எறும்பே எறும்பே இந்தத் தோட்டம் யாருது? – வனிதாமணி அருள்வேல் (கதை சொல்ல போறேன் – பகுதி 03)

வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

அழகிய மலையோர கிராமம், அரசு நூலகம், மலைக்கிராம குழந்தைகள் , நூலக வாசலில் நின்ற வேப்ப மர நிழலில் கதை நிகழ்வு. எப்போதும் கதை நிகழ்வு இப்படி கட்டிடம் விட்டு வெளியே மரத்தடி அல்லது வராண்டா மாதிரி இடங்களில் நடத்துவது பிடிக்கும். குழந்தைகளுக்கு மட்டுமல்ல எனக்கும் பிடிக்கும்.

அந்த அரசு நூலகர், குழந்தைகளை தொடர்ந்து நூலகம் நோக்கி வரவழைக்க நிறைய விசயம் செய்கிறார். கேரம் போர்டு ,செஸ் , போன்ற விளையாட்டு உபகரணங்களை வாங்கி வைத்து குழந்தைகளோடு விளையாடுகிறார். அவ்வப்போது நாடக கலைஞர்கள் , கோமாளி வேடம் போடுபவர்களை அழைத்து நிகழ்வு நடத்துவார்.இப்படி அந்த கிராம குழந்தைகள் நூலகம் நோக்கி வர மற்றோர் உத்தியாக என்னை ஒரு “கதைசொல்லியாய்” அழைத்திருந்தார்.

முதலில் சிறு விளையாட்டு என்றதும் சிறார் கூட்டம் ஆரவாரித்தது, மரத்தை சுற்றித்தான் விளையாட்டு என்றதும் “ஓ…” என கத்தினார்கள். “நட” என்றால் மரத்தை சுற்றி நடக்கணும், “ஓடு” என்றால் ஓடணும், “நில்” என்றால் அப்படியே அசையாமல் நிற்கணும், “குதி” என்றால் ஒரு குதி குதித்து விட்டு நடக்கணும், “பெயர்” என்று சொன்னால் அவரவர் பெயரை கத்தி சொல்லிவிக்கொண்டே நடக்கணும், “ஹலோ” என சொன்னால் பக்கத்தில் நடந்து வருபர்களை பார்த்து கை கொடுத்த ஹலோ என சொல்லி தொடர்ந்து நடக்கணும். இந்த விதிமுறைகள் சொல்லிமுடித்ததும் விளையாட்டு துவங்கியது. கொண்டாட்டம் அன்றி வேறென்ன? குழைந்தைகள் போட்ட மகிழ்ச்சி கூச்சலில் கிராம மக்கள் சிலரும் நிகழ்விடம் வந்து சேர்ந்தனர்.

ஒரு 12 வயது குழந்தை மட்டும் நில் என்றால் நடந்தது , நட என்றால் ஓடியது, கவனித்து கொண்டே இருந்தேன். விளையாட்டு முடிந்து கதைக்குள் பயணிக்க எத்தனிக்கும் நேரம். அந்த 12 வயது குழந்தையின் சிறப்பம்சம் குறித்து நூலகரிடம் தனியே பேசி தெரிந்து கொண்டேன். அக்குழந்தையை முன்னே அழைத்து, எல்லாரும் இந்த குழந்தைக்கு கை தட்டுங்க என்றேன், “ஏன்னா இவன் பல மரங்கன்றுகளை மலையோரத்தில் நட்டு, தொடர்ந்து நீர் ஊற்றி பராமரிச்சுட்டு வர்றான்” என்ற விவரத்தை சொன்னேன். உற்சாகமாக அனைவரும் கை தட்டி பாராட்டினர். சிறுவனின் முகம் மலர்ந்து ஜொலித்தது, அமைதியாய் கதை கேட்க அமர்ந்தான்.

இன்னிக்கு என்ன கதை வனி அத்தை சொல்ல போறேன் தெரியுமா? ஒரு தேரை பத்தின கதைதான், ஒரு தேரை குதிச்சு குதிச்சு மகிழ்ச்சியா போய்கிட்டு இருந்துச்சு. அப்போ ஒரு அழகான தோட்டத்த பார்த்துச்சு, அழகான செடிகள் கொடிகள் மலர்கள், பெரிய பெரிய மரங்கள், பழங்கள் அப்படினு அந்த தோட்டம் ரம்யமா இருந்துச்சு. இது யாரோட தோட்டமா இருக்கும்ன்னு யோசிக்கிட்டே போகும் பொது ஒரு எறும்பு பாக்குது, எறும்பே எறும்பே இந்தத் தோட்டம் யாருதுன்னு தேரை கேக்க, நான் அவசரமா இரை எடுக்க போறேன் அப்பறம் சொல்றேன் அப்டினுட்டு போயிருச்சு. அடுத்து ஒரு காக்கா எதோ மண்ணுல கொத்திட்டு இருந்துச்சு, அதுகிட்ட தேரை கேக்குது, அதுக்கு அந்த காக்கா என் குஞ்சுக கூட்டுல காத்திருக்கும் நான் தீனி கொண்டு போய் கொடுக்கணும், அப்படினுட்டு சொய்ன்னு பறந்து போயிருச்சு, தேரை சுத்தி முத்தி பார்த்துட்டு மேல மரத்துல ஒரு பாச்சோந்திய பாத்து அதுகிட்ட கேக்குது, பச்சோந்தி சொல்லுது “அதோ அந்த மூலையில ஒரு தவளை இருக்கு பாரு அதோடது தான் இது”ன்னுச்சாம், நன்றி சொல்லிட்டு தேரை, தவளைகிட்ட போய், “தவளை உன் தோட்டம் ரொம்ப அழகா இருக்குன்னு”ச்சாம். அதுக்கு தவளை, “ரொம்ப நன்றி, நான் இதை  கடினமா உழைச்சு உருவாக்கினேன்” னு சொல்லுச்சாம்.

எனக்கும் இப்படி ஒரு தோட்டம் வளர்க்கணும். அதுக்கு என்ன செய்யணும்னு கேட்டுச்சான். நான் விதைகளை எல்லாம் தரேன்னு சொல்லி, தவளையும் நிறைய விதைகளை தேரைக்கு கொடுத்திச்சாம். தேரை, விதைகளை கொண்டு வந்து தன வீட்டு பக்கத்தில இருக்கும் நிலத்தில் போட்டு தண்ணி விட்டு மண்ணை கிளறிவிட்டு உத்து உத்து பார்த்துச்சாம், அப்பறம் விதையே முளைச்சு வா, விதையே முளைச்சு வா, சொல்லிகிட்டே இருந்துச்சாம். விதை முளைக்குமா குழைந்தைகளே? ம்ம்ம் முளைக்காது! ஆனா தேரை இப்போ ரொம்ப சத்தமா விதையே முளைச்சு வா ன்னு கத்திகிட்டே இருக்குது, அப்போ தவளை வந்து ஏன் இப்படி கத்திட்டு இருக்கேன்னு கேக்குது, விதை முளைக்கவே இல்லை அதான் கத்துனேன்னு சொல்லுது. விதை போட்ட உடனே முளைக்காது , சூரிய வெளிச்சம் வேணும், தண்ணீர் வேணும், தேவையான காற்றோட்டம் வேணும், அப்போது தான் முளைக்கும், அதுவரை காத்திருக்கனும்..புரியுதா? என்று  சொல்லிவிட்டு தவளை போயிருச்சு.

விதைகளை உத்து உத்து பார்த்துட்டே இருந்த தேரை, இரவானதும் ஐயோ இருட்டு பார்த்து பயந்து விதை முளைச்சு வெளில வரலன்னு என்ன பண்றதுன்னு, ஒரு மெழுகுவர்த்தி ஏத்தி எடுத்து வந்து அங்கே வச்சு, விடிய விடிய உட்காந்த்திருக்கு. காலைல பார்த்தா விதை முளைக்கவே இல்ல, காலையில இரை தேட தேரை போயிருது, சாயங்காலம் திரும்பி வந்து பார்க்குது விதைகள் முளைக்கவே இல்ல, விதைகளுக்கு கதைகள் தேவை போலன்னு நினச்சு அன்னிக்கு நைட் உட்காந்து கதைகள் சொல்ல ஆரம்பிச்சுச்சு, விடிய விடிய கதை சொன்னசொல்லிட்டே இருந்துச்சு, ஆனாலும், விதைகள் முளைக்கவே இல்ல, அடுத்த நாள் இரவு பாட்டு பாடினா விதைகள் முளைக்கும்ன்னு பாட்டு பாடுது, ஒரு நாள் வயலின் வாசிக்குது, ஆட்டம் ஆடுது, ஒரு நாள் ரொம்ப சோர்த்து போய் அழுதுட்டே படுத்து தூங்கிருது. திடீர்னு தவளை வந்து எழுப்புது, தேரை எழுந்து என்னாச்சுனு கேக்குது, என் தோட்டத்தை வந்து பாருன்னு சொல்லுது, தேரை போய் பார்க்குது, அங்கே விதைகள் முளைச்சு வந்து இருக்குது, தேரை சொல்லுது நான் கடினமா உழைச்சத்தால தோட்டம் உருவாக்கிருச்சுன்னு.

இப்படி கதையை கேட்டது குழந்தைக தேரையை பத்தியும், எந்தெந்த விதைகள் எப்போ முளைக்கும் போன்ற விசயங்களை கதைகள் மூலம் நிறைய உரையாடினோம். குழந்தைகளும் நிறைய புதிய விசயங்களை சொன்னார்கள், அங்குள்ள மக்களும். கடைசியில் எல்லாருமா சேர்ந்து அந்த ஊரோட சேர்ந்து கிணத்துக்கு பக்கத்தில மரக்கன்னு ஒன்ன இந்த கதை நிகழ்வு நியாபகமா நட்டு வச்சோம். மகிச்சியோட குழந்தைகள் கிராமத்தை சுற்றி காட்டினர்கள். அந்த நிகழ்வு இன்றும் மனதில் அழகான நினைவினை தருகிறது. நினைவுகளை காட்சிகளாக ஓட்டி பார்க்கும் போது; “கதை ஒரு சிறந்த வழி, சென்றடையும் இடமும் சிறந்தது, எனவே கதை வழியே பயணித்து குழைந்தைகள் மனதை வெல்லலாம்” என்பது புரிகிறது.

Leave a comment