இன்றைக்கு சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் என்கின்ற இந்த அமைப்பு, சிறார்களுக்காகச் சிந்திப்பவர்கள், எழுதுபவர்கள், செயல்படுபவர்கள் எல்லாரையும் ஒருங்கிணைத்து இருப்பது பெரும் மகிழ்ச்சிக்குரிய விஷயம்.
சிறார்களுக்காக இயங்குபவர்கள் சேர்ந்து பயணிக்க வேண்டும் என்பது நானும் யோசித்துக் கொண்டிருந்த ஒரு விஷயம். எழுத்தாளர்கள் எல்லாரும் ஒருங்கிணைந்து இருப்பது போல், கலைத்துறை சார்ந்தவர்கள் எல்லாரும் ஒருங்கிணைந்து இருப்பதுபோல், சிறார்களுக்காக இயங்குபவர்கள் அங்குமிங்குமாய் இருக்கிறார்கள்; அவர்களை ஒருங்கிணைத்து ஒரு மாலையாய், ஒரு தொகுப்பாய் இருந்தால் சரியாக இருக்கும் , பலமாக இருக்கும் என்று நான் யோசித்தது உண்டு. ஆனால் அதை எப்படி முன்னெடுத்து நடத்துவது என்று தெரியாமல் இருந்தது. இப்போது சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் இந்த முன்னெடுப்பு பெரும் மகிழ்ச்சி தருகிறது. இந்தக் காலகட்டத்தில், ஒரு நெருக்கடியான சூழலில் முழுமையாய் எல்லாம் இணையவழியில் மாறிக் கொண்டிருக்கின்ற காலகட்டத்தில், இந்த மாதிரி ஒரு முன்னெடுப்பு மிக அவசியமான ஒன்றாய் இருக்கிறது.
குழந்தைகளை தொடர்ந்து கதை சொல்வதற்காக சந்தித்துக் கொண்டிருந்த நான், ஒரு காலகட்டத்தில் பெற்றோர்களை, ஆசிரியர்களை சந்திக்க வேண்டும் என நினைத்தேன். ஏனென்றால் நான் கதை சொல்கிறேன், குழந்தைகளைச் சந்திக்கிறேன்; இந்தச் சந்திப்புகளில் என்ன நடக்கிறது, என்ன முன்னேற்றம், படிப்பினைகள் எவை என்பதைப் பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் தெரியப்படுத்த வேண்டும் என்பது என் நோக்கம். ஏனென்றால் நான் எப்பொழுதாவது ஒரு நாள் குழந்தைகளை நூலகங்களிலும் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் சந்தித்துவிட்டு வந்து விடுகிறேன். ஆனால் தினந்தோறும் குழந்தைகளுடன் இருக்கும் பெற்றோர்களிடமும், குழந்தைகளைச் சந்தித்துக்கொண்டிருக்கும் ஆசிரியர்களிடமும், குழந்தைகள் சார்ந்து இயங்குபவர்கள், விளையாட்டு சொல்லித் தருபவர்கள், கோமாளிகள் இது மாதிரி குழந்தைகளை மகிழ்விக்கும் அனைவரும் இது எதற்காக அவசியம் என்பதைப் பேச வேண்டும் என்று நினைத்தேன்.
முதன் முதலில் கதை சொல்லியாய் நான்கு வருடத்திற்கு முன் வரும்பொழுது எதற்காகக் கதை சொல்கிறோம் என்பதற்குப் பெரிய பட்டியல் எதுவும் என்னிடம் இல்லை. கதை சொல்லணும் என்று தோன்றியது, வாசிப்பதற்காக குழந்தைகளை இதற்குள் கொண்டு வரணும், அதற்கு ஒரு கருவியாய் கதை சொல்லலைப் பயன்படுத்தலாம் என்கின்ற எண்ணம் மட்டுமே இருந்தது; வேறு எந்த எண்ணமும் இல்லை. இதைப் பற்றி முழுவதும் தெரியவில்லை.
அதற்குப் பிறகு குழந்தைகளிடம் கதை சொல்லும்போது கிடைத்த அனுபவம், கதை சொல்லும் போது குழந்தைகள் மனதிற்குள் ஏற்படும் மாற்றங்கள், பெற்றோர்களும் ஆசிரியர்களும் பகிர்ந்த அனுபவங்கள் அனைத்தையும் வைத்துத்தான் இவ்வளவு மாற்றங்கள் கதை சொல்லலில் கண்ணுக்குத் தெரியாமல் நடக்கின்றன என்று தெரிந்தது. இந்த மாயங்கள் நாள்தோறும் எனக்கு அதிசயமாகவே இருந்தன. ஒவ்வொரு நாளும் ஒரு படிப்பினையாகும்; புதுப் புதுக் கருத்துகள் வந்து சேர்ந்த வண்ணமும் இருந்தன. ஆனால் ஆரம்பிக்கும்போது இது எதுவுமே தெரியவில்லை.
இது ஒரு நல்ல விஷயம். புத்தக வாசிப்புப் பழக்கம் எனக்கு இருக்கிறது. வீட்டில் நிறையப் புத்தகங்கள் எனக்கும், குழந்தைகளுக்கும் படிக்க வாங்கி இருக்கிறோம். அவற்றை ஒரு பொதுப் பயன்பாட்டிற்கு நாம் பயன்படுத்த வேண்டும் என்கின்ற ஒரே எண்ணத்துடன்தான் ஆரம்பித்தேன். அதற்குப் பிறகு இந்த அனுபவங்கள் மூலம் தான் அத்தனை விஷயங்களும் கிடைக்க ஆரம்பித்தன. அவற்றை வைத்துதான் அடுத்தடுத்த நகர்விற்கு நகர்த்து போனேன் நான் .
ஒருமுறை கதை சொல்லி முடித்த பிறகு, அடுத்த கதையை எப்படிச் சொல்வது, எப்படி ஆரம்பிப்பது, எப்படி முடிப்பது, எவ்வளவு நீண்ட கதை சொல்வது, எவ்வளவு நேரம் சொல்வது, என்ன தொனியில் சொல்வது, எந்த மாதிரிக் குழந்தைகளுக்கு எந்த மாதிரிக் கதைகளைச் சொல்லவேண்டும் என்பதையெல்லாம் ஒவ்வொரு முறை கதை சொல்லும் போதும் அனுபவத்திலிருந்துதான் கற்றுக் கொள்கிறேன்.
ஒரு பழங்குடியினக் குழந்தைகளுக்கு, ஒரு பெரும் நகரத்தில் இருக்கும் குழந்தைகளுக்கு எந்தக் கதைகளைக் கொண்டு போய்ச் சேர்க்கணும், என்ன தேவை அங்கு இருக்கிறது என்று தெரிந்து கொள்ளணும். அதற்குத் தகுந்தாற்போல் கதைகளைக் கொண்டு போக வேண்டும். இந்த அனைத்து விஷயங்களையும் அந்தந்தக் குழந்தைகளிடம் இருந்து கற்றுக் கொண்டுதான் அடுத்தடுத்த நகர்வுகளுக்கு நடந்து போகிறேன்.
குழந்தைகளுக்குக் கதை சொல்வதால் ஏற்படும் பலன்களை நான் பெற்றோர்களிடம் பகிரும்போது, கவனக் குவிப்பு, கற்பனைத் திறன், படைப்பாற்றல் திறன் என்று பட்டியலிட்டுக் கொண்டே போகலாம். அதில் மிக முக்கியமானது, இன்றைய காலகட்டத்திற்கு அவசியமானது என்று நான் நினைப்பது பரஸ்பர உரையாடல் .
அம்மா அப்பாவுக்கும், குழந்தைகளுக்கும் நடக்கும் உரையாடல். வீட்டில் இருக்கும் மற்ற பெரியவர்களுடன் குழந்தைகளுக்கு நடக்கும் உரையாடல். ஆசிரியர்களுக்கும் குழந்தைகளுக்கும் நடக்கும் உரையாடல். இவை மிகவும் அவசியமான காலகட்டத்தில் நாம் இருக்கிறோம் என்று நினைக்கிறேன். சின்ன வயதில் குழந்தைகளுக்குக் கிடைக்கக்கூடிய உரையாடல் அனுபவம், அவர்கள் பத்து இருபது வருடங்கள் கழித்து அவர்கள் வளர்ந்து பெரியவர்களாகி தாமே ஒரு குடும்பமாக மாறும்போது அல்லது அவர்கள் அடுத்த கட்டத்திற்கு உயரும் போது அவர்களுடைய குணாதிசயங்களைக் கட்டமைக்கக் கூடியதாக இருக்கும் என்று நம்புகிறேன். இந்தக் கதைச் சூழலுக்குள் வந்தபிறகு அதிகமான விஷயங்களை ஆராய்ச்சிசெய்ய நேர்ந்தது. ஆராய்ச்சி என்றால் எழுத்துப்பூர்வமான ஆராய்ச்சி இல்லை. சிந்தித்துப் பார்த்தால் நாம் பத்து வயதில் என்ன பேசினோம்; என்னவெல்லாம் கேட்டோம்; நம் நட்புகள் என்னவெல்லாம் கேட்டார்கள்; அவர்கள் இப்போது எப்படி இருக்கிறார்கள்…இப்படி அதிக நபர்களை ஆராய்ச்சி பண்ணிய போது எனக்கு தெரிந்தஉண்மை: ‘இந்தச் சிறு வயது உரையாடல் என்ன மாதிரி அமைந்ததோ, எந்த மாதிரி உரையாடலுக்குள் குழந்தைகள் இருந்திருக்கிறார்களோ, எந்த மாதிரி நடத்தப்படுகிறார்களோ அதையெல்லாம் பொறுத்துதான் அந்தக் குழந்தைகளின் குணாதிசயங்கள் அமைகின்றன என்று தோன்றுகிறது.
எனக்கு இப்போது கொஞ்சமாக சூழலியல் சார்ந்த ஆர்வம் இருக்கிறது; அதைச் சார்ந்து ஏதோ ஒன்றைப் பேசுகிறேன்; அதைச் சார்ந்த கதைகளைக் குழந்தைகளுக்குச் சொல்லியே ஆகவேண்டும் என்று தேர்ந்தெடுத்துச் சொல்ல முனைகிறேன். அவ்வாறு முற்படுவதற்கான விதை எங்கே என்று யோசித்துப் பார்த்தால், அது எங்கள் பெரியம்மாவுடனான என் குழந்தைப்பருவ உரையாடல்தான் என்பது புலனாகிறது. நானும் என்னுடைய பெரியம்மாவும் ஆடு மேய்ப்பதற்குச் செல்வோம். ஆடு மேய்ப்பதற்கு வழக்கமாகப் போகும் நேரம்- மாலை நான்கிலிருந்து ஆறு மணி வரை. ஆடு மேய்க்கப் போனதும், அங்கு ஆடுகளை ஓர் மையமான இடத்தில், அவை சுற்றிச் சுற்றி வந்து மேய்வதற்கு வசதியாக நீளக்கயிற்றில் கட்டிவிடுவோம். அருகில் கிணற்றிலிருந்து பயிர்களுக்குத் தண்ணீர் பாயும் வாய்க்காலில் உட்கார்ந்து கொள்வோம். அந்த வாய்க்கால் எப்படி இருக்கும் என்றால், தண்ணீர் பாய்ந்து பாய்ந்து ஏற்படுத்திய மணல் திட்டுகள் படிப்படியாய் இருக்கும். பார்ப்பதற்கே அழகாய் இருக்கும். அது மாதிரியான ஓர் இடத்தில் நாங்கள் உட்கார்ந்து கொள்வோம். அப்படி உட்காரும்போது எங்கள் பெரியம்மா முதலில் அந்தி வானத்தைப் பற்றி ஏதாவது ஒன்று சொல்ல ஆரம்பிப்பார்கள்: “பாரேன், எப்பிடி இருக்கு பாரு, சூரியன் என்ன மாதிரி இருக்கு. அதோட நெறங்களப் பாரு”. அதன் பிறகு மெதுவாக ஊர்ந்து போய்க் கொண்டிருக்கும் எறும்புகளைப் பற்றிச் சொல்வார்கள்: “எவ்வளவு வரிசையாப் போகுது. நம்மளை எங்கயாவது போயி வரிசையா நிக்கச் சொன்னால், இவ்வளவு வரிசையா, இவ்வளவு தூரம், இவ்வளவு ஒழுங்கா, யாருமே சொல்லாமல் இவ்ளோ வரிசையா நிக்க முடியுமா? இதுங்க எப்பிடி வரிசையாப் போகுது பாரு” – அப்படி என்று நுணுக்கமாகச் சொல்வார்கள். பிறகு, சுற்றிவரும் குருவிகள், அவற்றினுடைய மூக்கு (அலகு) பற்றி பேசுவார்: ” இதுக்குப் பாரு, மூக்கு எப்பிடி இருக்கு; அதுக்குப் பாரு, மூக்கு வேற மாதிரி இருக்கு ” என்று பேசுவார்கள்.
அதற்குப் பிறகு, செடிகளில் இருக்கும் இலைகளை எடுத்து வைத்துக்கொண்டு இலைகளின் அமைப்பு குறித்துப் பேசுவார்கள். பருத்திச் செடியின் இலைகளை எடுத்து வைத்துக்கொண்டு, எந்தெந்த வடிவங்களில் இருக்கின்றன என்று வியப்பார். மஞ்சள் செடியுடைய இலை எப்படி இருக்கு என்று இப்படியே ஒவ்வொரு தாவரத்தின் இலைகளையும் குறித்துப் பேசிக் கொண்டே இருப்பார். அதே போல, பூக்களைக் குறித்துப் பேசும்போது, அவற்றின் வாசத்தைக் குறித்துப் பேசுவார்கள். “இந்தப் பூ என்ன வாசம் அடிக்கிறது பாரு, அந்தப் பூ என்ன வாசம் அடிக்கிறது பாரு, சில இலைகளிலேயே வாசம் இருக்கிறது, பாரேன்” என்பார். அதற்குப் பிறகு சின்னச் சின்னப் பூச்சிகளை எடுத்துக் கைகளில் வைத்துக் கொள்வார்கள். அவற்றை எனக்குக் காண்பிப்பார்கள்: “இங்க பாத்தியா சாமி, கடுகு மாறி இருக்கு, இதுக்கு ஒரு வயிறு இருக்கு; ஒரு கண்ணு இருக்கு. இதுக்குக் காலு கூட இருக்கு சாமி”- அப்படி என்று சொல்லும் போது, எனக்கு அந்தச் சிறு வயதில் ஒரே பிரமிப்பாய் இருக்கும். “ஆமால்ல, அது ஏதோ ஒண்ண சாப்பிடுது, பாரேன். எப்பிடி ஒரு படைப்பப் படைச்சிருக்கான்… அது ஒண்ணு சாப்பிடுது, அது அந்த வயசுல ஜீரணமாகுது.” இவ்வாறு அவர் பேசும் போது ஆச்சரியமாக இருக்கும்.அதனுடைய ஒரு பிரதிபலிப்புதான் இன்று பூச்சிகள் குறித்தோ, எறும்புகள் குறித்தோ, பூக்கள் குறித்தோ, இலைகள் குறித்தோ ஏதாவது ஒன்று நான் பேசுகிறேன் அல்லது கதை சொல்கிறேன் என்றால் அது அங்கிருந்து தான் ஆரம்பித்தது என்றே எனக்குத் தோன்றுகிறது.
பெரியம்மாவுடனான அந்த உரையாடலில் திட்டமிடல் எதுவும் இருக்காது. ஒரு மதிப்பெண் வாங்குவதற்கான உரையாடலோ, ஒரு போட்டிக்காகத் தயார்ப் படுத்துவதோ–இப்படி எந்த ஓர் எதிர்பார்ப்பும் இல்லாத மிக இயல்பான ஓர் உரையாடல். சூழலியல் தாண்டி எனக்குக் கொஞ்சம் ரசனைகள் இருக்கு, ரசிக்கிறேன். எதையாவது ஒன்றைப் பார்த்தால்,
ஒரு பூவைப் பார்த்தாலோ, ஓர் இலையைப் பார்த்தாலோ, வடிவங்களைப் பார்த்தாலோ ரசிப்பது. இந்த ரசனை உணர்வு கூட அங்கிருந்துதான் வந்ததோ என்று தோன்றுகிறது. அப்படி ஓர் அழகான உரையாடல் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டே இருந்தது. இந்த மாதிரி அழகான உரையாடல் இன்றைய குழந்தைகளுக்கும் சாத்தியமாக வேண்டும் என்று நினைக்கிறேன். அதேமாதிரி என்றால், அவர்களைப்போலவே அணுக்கமாகப் பக்கத்தில் அமர்ந்து பேசுவது. வார்த்தைக்கு வார்த்தை சாமி சாமி என்று பேசுவார்கள். அது அவர்களுடைய இயல்பு. இன்றைக்கும் எங்கள் வீட்டில் இருக்கும் குழந்தைகளிடம் அப்படிப் பேசியே எனக்கும் பழக்கமாகிப் போனது. “என்ன சாமி, சாப்பிடலாமா; தூங்கலாமா சாமி” – என்று கேட்கும் போது என்னுடைய குழந்தை குறும்பாகக் கேட்பாள்: “நான் என்ன, உங்களுக்கு சாமியா? பேர் சொல்லிக் கூப்பிடுங்கள் .”
இப்படி குழந்தைகள் தமக்குப் பிடித்தவர்கள், யார் தங்களிடம் அனுசரணையாக, பக்கத்தில் உட்கார வைத்துக் கொள்கிறார்களோ, உரையாடல் நிகழ்த்துகிறார்களோ அவர்களுடைய குணாதிசயங்களை உள் வாங்க ஆரம்பிப்பார்கள்.
ஆகவே, இந்த உரையாடலை எந்தத் திட்டமிடலும் இல்லாமல் இயல்பாகக் குழந்தைகளிடம் கொண்டுபோய் சேர்க்க வேண்டுமென்றால், அதற்கான ஆதிப் புள்ளியாக அமையக் கூடியது ஒரு கதை சொல்லுதல் என்று நினைக்கிறேன்.
வீடுதோறும் கதை சொல்லிக்கொண்டு இருந்த ஒரு சமூகம் தான் நம்முடையது. தொலைக்காட்சி, மொபைல் போன் போன்றவை என்று வந்தனவோ அன்றிலிருந்து மெல்ல மெல்ல கதை சொல்லும் பழக்கம் குறைந்து முற்றிலும் நின்று விட்டது. இப்போது வீட்டில் இருக்கும் பெரியவர்களும் கூடத் தொலைக்காட்சியுடன் இருக்கும் மாதிரியான ஒரு சூழல் நிலவுகிறது. குழந்தைகளுக்குக் கதை சொல்வதற்கு வீடுகளில் ஆட்கள் இல்லாத ஒரு சூழல். இப்பொழுது ’கதைசொல்லிகள்’ உருவாகி கதை சொல்ல வேண்டிய ஒரு நிகழ்வு நடந்து கொண்டிருக்கிறது.
கதை சொல்லலாம் என்று எண்ணம் இருக்கிறது; ஆனால் பெரும்பாலான பெற்றோர்கள் சொல்வது, “கதை சொல்கிறேன் என்றால் என் குழந்தை உட்காருவது இல்லை” என்பதே. அப்படி நாம் கதை சொல்லும் போது குழந்தைகள் உட்காரவில்லை என்றால், நமக்குக் கதை சொல்லுதல் என்றால் என்னவென்று தெரியவில்லை. உட்கார வைத்து அறிவுரைகள் சொல்வோமோ, அல்லது இதைப் பண்ணு அதை பண்ணு என்று சொல்லி விடுவோமோ எனப் பயந்து விடுவார்கள். சமீபத்தில் பத்துப் பன்னிரண்டு குழந்தைகளிடம் பேசிக் கொண்டிருந்தபோது அந்தக் குழந்தைகள் சொன்னார்கள்: மாலையில் நாங்கள் பள்ளியிலிருந்து வந்த பிறகு நான்கு கேள்விகளைத்தான் பெற்றோர்கள் கேட்கிறார்கள்: “லஞ்ச் சாப்டியா,ஹோம் ஒர்க் நோட் பண்ணிட்டு வந்திருக்கியா, எல்லா நோட்புக்கயும் எடுத்துட்டு வந்துட்டியா ? ” திரும்பத்திரும்ப அனைவர் வீட்டிலும் ஒரே மாதிரி கேட்கிறார்கள் ஆனால் அதைத் தாண்டி எவ்வளவு விஷயங்கள் இருக்கின்றன. இதை ஒரு பெற்றோரிடம் பகிர்ந்த போது அவர்கள் சொன்னார்கள் :“ வேறு என்ன பேசுவது? பள்ளியில் இருந்து வந்ததும் இதைத்தான் கேட்க வேண்டும்”.
எப்போது பார்த்தாலும் ஒரு குழந்தையைப் பார்த்தால், ‘உன்னுடைய பெயர் என்ன, நீ எந்தப் பள்ளியில் படிக்கிறாய்’ இதைத்தான் கேட்பார்களா? “உன்னுடைய நண்பன் எப்படி இருப்பான்? அவனுடைய கண்ணு நீளமாக இருக்குமா? உன் பக்கத்தில் அமர்ந்து இருக்கும் பொண்ணு வரைவாளா, எப்படி வரைவாள் ?” – குழந்தைகளிடம் இது மாதிரியான உரையாடல் எப்படி நிகழ்த்த வேண்டும் என்று நமக்குத் தெரியாது. மாலையில் பள்ளியில் இருந்து வீடு திரும்பும் குழந்தை வேறு ஏதோ எதிர்பார்த்து வருகிறது. என்னிடம் பேசிய பத்துப் பன்னிரண்டு குழந்தைகளும் இதையே தான் சொன்னார்கள். எப்படி ஒரே மாதிரி உணவை அனைவர் வீட்டிலும் சமைப்பதில்லையோ, அப்படியே உரையாடல்களும் வேறு வேறு மாதிரியானவையாக அமைய வேண்டும். அப்படியான உரையாடல்களை ஆரம்பிக்கும் போது கதை சொல்லல் ஒரு கருவியாக இருக்கும்; வழிகாட்டியாக இருக்கும். இதில் ஏழை பணக்காரன் வித்தியாசம் இல்லை. ஜாதி மதம் வித்தியாசம் இல்லை. எந்த வித்தியாசமும் இல்லை. யார் வேண்டுமானாலும் தரமுடியும் கதை சொல்லலை. எனக்குக் கதை சொல்வதற்கான வசதி இல்லை என்று யாருமே சொல்லவே முடியாது. ஓர் அம்மாவிற்கும் அப்பாவிற்கும் பெருந்தன்மையான மனது இருந்தால் போதும். மற்ற வேலைகளை ஒதுக்கி வைத்துக்கொண்டு தமது குழந்தைகளுக்காகக் கொஞ்ச நேரம் ஒதுக்கி கதை சொன்னால் போதும்.
அப்படி கதை சொல்லும்போது ஒன்றிரண்டு பிரச்சினைகளை பெற்றோர் சொல்வார்கள் ‘எனக்கு கற்பனைக் கதை தெரியாது’. இவர்களுள் நான்கைந்து வகையானவர்கள் உள்ளனர். ஒரு வகைப் பெற்றோர், தமது பெற்றோரிடம் அல்லது தாத்தா பாட்டியிடம் கேட்ட கதைகளைத் தங்களின் குழந்தைகளுக்குச் சொல்வது. அல்லது தாங்களே கற்பனையாக உருவாக்கிச் சொல்வது. கதைகளைப் புத்தகங்களில் இருந்து வாசித்துச் சொல்லுவது. இது எதுவுமே இல்லையென்றாலும் சொந்த வாழ்க்கையில் நடந்த விஷயங்களைக் கதைகளாகச் சொல்லலாம். இதில் அனைத்திலும் சுவாரசியங்களைச் சேர்க்க வேண்டும். நடந்த சம்பவங்களை அப்படியே வறட்சியாகச் சொல்லாமல், குழந்தைகள் கேட்கக் கேட்க அப்படியே அந்த உலகத்திற்குள் அவர்களும் போய் எல்லையில்லாத ஆனந்தத்தை அந்தக் குழந்தைகளின் மனம் உணர வேண்டும். அப்படியாக ஏதோ ஒரு கதை சொல்ல வேண்டும்.
நான் கதை கேட்கும் போதெல்லாம் எங்கள் பாட்டி சொன்ன கதைகள் எல்லாம் குடியானவர்( விவசாயிகள்)கதைகள்தாம். அந்த எல்லாக் கதைகளிலும் நரி வரும். ஆனால், நரியை மோசமானதாகச் சித்தரிக்க மாட்டார்கள், நரி என்பது கதையில் மட்டுமன்றி, குடும்பத்திலும் ஓர் உறுப்பினர் போல் வந்து போகும். கதையில், நரியைப் போல் மாப்பிள்ளை, பெண், நாம் செய்யக்கூடிய பலகாரங்கள் எல்லாம் வந்துவிடும். ஆனால் ஒவ்வொரு கதையும் கேட்டுச் சிரித்துச் சிரித்து வயிறு வலியெடுத்து விடும். அப்படியான துள்ளலும் , எள்ளலும் மகிழ்ச்சியும் இருக்கக்கூடிய கதைகளாக இருக்கும். குழந்தைகளிடம் ஒருமுறை ஒரு கதை சொல்லிவிட்டால், அதைத் திரும்பவும் சொல்ல முடியாது என்றெல்லாம் எதுவுமில்லை. நிறையக் குழந்தைகள், ‘அன்னைக்கு அந்த இட்லி சுட்ட கதையை சொன்னீங்களே, அதையே சொல்லுங்க…’ என்று திரும்பத் திரும்பக் கேட்பார்கள் ஏனென்றால் அந்தக் கதை அவர்களுக்கு அவ்வளவு மகிழ்ச்சியைத் தருகிறது. திரும்பவும் அந்த மகிழ்ச்சியை அனுபவிக்க வேண்டும் என்று நினைத்து அந்தக் கதைகளைக் கேட்கிறார்கள். இப்படியாக பாட்டி சொன்ன கதைகளில் நீதிகள் எல்லாம் சொல்லியதில்லை பாட்டி பக்கத்தில் படுத்துக்கொண்டே கதை கேட்பது தான் பெரிய வெற்றி. அதில் ஒரு பெரிய சந்தோஷம், அதுல பெரிய போட்டிகள் நடக்கும். ‘ யாரு பாட்டி பக்கத்துல படுப்பது’ என்று. தள்ளித்தள்ளி படுத்துக் கொண்டு கேட்டாலும் கதை எங்களுக்கு கேட்கும். இருந்தாலும் பாட்டி பக்கத்தில் படுத்து யாரு கதை கேட்பது என்பதற்குப் போட்டிகளும் சண்டைகளும் நடக்கும். அப்படியான சூழல் இப்போது இல்லாத பட்சத்தில், பெற்றோர்கள் அந்த இடத்தை நிரப்பக் கொஞ்சம் முயற்சி பண்ணவேண்டும் அதற்கு இந்தக் கதை சொல்லலைக் கையில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
நாம் கதை சொல்வதோடு இல்லாமல் குழந்தைகள் சொல்லும் கதைகளைக் கேட்பதற்கு நாமும் தயாராக இருக்க வேண்டும். எந்த அளவுக்குக் குழந்தைகளின் கற்பனை சிறகு விரித்துப் பறக்கிறதோ அந்த அளவுக்கு நாமும் தயாராக இருக்க வேண்டும். நாம் சிந்தித்துக் கூட இருக்கவே மாட்டோம் அவர்கள் சொல்லும் கதைகளை. குழந்தைகள் திடீரெனச் சொல்வார்கள்- அப்போது பிரமித்துப் போய் விடுவோம். ஒரு வயதிற்கு மேல், நாம் ஏற்கனவே வடிவமைக்கப்பட்ட விஷயங்களையே செய்கிறோம். கதைகளைக் கூட ஒரு கதை இப்படி ஆரம்பிக்கணும், இப்படி முடிக்கணும், கதைக்குள் இதெல்லாம் வரணும் என்று பிம்பம் நமக்கு இருக்கும். குழந்தைகளுக்கு அந்த பிம்பம் எதுவும் இல்லை. சென்ற வாரம் என் குழந்தை சொன்ன கதை என்னவென்றால், ஆரம்பிக்கும்போதே, “மூணு ஊருல” என்று ஆரம்பிக்கிறது. “மூணு ஊர்லயா” என்று கேட்டேன் “ஏன் எப்பவும் ஒரு ஊர்லனு தான் வரணுமா” என்று கேட்டாள், சரி என்று கதையை அமைதியாகக் கேட்க ஆரம்பித்தேன்.
“மூணு ஊருல ஒரு ராஜா ராணி இருத்தாங்க. ஒரு பெரிய வீடு; அந்த வீட்டுக்குக் கூட… ஏதோ பேர் சொல்லுவீங்களே” என்று கேட்டுவிட்டு ‘அரண்மனை’ என்று அவளே பதிலையும் சொன்னாள். அடுத்துச் சட்டென்று அவள் சொன்னதுதான் எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. என்னவென்றால் அந்தக் கதையில் ராஜாவிற்குக் குழந்தை பிறக்கிறது. ராஜாவுக்குக் குழந்தை பிறக்குமா?
“ஏன், ராணிக்கு மட்டும் தான் குழந்தை பிறக்குமா ?ராஜாவுக்குக் குழந்தை பிறக்காதா?” ஒரு குழந்தையுடன் கற்பனைக் கதை விரிகிறது. அதற்குப் பிறகு ஏதேதோ சொல்லி கதையை முடிக்கிறாள். நான் இந்த இரண்டு விஷயங்களில் இருந்து மீளவே இல்லை: “மூணு ஊருல, ராஜாவுக்குக் குழந்தை பிறந்தது”. எனக்கு ஒரே ஆச்சரியமாக இருந்தது. குழந்தைகளுடைய கற்பனை எந்த எல்லைகளில் இருக்கிறது? நாம் இன்னும் எவ்வளவு கற்றுக்கொண்டு இந்த குழந்தைகளுடன் உரையாட வேண்டும், கதை சொல்ல வேண்டும்.
தன் சொந்தக் கதைகளைச் சொல்லும் பொழுது, உறவுகளுடன் உரையாடலை வலிமையாக நிகழ்த்தும் பொழுது, நாளை எந்த இடத்திலும் தயக்கமில்லாமல் பேசும் பாங்கு அவர்களுக்கு வரும். தொடர்பு கொள்ளும் திறனில் தான் நிறைய இடங்களில் பிரச்சினைகள் உருவாகின்றன. ஓர் உறவுச் சிக்கல் ஆகட்டும்; அலுவலகம் சார்ந்த பிரச்சினைகள் ஆகட்டும், நிறைய இடங்களில் “நான் சொல்ல வருவதைப் புரிந்து கொள்ள மாட்டீர்களே? ” மனதிற்குள் தோன்றும்; அல்லது, வாய்திறந்து சொல்லிவிடுவோம்.” நான் நியாயமாகத்தான் செய்தேன். சரியாகத்தான் செய்துள்ளேன். இப்படி நினைத்துதான் இதைச் செய்தேன். ஆனால், நீ தவறாகப் புரிந்து கொண்டாயே…”
இந்த மாதிரியான இடங்களில் சரியான வார்த்தைகளைப் பயன்படுத்திச் சொல்லக்கூடிய ஒரு பாங்கு அனைவருக்கும் அமைவதில்லை
தொடர்ந்து கதைகள் கேட்டுக் கொண்டிருக்கும் குழந்தைகளுக்கு இந்தப் பாங்கு வளரும் என்று எனக்குத் தோன்றுகிறது, சரியான வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்துத் தேவையான இடங்களில் பொருத்திச் சொல்வது .
வேலை சார்ந்தும் உறவுகள் சார்ந்தும் எழுதும் கடிதங்கள் அனைத்தையுமே இன்றுவரை மின்னஞ்சல்களின் மூலமாக மட்டுமே பெரும்பாலும் அதிகம் எழுதிக் கொண்டிருக்கிறோம். தவறுதலாகப் புரிந்து கொள்ளும் நிலை வரும் வாய்ப்புள்ள இடங்களில் கூட மிகச் சரியாகச் சிந்தித்து அழகான வார்த்தைகளை, வாக்கியங்களைக் கோர்த்து எழுதுவது கூட ஒரு திறன்தான். அந்தத் திறனும் கூட கதை கேட்கும் குழந்தைகளுக்கு மிக அழகாக வளரும். ஒருமுறை, ஒரு தாத்தா அவர் கல்யாணம் பண்ணிக்கொண்டு வாழ்ந்த இளமைக்காலக் கதைகளை எல்லாம் சொல்லிக்கொண்டிருந்தார். அந்தக் காலத்தில் மாப்பிள்ளை வீட்டிலிருந்து அழைத்து வரும் பொழுது குதிரையில் வருவது போன்ற விஷயங்களைப் பகிர்ந்து கொண்டிருந்தார். நாங்கள் எல்லாரும் சுவாரசியமாகக் கேட்டுக்கொண்டிருந்தோம். பிரிட்டிஷ் காரர்கள் அவர்கள் வீட்டில் வந்து தானியங்களைப் பறிமுதல் செய்தது, அந்த அடக்கு முறைகள், பட்டளத்துக்கு வந்து ஆள் பிடித்துக்கொண்டு போகும்பொழுது இவர்கள் எப்படி ஒளிந்து கொண்டார்கள்; அந்தப் பகுதிகளில் வீடு கட்டும் கதைகள்…என சுவாரசியமாகக் கூறினார். முதலில் குடிசைகள் தாம் போட்டுக் கொண்டு இருந்தார்கள். அதற்குப் பிறகு கல், மண்ணெல்லாம் வைத்து வீடு கட்டினார்களாம். இந்த முடிவெடுத்த பின், ஒரு குடும்பம் வீடு கட்டுகிறது என்றால், அந்த ஊரில் இருக்கக்கூடிய அனைவரும் மாட்டு வண்டி கட்டிக் கொண்டு போய், கல்குழிகளில் இருந்து கற்களையும், மண் எங்கே இருக்கிறதோ அங்கிருந்து மண்ணையும் எடுத்துக் கொண்டு வருவார்களாம். இப்படி எல்லாருமாகக்கூடி தேவையான பொருட்களைச் சேர்ப்பது, வீடு கட்டுவது ஆகிய பணிகளைச் செய்வார்களாம். அதற்கென்று தனியாகப் பொறியாளர்களோ, சிற்றாள்களோ வந்து கட்டியது இல்லையாம் அவர்களே தான் கட்டியிருக்கிறார்கள். ஒரு வீடு கட்டி முடித்த பிறகு மற்றொரு குடும்பத்திற்குக் கட்ட ஆரம்பிக்கிறார்கள். மூன்றாவது குடும்பத்திற்காக வீடுகளைக் கட்டுவதற்கு திரும்பவும் வண்டிகளைப் பூட்டிக்கொண்டு செல்கிறார்கள். எந்தக் காலகட்டத்தில் இந்தக் கட்டுமானப் பணிகளைச் செய்வார்கள் என்றால், அறுவடை முடிந்து அடுத்த விதைப்புக்கு முந்தைய ஓர் இடைவெளியில் இந்த வேலைகளை வைத்துக் கொள்கிறார்கள். ரொம்ப ஆச்சரியமாக இருந்தது. இது நமக்கு மட்டுமன்றி, குழந்தைகளுக்கும் தெரிய வேண்டிய விஷயம். கிராமங்களில் இந்த உரையாடல் இல்லை என்றால் எப்படி நமக்குத் தெரிந்திருக்கும் ?
ஒருவர் ஓரிகாமி ஒர்க்ஷாப்பில் பங்கேற்க வந்திருந்தார். அங்கே அனைவரும் பேசிக்கொண்டிருந்தபோது அவர் ஒரு விஷயத்தை பகிர்ந்தார்: நம் அடிப்படைத் தேவைகள்- உணவு, உடை, உறைவிடம். இதற்கு அடுத்த தேவை மனிதர்களோடு பகிர்ந்துகொள்வது. இந்த மாதிரி நிகழ்வுகள் நம் வீட்டு நூலகத்தில் நடக்கும். இங்கேயே ஏன் இந்தக் குழந்தைகள் திரும்பத் திரும்ப வருகிறார்கள் என்றால் எந்தவிதக் கட்டுப்பாடுகளும் இல்லாமல் ஒரு பகிர்தல் நடக்கிறது. அவர்களுடன் உரையாடல் நடக்கிறது. பல்வேறு பின்புலங்களில் இருந்து, பல்வேறு பள்ளிகளில் இருந்து, பல்வேறு வயது குழந்தைகள் ஒரே இடத்தில் கூடி பகிர்ந்து கொள்வது என்பது ஓர்அத்தியாவசியத் தேவையாக இருக்கிறது.
எனக்கு இது குறித்தும், நிறைய விஷயங்களைப் பார்க்கும் பொழுதும் ஆமாம், சரிதான். ஏன் இந்தக் கொரோனா நெருக்கடி சூழ்நிலை மிகவும் கொடூரமானதாக நமக்கு இருக்கிறது என்றால், அது சக மனிதர்களிடமிருந்து நாம் தனிமைப்படுத்தப்படுவதால்தான்.கொரோனாவால் பாதித்த நண்பர்களிடமும் தோழிகளிடமும் பேசிய போது அவர்களும் இதைத்தான் சொல்கிறார்கள். 14 நாட்கள் தனியாக அறையில் அடைந்திருந்தனராம். நோய்வாய்ப்படும் பொழுதுதான் யாருடைய அருகமைத் துணையாவது தேவைப்படும. அதை நாம் எதிர்பார்ப்போம்; ஆனால், யாருடைய துணையும் கிடைக்காமல், யாரும் பக்கத்தில் வராமல் இருப்பது, யாரும் நெருங்க மாட்டார்கள், தொடமாட்டார்கள் என்பது மிகப் பெரிய மன அழுத்தத்தைக் கொடுக்கிறது என்று மருத்துவர்கள், உளவியல் நிபுணர்கள் சொல்கிறார்கள்.
அந்தக் காலத்தில் பெரியவர்கள் அனைவரும் திண்ணையில் அல்லது அரச மரத்தடியில், கோயில் வளாகங்களில் அமர்ந்து பேசினார்கள். அதைத்தான் இன்று நாம் இணையத்தில், பேஸ்புக்கில் பேசிக் கொண்டிருக்கிறோம். நமக்கு இப்போது திண்ணை கிடையாது, அரசமரம் கிடையாது. இப்படியான சூழல் எல்லாம் மாறிப்போய்விட்டது . பேஸ்புக்கில் என்ன செய்கிறோம்? அங்கும் உரையாடல்தான் நிகழ்த்துகிறோம். யாராவது ஒரு போஸ்ட் போடுகிறார்கள். அதற்குத் தொடர்புடைய ஏதோ ஒன்றைப் பேச ஆரம்பிக்கிறோம்; ஆர்வமுள்ள அனைவரும் அவரவர் கருத்துகளைப் பின்னூட்டங்கள் மூலம் பகிர்கிறார்கள்.
இவ்வாறாக உரையாடல் தொடர்கிறது.
ஆனால், இந்தத் தொடர்பு ஊடகங்களில், மடிக்கணிணியில், மொபைலில், செயலிகளில் நமக்குத் தேவையான தகவல்கள் கிடைத்து விடுகின்றன. சொல்லப்போனால், மனிதர்களைக் காட்டிலும் இந்தத் தொடர்பு சாதனங்களே இன்று அனைவரையும் வழி நடத்துகின்றன. மனிதர்களுக்கிடையிலான உரையாடலை அதிகமாக நிகழ்த்த வேண்டும் என்றால் கதை சொல்லலைக் கையில் எடுத்துக் கொண்டு குழந்தைகளுடன் சேர்ந்து இயங்க வேண்டும் என்பதே புத்தக வாசிப்பின் மூலம்தான் எனக்கு தோன்றியது.
பத்தாண்டுகளுக்கு முன்பு அமனஸ் வில்லி அவர்களுடைய “குழந்தைகளைக் கொண்டாடுவோம்” என்கின்ற புத்தகத்தைப் படித்த பிறகு தான் நான் ஆசிரியராகவில்லையே என்று மிகவும் வருத்தப்பட்டேன். இதற்கு முன்னால் ஆசிரியர் பணியில் எனக்கு எந்த ஈர்ப்பும் இல்லை. அந்தப் பணி வேண்டும் என்று நினைத்ததே இல்லை. அதைப் படித்த பின் வருந்தினேன். ஏனென்றால் ஆசிரியரானால் தினந்தோறும் குழந்தைகளைச் சந்திக்கலாம், பொன்னான வாய்ப்பு என்று எனக்கு தோன்றியது. அதற்குப் பிறகு வேலு சரவணன் அவர்களது நாடகங்கள், செயல்பாடுகளைப் பார்க்கும் பொழுது நம்மால் இப்படியெல்லாம் குதித்து, குரலை உயர்த்திப் பேசி குழந்தைகளை மகிழ்விக்கும் அத்தகைய ஒரு கலையைக் கொண்டுபோய்ச் சேர்க்க முடியுமா என்றெல்லாம் ஐயம் தோன்றியது.
குழந்தைகள் சார்ந்து இயங்க வேண்டும் என்ற எண்ணத்தை விதைத்து ஒரு புத்தக வாசிப்புதான்; ஏதோ ஒரு புத்தகத்தைப் படித்து முடிக்கும் தருணத்தில்தான் குழந்தைகள் சார்ந்து இயங்குவதுதான் எனக்குப் பிரியமாகவும், விருப்பமாகவும் இருந்தது. சாதாரணமாக அலுவலகம், வீடு குழந்தைகள், குடும்பம் என்று போய்க்கொண்டிருந்த நான் ‘இதெல்லாம் இல்லை; வேறு ஏதோ ஒன்று செய்ய வேண்டும்’ என்ற உள்ளுணர்வு என்னை உந்தித் தள்ள ஆரம்பிக்கும் பொழுதுதான் குழந்தைகளுடன் நூலகம், கதை சொல்லுதல் என்கின்ற விஷயங்களில் பங்கெடுத்துக் கொள்கிறேன். அப்பொழுதுதான் தெரிந்தது – ‘கதை சொல்லுதலே ஒரு தியானம்’ என்பது. எல்லாருக்கும் அப்படி இருக்குமா என்று எனக்குத் தெரியவில்லை எனக்கு அப்படி இருந்தது .
கதைகளைச் சொல்லும் போது உணர்வுபூர்வமாக அதிலிருக்கும் போராட்டங்கள் ஆகட்டும்; அதில் அவர்கள் மீண்டு வந்ததோ எதுவாக இருந்தாலும் உணர்வுபூர்வமாக அந்தக் கதைகளைக் கேட்கிறார்கள். கல்லூரி மாணவர்களுக்கு ஆகட்டும், 10, 11, 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு ஆகட்டும்; உண்மைக் கதை மிகவும் பிடிக்கிறது. அக்கதை சம்பந்தமான சின்ன அதிர்வுகள் அவர்கள் மனதுக்குள் ஏற்படுத்தும் என்பது உண்மை; இதில் மாற்றுக்கருத்தே கிடையாது.
நான் சிறுவயதில் இருந்த போது நிறையப் புத்தகங்கள் வந்ததா என்று எனக்குத் தெரியவில்லை. எனக்கு தெரிந்தது சிறுவர் மலர். அந்த சிறுவர் மலரையும் எங்கள் வீட்டில் வாங்கியதில்லை. பக்கத்து வீட்டில் அல்லது ஏதோ ஒரு வீட்டில் வாங்குவார்கள். அவர்கள் படித்து முடித்த பிறகு, அந்தப் புத்தகத்தை வாங்கி வந்து படிப்போம்.அந்த புத்தகத்தில் இருக்கும் குறுக்கெழுத்துப் போட்டிக்கு எழுதுவது; படங்களுக்கு வண்ணம் தீட்ட முடியாது. அவர்கள் புத்தகம் என்பதற்காகக் கதைகளைப் படித்து விட்டு அவர்களிடம் சரியான நேரத்தில் திருப்பிக் கொடுக்க வேண்டும். ஆரம்பிக்கும் போது வேறு புத்தகங்கள் கூட வந்திருக்கலாம். எனக்கு அறிமுகம் கிடைக்கவில்லை அதற்கு முன்னோடி பாட்டிகள் எல்லாம் சொன்னது அவர்கள் சொன்ன புத்தகங்கள் பேரெல்லாம் கேட்பதற்கு அவ்வளவு அழகு. கரும்பு, அணில், யானை என்ற பெயர்களில் எல்லாம் பத்திரிகைகள் வந்திருக்கின்றன.
எங்கள் சித்தி சொன்னது : அந்தக் காலத்தில் புத்தகம் வீடு வீடாக வினியோகம் ஆகுமாம். ஒரு வண்டியில் வைத்து வீதி வீதியாக வந்து புத்தகங்களைக் கொடுத்து விட்டுச் சென்று விடுவார்கள். மறுபடியும் ஒரு வாரம் பத்து நாள்கள் கழித்து மறுபடியும் வந்து அந்தப் புத்தகங்களை வாங்கிக் கொண்டு வேறு புத்தகங்களைக் கொடுப்பார்களாம். நடமாடும் நூலகம் என்று சொன்னார்கள். ஆச்சரியமாக இருந்தது. இன்றைக்கு அப்படியான சூழல் இருக்கிறதா? சென்னையில் இருக்கும் எத்தனை பேர் தங்கள் குழந்தைகளை எல்லாம் அண்ணா நூற்றாண்டு நூலகத்திற்குக் கூட்டிக் கொண்டு போய்க் காண்பிப்பார்கள் என்பது ஒரு கேள்விக்குறியாக இருக்கிறது. எல்லாக் குழந்தைகளுக்கும் மால் தெரியும், திரையரங்குகள் தெரியும். ஆனால் நூலகத்திற்கு எத்தனை பெற்றோர்கள் அழைத்துச் சென்றிருக்கிறார்கள்? சிறார்கள் சார்ந்து எழுதக்கூடிய, இயங்கக்கூடிய, கலையாக அதைக் கொண்டுபோய்ச் சேர்க்கக்கூடிய எல்லாரும் சேர்ந்துதான் இந்த விஷயங்களைக் கொண்டு போய்ச் சேர்க்க வேண்டும்.
ஆங்கிலத்தில் வெளியாகிற மாதிரியான வண்ணப்படங்கள் நிறைந்த, வித்தியாசமான வடிவமைப்புகளைக் கொண்ட புத்தகங்களைத் தமிழில் கொண்டுவர வேண்டும் என்ற பெரும் விருப்பம் எனக்கு. இது ஒரு நாள் நடக்க வேண்டும் என்று நான் ரொம்ப ஆசைப்படுகிறேன். ஆங்கிலத்தில் புகழ் பெற்ற புத்தகங்களில் வரக்கூடிய கதாநாயகர்களின் பெயர்கள் பதித்த டீ ஷர்ட் குழந்தைகள் உபயோகிக்கும் பொருள்கள் இங்கே கடைகளில் கிடைக்கின்றன. அதே போன்று இங்கிருக்கும் கதைகள், நாவல்கள் குழந்தைகளிடம் சென்று சேரணும். சேரும்பொழுது இது மாதிரியான விஷயங்கள் எல்லாம் நடக்கணும். எழுத்தாளர்களும் கலைஞர்களும் ஒருங்கிணைந்து இதை அற்புதமாகக் கொண்டுபோய்ச் சேர்க்கலாம் என்று நினைக்கிறேன். காலம் தான் எவ்வளவு ஆகும் என்று தெரியவில்லை. ஆனால் நம்பிக்கை இருக்கிறது. இப்பொழுது அதிகமான கதைசொல்லிகள் வந்திருக்கிறார்கள். அதிலும் பெண்கள்- வாழ்நாள் முழுக்க குழந்தைகளுடன் இருப்பவர்கள் பெண்கள் தாம். முழுமையாக நூற்றுக்கு நூறு சதவீதம், அதாவது அவர்கள் சாப்பிடுவதில் இருந்து, தூங்குவதில் இருந்து எல்லா விஷயங்களையும் முழுமையாகப் பார்த்துக்கொள்பவர்கள் பெண்கள்தாம். அப்படிப்பட்ட பெண்கள் முன்னுக்கு வந்து, தங்களின் குழந்தைகளைத் தாண்டி சமூகத்தில் இருக்கும் அனைத்துக் குழந்தைகளுக்குமான கதைசொல்லிகளாகக் கதைகளைக் கையில் எடுத்துக்கொண்டு, கொண்டு போய்ச் சேர்ப்பதை ஒரு பெருமையாக உணர்கிறேன். இந்தப் பெண்கள் இத்தனை பேரும் வேறு வேறு வடிவங்களில் கலைகளையும் புத்தகங்களையும் கொண்டுபோய்ச் சேர்ப்பது; அதில் அவர்களுக்கு இருக்கும் ஆர்வம், இதற்கு உறுதுணையாக இருக்கும் குடும்பம் இவை அனைத்தும் வரவேற்புக்குரிய விஷயங்களாக இருக்கின்றன. இன்னும் அதிகமானவர்கள் முன்வர வேண்டும். சிறுவர் எழுத்தாளர், கலைஞர்கள் சங்கத்தில் நடந்த எட்டு நிகழ்வுகளில் எத்தனை பெண்கள் பங்கெடுத்துக் கொண்டார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. அடுத்தடுத்த நிகழ்வுகளில் குறைந்தபட்சம் 50% பெண்கள் இதற்குள் வரவேண்டும்; எழுத வேண்டும். அதிகமான கலையைக் கொண்டு போய் சேர்க்கும் கலைஞர்களாக மாற வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்.
கதை சொல்வது என்பது ஒரு பெரிய சமூகப் பொறுப்பு என்று நான் நினைக்கிறேன். ரொம்ப ரொம்ப யோசித்துத் தேர்ந்தெடுத்து எந்தக் குழந்தைகளுக்கு,எந்த வயதினருக்கு, எந்தச் சூழலில் இருந்து வரக்கூடிய குழந்தைகளுக்குக் கதை சொல்லப்போகிறோம் என்று பார்த்துச் செய்ய வேண்டும்.குழந்தைகளுக்குச் சொல்லக்கூடிய கதைகளாகவும், சுவாரசியமாகவும் இருக்கவேண்டும். இப்படிப்பட்ட கதைகளைத் தேர்ந்தெடுக்கக் கூடிய ஒரு சமூகப் பொறுப்பு என்பது பெண்களுக்கு இயல்பிலேயே இருக்கிறது. பெண்கள் இந்த்த் துறைக்குள் நிறைய வர வேண்டும் என்ற ஆசை இருக்கிறது.பெண்கள் குழந்தைகளைக் குறித்து நிறைய எழுத ஆரம்பித்தால் எளிதாகக் குழந்தைகளிடம் கொண்டுபோய்ச் சேர்க்கலாம் .
முக்கியமாக குழந்தைகளுக்கான பாடல் புத்தகங்கள் குறைவாகத் தான் நம்மிடம் இருக்கின்றன. பாடல்களைக் குழந்தைகளிடம் கொண்டு போய்ச் சேர்ப்பது குறைவாகத்தான் இருக்கிறது. பாடல்கள் மிகவும் முக்கியமானவை. இரண்டு நாட்களுக்கு முன்பு மதுரையில் இருந்து ஓர் அம்மா அழைத்திருந்தார்கள் அவர்கள் புத்தகங்கள் குறித்துப் பேசியபின் சொன்னது: “நீங்கள் கதைகளைச் சொல்கிறீர்கள். அதை எடுத்து என் குழந்தைகளுக்குச் சொல்கிறேன். அவர்களுக்கு வேறு வேறு வயதில் குழந்தைகள் இருக்கிறார்கள்- 10 வயது, ஏழு வயது, ஐந்து வயது. குழந்தைகளுக்கு அந்தப் பாடல்களை எடுத்து அவர்கள் சொல்கிறார்கள் அவர்கள் வீட்டிலேயே சாதாரணமாக சமைக்கும் போதோ, அல்லது வேலை பார்க்கும் போதோ அந்த பாடல்களுடைய மெட்டுகளை அனைவருமே பாடுகிறார்கள். அடம்பிடிக்கும் குழந்தையைக் கையாள்வதற்காக சில பாடல்களை அவர்களை உருவாக்கி பாடியதன் விளைவை அவர்கள் சொன்னார்கள்.அது நன்றாக இருந்தது.
சாப்பிடுகிற விஷயமோ, ஓர் இடத்திற்குக் கிளம்புவதோ அல்லது தலை பின்னிக் கொள்ளும் விஷயமோ- இதற்கெல்லாம் குழந்தைகள் அடம்பிடிக்கும் போது, அதற்காக ஒரு பாட்டை -நான்கே நான்கு வரி- அவர்களே எழுதி விடுகிறார். அதற்கான மெட்டுப் போட்டு அழகாக அதைப் பாடும் பொழுது அந்தக் குழந்தைகளுடைய மனம் கொஞ்சம் கொஞ்சமாக அமைதியாகிறதாம். இசையில் இணைந்து போய் அவர்கள் செய்யும் வேலைகளுக்கு ஒத்துழைப்புக் கொடுக்கிறார்கள் என்று சொன்னார்கள். இது மிகவும் முக்கியமான விஷயம். குழந்தைகளுக்குக் கதைசொல்லிகளை, கோமாளிகளை ஏன் பிடிக்கிறது என்றால் அதையெல்லாம் கேட்கும் பொழுதும் பார்க்கும்பொழுதும்தான் பெரிய மகிழ்ச்சிக்குரிய விஷயங்களாக இருக்கின்றன.
ஒவ்வொரு நாளும் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய ஆளுமைகள் ஆசிரியர்கள். ஏனென்றால் ஆசிரியர்கள் எப்படி நடந்துகொள்கிறார்கள், எப்படிப் பேசுகிறார்கள் என்பதை ஒவ்வொரு நொடியும் குழந்தைகள் கவனித்துக்கொண்டே இருக்கிறார்கள். ஆசிரியர்கள் எப்படி குழந்தைகளை நடத்துகிறார்கள் என்பதைப் பொறுத்துக் குழந்தைகளின் எதிர்காலம் தீர்மானிக்கப்படுகிறது என்பது உண்மை. எனக்கு ஓர் ஆசிரியர் இருந்தார்கள். அந்த ஆசிரியரைப் பிடித்திருந்தது. அவர்கள் எல்லாரையும் ஒரே மாதிரியாக நடத்தினார்கள் அதிக மதிப்பெண் வாங்குபவர்களையும், குறைந்த மதிப்பெண் வாங்குபவர்களையும் ஒரே மாதிரி நடத்தினார்கள். எந்த இடத்திலும் அவர்கள் பாடம் அருமையாக நடத்துகிறார்கள் என்பது எங்களுக்குத் தெரிந்தது இல்லை, ஆனால் அன்பாக இருந்தார்கள். சின்னச் சின்ன விஷயங்கள்தாம் அவர்கள் செய்தவை. ஆனால் அனைவருக்கும் அந்த ஆசிரியையைப் பிடித்திருந்தது. வாழ்நாள் முழுவதும் ஒரு விஷயத்தை நான் கடைப் பிடிப்பதற்கான விதை அவர் விதைத்தது. அந்த ஆசிரியர் அன்பாக நடந்து கொண்டதால் அவர் சொன்னது பிடித்துப்போய் நான் கடைப்பிடிக்கிறேன் என்று நினைக்கிறேன். அப்படி குழந்தைகள் நாள்தோறும் பார்க்கும் ஆசிரியர்கள் உற்சாகமாகவும் ஆற்றலோடும் இருக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. காலையில் நம்மைப் பார்க்கும் குழந்தைகள் மனதில் சொல்லும் வணக்கம் மகிழ்ச்சியாகவும் ஒரு தீப்பொறி பற்றிக்கொள்ளும் விதமாகவும் அமைய வேண்டுமென்று அமனஸ் வில்லியின் புத்தகத்தில்வரும் ஆசிரியர் அழகாகப் பயிற்சிகள் எடுத்துக் கொண்டு சொல்வார். இப்படிப் பல்வேறு விஷயங்கள் குழந்தைகள் இலக்கியங்கள் சார்ந்து, கதைகள் சார்ந்து கலைகள் சார்ந்து நம்மிடம் பேசுவதற்கு நிறைய விஷயங்கள் இருக்கின்றன.உரையை முடிக்குமுன் நான் படித்த சில புத்தகங்களைப் பற்றிச் சொல்கிறேன். பகல் கனவு, சிகப்பு பால் பாயிண்ட் பேனா,போயிட்டு வாங்க சார், குட்டி இளவரசன், அப்பா சிறுவனாக இருந்தபோது, ஒவ்வொரு குழந்தையையும் கொண்டாடுவோம்- இவை போன்ற பல்வேறு புத்தகங்கள் மிகப்பெரிய தாக்கத்தை எனக்குள் ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன. உதயசங்கர் ஐயா, கொ.மா.கோ.இளங்கோ, சுகுமாரன், விழியன், ஆதி வள்ளியப்பன் ,பாவண்ணன் -அவருடைய பாடல்கள், கி.ரா. தாத்தா அவர்களுடைய கதைகள், சிறார் இதழ்கள்- றெக்கை, பஞ்சுமிட்டாய், குட்டி ஆகாயம், தும்பி இதுபோன்று அதிகமான வார, மாத இதழ்கள் வரவேண்டும் .
நல்ல செழிப்பான, சிறார்களுக்கான ஒரு சூழல் உருவாக வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. தொடர்ந்து குழந்தைகளை எழுத வைக்கும் நிகழ்ச்சிகள் நடத்திக் கொண்டிருக்கிறார்கள் . கன்னிக்கோவில் ராஜா அதிகமான குழந்தைகளைக் கதை சொல்ல வைக்கிறார். நீதி மணி, அவருடைய கதைகள் பூதம் தூக்கிச் சென்ற தங்கச்சி. இந்தப் புத்தகத்தை அனைத்துக் குழந்தைகளும் விரும்புகிறார்கள். நான் சமீபத்தில் “ஓ” எப்படிப் போட வேண்டும் என்று கொ.மா.கோ.இளங்கோவின் கதையைச் சொல்லியிருந்தேன். அதை ஒரு பள்ளியில் பாடமாக நடத்தி அதை ஒரு வீடியோவாக எடுத்து அனுப்பி உள்ளனர். ஒரு கடத்தியாக இருக்கிறேன் என்று தோன்றுகிறது. எழுத்தாளர்களிடம் இருந்து கதையை எடுத்து குழந்தைகளுக்குக் கொண்டு செல்லும் ஒரு கடத்தியாக செயல்படுகிறேன் என்று எனக்குத் தோன்றுகிறது. அதில் மிகவும் பெருமையாக உணர்கிறேன்.
அனைவருக்கும் நன்றி, வணக்கம்.
வனிதாமணி
27/09/2020
காணொலி பதிவு :
குறிப்பு:
சிறார் எழுத்தாளர்கள் – கலைஞர்கள் சங்கம் சார்பாக சிறார் கலை இலக்கியச் சந்திப்பு இணைய வழியே நடைப்பெற்றது. மொத்தம் 10 அமர்வுகள், 20க்கும் மேலான சிறப்புரைகள் என மிகவும் சிறப்பாக நடைப்பெற்றது. நிகழ்வின் உரைகளை இங்கு பஞ்சுமிட்டாய் இனையத்தில் ஆவணப்படுத்துகிறோம்.
வீடியோ பதிவுகளாக காண: Click here.
கட்டுரைகளுக்கு : Click here.