைகள் சார்ந்து இணைய வழியே நிறைய செயற்பாடுகளை கவனிக்க முடிந்தது. அதன் தொடர்ச்சியாக புத்தகங்களும் வெளியாகின. அவற்றை ஒரு பட்டியலாக இங்கு பகிர்கிறேன். கடந்த இரண்டு ஆண்டுகளில் இத்தனை குழந்தைகளின் படைப்புகள் வெளியாகியுள்ளது என்பது மகிழ்ச்சியைத் தருகிறது. இவற்றையெல்லாம் ஆய்வு நோக்கில் நாம் கையில் எடுக்க வேண்டும். விரைவில் அதற்கான சூழலை உருவாக்க வேண்டிய அவசியமும் இருக்கிறது.

 1. யாருக்குத் தைக்க தெரியும் – ரமணி (வயது: 8) | வெளியீடு: வானம் பதிப்பகம்
 2. குரங்கும் கரடிகளும் – எஸ். அபிநயா (வ்யது 13) | வெளியீடு: வானம் பதிப்பகம்
 3. சிம்பாவின் சுற்றுலா – ரமணா (வயது: 6) | வெளியீடு: வானம் பதிப்பகம்
 4. வெள்ளைப் பூக்கள் – மீனா (வயது: 12) | வெளியீடு: வானம் பதிப்பகம்
 5. புலிப் பல்லும் நரிக் கொம்பும் – எஸ். அபிநயா (வயது 13) | வெளியீடு: வானம் பதிப்பகம்
 6. ஆறு நண்பர்களின் கதை – நிவேதிதா (வயது: 8) | இணைய புத்தகம்
 7. அந்தியில் மலர்ந்த மொட்டுக்கள் – தொகுப்பாசிரியர்: உமையவன் | வெளியீடு நிவேதிதா பதிப்பகம்
 8. பேனா பிடித்த நட்சத்திரங்கள் – தொகுப்பாசிரியர்: துரை ஆனந்த் குமார் | வெளியீடு : Kids Tamil Stories
 9. பதினென் கதைகள் – ஹரிவர்ஷ்னி ராஜேஸ் (வயது 8) | வெளியீடு விஜயா பதிப்பகம்
 10. நிசாசினியின் மீன் பொம்மை – ஹரிவர்ஷ்னி ராஜேஸ் (வயது 8) | வெளியீடு விஜயா பதிப்பகம்
 11. சுட்டிப்பெண்ணி குட்டிக் கதைகள் – நேத்ராஶ்ரீ (வயது 9) | வெளியீடு லாலிபாப் சிறுவர் உலகம்
 12. பூக்கள் சொல்லும் கதைகள் (பெண் குழந்தைகள் எழுதிய கதைகள்) – தொகுப்பாசிரியர்: கன்னிக்கோயில் ராஜா | வெளியீடு லாலிபாப் சிறுவர் உலகம்
 13. வண்ணத்துபூச்சிகள் மின்னிதழ்
 14. ஒரு படகோட்டியின் கதை – கமல் சங்கர் (வயது 9) – கிண்டில் புத்தகம்
 15. கரிச்சான் குஞ்சும் குயில் முட்டையும் – பா. செல்வ ஸ்ரீராம் (வயது: 8) | வெளியீடு: சுவடு பதிப்பகம்
 16. சுக்கா…புக்கா…முக்கா… தொகுப்பாசிரியர் :புத்தக நண்பன் குழு | வெளியீடு: பாரதி புத்தகாலயம்
 17. வானவில் (சிறார் பாடல்கள்) –ந.க. தீப்ஷிகா (வயது-12) | வெளியீடு : சாரல் பதிப்பகம்
 18. நான்தான் உலகத்தை வரைந்தேன் (கவிதைகள்) – மகிழ் ஆதன் (வயது-9) | வெளியீடு: வானம் பதிப்பகம்
 19. குழந்தைகளின் படைப்புகளை உள்ளடக்கிய அச்சு இதழ்கள் (2020-2021) : பஞ்சு மிட்டாய், தேன் சிட்டு, குட்டி ஆகாயம், சுட்டி யானை.

பதின் பருவ இலக்கியத்தின் முன்னோடியாகத் திகழும் ரஸ்கின் பாண்ட் அவர்கள் தனது முதல் சிறுகதையை(Untouchable) 16வது வயதிலும், தனது முதல் நாவலை (Room on the roof) 17வது வயதிலும் எழுதியுள்ளார் என்பதையும் இங்கு பகிர்கிறேன்.

 கின்னஸ் / இதர சாதனையில் பதிவாகியுள்ள படைப்புகள்: (ஆவணப்படுத்தும் நோக்கில் பதிவு செய்கிறேன்)

 1. How the world began by dorothy straight (4 வயது – The youngest commerciallly published female author GUINNESS record, 1964)
 2. Junk food by thanuwana serasinghe  (4 வயது – youngest published male author GUINESS record : 2017)
 3. Giant Twoe and 100 Beanstalks – by Saarth Khanna Sohum  (6 வயது The youngest person to write a bilingual book GUINNESS record, 2017)
 4. Honeycomb by ayan gogoi (4 வயது Youngest Author of India – Indian book of records)

குழந்தைகளின் படைப்புகளை தொடர்ந்து கவனிக்கும் போது , அவை நமக்கு உணர்த்தும் விசயம் ஒன்றே ஒன்று தான். குழந்தையின் சுதந்திர உணர்வு. ஆம், தேவையற்ற கட்டுப்பாடுகளைத் தகர்த்து, குழந்தை தன்னிசையாக தன்னை வெளிப்படுத்தும் சூழலை உணரும் போது அவர்களது படைப்புகள் அனைத்தும் மிகவும் ஆச்சரியமான கற்பனைகளை கொண்டதாகவும் அதே நேரத்தில் தங்களது உணர்வை வெளிப்படுத்தும் விதமாகவும் இருப்பதைக் கவனிக்க முடிகிறது. “சுதந்திர உணர்வே கற்றலில் முக்கியமான மதிப்புமிக்க அம்சம். வீடோ, பள்ளியோ குழந்தைகள் கற்க உண்மையிலேயே உதவ விரும்பும் ஒருவர், இந்த சுதந்திர உணர்வை மதிக்கவும்,ஊக்கப்படுத்தவும் வேண்டும்” என்ற ஜான் ஹோல்டின் வார்த்தைகள் தாம் இந்த படைப்புகளின் வழியே வெளிப்படுகின்றன. ஆகவே, குழந்தைகளின் படைப்புலகம் சார்ந்து இயங்கும் போது அதீத அக்கறையும் பொறுப்பும் நமக்கு இருக்கிறதை உணர்ந்து செயல்படுவோமெனில் ஓர் அழகிய சூழலை நாம் அனைவரும் அடுத்த தலைமுறைக்கு வழங்கிட முடியும் அதன் வழியே தமிழ்க் குழந்தை இலக்கியம் மென்மேலும் செழிப்படையும்.

குறிப்பு: இந்தப் பட்டியல்கள் அனைத்தும் எனது தனிப்பட்ட தேடல்களே. இவற்றில் சில விடுபடல்கள் இருக்குமாயின் அவை தற்செயலானவையே. ஆகவே, நண்பர்கள் உங்களுக்குத் தெரிந்த புத்தகங்களை என்னுடன் பகிருங்கள், அவற்றை அவசியம் இந்தப் பட்டியலோடு இணைக்கிறேன்.

எழுத்தாக்கம் மேற்பார்வை : கமலாலயன்

காணொலி பதிவு :

சிறார் எழுத்தாளர்கள் – கலைஞர்கள் சங்கம் சார்பாக சிறார் கலை இலக்கியச் சந்திப்பு இணைய வழியே நடைப்பெற்றது. மொத்தம் 10 அமர்வுகள், 20க்கும் மேலான சிறப்புரைகள் என மிகவும் சிறப்பாக நடைப்பெற்றது. நிகழ்வின் உரைகளை இங்கு பஞ்சுமிட்டாய் இனையத்தில் ஆவணப்படுத்துகிறோம்.

வீடியோ பதிவுகளாக காண: Click here.

கட்டுரைகளுக்கு : Click here.

Leave a comment