லலிதாம்பிகா அந்தர்ஜனமின் “கிராம பாலிகா” – பி.வி.சுகுமாரன் (எனக்குப் பிடித்த மலையாள சிறார் நூல்கள் – 05)

வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

மலையாள இலக்கியத்தில் குறிப்பிடத்தகுந்த எழுத்தாளர் பி.வி.சுமாரன், தனக்குப் பிடித்த மலையாள சிறார் இலக்கிய நூல்களை, நமது பஞ்சுமிட்டாய் இணையத்தள வாசகர்களுக்காகப் பிரத்யேகமாக எழுதிவருகிறார். இது தனது வாசிப்பையும் எழுத்துலகையும் திட்டமிட்டுள்ள உதவிய/உதவிக்கொண்டிருக்கும் நூல்களாக இந்த அறிமுகத்தை அமைத்துக்கொண்டிருக்கிறார். அந்த வரிசையில் இந்தப் பகுதியில் புகழ்பெற்ற எழுத்தாளர் லலிதாம்பிகா அந்தர்ஜனமின் “கிராம பாலிகா” நூலை அறிமுகப்படுத்துகிறார்.

சிறார் இலக்கியத்தில் அடிக்கடி எழுதப்படும் வகை  டைம் டிராவல் (Time Travel)எனப்படும் காலப் பயணம். அதாவது ஒருவர் தற்போது இருக்கும் காலத்திலிருந்து குறிப்பிட்ட காலம் பின்னோக்கி அல்லது முன்னோக்கிச் செல்லும் விதமாக எழுதப்படும். இந்த வகை எழுத்தில் பின்னோக்கிச் செல்லும்போது அரசர் காலத்து கதைகளாகவும் முன்னோக்கிச் செல்லும்போது அறிவியல் புனைகளாகவும் மாறிவிடும். இந்த முறை எழுத்து சிறார்க்கும் பிடிக்கும் என்பதால் பலரும் காலப்பயணக் கதைகளை எழுதுவதில் ஆர்வம் காட்டுகிறார்கள்.

இதையே நாம் சற்று புரட்டிப்பார்த்தால் சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன் எழுதிய கதையை இன்று படித்தால் அதுவும் ஒருவகையில் காலப்பயணம்தானே… அதாவது அந்தக் கதை ஐம்பது ஆண்டுகளுக்கு முன் நடந்த அல்லது நடக்கும் விதமாக எழுதப்பட்டிருக்கும். அதன் கதாபாத்திரங்கள், உடைகள், கதை நடக்கும் இடம், அதைச் சுற்றியுள்ள விஷயங்கள் என அனைத்தும் ஐம்பது ஆண்டுக்கு முன் உள்ளவையாக இருக்கும். ஒரு படைப்பு அதற்குள் வாசகரை ஈர்க்கும் தன்மை இருக்கும்பட்சத்தில் இந்தப் படைப்புக்குள்ளும் வாசகர் சென்றுவிடுவார். அப்படியெனில், அது எழுதப்பட்ட ஆண்டில்தானே வாசகர் இருக்க வேண்டும். அதனால் இதுவும் ஒருவகை காலப்பயணமே. அப்படியான ஒரு காலப்பயணமாக கிராம பாலிகா (Grama Balika) நூல் இப்போதுள்ள சிறார்க்கு அமையும். நான் வாசித்தது முப்பது, நாப்பது ஆண்டுகளுக்கு முன்.

மலையாள இலக்கியத்தில் புகழ்பெற்ற எழுத்தாளர் லலிதாம்பிகா அந்தர்ஜனம் எழுதிய சிறார் நாவல் கிராம பாலிகா. முதலில் கதை என்னவென்பதைப் பார்த்துவிடுவோம். அதற்கு முன் இந்த நாவலின் முதல் பிரதி 1951 ஆம் ஆண்டு வெளிவந்தது என்பது தெரிவித்துக்கொள்கிறேன். அப்படியெனில் இக்கதை 1950-களில் நடைபெறுகிறது என்பதை மனதில் நிறுத்திக்கொள்க.

ரொம்ப அழகான ஒரு கிராமம். அங்கே ஜானு எனும் 13 வயது சிறுமியும் அவளின் அன்பு தம்பியும் இருக்கிறார்கள். இவர்களின் அப்பா ஒரு விபத்தில் இறந்துவிடுகிறார். அம்மா கடும் உழைப்பாளி. இருவரையும் கஷ்டப்பட்டு வளர்க்கிறார். ஆனால், ஏழ்மையால் ஜானுவைத் தொடர்ந்து படிக்க வைக்க முடியாமல், 3-ம் வகுப்போடு நிறுத்த வேண்டியதாயிற்று. அதன்பின், அவளும் அம்மாவோடு சேர்ந்து மாடுகளுக்கு உணவாகத் தரப்படும் புற்களை அறுத்து வந்து ஊரில் விற்றுவந்தாள்.

ஒருநாள் ஜானுவை ரேஷன் கடைக்கு அனுப்புகிறார் அம்மா. ஜானும் அரிசி வாங்கி வந்தால்தான் அன்றைக்கு சாப்பாடு சமைக்க முடியும். வீட்டில் வேறு அரிசி ஏதும் இல்லை. ஜானு ரேஷன் கடைக்குச் சென்றபோது நீண்ட வரிசை இருந்தது. அதில் ஜானும் சேர்ந்து நின்றுகொள்கிறாள். ஆனால், ஜானு கடையை அடைவதற்குள் நேரம் முடிந்துவிட்டது என கடையைப் பூட்டிவிட்டு சென்றுவிடுகிறார் ஊழியர்.

’இனி என்ன செய்வது’ என யோசித்துக்கொண்டே வருகிறாள் ஜானு. அப்போது சாலையோரத்தில் ஒரு முதியவர் படுத்துக்கிடக்கிறார். வயது எப்படியும் 60-க்கும் அதிகமாக இருக்கும். அவரைப் பார்த்து எல்லோரும் ஒதுங்கியே சென்றார்கள். ஜானுக்கு அவரைப் பார்த்ததும் பாவமாக இருந்தது. அதனால், அவர் அருகே சென்று பார்க்கிறாள். அவர் தண்ணீர் வேண்டும் எனக் கேட்டதும் ஓடிச்சென்று தண்ணீர் எடுத்து வந்து கொடுக்கிறாள். முதியவர் அதைக் குடிக்கிறார். பின், அரிசி வாங்க அம்மா கொடுத்த பணத்தில் முதியவருக்கு ஒரு காபி வாங்கித் தருகிறாள்.

ஜானுவைப் பற்றி அந்த முதியவர் விவரங்களைக் கேட்கிறார். ஜானுவும் தன் அப்பா, அம்மா பெயர் உள்ளிட்டவற்றக் கூறுகிறாள். முதியவருக்கு யாரும் இல்லை எனப் புரிந்துகொள்கிறாள். அதனால், அவரை தன்னோடு வீட்டுக்கு அழைத்துவருகிறாள். அரிசியோடு வருவாள் என நினைத்த ஜானு, பெரியவர் ஒருவரோடு வந்திருப்பதைப் பார்க்கிறார் அம்மா. நடந்ததையெல்லாம் அம்மாவிடம் சொல்கிறாள் ஜானு. பெரியவர் வீட்டில் இருப்பது அம்மாவுக்குப் பிடிக்க வில்லை. ஜானு அடம்பிடிக்கிறாள் என்பதற்காக சம்மதிக்கிறார். ஜானு அவரை தாத்தா .. தாத்தா என்று அழைக்கிறாள்.

ஒருசில நாள்களில் தாத்தாவுக்கு உடல்நிலை சரியாகி இயல்பாக இருக்கத் தொடங்குகிறார். ஜானுவுடன் புற்கள் அறுக்க தாத்தாவும் செல்கிறாள். கொஞ்சம் கொஞ்சமாக அந்த வீட்டைச் சுற்றி தோட்டம் அமைத்து நந்தவனம் போல மாற்றிவிடுகிறார் தாத்தா. ஜானும் வளர்ந்துவருகிறாள். 18 வயதை அடைகிறாள் ஜானு.

சில ஆண்டுகளுக்குப் பிறகே தெரியவருகிறது தாத்தா பெரிய பணக்காரர்; ஏராளமான நிலங்களும்; பேக்டரியும் அவருக்கு உண்டு என்பது. அவரின் பேக்டரியில்தான் ஜானுவின் அப்பா வேலை பார்த்திருக்கிறார். தாத்தாவின் சொத்துகளைப் பங்கு பிரித்துத்தரச் சொல்லி அவரின் மகன், மகள் தொந்தரவு தந்தனர். அதில் ஏற்பட்ட பிரச்னையில்தான் அன்றைக்கு தெருவோரத்தில் கிடந்திருக்கிறார் தாத்தா.

தாத்தாவுக்கு கடைசிப் பையன் ஒருவன் இருக்கிறான். அவன் ரொம்ப சோம்பேறி. ஆனால், பணத்தின் மீது ஆசை கிடையாது. அவனுக்கு ஜானுவைத் திருமணம் செய்துவைக்க நினைக்கிறார் தாத்தா.  இறுதியாக, தாத்தா தன் சொத்துக்களை உயில் எழுதிவைக்கிறார். தம் நிலங்களை, சொத்துகளை ஏழைகளுக்கும் அனாதைகளுக்கும் எழுதி வைக்கிறார். தாத்தாவின் கடைசி மகன் வருகிறான். அவனிடம் ஜானுவைத் திருமணம் செய்துகொள்ள சம்மதா எனக் கேட்கிறார். ஜானுவின்  நடவடிக்கைகளைப் பார்த்துக்கொண்டிருந்த அவனுக்கு இப்படி ஓர் எண்ணம் முன்பே இருந்தது. அதனால், அவனும் சம்மதிக்கிறான். இருவருக்கும் திருமணம் நடத்தி வைக்கிறார். பிறகு அவர் நிம்மதியான உறக்கத்திற்குள் செல்கிறார்.

மிக மிக எளிய கதைதான். இன்னும் சொல்லப்போனால் பல சினிமாக்களில் பார்த்து பழகிய கதைதான். ஆயினும் சிறார் வாசிக்கையில் அந்தக் காலத்தின் சூழலைப் புரிந்துகொள்ள முடியும். நகரத்தில் உள்ள சிறுவர்களுக்கு ஒரு சிறுமி வீட்டின் பொருளாதாரச் சுமையைப் பகிர்ந்துகொள்வதற்காக படிப்பை கைவிட வேண்டியிருந்தது என்பதே புதிதாகத்தானே இருக்கும். மேலும், அப்போது எழுதிய மொழிநடை. இப்போது சோர்வளிக்கலாம். ஆனால், சில சொற்களை புழக்கத்திலிருந்து நாம் நழுவ விட்டிருப்போம். அவற்றைத் தெரிந்துகொள்ள உதவும். மொத்தத்தில் 1950-களில் ஒரு வாழ்க்கை முறை எப்படி இருந்தது என்பதைத் தெரிந்துகொள்ள சிறுவர்களுக்கு உதவும்.

1909 ஆம் ஆண்டில் கேரளத்தின் கொல்லம் மாவட்டத்தின் சிறுகிராமத்தில் பிறந்தவர் லலிதாம்பிகா அந்தர்ஜனம். வரதட்சணைக் கொடுமை, சமூக அநீதிய வலியுறுத்தும் சம்பிரதாயங்கள் உள்ளிட்டவற்றைக் கடுமையாகச் சாடி கதைகள் எழுதினார் லலிதாம்பிகா அந்தர்ஜனம். அப்படியான ஒரு கதை மனுஷ்ய புத்ரி. இது இவரின் புகழ்பெற்ற கதைகளில் ஒன்று. அந்தக் கதையை தமிழில் ராஜம் கிருஷ்ணன் மொழிபெயர்த்திருக்கிறார். தினமணி இணையத்தளத்தில் இப்போதும் வாசிக்கக் கிடைக்கிறது.

கவிதைகள், சிறுகதைகள், நாவல் என இலக்கியத்தின் பல தளங்களில் இயங்கியவர். இவர் எழுதிய அக்னி சாட்சி எனும் நாவல் அதேபெயரில் மலையாள திரைப்படமாக்கப்பட்டது. 1999 ஆம் ஆண்டு வெளியான இப்படத்தில் ரஜித் கபூர், ஷோபனா, ஸ்ரீவித்யா நடிக்க ஷ்யாம் பிரசாத் இயக்கியிருந்தர். இப்படம் நேஷனல் விருது வென்றது. கேரள அரசின் விருதுகளில் 9 பிரிவில் விருதைத் தட்டிச்சென்றது. இந்த நாவல் கேந்திர சாகித்ய அடாமி, கேரளா சாகித்ய அகாடமி, வயலார் விருது உள்ளிட்ட விருதுகளைப் பெற்றது.

பெரியவர்களுக்கான இலக்கியத்தில் இவ்வளவு புகழ்பெற்றவர்கள் சிறார் இலக்கியத்தில் ஈடுபடும்போது, அப்படைப்புக்கு மட்டுமல்லாமல் சிறார் இலக்கியத்தின் மீது தனி கவனம் வந்துவிடுகிறது.

Leave a comment