குழந்தைகளுக்கு உயிரினங்களையும் சூழலியலையும் எளிமையாக அறிமுகப்படுத்தும் முயற்சி – மு.சிவகுருநாதன்

வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

திருப்பூர்  குறிஞ்சி பதிப்பக வெளியீடான, சூழலியலாளர் கோவை சதாசிவம்  எழுதிய   மாயமாகும் மயிலு, ஆதியில் யானைகள் இருந்தன, நம்ம கழுதை நல்ல கழுதை  ஆகிய மூன்று நூல்கள் குறித்த  பதிவு

மாயமாகும் மயிலு

‘மாயமாகும் மயிலு’ என்ற ஆவணப்படத்தை மாணவர்கள், பொது மக்களிடம் திரையிடும்போது எழுந்த அய்யங்களுக்கு வினா – விடை வடிவில் அமைந்த நூல் இது. மனத்தடைகளும் கல்விக்கூடத்திலிருக்கும் அதிகாரத் தடைகளும் அகன்றுவிட்டால் கேள்விகளுக்குப் பஞ்சமிருக்குமா? கேள்விகள் கிளர்ந்தெழுகின்றன; கூடவே எளிய பதில்களும்.

“மயிலாடினால் மழை வருமா?

மயில் ஏன் ஆடுகிறது?

இணை கவர மயில் ஏன் ஆடவேண்டும்?” (பக்.13)

என்று கேள்விக்கணைகள் துளைப்பதும் ஆழமான், அழகான, எளிமையான, நகைச்சுவையான பதில்களில் நூலில் கிடைக்கின்றன.

“மயிலாடி மழை வருவதில்லை, மழை வரும்போது மயிலாடுகிறது” என்றும் “அற்பமான வேடிக்கை விளையாட்டல்ல மயில் தோகை விரித்து ஆடுவது. ஆண் மயிலின் நீண்ட தோகை அதன் மரபணு சார்ந்த வலிமையைக் காட்டுகிறது”, (பக்.13)  என்றும் பதிலளிப்பது இதை உணர்த்துகிறது.

ஆண்மயில்கள் காலந்தோறும் பிரம்மச்சாரியாகவே வாழ்வதாக ஒரு நீதிபதி குறிப்பிட்டது நினைவிருக்கலாம். இந்நூல் அதற்கே முன்பே வெளியானது. இத்தகைய பாட்டி கால மூடநம்பிக்கைக் கதைக்கு இங்கு விளக்கமளிக்கப்படுகிறது. மயில் வாய் வழியே  உயிரணுக்களைக் கக்குகிறது என்பதைப்போன்று வவ்வால்கள் வாய் வழியே எச்சமிடும் என்கிற மூடநம்பிக்கைக்கும் இங்கு விடை கிடைக்கிறது.

நீல மயில், பச்சை மயில் போன்று வெண்மயில் தனித்த இனமல்ல; மரபணுப் பண்புகளில் நிறப்பிறழ்வு கொண்டவை. வெண்மயில்கள் இயற்கையான சூழலில் தங்களை எதிரிகளிடமிருந்து தற்காத்துக் கொண்டு வாழ்வது கடினம், என்று விளக்குகிறார். பிராய்லர் வெள்ளை லெக்கான் கோழிகளுக்கும் இது பொருந்தும். இந்த வெண் கோழிக் குஞ்சுகளை வண்ணச் சாயங்களில் தோய்த்து விற்பதை நீங்கள் பார்த்திருக்கலாம்.

மயிலின் கதையுடன் கூடவே விடுதலைப் போராளி தியாகி விஸ்வநாத தாசின் கதையும் சொல்லப்படுவது சிறப்பு. “மயிலின் நடனத்தை குளிருக்கு நடுங்குவதாகப் பேகன் புரிந்துகொண்டார் என்பது அபத்தம். (…) பேகனும், போர்வையும் அக்காலப் புலவன் பாடி பரிசில் பெற கலந்தடித்த மிகையான கற்பனைதான்”, (பக்.44) மறுவாசிப்பு செய்வது பாராட்டிற்குரியது.

மயில்களின் வாழிடம் முல்லை நிலம். இவை அழிக்கப்பட்டதால் இவை இன்று மருத நிலத்தில் அதிகம் இடம்பெயர்கிறது. வேளாண்மைக்கு இடையூறு என்ற புகாருக்கு உரிய விளக்கமும் மரபணு மாற்றப்பட்ட உயிரிகளால் ஏற்படும் சூழலியல் கேடுகள் மற்றும் பிற உயிர்களுக்கு ஏற்படும் இன்னல்களையும் கவனத்தில் கொண்டு விரிவாக விடையளிக்கப்படுகிறது.

“மயிலே… மயிலே… இறகு போடுன்னா போடாது”, என்ற பழமொழியை இனி பயன்படுத்துவதில்லை, என்று பாரதியார் பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் திருவாசகம் குறிப்பிடுவது (பக்.05) ஆவணப்படம் மற்றும் இந்த நூலின் வெற்றியைப் பறைசாற்றுவதாக எடுத்துக் கொள்ளலாம்.

ஆதியில் யானைகள் இருந்தன

பன்னெடுங்காலமாய் மனிதர்களோடு வாழும் பேருயிரான யானையை சங்க இலக்கியக் குறிப்புகளிலிருந்து அறிமுகம் செய்வதும் அதன் இன்றைய நிலையை வலியுறுத்துவது இக்குறு நூலில் நோக்கமாகும்.

யானைகள் வலசை போகும் 94 பாதைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இவையே பிற்காலத்தில் பெருவழிப்பாதைகளாவோ, ராஜபாட்டையாகவோ மாறின. அப்பாதைகள் துண்டாக்கப்படு ‘சுங்க நாற்கரச் சாலைகளால்’ (தங்க நாற்கரச் சாலையை மிகச் சரியாகவே சுட்டுகிறார்.) இன்று யானைகள் விழி பிதுங்கி ஊருக்குள் நுழைவது எடுத்துக்காட்டப்படுகிறது.

ஆயிரம் யானைகளைப் போரில் கொன்றவனைச் சிறப்பித்துப் பாடுவது பரணி என்று சொல்கின்றனர். ஜெயங்கொண்டாரின் கலிங்கத்துப் பரணியும் முத்தொள்ளாயிரமும் பேருயிரான யானைகளின் பேரழிவை நமக்கு எடுத்துக்காட்டுகின்றன.

“யானைகள் கூடிவாழும் பேருயிர்கள். தங்கள் குடும்பத்திலுள்ள பெண்யானைகளோடு இணை சேர்வதில்லை ஆண்யானைகள். குடும்பத்தில் தலைமை வகிக்கும் முதிர்ந்த பெண் யானை இதை அனுமதிப்பதும் இல்லை. வயது வந்த ஆண் யானைகள் குடும்பத்தை விட்டு தனியாக விலகிவிடுகின்றன”, (பக்.24) என்பதுடன் இணைசேரும் காலத்தில்  ஆண் யானைக்கு மதநீர் சுரப்பதும் சொல்லப்படுகிறது.

“தந்தம் என்பது கொம்பன்று. யானையின் முன்வரிசை உளிப்பற்கள் ஆகும்”, (பக்.27) என்ற உண்மையோடு இதனால் யானைகள் வேட்டையாடப்படுவதையும் விவரிக்கிறது. அடி சறுக்காத வகையில் இதன் பாதங்கள் அமைந்திருக்கின்றன. இதையொட்டியே “யானைக்கும் அடி சறுக்கும்”, என்ற முதுமொழி உருவான கதை வெளிப்படுகிறது.

யானை அவைதீக மதங்களுக்கு உரிய விலங்காக இருந்து வந்திருக்கிறது. இதை நாம் மகாபலிபுரம் சிறபங்களில் காணலாம். மூன்றம் குலோத்துங்கனால் கட்டப்பட்ட கும்பகோணம் அருகேயுள்ள திருபுவனத்தில் உள்ள ‘சர்பேஸ்வரர்’ கோயில் உள்ள பெண்யானை பிரசவிக்கும் சிற்பம் எடுத்துக்காட்டப்படுகிறது.

போர்க்கள யானை நீர்க்குளத்தில் சிறுவர்களுடன் அன்புடனும் கனிவுடனும் விளையாடுவதே உண்மையில் யானையின் பண்பாகும்.

பொதுவாக யானைகள் மனிதர்களைத் தேடி வந்து தாக்குவதில்லை. காயப்படுத்தி யானைகளை விரட்டுகையில் சினம் கொள்ளும் யானை வேகமாகவும் மூர்க்கமாகவும் ஓடிவந்து தாக்கும்”, (பக்.52) “யானைகள் யாரையாவது தவறுதலாகக் கொல்ல நேர்ந்துவிட்டால் குற்றவுணர்ச்சியால் குமையும்”, (பக்.38)  என்று யானையின் பண்புகள் விவரிக்கப்படுகிறது.

இந்த யானைகளை கோயில்களில் கட்டி வைத்தும் பிச்சையடுக்க வைக்கும் அவலம் மதத்தின் பெயரால் அரசால் கண்டுகொள்ளமால் விடப்படுகிறது. கொதிக்கும் தார்ச்சாலைகளில் பிச்சையெடுக்க அழைத்துச் செல்லப்படும் இந்த பேருயிர் வதை என்று முடிவுக்கு வருமோ!

இன்றைய கார்ப்பரேட் உலகில் யானைகளும் தங்களது வாழிட, வழித்தடங்களுக்காகப் போராட வேண்டிய நெருக்கடிக்கு ஆளாகியுள்ளது. இயற்கையோடு இணைந்து இந்தப் பேருயிரையும் காக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் என்பதை இந்நூல் உணர்த்துகிறது.

நம்ம கழுதை நல்ல கழுதை

வைதீக இந்து மதம் மனிதர்களுக்கு மட்டுமல்ல, விலங்கு, பறவைகளுக்கும் சாதியையும் (வருணம்) தீண்டாமையையும் விதித்துள்ளது. காக்கை, எருமை, கழுதை போன்ற உயிரினங்கள் இந்தப்பட்டியலில் வருபவை. அந்தக் கழுதையைப் பற்றிய இந்நூல் 1951 இல் வெளியான மர்மயோகி திரைப்படப் பாடலான, ‘நம்ம கழுதை, ரொம்ப நல்ல கழுதை’ என்பதை தலைப்பாகக் கொண்டமைவதை முன்னுரையில் சுவையாக எடுத்துரைக்கிறார். இதனுள்ளே கழுதைகளின் சோகங்களுடன் ஆசிரியரின் வருத்தங்களும்  பதிவாகிறது. ஒடுக்கப்பட்ட மனிதர்களுடன் இணைக்கப்பட்ட கழுதையும் ஒடுக்கப்பட்ட விலங்கானது.

பொதி சுமக்கப் பிறக்கவில்லை கழுதை. அபார நினைவாற்றல்  கொண்ட கழுதை அறிவில்லாத விலங்கானது நகைமுரண். குதிரைகள், வரிக்குதிரைகள்  கழுதைகள் ஆகியன ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவை. ஆண் கழுதையும் பெண்குதிரையும்  சேர்ந்து உருவாவது கோவேறு கழுதை என்பதும் கோவேறு கழுதைகளுக்கு தாய்மையடையும் தன்மையில்லை என்பதும் விவரிக்கப்படுகிறது.

மூதேவி, கரும்புள்ளி – செம்புள்ளி – செருப்புமாலை, மழை வேண்டி கழுதைக்கு கல்யாணம் என அவமானத்தின்  குறியீடாகவும் கவுதை வைக்கப்பட்டுள்ளது. பாரதி கழுதைக் குட்டியைத் தூக்கிக் கொஞ்சியதும் ஜான் அபிரகாமின் ‘அக்ரஹாரத்தில் கழுதை’ திரைப்படமும் நூலில் விரிகின்றது.

“என்னைப் பார் யோகம் வரும்”, என்று கழுதைப் படத்துடன் ஓட்டி வைத்திருப்பதையும் கிண்டல் செய்கிறார். கழுதைப் பாலை  குழந்தைகளுக்கு புகட்டுவது பற்றிய பதிவும் சிறப்பானது.

“கழுதைப்பால் நல்லதா…? கெட்டதா…?”, என்று கேட்க, அதற்கு,

“ரொம்ப நல்லது அதன் குட்டிகளுக்கு.. ரொம்பக் கெட்டது நமது குழந்தைகளுக்கு…”,

என்று இனிமையாகவும் நகைச்சுவையாகவும் பதிலளிக்கிறார் ஆசிரியர்.

சோம்பேறிக் கழுதை, அறிவு கெட்ட…, கூறு கெட்ட…, முட்டாள்…, மூதேவி… என கழுதையை சேர்த்து யாரும் வசைபாட வேண்டாம். கழுதைகளின் உலகம் அன்பாலானது. சகிப்புத்தன்மைக்குப் பெயர் போன கழுதையை வம்புக்கு இழுக்க வேண்டாம், கனவில் வந்து உதைக்கும் என கிண்டலாக நிறைவு செய்கிறார்.

நூல் விவரங்கள்: மாயமாகும் மயிலு (வகுப்பறை நேர்முகம்) | பக்கங்கள்: 72 | விலை: ₹ 60 , ஆதியில் யானைகள் இருந்தன (சங்ககாலக் குறிப்புகள்) | பக்கங்கள்: 56 | விலை: ₹ 40 , நம்ம கழுதை நல்ல கழுதை | பக்கங்கள்: 32 | விலை: ₹ 25 , ஆசிரியர் : கோவை சதாசிவம் | வெளியீடு: குறிஞ்சி பதிப்பகம் | 9965075221 / 9894777291 | kurinjisadhasivam@gmail.com

Leave a comment