குழந்தைகளுக்கு தேவை நம் அதீத அறிவோ, மேதாவித்தனோமோ அல்ல! – வனிதாமணி அருள்வேல் (கதை சொல்ல போறேன் – பகுதி 02)

வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

தமிழகத்தின் தலைநகரிலுள்ள பள்ளியொன்றின் மூத்த தமிழாசிரியர் தேடி எனை அழைத்து கதை மற்றும் வாசிப்பு பயிற்சி நடத்த கேட்டார். அழகான ஆகஸ்ட் மாதத்தின் நாளொன்றில் நீண்ட பயணத்தினால் கிடைக்கும் புத்தாக்கத்தை அனுபவித்துக் கொண்டே நகரத்தில் குழந்தைகளுக்கு என்ன கதை பிடிக்கும் என யோசித்துக்கொண்டே பள்ளியின் நிகழ்விடம் அடைந்தோம். பள்ளி ஆசிரியர்கள் , தலைமை ஆசிரியர் என சிறு சந்திப்புக்கு பின், குழந்தைகள் வந்தார்கள். கதை சொல்ல போறேன் என்றதும் எழுந்த உற்சாக ஆர்பரிப்பு அடங்க சில நிமிடங்கள் ஆயிற்று.

குழந்தைகளிடம் விளையாட்டோட துவக்கலாம் என சொல்லிகொண்டே விளையாட்டில் துவங்கி சிறார் பாட்டொன்றில் நகர்ந்து கதைக்கு வந்து சேர்ந்தோம். இப்போது குழந்தைகள் என்னோடு இணைந்து இருக்க விருப்பமாய் இருப்பது புரிபட்டது. கதை சொல்ல துவங்கிய முதல் நொடியிலேயே சில குழந்தைகள் பாட்டுதான் வேணும் என்றும், விளையாட்டை மறுபடி விடுவோம் என்றும் சத்தமிட்டனர். செல்ல குழந்தைகளே, இங்க இருக்கற நூறுக்கும் மேற்பட்ட குழந்தைகளில் சில பேருக்கு பாட்டு பிடிக்கும், சில பேருக்கு விளையாட்டு பிடிக்கும், இன்னும் சில பேருக்கு கதை பிடிக்கும், இங்க இருக்கற எல்லாருக்குமே வனி அத்தை பிரண்டுதான், கதை பிடிச்சவங்க பாட்டு பாடும் போது கூட படிங்க, விளையாட்டையும் விளையாடினாங்க இல்ல, அப்போ அவங்களுக்கு பிடிச்ச கதையை சொல்லும் போது நீங்களும் ஓத்துழைக்கணும், சரியா? என அன்பாய் கேட்டதும், அமைதியாய் கதை கேட்க உட்கார்ந்தனர்.

முன்ன ஒரு காலத்துல ஒரு பாட்டியும் தாத்தாவும் ஒரு தோட்டத்து வீட்டில் வாழ்ந்துட்டு இருக்காங்க, அந்த தோட்டம் ஒரு காட்டு பக்கத்துல இருந்துச்சு, அந்த தாத்தா தார் உருக்கும் வேலை செய்ஞ்சுட்டு வந்தார், பட்டி நூல் திரிக்கும் வேலையும் செய்வாங்க. ஒரு நாள் பாட்டி, எனக்கு ஒரு வைக்கோல் கன்றுகுட்டி செய்ஞ்சு குடுங்கன்னு தாத்தாகிட்ட கேட்டாங்க, அதுவும் தாரில் செய்து அதன் மேலே வைக்கோல் வைத்து ஒட்டி அழகாக செய்து குடுங்கன்னு கேக்கறாங்க, தாத்தாக்கு ஒரே சிரிப்பு, நீ என்ன சின்ன குழந்தையா?ன்னு கேக்கறாரு. எனக்கு வேணும் செய்து குடுங்கன்னு பாட்டி சொல்றாங்க.

ரெண்டு நாள்ல அழகான உறுதியான வைக்கோல் கன்னுகுட்டி ஒண்ண தாத்தா செஞ்சு பாட்டிக்கு குடுத்திட்டாரு. அந்த கன்னுக்குட்டியையும் கொஞ்சம் பஞ்சு பொதியையும் எடுத்துட்டு போய் வழக்கமா உட்க்காருற மேட்டுல உட்கார்ந்து நூல் திரிக்கறாங்க, அப்போ ஒரு பாட்டு பாடறாங்க, என்ன பாட்டு தெரியுமா? “கன்னுகுட்டி கன்னுகுட்டி அருமையான கன்னுகுட்டி”ன்னு பாடிட்டே நூல் திரிச்சுட்டு இருந்த பாட்டி ரொம்ப நேரம் கழிச்சு சோர்வடைஞ்சு கண் அசந்துட்டாங்க. அப்போ அங்க வந்த கரடி வைக்கோல் கன்னுக்குட்டியை தூக்கிட்டு ஓடுது…

அச்சச்சோ என உச்சு கொட்டி வருந்தினர்…..சிறிது நேரத்தில் கதை முடிந்தது.

பின்னர் கதையில் வந்த வைக்கோல், தார், நூல் திரிக்கிறது, பஞ்சு பொதி.. இப்படியான வார்த்தைகளுக்கு குழந்தைகள் அர்த்தம் கேட்டதும், அவர்களுக்குள்ளாகவே பதில் தெரிந்தவர்கள் சொல்லி அசத்தினார்கள். அதையடுத்து 25 குழந்தைகள் தவிர மீதியிருந்த குழந்தைகள் அனைவரும் அவரவர் வகுப்பிக்கிற்கு சென்றுவிட்டனர். நான் 25 குழந்தைகளை அழைத்து கொண்டு வெளியே வேப்ப மரத்தடிக்கு அழைத்து சென்று, அங்கு சில கதைகள் பேசி சில புத்தங்கள் அறிமுகப்படுத்தி கொண்டே சிறுவர்களின் முகங்களை பார்த்தேன், ஒரே ஒரு 7வயது குழந்தை எதோடும் ஒட்டாமல் சோகமாக அமர்ந்து இருந்தாள். நீங்க எல்லாம் என்ன மார்க் வாங்குவீங்க? என கேட்டதும் நன் 100 வாங்குவேன், 90 வாங்குவேன் என குழந்தைகள் கத்தி கூச்சலிட, மேலே குறிப்பிட்ட குழந்தை மட்டும் சலனமற்று இருந்தாள், நான் அய்யோ! நீங்க எல்லா அவ்ளோ மார்க் வாங்குவீங்களா? நான் உங்களை மாதிரி இருக்கும் போது 20, 30ன்னு வாங்குவேன் என்றேன். சட்டென அக்குழந்தை என்னருகே ஓடி வந்து கைகளை பிடித்து கொண்டது. அந்த சிறு உள்ளங்கை கொடுத்த கதகதப்பு இன்னும் இதமாக என் கைக்குள் இருக்கிறது.

குழந்தைகளுக்கு தேவை நம் அதீத அறிவோ, மேதாவித்தனோமோ அல்ல, மாறாக எளிய அன்பின் வழியே நெருங்கி உரையாடும் மனங்களே, அந்த உரையாடல் கதை வடிவாய் இருந்தால் மிக மிக எளிதாய் குழந்தைகளின் உன்னதங்களை தரிசிக்கலாம்.

Leave a comment