புககொ2020-இந்து அரசியத்தில் பெருநிறுவனமயமான, மேட்டிமைத்தனம் நிறைந்த கல்விக்கு வழிவகுத்தல் – நிவேதிதா மேனன்

வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

என் பகுப்பாய்வு மட்டுமின்றி, புககொ-வின் இறுதி வடிவம் மற்றும் முன்வரைவுகள் (குறிப்பாக 2019 முன்வரைவு) மீது சவகர்லால் நேரு பல்கலை ஆசிரியர் சங்கத்தினர் உள்ளிட்ட கல்வித் திட்டக்கொள்கை வல்லுநர்கள், ஆசிரியர்கள் ஆகியோர் முன்வைத்த திறனாய்வுக் கருத்துகளும் இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ளன.

புககொ-வின் தொடக்க நிலை அறிக்கை உருவாக்கத்தில் கல்வியாளர்கள், ஆசிரியர்கள் போன்றவர்களுக்கு எந்தப் பங்கும் அளிக்கப்படவில்லை. மேலும், இந்திய அரசியற்சட்டத்தில் கல்வி [மாநிலங்களுக்கும் நடுவணரசுக்கும் பொதுவான] பொதுப் பட்டியலில் இருக்கும் நிலையிலும், அறிக்கை உருவாக்கத்தில் மாநிலங்களுக்கு எந்தப் பங்கும் அளிக்கப்படவில்லை.

ஆகவே, புககொ-2020 எவ்வாறு இறுதிப்படுத்தப்பட்டது என்பது குறித்த பகுப்பாய்வில் இருந்து இந்தக் கட்டுரையைத் தொடங்குகிறோம்.

1. திட்டக்கொள்கை உருவாக்கத்திலும் இறுதிப்படுத்தலிலும் கையாளப்பட்ட பிழையான செயல்முறைகள்

1.1 கலந்தாய்வுக்கு இடந்தராத செயல்முறை:
இதற்கு முன்னர் வெளியான கல்வித் திட்டக்கொள்கைகள் அனைத்தும் மிகப் பரந்த அளவில் கலந்தாய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டன. 1 ஆனால் புககொ-2020 அப்படி உருவாகவில்லை. “முன்னெப்போதும் இல்லாத அளவுக்குக் கூட்டு முயற்சியில், பல தரப்பினரையும் உள்ளடக்கிய, தொடர்ந்து பலர் பங்குபெற்ற கலந்தாய்வுச் செயல்முறை” இருந்ததாக ஊடகவியலாளர் சந்திப்பில் கூறப்பட்டது. ஆனால், மாநிலங்களுடன் ஆலோசனை செய்யப்படவில்லை என்பதை அந்தச் சந்திப்பில் காட்டப்பட்ட ஒரேயொரு காட்சி வில்லை தெளிவாகக் காட்டுகிறது.

மேலும், புககொ முன்வரைவு-2019-இன் மீது தான் பொதுமக்கள், ஊராட்சிகள், வட்டாரங்கள் ஆகிய அனைத்து நிலைகளில் இருந்தும் பின்னூட்டம் பெறப்பட்டதேயன்றி அந்த முன்வரைவு உருவாக்கத்தில் அது நடைபெறவில்லை என்பதை அரசே தெரிவிக்கிறது.

முன்வரைவு 2019 மே மாதம் வெளியிடப்பட்டது. மக்கள் தம் கருத்துகளைத் தெரிவிப்பதற்கு இரண்டு மாத அவகாசம் மட்டுமே தரப்பட்டது. ஆக, அது ஒப்புக்கு நடத்தப்பட்ட மேலோட்டமான கலந்தாய்வு. இறுதிப்படுத்தப்பட்ட திட்டக்கொள்கை கொரோனாத் தீநுண்மித் தாக்குதலுக்கு இடையில் 2020 சூலை மாதம் வெளியிடப்பட்டுவிட்டது.

இதற்கு முன்னர் வெளியான திட்டக்கொள்கைகள் நாடு முழுக்க ஓராண்டுக்கும் மேல் விவாதிக்கப்பட்ட பின்னரே வெளியிடப்பட்டன.

1.2 இறுதித் திட்டக்கொள்கையைப் பற்றித் தெளிவற்ற நிலையைத் திட்டமிட்டுக் கடைப்பிடித்தல்
“தேசியக் கல்வித் திட்டக்கொள்கை 2020” என்று சொல்கையில் குறிப்பாக எதைப் பற்றிப் பேசுகிறோம்? இந்த அரசின் வழக்கமான செயற்பாடுகளைப் போலவே இதிலும் ஒளிவுமறைவு நிலவுகிறது: எந்த ஆவணத்தில் இருக்கும் கல்வித் திட்டக்கொள்கை நடைமுறைக்கு வரப்போகிறது என்பது சரியாகத் தெரியவில்லை. தே.க.கொ. என்ற பெயரில் மாந்த வள மேம்பாட்டு அமைச்சகம் (MHRD) இணையத்தில் 66-பக்க ஆவணம் ஒன்றை வெளியிட்டுள்ளது. 2

ஆனால், இது தவிர அரசுத் துறைகள் குறைந்தது மூன்று வெவ்வேறு ஆவணங்களைச் சுற்றுக்கு விட்டுள்ளன:

  • தே.க.கொ. 2019-இன் மூல முன்வரைவு (DNEP 2019); கச்தூரிரங்கன் குழுவின் அறிக்கை; ஏறக்குறைய ஐநூறு பக்கங்களில் உள்ளது.
  • 55-பக்கங்களில் சுருக்கப்பட்ட அறிக்கையை தே.க.கொ. 2019 (NEP 2019) என்ற பெயரில் MHRD வெளியிட்டது.
  • சூலை 29 அன்று அறுபது பக்க அறிக்கையொன்றை NEP 2020 Final for Circulation என்ற பெயரில் MHRD வெளியிட்டது.
  • அதற்கு அடுத்த நாளே அறுபத்தாறு பக்க அறிக்கை NEP 2020 Final என்கிற பெயரில் அமைச்சகத்தின் இணையத் தளத்தில் வெளியாகிற்று.

மேற்கண்ட 66-பக்க இறுதி அறிக்கையில் குழு உறுப்பினர்களுடைய பெயர்களோ கையெழுத்துகளோ இல்லை.

மேலும், இது இருநூறு பக்கங்கள் உள்ள திட்டக்கொள்கை ஆவணத்தின் சுருக்கம் என்றும் அந்த இருநூறு பக்க ஆவணம் வெளியிடப்படவில்லை என்றும் கூறுகிறார் NCERT முன்னாள் இயக்குநர் பேராசிரியர் கிருச்ண குமார். 3

ஆகவே, ஐநூறு பக்கங்களைக் கொண்ட 2019 முன்வரைவில் இருந்து விடுபட்டவற்றில் எந்தெந்தப் பகுதிகள் வருங்காலத்தில் திட்டக்கொள்கைகளாகவும் சட்டவிதிகளாகவும் உருவெடுக்கும் என்பதை நாம் இப்போது அறிய இயலாது.

1.3 நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படவில்லை
நாடாளுமன்றத்தில் விவாதிக்க இடந்தராமலே தே.க.கொ.-வை அமைச்சர் குழாம் ஏற்றுக்கொண்டுவிட்டது. ஆகவே, மாநிலங்களும் பா.ச.க. தவிர்த்த பிற கட்சிகளும் கலந்தாய்வில் இருந்து முற்றிலும் ஒதுக்கப்பட்டனர் என்பது தெரிகிறது.

பின்வரும் ஆய்வுரை NEP 2020 Final என்ற பெயரில் MHRD-யின் இணையத் தளத்தில் இருக்கும் ஆவணத்தின் அடிப்படையில் அமைந்துள்ளது. 4

தொடரும்…

ஆங்கில மூலக் கட்டுரையாளர்: நிவேதிதா மேனன் (2020 செப். 08)

தமிழாக்கம்: பரிதி

கட்டுரையை முழுமையாக வாசிக்க :

ஆங்கிலத்தில்
தமிழில்

 

Leave a comment