இது நம் கதை, நடந்த கதை – ஆதி வள்ளியப்பன்

வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

‘நாம் எப்படித் தோன்றினோம்’, ‘நமது மூதாதையர் இங்கேயேதான் வாழ்ந்தார்களா?’,

‘எந்தக் காலத்தில் அவர்கள் இந்த மண்ணுக்கு வந்தார்கள்?’ – அறிவியலையும் வரலாற்றையும் படிக்கத் தொடங்கும் பெரும்பாலான சிறுவர், சிறுமிகளுக்கு இயல்பாகத் தோன்றும் கேள்விகள் இவை. வளர்ந்து பெரியவர்கள் ஆகும்வரை பலரையும் இந்தக் கேள்விகள் துரத்திக்கொண்டே இருக்கும். இந்தக் கேள்விக்கான விடையைத் தேடுவதில்  பெற்றோர், ஆசிரியர்கள் உதவ வேண்டும். நம் சமூக, வரலாற்று அறிஞர்கள் இதற்கான விடையை பரவலாக எடுத்துச் சென்றிருக்க வேண்டும்.

குறைந்தபட்சம் 3000 ஆண்டுக்கு முந்தைய வரலாற்றைக் கொண்டது தமிழ் மண். கீழடியில் கிடைத்திருக்கும் தொல் எச்சங்கள் 2,600 ஆண்டுகளுக்கு முற்பட்டவை என்பது தற்போது நிரூபிக்கப்பட்டுள்ளது. கீழடி நம் பண்பாட்டின் செழுமையையும் வரலாற்றின் தொன்மையையும் ஒருசேர எடுத்துரைத்துள்ளது. ஆனால், கீழடியைப் பற்றிப் பெரியவர்கள் பேசும் அளவுக்கு குழந்தைகளிடம் நம் வரலாற்றை எடுத்துச் சென்றுள்ளோமா?

கீழடி, ஆதிச்சநல்லூர் போன்ற தொல்லியல் அகழாய்வுக் களங்கள் வெறுமனே வரலாற்றின் தொன்மையைச் சொல்லவும், பெருமை பேசுவதற்கும் மட்டுமே என்று தவறாக நினைக்க வேண்டியதில்லை. நம் பண்பாட்டின், மொழியின், பழக்கவழக்கங்களின் தொடர்ச்சி எங்கிருந்து வருகிறது, நம் அறிவு வளர்ச்சியின் நிலை, நியாயமான-சமத்துவமான சமூகமாக இருப்பதற்கு நமது மூதாதையர் மேற்கொண்ட முயற்சிகள் என பல்வேறு அம்சங்களை எடுத்துக்காட்ட தொல்லியல் ஆய்வுகள் உதவுகின்றன.

மனித இனத்தின் அறிவு வளர்ச்சி முன்னோக்கித்தான் செல்ல வேண்டுமே ஒழிய, சமூக வளர்ச்சியை பின்னோக்கித் தள்ளுவது அறிவுடைமையல்ல. எனவே, நமது மரபின் தொடர்ச்சியை பெரியவர்களிடம் மட்டுமல்லாமல் குழந்தைகள், இளையோரிடமும் பரவலாக எடுத்துச் செல்ல வேண்டிய தேவை இருக்கிறது. அந்த வகையில் ‘ஆதனின் பொம்மை’ வழியாக நமது வரலாற்றையும் தொன்மையையும் கதை வழியாக அறியத்தந்திருக்கிறார் சிறார் இலக்கியத்தில் தடம் பதித்துள்ள எழுத்தாளர் உதயசங்கர்.

நாம் அனைவரும் ஆப்பிரிக்கக் கறுப்பு மனிதர்களின் வழித்தோன்றல்களே. 65,000 ஆண்டுகளுக்கு முன்னதாக தற்கால மனித இனம் ஆப்பிரிக்காவைவிட்டு வெளியேறத் தொடங்கியது. மத்திய தரைக்கடல் பகுதிக்கு வந்து தங்கிய அந்த மனிதக் குழு, 10,000 ஆண்டுகளுக்கு முன்னர் வேளாண்மையைக் கண்டறிந்தது. 5,000 ஆண்டுகளுக்கு முன்னர் சிந்துவெளியில் புதிய நாகரிக சமூகமாக வளர்ச்சி பெற்றது. 4,000 ஆண்டுகளுக்கு முன்னர் சிந்துவெளியிலிருந்து இந்தக் குழு தென்னிந்தியாவை நோக்கி இடம்பெயர்ந்து வந்தது. அப்படி வந்தவர்களே திராவிடர்கள்-தமிழர்கள்- திராவிடப் பண்பாட்டில் சிந்துவெளி எச்சங்கள், பூர்வ மொழியின் தொடர்ச்சி ஆகியவற்றை ஆதாரபூர்வமாகப் பார்க்க முடிகிறது. டோனி ஜோசப் எழுதிய ‘ஆதி இந்தியர்கள்’ நூல், நவீன அறிவியல் ஆராய்ச்சிகள், ஐராவதம் மகாதேவன்-ஆர். பாலகிருஷ்ணன் உள்ளிட்டோரின் ஆய்வுகள் அடிப்படையில் மேற்கண்ட புரிதலை நாம் பெற முடிகிறது. இதுவே நம் வரலாறு.

ஆனால், கறுப்பு நிறத்தின் மீது அதீத வெறுப்பு இன்றைக்குக் கட்டமைக்கப்பட்டுள்ளது. நமது மூதாய் ஒரு ஆப்பிரிக்கப் பெண். நமது மூதாதையர்கள் அட்டைக் கறுப்பாக இருந்த ஆப்பிரிக்கர்கள். அப்படியிருக்கும்போது நம்முடைய ஆதி நிறத்தையே நாம் வெறுக்கத் தொடங்குவதன், வேற்றுமை பாராட்டுவதன் தொடக்கப்புள்ளி எதுவாக இருக்க முடியும்? வெள்ளை அல்லது சிவப்பு நிறமே உயர்ந்தது, நெடிய மரபு கொண்ட நமது தாய்மொழியைவிட வாய்க்குள் நுழையாத அந்நிய மொழியை சிறந்தது எனக் கருதுவது, நீரை முதன்மையாகக் கருதும் பண்பாட்டைப் புறந்தள்ளி தீயை மையமாகக் கொண்ட பண்பாட்டை பின்பற்றுவது போன்றவை நம்மிடையே ஆதிக்கம் செலுத்துவதற்கு என்ன காரணமாக இருக்க முடியும்?

பிற்காலத்தில் இந்திய மண்ணில் புகுந்த அந்நியப் பண்பாடு, மொழியே அடிப்படைக் காரணமாக இருக்க முடியும். சிந்துவெளி மக்கள் நிலையான வாழ்க்கையைக் கொண்டவர்கள். மானுடவியல்ரீதியில் நிலையான வாழ்க்கை கொண்ட பண்பாடு ஆழமானதாகவும் பன்முகத்தன்மை கொண்டதாகவும் வளர்ந்திருக்கும். நாடோடி வாழ்க்கையைக் கொண்ட, நிலையான வாழ்க்கையைப் பெற்றிராத ஆரியர்களின் (அந்த மக்கள் தம்மையே அப்படி அழைத்துக்கொண்டார்கள்) பண்பாடு அப்படிப்பட்ட தன்மைகளைக் கொண்டிருக்கவில்லை. ஆனால், பிற்காலத்தில் தங்களுடைய பண்பாடு, மொழியே சிறந்தது என்கிற பிம்பத்தை ஆரியர்கள் இந்தியாவில் வெற்றிகரமாக நிறுவிவிட்டார்கள்.

சாதி, மதச் சண்டைகள் பல நூற்றாண்டு காலமாக இந்தியாவில் ஆதிக்கம் செலுத்திவருவதற்கும், இன்றைக்கும் அந்தக் குறுகிய அடையாளங்கள் சமூகத்தில் ஆதிக்கம் செலுத்துவதற்கும் இந்த பிம்பக் கட்டமைப்பு பெருமளவில் உதவியிருக்கிறது. அரசியல்ரீதியாக ஆட்சி அதிகாரத்தைப் பிடிப்பதற்கும் இந்த பிம்பம் இன்றுவரை உதவிவருகிறது.

சரி, இவற்றையெல்லாம் புரிந்துகொள்வதற்கு நாம் வரலாற்றைப் படிக்க வேண்டும். நமது தொன்மையைப் புரிந்துகொள்ள வேண்டும். அனைத்து மனிதர்களையும் சமமாக நடத்தச் சொன்ன நமது பண்பாட்டின் ஆழத்தையும் விரிவையும் உள்வாங்கிக்கொள்ள வேண்டும். இந்த அம்சங்களை ஒரு போதனையாக அல்லாமல், வெற்றிகரமான கதையாகத் தந்துள்ளது ‘ஆதனின் பொம்மை’.

மேலே கூறப்பட்ட விஷயங்கள் அனைத்தையும் பாடப்புத்தகத் தொனியில் அல்லாமல், கதையோடு இரண்டறக் கலந்து கூறியுள்ளது சிறப்பு. கீழடி, சிந்துவெளி, ஆரியர்கள் என இதுவரை குழந்தைகளிடம் விரிவாகப் பேசப்படாத அம்சங்கள் இந்த நூலில் எழுதப்பட்டுள்ளன. இந்த நாவலை இளையோர் சுயமாகவே வாசிக்கலாம். பதின்வயதுக்குக் கீழிருக்கும் குழந்தைகளுக்கு பெற்றோர் வாசித்துச் சொல்ல வேண்டும். கூடுவிட்டுக் கூடு பாய்வதுபோல் கேப்டன் பாலுவை வரலாற்றுக் காலங்களுக்குள் அழைத்துச்செல்லும் ஆதன், கூடவே நம்மையும் அந்தக் காலங்களுக்கு அழைத்துச்சென்றுவிடுகிறான். வாருங்கள், நாம் அந்தக் காலக்கப்பலுக்குள் ஏறிப் போவோம்.

Leave a comment