சிறார் நாடகம் – விஜயகுமார்

வாசிக்கும் நேரம்: 9 நிமிடங்கள்

குழந்தைங்களை  நாடகம் வழியாக, நாடகத்தில் வரும் ஒவ்வொரு கதை மாந்தரின் வழியாகப் பேச வைக்க வேண்டும் என்கிற எண்ணம் அனைவரிடத்திலும் பரவ ஆரம்பித்துள்ளது.  அந்த எண்ணம் தற்போது  இயக்கமாய் உருப்பெற்றுள்ளது. நவீன நாடக கூட்டம்,  சிறார்களுக்கான நாடக அரங்கம் எப்படி ஒரு பெரும் வீச்சில் செயல்பட ஆரம்பித்தது என்பதைப் பற்றி சிறுதலைப்புகளில் ஒரு சிறிய வரலாறு வழியாக பதிவு செய்ய விருப்பப்படுகிறேன். 

நவீன நாடகத்தின் தொடக்கம்

சிறார் நாடகத்திலிருந்து, சபாவிலிருந்து, வீதி நாடகத்திலிருந்து  நவீன நாடகம் பெரிதாகப் பேசப்பட்டதற்குக் காரணம் சே.இராமானுஜன் தான். பேராசிரியர் சே.இராமானுஜம் ஐயா ஒரு தொடக்கப்பள்ளி ஆசிரியர் ஆவார். அவர் குழந்தைகளுடன் பழகுவதில் தனக்குக் கூடுதலான அனுபவம் தேவை என்று நினைத்தார். அதனால், புதுதில்லி தேசிய நாடகப்பள்ளிக்குச் சென்று குழந்தைகள் நாடக அரங்கப் படிப்பைத் தேர்ந்தெடுக்கிறார். அதன் தொடர்ச்சியாக 1977-78இல் திண்டுக்கல்லில் உள்ள காந்தி கிராமம் பல்கலைக்கழகத்தில் நவீன நாடகப் பயிற்சிப் பட்டறையைத் தொடங்குகிறார். பேராசிரியர் முனைவர் ராமசாமி அவர்கள்,  ராஜூ, ஞாநி  போன்ற நவீன நாடக ஆளுமைகள்  (கிட்டத்தட்ட  20 பேருக்கும் மேல்) அனைவருமே  இந்தப் பயிற்சிக்குள்ளே  பயிற்சி பெற்று எதிர்பார்த்திருந்த ஒரு வடிவத்தை நவீன நாடகத்தின் வழியாகக் கொடுத்தார்கள்.

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் முதல் நாடகத்துறை ஏற்படுத்தப்பட்டது. அதில் நாடகத் துறைத் தலைவரும் பேராசிரியர் இராமானுஜம் தான். பேராசிரியர் மு.ராமசாமி அவர்களும் இருந்தார். பேராசிரியர் இராமானுஜம் ஐயா,  பேராசிரியர் ராமசாமி ஐயா,  முருகேசன் எல்லாரும் ஒன்று சேர்ந்து வேலை செய்ய ஆரம்பித்தார்கள்.  ஒவ்வொரு விழாவையும் திட்டமிட்டு ஆரம்பித்தார்கள்.  நாடகம் மற்றும் அதன் வரலாறு சம்பந்தமான பெரிய கருத்தரங்கை நடத்தினார்கள்.  இதுதான் நவீன நாடகத்தினுடைய  ஒரு தொடக்கம். காந்தி கிராமம் பல்கலைக்கழகத்தில் நடந்த  பயிற்சிப் பட்டறைக்குப் பிறகு  ஒவ்வொருவரும் தன்னுடைய செயல்பாட்டை தீவிரமாக்கிக் கொண்டு,  ஒவ்வோர் உணர்வுகளுக்குள்ளும்  செயல்பட ஆரம்பித்தார்கள்  அதன்பிறகு பல்கலைக்கழங்களுக்குள் கல்வியாக நாடகம் வந்தது.  பல்கலைக்கழகங்களில்  நிறைய கருத்தரங்கங்கள் நடந்தன. இதுதான் நவீன நாடகத்தினுடைய  தொடக்கம்,  எளிமையாகச் சொல்லி இருக்கிறேன்.

சிறார் நாடகத் தோற்றம் :

மதுரையிலுள்ள CESCI(செசி) என்கிற அமைப்பு குழந்தைகளுக்கான 15 நாள் சிறார் நாடகப்பயிற்சிப் பட்டறையை இந்திய அளவில் ஒருங்கிணைத்திருந்தது. அங்கே செல்வதற்கான அழைப்பு வந்தது. முதலில் சிறார் நாடகப் பயிற்சிப்பட்டறையா, அப்படியென்றால் என்ன  என்பது  தெரியவில்லை. ஆனால் அங்கு சென்ற பிறகு இந்திய அளவிலான ஒரு நாடகப் பயிற்சிப் பட்டறை,  குழந்தைகளுக்கான நாடகப் பயிற்சிப் பட்டறை இந்தியாவில் இருக்கிற  பெரும்பான்மையான எல்லா மாநிலங்களில்  இருந்தும்  குழந்தைகள் வந்திருந்தார்கள்.  எல்லாருக்குமே அதிகபட்சம் 15 வயது இருக்கும்.  பயிற்சிப் பட்டறையைப் பார்க்க மட்டுமே நான்  அனுப்பப்பட்டேன். ஆனால் அங்கே போனதற்குப் பிறகு  ஆசைதாளாமல் நானும் கலந்து கொண்டேன்.  குழந்தையோடு  குழந்தையாக  10 நாள்  அங்கேயே இருந்தேன். மொழி தெரியாத நிறைய பிள்ளைகள் இருந்தார்கள்,  ஆனால் அந்த பத்து நாட்களில்  மொழி என்பது ஒரு பெரிய சிக்கலாகத் தெரியவில்லை.  நான் தமிழ், ஒரு குழந்தை  வேறு ஒரு மொழியைப் பேசும்  என்றால்,  அது ஒரு தொடர்புகொள்ளல்(Interactive) ஆக மாறுகிறது. நான் வசனம் பேசுகிறேன்,  எதிர்முனையில் இருந்து வசனம் பேசும் போது, அது  மொழியில்லாத ஓர் அசைவாக, புதிதான ஒரு மொழியை உருவாக்கியது.  அதைத் தான் நான் அங்கு உணர்ந்தேன்,  இது ஒரு பத்து நாளில் அல்ல,  ஒரு 5-6 நாளிலேயே வியப்பைத் தந்தது.  ஆதலால் மொழி பெரிய சிக்கலே இல்லை, குறிப்பாக ஒரு படைப்புக்கு  மொழி சிக்கலே  இல்லை.  அதுவுமில்லாமல் குழந்தைகள் வழியாக இயங்குவதற்கும் மொழி இன்னமும் கூட பெரிதாகத் தேவை இல்லை என உணர்ந்தேன்.  நாங்கள் நாடகம்(தொப்பி வாலா) ஒன்றை  நடித்தோம். எல்லா மாநிலத்துக் குழந்தைகளும் நாடகத்தில் பங்கேற்றார்கள்  நானும் அதில் நடித்தேன். அந்த நாடகத்தில்  நடிப்பவர்கள் அவரவருக்குத் தெரிந்த எந்த  மொழி வேண்டுமானாலும்  பேசிக் கொள்ளலாம்,  வெளியில் இருந்து நாடகத்தைப்  பார்க்கிற  பார்வையாளர்களுக்கு  நாடகம் புரிகிறது குறிப்பாக  என்ன வசனம் பேசப்படுகிறதோ அது தெளிவாக அவர்களுக்குப் புரிகிறது. இது  எதன்  வழியாக சாத்தியம் என்று பார்த்தால் ‘அசைவு வழியாக’ சாத்தியப்பட்டது. அதாவது உடல்மொழி வழியாக புரிகிறது.

அப்படியென்றால் குழந்தைகளிடம் பேச மொழி பிரச்சனை இல்லை. குழந்தைகளிடம்  பேசும்போது  அந்தந்த நிமிடத்திற்கு ஏற்றாற் போல சவால் வரும், அந்தச்  சவாலை  அந்த ஒரு நொடியில் குழந்தைகள் சரியானதாக, புரிந்துக்கொள்ளக்கூடிய ஒரு வடிவத்தையோ, அசைவையோ காண்பித்தால், அங்குதான் Communication நடக்கும். எனவே யார் வேண்டுமானாலும்  பேசலாம்; இங்கு மொழி பிரச்சினை இல்லை. குழந்தைகளை விட கூடுதலான வயதாக நமக்கு  இருக்கும்போது குழந்தைகளிடம்  உரையாடுவது நல்ல உறுதியான கட்டமைப்பாக  இருக்கும். இதன்பிறகு நான்  பறையாட்டம் பயிற்சி  ஆரம்பித்தேன். அதிலேயும் பதின்பருவப் பிள்ளைகள் பறையாட்டத்தை  உள்வாங்கிக்கொள்ள  சிறிது நேரம் எடுத்துக் கொள்வார்கள். ஆனால் சிறுபிள்ளைகள் எளிதாகப் புரிந்து கொள்வார்கள். இந்த இடமும் எனக்கு தாக்கத்தை உண்டாக்கியது. அப்போது ஒரு நடிகனுக்குத் தேவையானது தாளம். ஒரு சிறு வயது பெண் பிள்ளையோ, ஆண் பிள்ளையோ உடனடியாக தாளத்தை ஏற்க விரும்புகிறார்கள். அப்போது தாளம் வழியாக  மிக எளிமையாக, விரைவாக குழந்தைகளை நெருங்கி விடலாம். இந்தத் திட்டத்தை  மனதில் வைத்துத் தான்  தனியாக நாடகம் போட வேண்டும் என கண்டுபிடித்தேன். முதலில் நாடகம் பற்றிய எந்தவிதமான அறிவையும் குழந்தைகளிடம் புகுத்தக்கூடாது.  நாடகத்தில்,  இப்படி நடிக்க வேண்டும்,  இப்படி ஓட வேண்டும்,  இப்படி ஆட்டம் போட வேண்டும் என்கிற  எந்தவிதமான அடிப்படை விதியையும்  சொல்லக்கூடாது.  நாடகத்தையும், விளையாட்டையும்  ஆங்கிலத்தில் Playனு  சொல்வார்கள். ஏனென்றால் நாடகமும் விளையாட்டுதான்.  அப்படியென்றால்  குழந்தைகளிடம் நெருங்க மிக எளிமையான வழி,  விளையாட்டு தான்.  விளையாட்டைக் கொஞ்சம் கொஞ்சமாக விளையாடி அந்த ஒவ்வொரு விளையாட்டையும் புதிதாகச்  சொல்ல முடிவு செய்தேன். மரபு சார்ந்த விளையாட்டுகள் நிறைய உள்ளன.  அந்த ஒவ்வொரு விளையாட்டையும் புதிதாக்கினேன்.  அந்த விளையாட்டுகளை நவீன நாடகத்துக்கான அடிப்படைப் பயிற்சியாக,  குழந்தைகளுக்கான விளையாட்டாக மாற்றிக் கொடுக்க ஆரம்பித்தேன். இந்த மாதிரியே சிறார் நாடகத்தின் தோற்றத்தை நான்  உள்வாங்கிக் கொண்டேன்.

சிறார் நாடக முன்னோடிகள்

இதற்கு முன்பு யாரெல்லாம் சிறார் நாடகத்துக்குப்  பங்காற்றி இருக்கிறார்கள் என்று பார்த்தால்,  முதலில் பேராசிரியர் சே.இராமானுஜம் ஐயாதான். பிறகு, எஸ்.பி.சீனிவாசன் ஐயா காந்திகிராமத்தில் பேராசிரியராக இருந்தவர். நான் மதுரையில் நாடகப் பயிற்சிப் பட்டறையைப் பார்க்கும்போது எஸ்.பி.சீனிவாசன் ஐயா குழந்தைகளோடு உறவாடுறதை நேரிடையாகப் பார்த்தேன், கிட்டத்தட்ட 75 வயது இருக்கும்; அவர் தானே குழந்தையாக  குழந்தைகளிடம் மாறுவதை  நன்றாகக் கவனிக்க முடிந்தது. ஏனென்றால் அவர் பழகும்  விதமும்,  குழந்தைகளிடம் அணுகும் விதமுமே ஒரு நல்ல சுட்டியான குழந்தை இன்னொரு குழந்தையுடன் விளையாடுவது போல் இருக்கும்.  அந்த மாதிரியான ஒரு குழந்தையாக ஐயா  இருந்தார்.  அவர் அருமையாக ஓவியம் வரைவார்,  அவர் ஓவியம் சொல்லிக் கொடுப்பதுமே புதிதாக இருந்தது,  அவர் பேசும்போது ஒரு நாடகம் பகிர்ந்தார், அதையும்  எளிமையான பூக்களை வைத்து,  எளிமையான இசைக்கருவிகளை வைத்து செய்ய முடிந்தது. இது தான் மிகக்குறிப்பாக சிறார்  நாடகத்தில் என்னை ஈர்த்ததற்குமான  காரணமாகவும் அமைந்தது.  சிறார்  நாடகத்திற்காக வேலை செய்கிறவர்களைக் கவனிக்கத் தொடங்கினேன்.  நான் பாண்டிச்சேரி  போனபோது அங்கே ஒருவிதமான பாணியை கண்ணுக்குள் மனசுக்குள் பதிய வைத்தது. இங்கே குழந்தைகள் நடிக்க வில்லை. நடிக்கிற மனிதர்களே  குழந்தையாக மாறி நடித்தார்கள்.  குழந்தைகளை வைத்து நாடகம் பண்ணலாம், ஆனால் இங்கு யாரெல்லாம் நடிக்கிறர்களோ  அவர்களே குழந்தைகளாக  மாறினார்கள். குறிப்பாக  வேலு சரவணன். நாடகத்துறை செயல்பாடுகளில் ஈடுபட்டு  இருந்தார்.  வேலுசரவணன்  பாண்டிச்சேரி பல்கலைக் கழகத்துக்குப் பக்கத்திலேயே நாடகம்  போடுகிறார். அவர் கூட நாடகத்தில் நடிப்பவர்களெல்லாரும்  பெரிய பெரிய ஓவியரும் சிற்பிகளும். அவர்களின் ஒப்பனைகள்,   பேசுகிற விதம்,  கற்றுக்கொள்கிற விதம் அனைத்துமே புதிதானவை. நாடகம் பார்க்கும் போது குழந்தையாக, கோமாளியாக, வெவ்வேறு உடலாக அவர்கள் மாறியது, புதுவித அனுபவத்தைத்  தந்தது. இதையெல்லாம் உள்வாங்கிக் கொண்ட நான், அந்தத் தாக்கத்திலிருந்து சாதாரண நிலைக்குத் திரும்பவே பல வாரங்கள் ஆயின.

பிறகு முருகபூபதி, அவருடைய தொடர்பு கிடைத்து, “மணல்மகுடி” என்ற அவருடைய நாடகக்குழுவின் நாடகங்களைப் பார்க்க ஆரம்பித்தேன்.  அங்கு குழந்தைகளுக்கான நாடக அரங்கை உருவாக்கியிருந்தார்கள். ‘குழு அரங்கம்’ என்ற அந்த அரங்கத்தில்  இருந்த பொருளெல்லாம் முறம்,  சாக்கு, கிழிந்த  துணி  அவ்வளவே, இதிலேயே  பசங்களை வைத்து  வேலை வாங்குவதைப்  பார்த்தேன்,  ஒவ்வொன்றும் ஒவ்வொரு கட்டமைப்பை உடைத்துக் கொண்டே  இருந்தது.

உதிரி நாடக நிலத்தின் வளர்ச்சி:

வெவ்வேறு  மாதிரியான அனுபவத்தை சிறார்  நாடகம் காண்பித்துக் கொண்டே இருந்தது.  சிறார் நாடகக் குழுவில் வேலை செய்தேன். அங்கு தான் கார்த்திகேயன் அண்ணனை(தற்போது திறந்தநிலைப் பல்கலைக்கழகப் பேராசிரியராக இருக்கிறார்.) சந்திக்க நேர்ந்தது.  அங்கே திருக்குறளை  மையமாக வைத்து நாடகம்  நடத்தினோம். இதுவரைக்கும் சிறாரை வைத்து நாடகம்  பண்ணதே  கிடையாது, அண்ணன் சொன்னதும் உடனே நாடகம் பண்ண  முடிவு செய்தேன்.

அதன் தொடர்ச்சியாக எங்களுடைய ஊரில் உள்ள பிள்ளைகளை  ஒன்று சேர்த்து நாடகம் பண்ண முடிவு செய்தேன். நம்முடைய மரபு சார்ந்த விளையாட்டுப் பாடல்கள் எல்லாம் சேர்த்து நாடகம் செய்ய தீர்மானித்தேன். கொலை கொலையா முந்திரிக்கா  மாதிரியான விளையாட்டுப் பாடல்கள் மட்டுமே வைத்து செய்ய முடிவுசெய்தேன். முதல் முறையாக அதுதான் நான் நடத்திய நாடகம். அங்கு திருக்குறளை  மையமாக வைத்து செய்தபோது நிறைய செட் அப், மேக் அப் இருக்கும், ஆனால் இங்கே ஒன்றும் இருக்காது.  பிள்ளைகள் விளையாட்டுத் தனத்தோடு இருப்பார்கள்;  ஆனால்  ஏதோ புதிதாக இருப்பதைக் கவனிக்க ஆரம்பித்தார்கள்.  பிறகு தன்னிச்சையாக வேலை செய்யலாம் என்று முடிவு செய்தேன். ஆனாலும்  இராமானுஜம் ஐயா கூட  தொடர்ச்சியாக  நிறைய நாடகங்கள், குறிப்பாக  குழந்தைகள்  நாடகங்கள் நடத்தினேன். ஒவ்வொன்றும் இந்திய அளவிலான  நாடக விழாவிற்குத் தேர்வானது.

பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் ஒன்றாகப் படித்த நாடகத்துறை நண்பர்கள் வெளியே வந்து களம் என்கிற ஒரு நாடக அமைப்பை உருவாக்குகிறார்கள். அந்த அமைப்பில்  குழந்தைகளுக்கான நாடகங்கள் நிறைய செய்தார்கள் . அதில் இரவி அண்ணா நிறைய குழந்தைகள் நாடகம் போடுகிறார். அவை தேசிய அளவில் டெல்லியில் தேர்வாகின்றன.  இங்கு மறுபடியும் ராமானுஜம் ஐயாவினிடத்தில் வேலை பார்க்கிறேன், ஒரு கட்டத்துக்குப் பிறகு  நானே தனியாக நாடகம் போட தீர்மானித்தேன். நாடகக் குழு ஒன்றைத் தொடங்கினேன். அதுதான் உதிரி நாடக நிலம். மார்ச் 27,2015 இல் தொடங்கப்பட்டது. முதலில் நான் மட்டும் நடிக்கக்கூடிய நாடகம் ஒன்றை  நடித்தேன். பிறகு முருகபூபதி மூலம்  நாகப்பட்டினத்தில் உள்ள பள்ளியில்  நாடகம் நடத்த அழைத்தார்கள். நடராஜ் என்பவர் வானவில் பள்ளிக்கு வரச் சொன்னார். அந்தப் பள்ளியில் படிக்கிற பிள்ளைகள் முழுக்க  நரிக்குறவர் பிள்ளைகளும், பூம்பூம் மாட்டுக்காரப் பிள்ளைகளுமே. சுற்றுலாத்தளங்களாக உள்ள  நாகூர், நாகப்பட்டினம்,  வேளாங்கண்ணி மூன்று இடங்களில்  பெற்றோர்கள் இல்லாமல் ஸ்டிக்கர் விற்கிற  பிள்ளைகளை வைத்து    நாகப்பட்டினம் பக்கத்தில் இருக்கும் சிக்கல் என்ற ஊரில் வானவில் பள்ளியை நடத்துகிறார்கள்.  இது  எடுத்த உடனே பெரிய சவாலாக  பெரிய எதிர்பார்ப்புகள் நிறைந்த  நாடகமாக அமைகிறது.  முதல் முறை என்பதால்  நான் ஒரு ஜிப்ஸியை எதிர்கொள்ளப் போகிற  நினைப்பில்  நிறைய கதைகளோடும்  கனவுகளோடும் பள்ளிக்கு போனேன்.  என் எண்ணத்தைத் தகர்க்கிற வகையில் நரிக்குறவர் பிள்ளைகளும்,  பூம்பூம் மாட்டுக்காரர் பிள்ளைகளும் ரொம்ப சுறுசுறுப்பாக இருந்தார்கள். நாடகம் போட வேண்டும்  என்கிற எண்ணம் மாறி  விளையாட முடிவு செய்தேன்.   15நாள் நாடகப் பயிற்சிப் பட்டறை முடிந்து நாடகம் போட்டோம்,  முதலில்  நடிக்க முடியாது என குழந்தைகள் தயக்கம் காட்டினாலும்  நாடகத்தில் காட்சி வடிவமைப்பதை பார்த்து பிள்ளைகள் வர சம்மதித்தார்கள்.  நாடகம் முடிந்தது; அதிலிருந்து   அந்தப் பள்ளிக்கூடத்தில் நாடகத்தில் நடித்த பிள்ளைகள் மட்டும் பிரபலமான, கவனிக்கக்கூடிய பிள்ளைகளாக மாறினார்கள்.  அந்த நாடகம் முதன்முறையாக திருவனந்தபுரத்தில் நடந்த இந்திய அளவிலான குழந்தைகள் விழாவிற்குத் தேர்வாகி இருந்தது.  தமிழ்நாட்டில் அந்த ஒரு நாடகம்தான் தேர்வாகி இருந்தது. வானவில் பள்ளியில்  ஆண்டுக்கு ஒரு முறை,  தொடர்ச்சியாக வேலை செய்கிற வாய்ப்பும் அமைந்தது.

நிறைய நாடகங்கள் – நாடி, வண்ணத்துப்பூச்சிகளின் ஆறு, ஆயிரத்து ஓர் நெல்லும் காக்கையக்காவும், பொம்மைமுகச் சிங்கங்கள் என இந்த மாதிரி எல்லாமே புதிதான தலைப்புகளுக்குள்,  கதைகளுக்குள் நாடகம் நடத்தினோம்.  குறிப்பாக  வண்ணத்துப்பூச்சிகளின் ஆறு  என் மனதுக்கு நெருக்கமான நாடகம். இந்த நாடகம் கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம்; 63 பிள்ளைகள் நடித்திருந்தனர். கேரள விழாவின் நிபந்தனைகளுக்கு உட்பட்டு 45 பிள்ளைகள் நடிப்பதற்கு ஏற்றாற்போல சுருக்கினோம்..  பிள்ளைகள்  ஒவ்வொரு  நொடியும் சவால் தருவார்கள், அந்த சவாலை அப்படியே கலையாக (Art) மாற்றுவதற்கான வாய்ப்பு தெரிந்தது. நாடகத்தில் நிறைய சவாலாக இருந்தது வண்ணத்துப் பூச்சி ஆறு தான். அதாவது ஒரே நாடு ஒரே தேசம் என்கிற கருத்தை குழந்தைகள் வழியாகச் சொன்னால்  எப்படி  இருக்கும் என்பதுதான் நாடகத்தின் சாராம்சம்.  நம்ம  மனசுக்குள்ள இருக்கிற கோபம், குமுறல்கள்  குழந்தைகள் மனதிலிருந்து வெளிப்பட்டால் எப்படி இருக்கும் என்பதே இந்த நாடகம்.  நம் நாட்டின் சுற்றுச்சூழல் மோசமாக இருப்பதை அவ்வளவு பண்பாக, அறிவாகப் புரிந்து கொண்டார்கள். அதைத்தாண்டி நாடகத்தை குழந்தைகளே நிகழ்த்தும்போது  ஒரு துடிப்பை எல்லாருமே உணர்ந்திருப்பார்கள்.

சிறார்  நாடகத்திற்கான தேவை

சிறார்  நாடகத்திற்கான, சிறார் நாடக அரங்குகளுக்கான  தேவை என்ன என்பதை நாடகம் வழியாக சொல்ல விருப்பப்படுகிறேன். நாடகங்கள் வழியே  குழந்தைகளுக்கு கலை, அரசியல் பண்பாடு எல்லாவற்றையும் சொல்லித்தர முடியும். என்னுடைய  நாடகங்கள் பெரும்பாலும் கலை, பண்பாடு பற்றியதாக இருக்கும்,  பார்வையாளர்களுக்குள்ளே நான் கேள்வி எழுப்புவதை விட, யார் நடிக்கிறார்களோ அவர்களுக்குள்ளே பொது அறிவை பற்றிய, பொதுத் தன்மைக்கான அறிவை விதைக்கமுடியும்.  இந்தச் சிந்தனை  குழந்தைகள் மத்தியில் வேலை செய்கிறது.

தம்பி ஒரு இலையாக நடி என்றால்  இலையாக மாறிவிடுவான்.  நன்றாக யோசனை செய்து பார்த்தால் நான் அதைச் செய்ய மாட்டேன். ஒரு இலை கையளவு தான் இருக்கும், ஆனால் அவன் கண் முன்னால் ஓர் இரண்டு அடி பூவை  கொடுத்தால் என்ன செய்வான், மகிழ்ச்சி தாங்காது அவனுக்கு.  அவனுக்கான அரங்கப் பொருட்களை அந்தக் குழந்தையின்   கையாலேயே உருவாக்க வைப்பேன். அந்த குழந்தை   ஒவ்வோர் இம்மியாக அனுபவித்து   பாதுகாப்பாக  அந்தப் பொருளைப்  பார்த்துக்கொள்ளும். அதில் சுயநலம் இருக்காது.  சிறார்  நாடக அரங்க  பொருட்களை   ஏனோதானோ  என்று செய்தால்  பசங்க  மனசு சங்கடப்படும்.  அதாவது பூ ஒன்று பண்ணியிருப்போம், அது  தலையிலிருந்தால்  ஆடி அசைந்து கொண்டே  இருப்பான்;  தலையில் இருக்கும் பூவைப் பார்க்க அவனால்  முடியாது, பூவோட  மகரந்தம் அதனால் வட்டப்பகுதியை அவனின் முகம் சுத்தி இருப்பது  மாதிரி பெரிதாகச் செய்தோம்.  கிட்டத்தட்ட ஓர் அடி மேல், ஓர் அடி கீழே, பக்கத்தில்  அவ்வளவு பெரிய பூவாக செய்தோம். அதாவது அவன்  எதிரில் இருக்கிற பூ வேஷம் போட்டவர்களைப்   பார்க்க முடியும் போது,  இவ்வளவு அழகாக இவர்கள்  இருக்க முடியும் எனில்  நான் எவ்வளவு அழகாக இருப்பேன் என  மனசுக்குள் உணர்வான்.  இந்த மாதிரியான பொருட்களை மரமாக, யானையாக கொடுத்திருக்கிறோம்.  நெல்மணிக்குள்ள பல நூறு நெல்மணி  இருக்கிற மாதிரியெல்லாம் செய்திருக்கிறோம்.  இந்த இடத்தில் ஒரு நாடக அரங்க சவால் நினைவிற்கு வருகிறது.  யானை பேசும், நடக்கும்  எல்லாம் செய்யும்.. ஆனால் நாம் செய்த யானை தும்பிக்கையைத் தூக்கவில்லையே என  ஒரு சிறுவன்  கேட்டான், சவாலாக இருந்தது. யானை என்றால் தும்பிக்கையைத் தூக்கும் தானே. ஆனால் அதை  எப்படிச் செய்வதெனத்  தெரியவில்லை,  பின்னர் ஓர் ஓவியரை வைத்து  யானை தும்பிக்கையை தூக்கி  மடக்குவது போல செய்தோம், அது அவ்வளவு அழகான  இடமாக மாறியது. நாடக அரங்கப் பொருட்கள் என்பது ஒரு யுக்தி முறை.  இதனால் குழந்தை மனப்பாடம் செய்ய தேவையில்லை. இங்கு குழந்தைகள் ஆடுவார்கள், பாடுவார்கள்  மகிழ்ச்சியாக அவர்கள் விருப்பம் போல இருப்பார்கள். அதற்கு பிறகு நாம்  எப்படி வேலை செய்கிறோமோ, புதிதான  செய்தியைப் பகிர்ந்து கொள்கிறோமோ  அவ்வளவு உன்னிப்பாகக்  கேட்டு, அவற்றை  அமைதியாக கேட்கிற,  புரிந்துகொள்கிற, உள்வாங்கிக் கொள்கிற  விதம்  பிரமிப்பை ஏற்படுத்தும்.  அவங்களுக்கான உலகம்  வழக்கமான விளையாட்டுகளில் இருந்து, வழக்கமான பேச்சுகளில் இருந்து  மாறிப் போகும். மாறும்போது அவர்களின் உச்சரிப்பு ஒழுங்காகிறது.   ஒரு செய்தியை  மனதிற்குள் விதைப்பதற்கு தடங்கல் இல்லாமல் போகும்.  குழந்தைகளுக்கு  நாடக அரங்கப் பொருட்கள்  இல்லாது போனால்  குழந்தைகளுக்கான மனதில் வெறுமையைத் தரும். அதனால் நாடகப் பொருட்களின் தேவை முக்கியமாகிறது.

 நாடக அரங்கத்தில் இசைக்கருவிகள்:

நாடக அரங்கத்தில் இசைக்கருவிகளின் பங்கு மிகவும் முக்கியமானது. நான் நாடகத்திற்கு வரும்போது புதிதான இசை கருவிகளை தினமும் கொண்டு வருவேன். நடிப்பு வழியாக நெருங்குவதை விட இசை வழியாக குழந்தைகளை  நெருங்குவது சுலபம். எதிரில் இருக்கும் குழந்தைகள்,  இசைக்கருவி என்னிடம் இருக்கும் பட்சத்தில்  பக்கத்தில் வந்து உட்கார்ந்துகொள்வார்கள்.  எப்போது தொடலாம்,  எப்போது  அதை வாசிக்கலாம், என்று  கேட்பார்கள்.  தொடலாம் என  நாம் சொல்லி அதை தொட்டு விட்டார்கள் எனில்  இந்த பிறவியில் பிறந்த பலனை அடைந்தது போல் உணருவார்கள். திரும்ப அடுத்தமுறை அந்த இசைக்கருவி இல்லையென்றால் மனம் வாடிவிடுவார்கள்.

பிள்ளைகள்  வழக்கமாக,  சண்டை போட்டுக்கொண்டும்,  சத்தம் போட்டுக்கொண்டும்,  ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டும்  இருப்பார்கள்.  இசைக்கருவிகள் மூலமாக நெருங்கும் போது நாம் எதிர்பார்க்கிற ஒரு  கட்டுப்பாட்டுக்குள்  இருப்பார்கள். அந்தச் சமயத்தில் நாடகத்தின் பால் கவனத்தை ஈர்ப்பது எளிது. அதுமட்டுமில்லாமல்   வழக்கமான பொருளில்லாத  இசைக்கருவியைக்  காண்பித்தால் எளிதாக குழந்தைகளைக் கவனிக்க  வைக்கலாம்.  இது கவனத்தை ஒருமுகப்படுத்தும். இசையானது குழந்தைகளிடம் கவனிக்கிற, வேலை செய்கிற பண்பை  உருவாக்கும். இசைக்கருவிகள் வழியாக நாம் சொல்ல  வந்ததை சீக்கிரமாக சொல்லி புரியவைத்து, அவர்களுக்குள்  புதிதான கேள்விகளை  எழுப்ப வைக்க, இசைக்கருவிகள் உதவும்.

நாடக ஒத்திகை

அடுத்தது, குழந்தைகளுக்கான நாடக ஒத்திகைச் சூழல் குழந்தைகளுக்கு ஏற்றாற் போல் இருக்க வேண்டும். ஒவ்வொரு சூழலுக்கும் பொருத்தமான இடம் தேவை. எந்த இடத்தில்  வேண்டுமானாலும் வேலை செய்யலாம் என்பது வேறு .  அந்த இடத்தை நமக்கான சூழலாக மாற்றுவது  வேறு. ஒவ்வொரு சூழலிலும்  குழந்தைகள்  சுதந்திரமாக  இருக்க வேண்டும். பிள்ளைகள் ஆடும், பாடும்,  வசனம் பேசும். சில பிள்ளைகள் வசனத்தைப் பேசாமல் தவறவிடும்,  கையில் வைத்திருக்கும் பொருள் உடைந்திடும்;  இறுக்கமான  பொருள் தளர்ந்து விடும். இதையெல்லாம் சமாளிக்கமுடியாமல் அழுதுவிடும்.  எல்லாச் சூழலையும் எதிர்கொள்ள வேண்டும். ஆனால் இதையெல்லாம் தாண்டி, இயக்குனர்  காப்பாற்றுகிறாரோ  இல்லையோ, குழந்தைகள் காப்பாற்றுவார்கள்..

நாடகத்தில்  கதைமாந்தர் தேர்வு செய்வதும் முக்கியமான  வேலை. அதை மிகத் தெளிவாகச் செய்ய வேண்டும்.  அவர்களை  வேறு ஒரு நபராக  மாற்ற வேண்டும்.. யானையாக, நாயாக, ஒட்டகச்சிவிங்கியாக  யார்யாருக்கு என்ன  பிடிக்குமோ  அப்படி மாற்ற வேண்டும். அந்த விருப்பத்தோடு வேலை பார்ப்பது இன்னும் கூடுதலான அழகைத் தரும். எந்த கேரக்டரும் ஒரு குழந்தைக்குக்  கிடைக்க வில்லையெனில் , அவனே  நாடகத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில்  குறிப்பான ஆளாக மாறுவான். இது தற்செயல் நிகழ்வாகவே நிறைய முறை  நடந்துள்ளது.

 நாம்  யாரையெல்லாம் ’வேலைக்கு ஆக மாட்டான், மோசம்,  நடிக்கவே மாட்டான்,  எந்த  ஈடுபாடும் கிடையாது,  நல்ல பிள்ளை இல்லை , கெட்ட பிள்ளை’ இந்தமாதிரியெல்லாம் சொல்லும் பிள்ளைகளே  நாடகத்தில் அருமையான, நல்ல வேடத்தில் நடித்திருக்கிறார்கள். இப்போது கல்வி நிலையங்களுக்குள் பயப்படாமல் படிக்கிறார்கள். அந்த பதட்டத்தை எதிர்கொள்ளக்கூடிய உத்வேகத்தை நாடகம் வழியாக குழந்தைகளிடம்  கொண்டு போவதற்கான  முயற்சியை எடுத்துள்ளேன்.

சிறார்  நாடக செயல்பாட்டாளர்கள்

சிறார்  நாடக செயல்பாட்டாளர்களைப்  பார்த்து வியந்திருக்கிறேன். அவர்களுடைய பெயர்களைப்   பதிவு செய்வதும் முக்கியம்..   எஸ்பி ஸ்ரீனிவாசன், பேராசிரியர் இராமானுஜம், மு. ராமசாமி ஐயா,  வேலு சரவணன்,  முருகபூபதி, கருணாபிரசாத் அண்ணா, ஆழி வெங்கடேசன், பாண்டிச்சேரியில் ரவி அண்ணா, எழிலன் (தஞ்சாவூரில் உள்ள  வாய் பேசாத காது கேளாதவர்களுக்கு இசைக்கருவிகள் கொடுக்கிறார். கண்ணு தெரியவில்லை , காது கேட்கவில்லை அப்படியானாலும் பிரச்சினை இல்லை,  இசைக்கருவிகளை வாசிக்கும் போது இசையை உணருகிறார்கள் என்று எழிலன்  இசைக்கருவிகளை காசு கொடுத்து வாங்கி  குழந்தைகளுக்குக் கொடுக்கிறார்.) M.S.காந்திமேரி, ஜோன்லிண்டன், ஸ்டெல்லா போன்றோர் நேரடியான குழந்தைகளுக்கான நாடக அரங்கில் செயல்படுபவர்கள்.

தம்பி இனியன் அனைவரையும் ஒருங்கிணைப்பது  பெரிய வேலை. அனைவரையும்  ஒருங்கிணைத்து வேலை செய்வது  சாதாரணமான வேலையில்லை. அப்புறம் நடராஜ் ரேவதி தோழர் குழந்தைகளுக்குள் வேலை பார்க்கிறார்கள். அதேபோல் வேல்முருன்  தொடர்ச்சியான வேலைகள் பார்த்திருக்கிறார்.  கதை சொல்லி சதீஷ் எல்லாக் குழந்தைகளிடமும்   எளிமையாக உறவாடுகிறார். தொடர்ச்சியாக  பிரபு பஞ்சுமிட்டாயில்  வேலை செய்கிறார். திருவாரூரில் இருக்கும் மணிமாறன் அரசுப் பள்ளி குழந்தைகள் எல்லாரையும் இணைத்து  செயல்படுகிறார்.  (வளர்மதி) கதை சொல்லியாக இருக்கிறார்கள்.  கலகல வகுப்பறை சிவா,  மகாலட்சுமி,   பாலாஜி,  சங்கீதா சிவகங்கை,  ஆனந்தராஜ் சார், பாண்டிச்சேரியில் உமாபதி ஆசிரியர்.  மதுரையில் ராஜ்குமார் அண்ணா,  பாபு குழந்தைகள் ஆசிரியராக இருக்கிறார், இவரின் குழந்தைகள் நாடகம் தேர்வாகி டெல்லி வரைக்கும் சென்றது.

கேரளாவில் சிறார் நாடக குழு ஒன்று இருக்கிறது(ரெங்கா பிரசாத்)   அதைத் தோற்றுவித்தவர் வேறு யாருமில்லை சே.இராமானுஜம் ஐயா தான்.. சரியாக ஐம்பது வருடங்கள் ஆகின்றன. ஒவ்வோர் ஆண்டும் இந்திய அளவிலான குழந்தைகள் நாடக விழாவை  ஏழு நாள் நடத்துகிறார்கள். மூன்று தலைமுறையாக  நாடகம் நடத்தி வருகிறார்கள்.  இந்த  மாதிரியான ஒரு சூழலை தமிழ்நாட்டில் உருவாக்க வேண்டும் என்கிற எண்ணம் இருக்கிறது.  குழந்தைகளிடம் எளிமையாக பொது அறிவை,  பொதுத் தன்மையை அழகாக்கி, நாடகக்கலை  வழியாக கல்வியிலும் சரி,  வாழ்க்கையிலும் சரி,  எளிமையான பண்போடு சமூகத்திற்கான நபராக பிள்ளைகளை மாற்ற முடியும். அப்படியே பிள்ளைகள் வளரணும். அதுதான் நல்லது.

காணொலி பதிவு :

குறிப்பு:

சிறார் எழுத்தாளர்கள் – கலைஞர்கள் சங்கம் சார்பாக சிறார் கலை இலக்கியச் சந்திப்பு இணைய வழியே நடைப்பெற்றது. மொத்தம் 10 அமர்வுகள், 20க்கும் மேலான சிறப்புரைகள் என மிகவும் சிறப்பாக நடைப்பெற்றது. நிகழ்வின் உரைகளை இங்கு பஞ்சுமிட்டாய் இனையத்தில் ஆவணப்படுத்துகிறோம்.

வீடியோ பதிவுகளாக காண: Click here.

கட்டுரைகளுக்கு : Click here.

Leave a comment