உலகை உலுக்கிய பேரிடர் காலத்தில்,நலிந்து போன குடும்பங்கள் பற்பல. ஏற்கனவே உழைத்துத் தேய்ந்த ரேகைகள் இருந்த இடம் தெரியாமல் நடந்தே அழிந்த கால்களும் பற்பல. என்னென்னனவோ சொல்ல முடியாத பல மனக்குழப்பங்களில் பெற்றோர் இருக்கையில், பள்ளி செல்லாமல் வீட்டில் அடைபட்டுக் கிடைக்கும் சிறுவர்களின் நிலை சொல்லில் அடங்காது.
எத்தனையோ பேர் வாழ்வாதாரம் இழந்தோருக்கும், வாங்கும் நிலை வாய்க்காதோருக்கும் பலரும் பல்வேறு வழிகளைக் கண்டுபிடித்து முடிந்தவரை உதவி செய்தனர். மனிதம் அழிந்தது விட்டது என்று கூவிக் கொண்டிருந்த அனைவருக்கும், “உங்கள் கண்களைத் திறவுங்கள், நான் இங்கேதான் இருக்கிறேன்!” என்று பேருருவம் காட்டிச் சிரித்தது மனிதம். பொருளுதவி பற்பலர் செய்த போதும், மன உளைச்சல் என்பதை நல்லபடி எதிர் கொள்ள பலருக்கும் வாய்ப்பு கிடைக்க வில்லை.
பள்ளி செல்ல முடியாத சிறுவர்கள், சத்துணவை நம்பி வாழும் சிறுவர்கள், எந்த தொலைத்தொடர்பு கருவிகளும் இதுவரை சொந்தமாக்கிக் கொள்ள முடியாதோரும் அடைந்த இடர்பாடுகள் கொஞ்சமல்ல. வருங்கால தலைமுறையினரின் சஞ்சலங்கள் போக்க, சிறுவர்களுக்கான கதை நேரம், விளையாட்டு நேரம், வண்ணங்களின் வரிசைகள், அறிவியல் செய்திகள் என்று சிறுவர் செயல்பாட்டாளர்கள் தங்கள் பங்குக்கு களத்தில் இறங்கினார்கள்.
அறத்தில் சிறந்த அறம், அங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல் என்று நாம் அனைவரும் படித்திருக்கிறோம். ஒருசிலர் மட்டுமே கசடறக் கற்றார்கள், அவரிலும் சிலர் மட்டுமே அதற்குத்தக நிற்கிறார்கள். இந்த நிகழ்ச்சிகளை மட்டுமே நம்பி தம் கல்வியை வளர்த்துக் கொண்ட மாணவர்கள் கூட இருக்கிறார்கள் என்பது நாடறிந்த உண்மை. இது போன்ற நிகழ்வுகளைத் தொடர்ந்து முன்னெடுத்த பல தன்னார்வலருக்கும், பொது மக்களாகிய நாம் அனைவரும் நன்றிக் கடன் பட்டுள்ளோம். அந்த நிகழ்வுகளின் நடு நட்சத்திரமாய் விளங்கியது, “பஞ்சுமிட்டாய் சிறுவர் இதழ்” நடத்திய, “ஏன் எதற்கு எப்படி?” என்னும் நிகழ்வு.
பஞ்சுமிட்டாய் சிறுவர் இதழ் வாரந்தோறும் ஒரு இணைய வழி நிகழ்வை நடத்தி வருகிறது, அதில் என்னைப் பெரிதும் கவர்ந்தது இந்த நிகழ்வு. பலரும் இணைய வழி சந்திப்புகள் மூலம் சிறுவர்களை இணைத்தாலும், கதை சொல்பவர், பொம்மலாட்டம் நிகழ்த்துபவர் என்று பெரியவர்கள் முன்னிலைப்பாடு இருந்தது. அதாவது (Host-Centered Events). இந்த நிகழ்வு, குழந்தைகளை, வெகு சுதந்திரமாக, எந்த கேள்வி வேண்டுமானாலும் கேட்கலாம், யார் வேண்டுமானாலும் கேட்கலாம் என்று அனுமதித்தது. அதாவது , முழுவதுமான Child-Centered Event.
இதற்கு சிறப்பு விருந்தினராக, விஞ்ஞானியும், சிறுவர் இலக்கியத்தில் எழுத்தாளராகவும் விளங்கும் திரு.த.வி.வெங்கடேஸ்வரன் அவர்கள் வந்திருந்தார். குழந்தைகளை ஊக்குவித்து, அனைத்து வகையான கேள்விகளுக்கும் பொறுமையான, தெளிவான பதிலை சொல்லிக் கொண்டு வந்தார். சிறுவர்களின் அறிவியல் ஆற்றலைக் கண்டு நான் வியந்து போனேன். ஒருவரின் அறிவுத்திறன் வெளிப்படுவதே அவரது கேள்வி கேட்கும் திறனில் இருந்துதான். அனைத்து மாணவர்களின் திறனும் இந்நிகழ்வில் வெளிப்பட்டது.
“Science க்கு “Science” என்று ஏன் பெயர் வைத்தார்கள்?”, எனது முதல் ஒரு நாளுக்கு 25 மணி நேரமாக மாறும் வாய்ப்பு உள்ளதா? ராக்கெட்டுகளில், எப்போது திரவ எரிபொருள் பயன் படுத்துவார்கள், திட எரிபொருள் எப்போது பயன்படுத்துவார்கள் என்பது போன்ற கேள்விகள் பெற்றோர்களை பெரிதும் மலைக்க வைத்திருக்கும். ஆனால், திரு.வெங்கடேஸ்வரன் இவற்றையெல்லாம் அவ்வளவு அழகாக, எளிமையாக வாழ்வியலில் குழந்தைகள் புரிந்து கொள்ளும் படியான அழகான உதாரணங்களுடன் சொல்லித்தந்தார்.
கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் நடந்த அந்த நிகழ்வில், “சார்! எனக்கு ஒரு டவுட்டு!” என்ற குரல் எப்போதும் கேட்டுக் கொண்டிருந்தது. ஒரு குழந்தை அதையும் தாண்டி, “சார்,சார்! என் கேள்விக்கு கூகுளில் கூட விடை கிடைக்கவில்லை, எனக்கு மட்டும் கொஞ்சம் பதில் சொல்லுங்க சார், ப்ளீஸ்!” என்று பலமுறை கேட்டாள். நிகழ்வு முடியும் முன்னர் அவளுக்கும் மறக்காமல் விடையளித்து, குழந்தைகளைக் கொண்டாடிய நிகழ்வு, என் மனதில் மட்டுமின்றி அனைவரின் மனதிலும் என்றும் ரீங்காரம் இட்டுக் கொண்டே இருக்கும்.
ம்…ம்….,புரியுது..புரியுது. நீங்களும் இந்த நிகழ்வைப் பார்க்கவேண்டும் என்று விரும்புகிறீர்கள் தானே?
கவலையே படாதீர்கள். நமது பஞ்சுமிட்டாய் youtube பக்கத்தில் தொடர் பகுதிகளாக அவை வெளியிடப் பட்டுள்ளன. அதன் சுட்டிகளை உங்களுக்காக இங்கே தருகிறேன். யான் பெற்ற இன்பம், பெறுக இவ்வையகம்.
-
https://www.youtube.com/watch?v=HadK9SO6bZs&list=PLKkbYEELPUMDkz4k7ZBcga83a9VwwDO4n
-
https://www.youtube.com/watch?v=ankbp5ZRoJk&list=PLKkbYEELPUMDkz4k7ZBcga83a9VwwDO4n&index=2
“குழலினிது யாழினிது என்பதம் மக்கள் மழலைச்சொல் கேளா தவர்” என்பார் வள்ளுவர். அந்த குழலினும் யாழினும் இனிய மொழி, “சார்! எனக்கு ஒரு டவுட்டு” என்பதுதான் என்று அந்த நிகழ்வில் நான் அறிந்து கொண்டேன். இத்தகைய இனிய, என்றும் நினைவில் நிற்கும், புதுமையான இணைய நிகழ்வை நடத்திக் காட்டிய பஞ்சுமிட்டாய் இதழுக்கு நன்றியும், வாழ்த்துகளும்.
அன்புடன்,
பிரவீணா இராமரத்தினம்,
மிச்சிகன், வட அமெரிக்கா.