குழந்தைகள் சார்ந்து பேசுகிறவர்களும், இயங்குகிறவர்களும் ஒன்றாக இந்தக் கருத்தரங்கில் இருப்பது மிகவும் மகிழ்ச்சியான விஷயம். ஏனென்றால் இந்தப் பேரிடர் காலம் மகிரங்கோவின் ‘வாழ்க்கை பாதை’ நூலை நினைவு படுத்துகிறது. பேரிடர்களால் அதிகம் பாதிக்கப்படுவது குழந்தைகளே. நூறாண்டுகளுக்கு முந்தைய உள்நாட்டுப் போரும் அதனை தொடர்ந்து வரும் Pandemic காலமும் அதனால் பெருமளவு பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்குக் கல்வி தருவதற்கு அவர் எவ்வளவு கடினமான முயற்சிகளை மேற்கொண்டார் என்பதைத்தான் அந்தப் புத்தகம் பேசுகிறது. கிட்டடத்தட்ட நூறு ஆண்டுகள் கடந்து நாம் தற்போது அதே சூழலில் தான் இருக்கிறோம்.
சாதாரணமாகவே குழந்தைகள் எல்லாப் பக்கங்களிலும் அழுத்தப்படுகிறார்கள். தற்போது குழந்தைகள் இன்னும் கூடுதலான அழுத்தத்தில் இருக்கிறார்கள். இந்தச் சூழலில் நாடகத்தின் பங்கு மிக முக்கியமானதாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
குழந்தைகள் நாடகம் என்று வரும்போது நம்முடைய பள்ளிக்கூடத்தில் பார்த்திருப்போம். பிள்ளைகளை நிற்க வைத்து வசனம் எழுதிக் கொடுத்து மனப்பாடம் செய்து ஒப்பிக்க விடாமல் கதையைச் சொல்லி அவர்களின் நடையிலேயே, பேச வைப்பது மகிழ்ச்சியை அளிக்கும். என்னைப் பொறுத்தவரையில் சமீப காலமாக நான் நண்பர்களிடத்தில் பகிர்ந்துகொள்வது, குழந்தைகள் மேல் “அக்கறையாக இருக்கிறேன்” என்று சொல்பவர்களிடம் மிகவும் கவனமாக இருக்கவேண்டும். ஏனென்றால் இவர்களுள் சிலரின் செயல்பாடுகள் குழந்தைகளுக்கு அன்பின் வழியான வன்முறையாக மாறிவிடுகின்றன.
அதைத்தாண்டி குழந்தைகளோடு இணைந்து பயணிக்கிறவர்களும், குழந்தைகள் பற்றி பேசுகிறவர்களும், செயல்படுகிறவர்களும் குழந்தைகளின் மட்டத்துக்கு இறங்கி குழந்தைகளின் குரலை கேட்க ஆரம்பித்திருக்கிறார்கள். அப்படியான நாடகங்கள் இப்பொழுதான் வர ஆரம்பித்திருக்கின்றன.
விஜயகுமாரின் நாடகத்தை நான் ராஜபாளையத்தில் பார்த்தேன், கிளிகள் பற்றிய அற்புதமான நாடகம் அது. குழந்தைகளுக்கு வசனங்களை எழுதி கொடுக்காமல், கதையிலிருந்து ஒரு நாடகத்தை உருவாக்குவது. அப்படி உருவாக்கப்படும் நாடகங்கள் குழந்தைகளின் உலகத்தை வெளிப்படுத்தும். குழந்தைகளும் அவர்களுக்குத் தோன்றிய வசனங்களைப் பேசி, அந்த நேரத்துக்கு ஏற்றாற் போல நடிப்பது அற்புதமாக இருக்கும்.
குழந்தைகளிடமிருந்து கற்றுக்கொள்வதென்பது குழந்தைகளை கவனிப்பதே ஆகும். நாம் பெரும்பாலும் குழந்தைகளுக்கு சொல்லித் தருவதெல்லாம் ஏற்கனவே குழந்தைகளிடம் இருக்கிற பண்புதானே! அவர்களிடமிருக்கும் நல்ல குணங்களை எல்லாம் நாமே மாற்றிவிட்டு, திரும்பவும் நல்ல பண்புகள் குழந்தைகளிடம் இல்லை, சொல்லித் தரவேண்டும் என்று அறிவுரை சொல்ல ஆரம்பித்து விடுகிறோம்.
நாங்கள் ஒரு சிறிய குழுவாக சேர்ந்து பள்ளியில் நாடக முயற்சி செய்யும்போது இதை அனுபவத்திலேயே உணர்ந்தோம். அதாவது அந்தந்த நேரத்திற்குத் தகுந்தாற்போல சூழலுக்கு ஏற்ப மாறிச் சமாளித்துக் கொள்ளும்திறன் குழந்தைகளிடம் இருக்கிறது. (பிரபு சொன்னது போல) ஆசிரியர்களுக்கு நாடகம் என்றால் என்ன? என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும், நாடகம் என்கிற பெயரில் குழந்தைகளிடம் எதையும் திணிக்காமல், கஷ்டப்படுத்தாமல், இயல்பாகவே நடிக்கச் சொல்ல வேண்டும். இன்னும் சொல்லப்போனால் குழந்தைகள் விளையாடுவதே ஒரு நாடகம்தான். அவர்களுக்கான நாடகங்களை அவர்களே உருவாக்கிக் கொள்வார்கள், அதேபோல் மிகவும் இலகுவாக விதிமுறைகளை மாற்றிக்கொள்வார்கள் . விதி என்பது பேருக்கு தான் விதி. நாம் சொல்வது போல மிகப்பெரிய சட்டங்களெல்லாம் குழந்தைகளுக்குத் தெரியாது. அவர்களின் சூழல், தேவைக்கேற்றபடி எப்பொழுது வேண்டுமானாலும் விதிமுறைகள் உடைக்கப்படும், மாறும் அதுவே அவர்களின் ‘புதுவிதி’ . எதையும் எதாகவும் மாற்றிக்கொள்கிற படைப்பாற்றல் குழந்தைகளிடம் இருக்கிறது .
எல்லா விதமான கலை வடிவங்களையும் ஒன்று சேர்த்தது தான் நாடகம். குழந்தைகள் தங்களுக்குள் பேசுவதே நாடகம் தான். நாம் இறுகிப் போய் மேட்டிமைத்தனத்தோடு நடந்து கொள்கிறோம், மாறாக குழந்தைகள் அப்படி இருப்பவர்கள் அல்ல. இன்னமும் இரயிலை பார்த்து டாட்டா காட்டுகிற குழந்தைகளின் குணம் அப்படியே இருக்கிறது. எத்தனை முகபாவங்கள், எத்தனை உடல்மொழிகள், இது எல்லாமே கலந்ததே குழந்தைகள் உலகம், இதைச் சிதைத்துவிடாமல் அந்த உலகத்துக்குள்ளயே பயணப்படுகிறவர்கள் தற்போது அதிகரித்துக் கொண்டே வருகிறார்கள். கலை என்பது இயல்பாகவே எல்லோருக்குள்ளேயும் இருப்பது.
ஓர் ஓவியனாக நான் அடிக்கடிச சொல்லுவது இதுதான். எப்போது குழந்தைகளுக்கு நாம் எதையும் சொல்லித்தர ஆரம்பிக்கிறோமோ அப்பொழுதெல்லாம் அது குழந்தையை விட்டு வெளியே போய்விடும். உதாரணத்திற்கு குழந்தைக்கு வரைய சொல்லித்தரும் போது குழந்தை அதிலிருந்து வரைவதை விட்டு விலகும். பெரும்பாலும் நாம் சொல்லித்தருகிற விஷயங்களை குழந்தைகள் வெறுக்க ஆரம்பிக்கிறார்கள். ஏனென்றால் நாம் விதிகளைத் தான் சொல்லித்தருகிறோம், எப்படி எல்லாம் இருக்கவேண்டும், செய்ய வேண்டும் போன்ற விதிமுறைகளைத் தான் சொல்லித்தருகிறோம். ஆனால் குழந்தைகளின் உலகம் தங்களுக்கான விதிகளை அதுவாகவே உருவாக்கிக் கொள்கிறது, அதைப்போலவே தான் குழந்தைகள் நாடகமும். அந்த நாடகம் குழந்தைகளுக்கு ஏற்றாற் போல தண்ணீரைப் போல அலை பாய்ந்து ஓடுகிறது, அப்படியான உருவாக்கங்களிலே அதிகமான செயல்பாடுகள் தேவையாய் இருக்கும். ஒவ்வொரு வகுப்பறையிலும் கலைவடிவங்கள் வரும்போது கற்றல் கொண்டாட்டமாக மாறிப் போகும். கலகலப்பான வகுப்பறைகள் எப்பொழுதுதான் உருவாக்கப் போகிறோம்? கொரோனா காலத்துக்கு பிறகு பள்ளிக்கூடம் திறக்கும், அப்பொழுது குழந்தைகளுக்கு எவ்வளவு அழுத்தம் இருக்கும்? குழந்தைகளை இன்னும் கொஞ்ச காலத்தில் எவ்வளவு பெரிய அழுத்தத்துக்குள்ளே தள்ளிவிடப்போகிறோம், ஆனால் அதை குறித்த கவலையில்லாமல் இருக்கிறோம்.
ஒரு மாணவனின் அப்பா என்னிடம் செல்பேசியில் பேசும்போது சொன்னார், பள்ளித் திறப்பு தள்ளிப்போகிறதே? என் மகன் மொத்த புத்தகமும் கொஞ்ச நாளில் எப்படி படிக்க போகிறானோ?
இல்லைங்க. பள்ளிக்காலத்துக்கு ஏற்ப பாடம் எல்லாம் குறைப்பார்கள். என்றேன் நான்.
ஐயோ! அப்போது குறைத்த பாடங்களைக் குறித்த அறிவு எங்கிருந்து என் பையனுக்கு கிடைக்கும்? கிடைக்காமலேயே போய்விடுமே என்று புலம்ப ஆரம்பித்துவிட்டார். பாடபுத்தகங்களில் இருக்கிற தகவல்களை தானே நாம் அறிவென்கிறோம். அதைத்தாண்டிய உலகம் இருக்கிறது, வாழ்க்கை இருக்கிறது என யோசிக்க வேண்டிய காலம் இல்லையா இது!. விஜயகுமாரின் பேச்சைக் கேட்க ஆவலாய் உள்ளேன், முன்னுரை என்பதால் இதோடு என் பேச்சை நிறுத்துகிறேன்.
தொடர்ந்து செயல்படுகிறவர்களிடம் இருந்தே, நாங்கள் கற்றுக்கொள்கிறோம். இந்தக் காலத்தில் ஆசிரியர்கள் நிறைய கற்றுக்கொள்கிறார்கள். அரசுப் பள்ளிகள் அளவிற்கு மாற்றங்கள் நிகழும் என நம்புகிறேன். நூற்றுக்கணக்கான ஆசிரியர்கள் கலை வடிவங்களைக் கையில் எடுத்து இருக்கிறார்கள். ஒரு நாடகப் பயிற்சியும், ஒரு பறை இசை பயிற்சியும் தொடர்ந்து நடத்தி முடித்திருக்கிறோம். நாடகப் பயிற்சியானது தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டே இருக்கிறது, பல மாற்றங்களோடு புதுப்பித்துக்கொண்டே இருக்கிறது. இப்படி அனைவரும் வெவ்வேறு தளத்தில் தன்னைப் புதிதாக ஈடுபடுத்திக்கொள்ளக் கூடிய சூழல் இப்பொழுது இருக்கிறது. விஜயகுமாரின் உரையைக் கேட்போம்.
நன்றி!
காணொலி பதிவு :
குறிப்பு:
சிறார் எழுத்தாளர்கள் – கலைஞர்கள் சங்கம் சார்பாக சிறார் கலை இலக்கியச் சந்திப்பு இணைய வழியே நடைப்பெற்றது. மொத்தம் 10 அமர்வுகள், 20க்கும் மேலான சிறப்புரைகள் என மிகவும் சிறப்பாக நடைப்பெற்றது. நிகழ்வின் உரைகளை இங்கு பஞ்சுமிட்டாய் இனையத்தில் ஆவணப்படுத்துகிறோம்.
வீடியோ பதிவுகளாக காண: Click here.
கட்டுரைகளுக்கு : Click here.