தமிழ் சிறார் இலக்கியம்: காலத்தின் கண்ணாடி – விஷ்ணுபுரம் சரவணன்

வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

தமிழில் சிறார் இலக்கியத்தின் தற்காலப்போக்குகள் குறித்து இத்தனை பேர் கூடி உரையாடுகிற சூழலே ஆரோக்கியமானதுதான். மேலும், நல்ல படைப்புகளின் வரவே இப்படியான உரையாடலை மேற்கொள்ள தூண்டியுள்ளது என்றும் புரிந்துகொள்ளலாம்.

தமிழ்ச் சிறார் இலக்கியம் தற்போது எனும் பார்க்கும்போது அதன் கடந்த காலம் பற்றிய சிறு அறிமுகத்தை நினைவில் கொள்வது உதவியாக இருக்கும். தமிழில் சிறார் இலக்கியம் என்பது, நடைமுறையில் பயன்பட்ட என்று வரிசைப்படுத்துகையில் ஒளவையில் ஆத்திச்சூடி, கவிமணி தேசியவிநாயகம் பிள்ளையின் குழந்தைப் பாடல்கள், பாரதியார், பாரதிதாசன் பாடல்கள் என நீளும். மரபுக்கவிதையின் சந்த இசையிலிருந்து விலகி, புதுக்கவிதை எழுதப்பட்டதும் கவிதை எழுத்தாக்கம் வெகுசன மனிதர்கள் வரை பரவியது. ஆனால், சிறுவர் பாடல்கள் எனும்போது சந்த இசையே சிறாரை ஈர்க்கவும் திரும்ப திரும்ப பாட வைக்கவும் செய்யும் எனும்பட்சத்தில் மரபிலக்கணம் தொடர்ந்தே வந்தது. அதன் இறுக்கம் கடந்த இருபது, முப்பது ஆண்டுகளில் மரபிலக்கணம் தளர்ந்து, ஒத்த ஓசை மட்டும் கொண்டு எழுதும்பாடல்கள் பெருகியுள்ளன.

இன்னொரு பக்கம், கதைகளும் கதை பாடல்களாகவே இருந்தன. அடுத்தக் கட்டத்தில் ஏற்கெனவே எழுதப்பட்ட சிறார் பாடல்களுக்கான விளக்கக் கதைகளாக ஆத்திச்சூடி கதைகள் என்பன போன்றவையும் ராமாயணம், மகாபாரதத்தின் சுருக்கங்களும் வந்தன. பின்னாளில், தெனாலி ராமன், ஈசாப், முல்லா, விக்கிரமாதித்தியன் உள்ளிட்ட பொதுவழக்கு கதைகள் வெளிவந்தன.

இந்த இழையின் மறுமலர்ச்சியாக, ருஷ்ய நாட்டு இலக்கியங்கள் மலிவு விலையில் தமிழ்நிலத்திற்கு உலவவிடப்பட்டன. அதன் புதிய மொழியும் புதிய கதை சொல்லல் முறையும் தமிழ் சிறார் இலக்கியப் படைப்பாளிகளிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. ஆனாலும், பெரியவர்களுக்கான இலக்கியத்தில் ரஷ்ய இலக்கியம் தந்த புத்துணர்வும் புதிய படைப்பாக்கமும் சிறார் இலக்கியத்தில் பெருமளவில் நிகழவில்லை. ஆயினும், நீதிநெறிக் கதைகள், புராணக் கதைகள் அதிமாக சிறார் கதை போக்கு, சமூகக் கதைகள், துப்பறியும் கதைகள் என மாற்றமடைந்தது.

மாக்சிம் கார்கி பொதுவுடமை மற்றும் திராவிட இயக்கச் சிந்தனைக் கூறுகள் பெரியவர்கள் இலக்கியத்தில் அந்தக் காலகட்டத்தில் பிரதிபளித்த அளவுக்கு சிறார் இலக்கியத்திலும் முழுமையாக இருந்தது என்று சொல்ல முடியாது என்றாலும் குறிப்பிட்ட அளவு இருந்தது. அதற்கு நல்லதோர் உதாரணம். 1978 ஆம் ஆண்டில் வெளிவந்த ரேவதியின் கொடிகாட்ட வந்தவன் நாவல். அது காந்தியத்தைத்தான் பேசுகிறது என்றாலும் கதையின் பெரும்பால இடங்களில் சாதி குறித்து அடிப்படைக் கேள்விகளை எழுப்பத் தவறவில்லை. மேலும் பூவண்ணன் தரும் இரு குறிப்புகள் முக்கியமானவை. ஒன்று, சேலத்திலிருந்து ப.கண்ணன் கொண்டுவந்த ‘பகுத்தறிவு’ இதழில் ப.க.குஞ்சிதம் என்பவர் கதைகள் எழுதியிருக்கிறார். அக்கதைகள் தொகுக்கப்பட்டு நூல்களாக, வால்முளைத்த சாமியார், கெட்டிக்காரன், பைங்கிளி எனும் பெயர்களில் வெளிவந்திருக்கின்றன. மற்றொன்று, முரசொலியில் பிறைவானம் என்று சிறுவர் பகுதி இடம்பெற்றிருந்தது. இவை போன்றவற்றின் மூலம் முற்போக்கு கருத்தியல் கொண்ட சிறார் இலக்கியப் படைப்புகள் வெளியாகியிருக்கும். அவற்றின் பிரதிகள் தேடி எடுக்க வேண்டிய சூழல்.

சிறார் பத்திரிகைகள், புத்த்கங்கள் உள்ளிட்டவற்றில் தொடர்ந்து படைப்புகள் வெளிவந்துகொண்டிருந்தாலும் பெரிய இடைவெளிக்கு உருவான மனநிலையே உள்ளது.  2000 களுக்கு மீண்டும் தமிழில் சிறார் இலக்கியம் பக்கம் கவனம் திரும்பியுள்ளது. குறிப்பாக, இடதுசாரி பதிப்பகங்களான புக்ஸ் ஃபார் சில்ட்ரன் மற்றும் என்.சி.பி.ஹெச் ஆகியவை கூடுதல் கவனத்துடன் நூல்களை வெளியிட்டு வருகின்றன. தற்போது அவற்றோடு வானம், வாசல் பதிப்பகங்களும் இணைந்துகொண்டன. தற்போது புலம், டிஸ்கவரி புக் பேலஸ், சிக்ஸ்த் சென்ஸ் உள்ளிட்ட பதிப்பகங்கள் சிறார் நூல்கள் வெளியிடுவதில் ஆர்வம் காட்டுகின்றன.

2010 ஆம் ஆண்டு முதல், மத்திய அரசால் அளிக்கப்படும் பால சாகித்ய அகாடமி விருது மூலம், அவ்விருது பெற்றவர்களின் படைப்புகள் பற்றிய செய்திகள் ஊடகம் வழியே தெரிய வருவதால், பொதுத்தளத்தை நோக்கிச் செல்கின்றன.

இந்நிலையில்தான் கடந்த பத்தாண்டுகளுகாக தமிழில் சிறார் இலக்கியப் படைப்பாளிகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. இதுவே வரவேற்கத்தக்க ஒன்றுதான். ஆயிஷா நடராஜன், சுகுமாரன், உதயஷங்கர், மு.முருகேஷ், யெஸ்.பாலபாரதி, ரமேஷ் வைத்யா, விழியன், கொ.ம.கோ.இளங்கோ, விஷ்ணுபுரம் சரவணன், சரவணன் பார்த்தசாரதி, உமையவன், பஞ்சுமிட்டாய் பிரபு, கன்னிக்கோயில் ராஜா, மதுரை சரவணன், பாலு சத்யா, யுவராஜன், வெற்றிச்செழியன், யூமா வாசுகி, ஆதி வள்ளியப்பன், எல்.பி.சாமி, வெ.ஶ்ரீராம், ஜெயந்தி சங்கர், ஹரீஷ், மருதன் என நீளும் பட்டியலில் அபிநயா, ரமணி உள்ளிட்ட சின்னஞ்சிறு எழுத்தாளர்களும் தங்களை இணைத்துக்கொண்டுள்ளனர். இந்தப் பட்டியல் சட்டென்று தோன்றியதே விரிவாக்கப்படும் கட்டுரையில் பெயர்கள் அதிகமாகும்.

முந்தைய தலைமுறைக்கும் இப்போதைக்குமான மாற்றமாக நான் அவதானிப்பது, பெரும்பாலும் புராண, அரசர் காலத்து கதையாக்கத்திலிருந்து வெளிவந்திருப்பது. அப்படியே அந்த வகையில் எழுதப்பட்டிருந்தாலும் கதை கருவும் சொல் முறையும் முற்றிலும் மாறியிருக்கின்றன. அறிவியல் பார்வையோடு கதைகள் அமைந்திருக்கின்றன. இப்படியான பார்வையில் சில வகைகளாக தற்போது எழுதப்பட்டு வரும் சிறார் இலக்கியப் படைப்புகளை விமர்சன வசதி கருதி பிரிக்கலாம்.

  1. இயல்புநிலை கதை மையங்கள்
  2. இயல்புநிலையில் சற்றே மாயப்புனை கலந்த கதை மையங்கள்:
  3. மாயப்புனைவு கதை மையங்கள்
  4. அறிவியல் கதை மையங்கள்
  5. அங்கத கதை மையங்கள்

1. இயல்புநிலை கதை மையங்கள்:

இவ்வகை கதைகள் சிறார் இலக்கியத்தில் அதிகம் எழுதப்பட இயலாது என்பதே யதார்த்தம். ஏனெனில் சிறுவர்களுக்கு வாசிப்பில் சின்ன உந்துதல் அளிப்பதற்கு இயலைக் கடந்த ஒன்று தேவைப்படுகிறது. ரமேஷ் இருட்டு எனக்குப் பிடிக்கும் பாலு சத்யாவின் பந்தயக் குதிரை, ஆயிஷா நடராஜனின் 1729, யூமா வாசுகியின் தூய கண்ணீர், கொ.ம.கோ.இளங்கோவின் சஞ்சீவி மாமா, பஷீராவின் புறாக்கள், சுகுமாரனின் சூப்பர் சிவா, யெஸ்.பாலபாரதியின் மரபாச்சி சொன்ன ரகசியம், விழியனின் மலைப்பூ உள்ளிட்ட நூல்களைச் சொல்லலாம். சிறார் சிறுகதை எனும்போது பல கதைகள் இருக்கின்றன. நான் சிறார்க்கு என எழுதி பழகிய முதல் கதையான வித்தைக்காரச் சிறுமியும் இவ்வகையான கதையே! நீதிமணி மற்றும் விழியனின் சிறுகதைகளில் பலவும் இவ்வகையில் பொருந்தக்கூடியவை உள்ளன. உதயசங்கரின் மாயக்கண்ணாடி கதைகள், புனைவு மனிதர்கள் சமகாலத்தின் இயல்பு வாழ்க்கையைக் கேள்விக் கேட்பதாக அல்லது விமர்சனம் செய்வதாக எழுதப்பட்டிருப்பது குறிப்பிட்டத்தக்கது.

இந்த வகை எழுத்தில் சிறுவர்களை ஈர்ப்பது என்பது சற்று சிரமமானது என்றாலும், அவ்வகையான முயற்சிகள் அதிகம் நடைபெற வேண்டியது அவசியம். ஏனெனில், கதை என்பது நம்முள் இருந்தும் நம்மைச் சுற்றியும் என்பதாக சிறார்க்குப் பதிய வேண்டியது அவசியம். அப்பணியைச் செய்துவருவதில் இன்னும் பலரும் கரம் கோர்க்க வேண்டும்.

2. இயல்புநிலையில் சற்றே மாயப்புனை கலந்த கதை மையங்கள்:

இந்த வகை கதைகளே தொடக்கம் முதல் தற்போது வரை அதிகளவில் எழுதப்படுபவை. இயல்பு நிலையில் நிகழும் கதை, ஏதோ ஓரிடத்தில் மாயப் புனைவுக்கு தாவும் இந்த உத்தி எழுதுவது என்பது சற்றே சவாலானது. ஏனெனில், மாயப்புனைவுக்குள் வாசிப்பவரை இழுத்துச்சென்றாலும் அவரின் கால்கள் இயல்புநிலையே இருக்கும். அதனால், பேரதிகமாக லாஜிக்கை மீறுவது என்பது சரியாக இருக்காது. அதேநேரம், கதையின் சரியான இடத்தில் மாயப்புனைவுக்குள் நுழைய வைத்துவிட்டால் வாசிப்பவரின் கால்களையும் உள்ளிழுத்துவிடலாம். விழியனின் மாக்கடிகாரம் கதை அப்படித்தான். சுற்றுலா செல்லும் சிறுவர்கள் வேறோர் உலகிற்குச் சென்றுவிடுவார்கள். உதயசங்கரின் பச்சை நிழல், கொ.ம.கோ.இளங்கோவின் மந்திரக் கைக்குட்டை, சூரியனை ஒளித்து வைத்த சிறுமி உள்ளிட்ட சிறுகதைத் தொகுப்பின் கதைகள் சில இவ்வகையான கதைகளே. இன்னும் பலரின் உதாரணங்களைச் சொல்லலாம். கட்டுரையின் நீளம் கருதி தவிர்க்கிறேன்.

இவ்வகை எழுத்துகளைப் படிக்கும் வாசகர் பரப்பு என்பது 10 வயதை ஒட்டியும் அதன்மேல் உள்ளவர்களாக ஒரு வரையரை செய்ய்யலாம்.

3. மாயப்புனைவு கதை மையங்கள்

எல்லா வயது சிறாரையும் சட்டென்று ஈர்க்கும் விதமான கதை மையம் கொண்ட வகை இது. குறிப்பாக, வாசிக்கத் தொடங்கும் சிறாரை வசியப்படுத்தி, வாசிப்பில் தொடரச் செய்யும் வகை இது. உதாரணமாகக் காட்ட, தமிழில் ஏராளமான கதைகள் விழியனின் பென்சில் அட்டாகசம், க.சரவணனின் ஸ்பைடர் மேன், யெஸ்.பாலபாரதியின் ஆமைக்காட்டிய அற்புத உலகம், உதயசங்கரின் விரால் மீனின் சாகசப் பயணம், கொ.ம.கோ.இளங்கோவின் எட்டுக்கால் குதிரை, ஆயிஷா நடராஜனின் ஸ்பேஸ்க்கு போலாம் வாரியா, பஞ்சுமிட்டாய் பிரபுவின் எனக்குப் பிடிச்ச கலரு … எனப் பட்டியல் மிக நீண்டுச் செல்லும். எஸ்.ராமகிருஷ்ணனின் உலகின் மிகச் சிறிய தவளை இவ்வகைக்கு சற்றே எதிர்முனை மாற்றமாகி, தவளை வாழ்வின் புனைவை யதார்த்த வாழ்வினை ஒட்டிய கதைப்போக்காக எழுதியிருப்பார். விலங்குகள், மரங்கள் என அஃறினைப் பேசுவது போன்ற கதைகள் நமக்குப் புதிதில்லை எனினும் சமூகம் சார்ந்த ஒன்றை உயர்த்திப்பிடிப்பதில் தனித்துவம் காட்டுகிறது இக்குறுநாவல்.

எழுத்தாளரின் மிகு புனைவுக்கு பேரதிக தளம் அமைத்துத்தரும் வகை இது. புதிய உலகை உருவாக்கி, அங்கு படைக்கப்படும் உருவங்களுக்கும் பொருட்களுக்கும் இயல்புவாழ்க்கையின் லாஜிக் தவிர்த்த குணநலன்களை அமைப்பது என, வாசகர் மட்டுமல்ல, எழுதும்போதே எழுத்தாளரும் உளப்பூர்வமாக தனி வெளியில் பயணிக்கும் வாய்ப்பை அளிக்கக்கூடியதே. ஆனாலும், மையச் சரடு என்ற ஒன்று வலுவாக இல்லாத பட்சத்தில் மாயப்புனை பிடிமானம் இல்லாமல் உதிர்ந்துவிடும் அபாயம் உள்ளது. லாஜிக் அற்ற ஒன்றைத்தான் ஒரு சிறுமியோ சிறுவனோ நம்பி உள்ளே நுழைகிறாள். ஆனபோதும் யதார்த்த வாழின் ஒன்றினைச் சமன்படுத்த அல்லது காப்பாற்ற என்று இருக்கும்பட்சத்தில்தான் அந்த மாயப்புனைவு முழுமையாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது.  சமகாலத்தில் மையச் சரடு இல்லாத அல்லது வலுமில்லாத மையச்சரடுக்கொண்ட மாயப்புனைவு கதைகள் வரத்தான் செய்கின்றன. அவை படைப்பு ரீதியாகத் தோல்வியைத் தழுவவும் செய்கின்றன.

4. அறிவியல் கதை மையங்கள் :

சிறாருக்கான அறிவியல் மையக்கதைகள் என்பது உலகம் தழுவிய அளவில் ஏராளம் எழுதப்படுகின்றன. தமிழிலும் வரவே செய்கின்றன. 1950 களிலும் ஒரு மரத்தைப் பற்றி, இலைகளின் வகைகளைப் பற்றியெல்லாம் தனித் தனிப் புத்தகங்கள் வந்திருக்கின்றன. அவையும் இந்த வகையில் அடக்கலாம் என்பது என் கருத்து. சமகாலத்தில், தமிழில் புனைவுகளை விடவும் புனைவற்ற கட்டுரை நூல்கள் பல வருகின்றன. ஆயிஷா நடராஜனின் இயற்பியலின் கதை, ஒளியின் சுருக்கமான வரலாறு, உலகை மாற்றிய விஞ்ஞானிகள், தேவிகாபுரம் சிவாவின் அறிவியல் முதல்வர்கள், ஹரீஷ், மோகனா உள்ளிட்டோரின் கட்டுரைகள் என ஏராளம் வருகின்றன.

5. அங்கத கதை மையங்கள்:

மேற்சொன்ன அனைத்துவகை கதை மைய முறைகளிலுமே அங்கத கதைகள் உள்ளன. இதற்குச் சரியான உதாரணம், உதயசங்கரின் மாயக்கண்ணாடி. சிறார்க்கான அங்கத கதைகளாகவும் படைப்பு ரீதியாக செழுமையானதாகவும் உள்ள கதைகளின் வரவு மிக சொற்பமே.

இந்த வகைகளுக்குள் அடங்காது நீதிக்கதைகளும் நன்னெறி கதைகளும் பாடல்களும் நாடகங்களும் ஏராளம் வருகின்றன. ஆயினும் என் வாசிப்பில் அதிலும் நீதியை நேரடியாக வலியுறுத்துவதே நோக்கம் எனக் கொண்டிராத, பிற்போக்குக் கருத்துகளைத் திணிக்காத படைப்புகளை மட்டுமே இக்கட்டுரையில் மேற்கொள் காட்ட எடுத்திருக்கிறேன். அதிலும் பெரும்பாலும் கதை வடிவத்தை மட்டுமே, பாடல், நாடகம், கட்டுரை உள்ளிட்டவை அதிகம் தொடவில்லை.

எல்லாவற்றையும் தொகுத்துப் பார்க்கையில், தமிழில் சிறார் இலக்கியம் எனும் தடமற்ற வெளியில் பலரும் நடக்கத்தொடங்கியிருக்கிறோம். இனி தெளிவான தடம் தெரியவரும் அல்லது தடத்தை உருவாக்க முடியும். இன்னொன்று, பிற்போக்கான கருத்தியலை தினிக்க முயல்பவர்களாலும், எளிய கதையை சாதாரணமான நடையில் சொல்லிவிட்டால் சிறார் இலக்கியம் என நினைப்பவர்களால் படைப்பாக்க ரீதியாக வெற்றி பெற முடியவில்லை. இன்னும் சிலர் சாதிய, மத, மூட நம்பிக்கைகளுக்கு எதிராக எழுதுகிறோம் என்ற பெயரில் நம் பண்பாட்டை விட்டுவிடுகிறோம் எனக் கிளம்பியிருக்கிறார்கள். அவர்கள் அப்படிக் கிளம்புவதே முற்போக்கான படைப்புகள் எண்ணிக்கையில் குறைவென்றாலும் படைப்பாக்க ரீதியில் நிறைவானதாக வந்துக்கொண்டிருக்கின்றன என்பதன் அறிகுறியே.

பெரியவர்கள் இலக்கியத்தில் சமூக மாற்றத்தில் நடந்தவை நிகழ்ந்தன. உதாரணமாக, பெயரின் பின் சாதியைக் குறிப்பிடுவது, பெண்கள் மற்றும் தலித்துகள் மீது கசப்புணர்வு மற்றும் வெறுப்பை பரப்புவது போன்றவை எண்ணிக்கை அளவில் குறைந்தன. ஆனால் சிறார் இலக்கியத்தில் நேரடியாக எவ்வித வெறுப்புகளும் தெரிவதில்லை. மறைமுகமாக இருக்கத்தான் செய்தன. விளையாட்டில்கூட இதுமட்டும் பணம் தாரேன் விடுடா துலுக்கா என்று இஸ்லாமியர்களை பெண்களைக் கவர்பவர்களாகக் காட்டுவது போன்றவற்றைச் சொல்லலாம். தெனாலி ராமன், விக்கிரமாதித்யன் கதைகளிலும் இக்கூறுகள் தெரியும்.

பொதுவாக என் கருத்து என்பது தமிழில் சிறார் கதைகள் இருக்கின்றன. ஆனால், அவற்றில் சிறார் இலக்கியமாகத் திகழ்பவை மிகச் சொற்பமே. இலக்கியத்திற்கான படைப்பு மையத் தேர்ந்தெடுப்பு, எழுத்து முறை, சொல் வங்கி, சரியான வகை வரும்வரை திருத்துதல், காத்திருத்தல் உள்ளிட்ட பல விஷயங்கள் இங்கு நிகழ வில்லையோ என்ற வருத்தமும் உண்டு. அதை நோக்கிப் பயணிக்க வேண்டிய தேவையை நாம் உணர வேண்டும்.

செப். 6, 2020 ஆம் அன்று நடந்த ’சிறார் இலக்கியச் சங்கம்’ பயிலரங்கத்தில் வாசித்த கட்டுரை.

வீடியோ பதிவு:

குறிப்பு:

சிறார் எழுத்தாளர்கள் – கலைஞர்கள் சங்கம் சார்பாக சிறார் கலை இலக்கியச் சந்திப்பு இணைய வழியே நடைப்பெற்றது. மொத்தம் 10 அமர்வுகள், 20க்கும் மேலான சிறப்புரைகள் என மிகவும் சிறப்பாக நடைப்பெற்றது. நிகழ்வின் உரைகளை இங்கு பஞ்சுமிட்டாய் இனையத்தில் ஆவணப்படுத்துகிறோம்.

வீடியோ பதிவுகளாக காண: Click here.

கட்டுரைகளுக்கு : Click here.

Leave a comment