ஓரிகாமி கொக்கும், சிறுமி சடாகோ சசாகியும் – தியாக சேகர் (ஓரிகாமி கலை குறித்த தொடர் – பகுதி 03)

வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

நாம் அனைவரும் பள்ளியில் சமூகவியலில், வரலாற்றில் இரண்டாம் உலகப்போர் பற்றி கேள்வி பதிலாக படித்திருப்போம். ஆனால் இரண்டாம் உலகப்போர் என்பது நாம் எளிதில் மறந்துவிடக்கூடிய சாதாரண நிகழ்வு அல்ல. உலக நாடுகள் அனைத்தும் ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக்கொண்டு, நவீன கனரக பீரங்கிகளாலும், போர் விமானங்களாலும், மாறி மாறி தாக்குதல் நடத்திவந்தனர். ராணுவ வீரர்கள், பொதுமக்கள் என 1000, 5000 என மனிதர்கள் கொத்து கொத்தாக, தாக்குதலுக்கு உள்ளாகி இரத்த வெள்ளத்தில் கேட்பாறற்று கிடந்தார்கள்.

மனிதன் கண்டுபிடித்த, இயற்பியல், வேதியல் தொழில்நுட்ப அறிவு மனதின் மற்றுமின்றி பூமியிலுள்ள அனைத்து உயிர்கள் மீதும் கோரதாண்டவம் ஆடியது. இதன் உச்சபச்சமாக ஒட்டுமொத்த பூமிபந்தையே உழுக்கிய துயர சம்பவம் நடந்தேறியது. அமெரிக்காவின் போர்விமானம் உலகின் முதல் அணுகுண்டை ஜப்பானின் முக்கிய நகரமான பொதுமக்கள் அதிகம் புழக்கத்திலிருக்கும் ஹிரோஷிமா மீது வீசி வெடிக்க செய்தது. அதிகாலை பொழுது, எந்தவித முன் அறிவிப்பும் இல்லை, குண்டு வெடித்த போது ஒரு சின்ன சூரியன் பூமியின் மீது மோதியது போல் இருந்ததாக பார்த்தவர்கள் பதிவு செய்திருக்கிறார்கள். சில மணித்துளி நேரத்தில் 60-70% ஹிரோஷிமா நகரமே துடைத்தெரியபட்டதாக செய்திகள் உள்ளது.

பிறந்த குழந்தைகள், கர்பிணி பெண்கள், நோயாளிகள், முதியவர்கள் என 70,000 மனிதர்கள் பாதிக்கபட்டுள்ளனர் அதில் 40,000 பேர்கள் உடனடியாக இறந்தவர்கள். மனித உயிர்களுக்கு மட்டுமல்ல, அனைத்து உயிர்களுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய பெரும் துயரம். இந்த துயரமான கொடூரமான சம்பவத்தில் பாதிக்கப்பட்ட இரத்தமும் சதையுமான சாட்சி தான் ஜப்பானிய சிறுமி சடாகோ சசாகி.

பேரிழப்பின் வலிகளை, பெரும் சோகத்தை, ஆற்றமுடியாத பெருந்துயரத்தை உலகிற்கு உணர்த்திக்கொண்டு  உலகம் முழுவதும் அன்பையும், அமைதியையும் பரப்பிக்கொண்டிருக்கிறார்கள் , ஓரிகாமி கொக்கும் சிறுமி சீசாகியும்.

ஓரிகாமி கொக்கும் ஜப்பானியர்களின் நம்பிக்கையும்:

ஜப்பானியர்களுக்கு கொக்குகள் மீது விசித்திரமான நம்பிக்கை இருக்கிறது. கொக்குகளை ஜப்பான் நாட்டு மக்கள் நீண்ட ஆயுள், மற்றும் அதிஷ்டத்திற்கான வடிவமாக மதிக்கிறார்கள். இவ்வாறே ஓரிகாமி காகித கொக்குகளின் மீதும் ஜப்பானியர்கள் மதிப்பும், நம்பிக்கையும்  வைத்துள்ளார்கள். தங்களுக்கு பிடித்தவர்களுக்கு 1000 ஓரிகாமி காகித கொக்குகளை செய்து கொடுக்கு பழக்கம் ஜப்பான் மக்களின் நம்பிக்கையாக உள்ளது. இப்படி செய்வதால் நீண்ட ஆயுள் காலம் வாழமுடியும் என்று நம்புகிறார்கள்.

தந்தை தனது மகளுக்கு, திருமணத்தின் போது 1000 ஓரிகாமி கொக்குகளை பரிசாக வழங்கும் பழக்கம் இவர்களிடம் உள்ளது. ஜப்பானியர்களின் தேசிய பறவையும் கொக்கு தான்.

நமது தமிழ் இலக்கியங்களிலும் கொக்குகளுக்கு மதிப்பு கொடுத்துள்ளார்கள் என்பதையும் நான் உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் நண்பர்களே.

உலகில் அன்பையும் அமைதியையும் பரப்பும் சிறுமி சடாகோ சசாகி:

சிறுமி சசாகி எல்லா குழந்தைகளை போலவே தனது பெற்றோர்க்கு செல்ல மகளாக வளர்ந்து வந்தார், பள்ளிகளில் பல நிகழ்வுகளில், விளையாட்டுகளில் கலந்துகொண்டு பல பரிசுகளை வாங்கியிருக்கிறார். நல்ல கலகலப்பான மாணவியாகவும் இருந்துள்ளார். இவர் அடிக்கடி தன் பெற்றோர்களிடமும், நண்பர்களிடமும் “நான் பெரியவர் ஆனதும் ஆசிரியர் வேலைக்கு போவேன்” என்று சொல்லியிருக்கிறார்.

ஒருநாள் சசாகியின் பள்ளியில் விளையாட்டு போட்டி நடைபெற்று கொண்டிருந்தது, ஒட்டுமொத்த பள்ளியே விளையாட்டு போட்டியில் குதூகளிக்க, சிறுமி சசாகி ஓடுபாதையில் ஓடிக்கொண்டிருந்தார். சசாகியின் பள்ளி நண்பர்கள் கைதட்டி ஆரவாரம் செய்துகொண்டிருந்தனர், யாரும் எதிர் பார்க்காத நேரத்தில் சிறுமி சசாகி ஓடுபாதையில் சுருண்டு மயக்கம் போட்டு கீழே விழுந்தார். மயக்க நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் அந்தச் சிகிச்சசைக்கு பிறகு , சசாகியால் வழக்கம் போல உணவு  உண்ணமுடியவில்லை. உடல் இளைக்கிறது, மருத்துவ பரிசோதனையில் சாசாகிக்கு லுகேமியா என்று உறுதி செய்கிறார்கள் இதை கேள்விபட்டு தாய் தந்தையர்கள் மனம் வெதும்பி கதறி கண்ணீர் சிந்தினர். வெறும் 12 வயது சிறுமி அவளால் எப்படி தாங்கிக்கொள்ள முடியும்.

நாளுக்கு நாள் சசாகியின் உடல் மெலிகிறது, மனம் உடைந்து படுத்த படுக்கையாக இருக்கிறார்.
லுகேமியா என்பது இரத்தப் புற்றுநோய் எப்படி சிறுமி சசாகிக்கு இந்த நோய் வரமுடியும்? அதன் காரணம் சற்று தாமதமாக பின்னர் அனைவருக்கும் புரிந்தது.

1945 ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 6ம் தேதி ஹிரோஷிமா அணுகுண்டு தாக்குதல் நடந்தபோது சசாகியின் வயது இரண்டு. அது யுரேனியம் குண்டு, அந்தக் குண்டுவெடிப்பில் வெளியான கதிர்வீச்சு சிறுவயதிலேயே சசாகியின் உடலையும் தாக்கியிருக்கிறது. ஆனால் இப்பொழுது (அதாவது 12 வயதில்) தான்  அதன் வீரியம் வெளிப்படுகிறது என்று மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் உறுதி செய்கிறார்கள்.

சிறுமி சசாகி போல பலர் கதிர் வீச்சின் தாக்குதலுக்கு பலியாகியிருக்கிறார்கள. கருவிலிருக்கும் குழந்தைகள் கூட பாதிப்ப அனுபவித்துக்கொண்டிருப்பதாக பதிவுகள் உள்ளன. சசாகி நம்பிக்கை இழந்து படுத்த படுக்கையாக இருந்தார். அவளைப் போலவே அந்த மருத்துவமனையில் கதிர் வீச்சால் பாதிக்கப்பட்ட பலரும் அனுமதிக்கப்பட்டிருந்தார்கள். ஒவ்வொரு நாளும் பக்கத்திலிருப்பவர்களின் இறப்பு செய்தி சசாகியின் மனதை மேலும் நிலைகுலைய வைத்தது. நம்பிக்கை இன்றி வெறுமையாக இருந்தார்.

அப்பொழுது பள்ளி தோழி சிசுகோ, சசாகிக்கு காகிதத்தில் செய்த ஓரிகாமி கொக்கை பரிசாக கொடுத்து அதோடு “நீ இது போல் 1000 ஓரிகாமி கொக்கு செய்தால் உணக்கு நோய் குணமடையும் நீண்டகாலம் உயிர் வாழலாம்” என்று தன்னம்பிக்கையுடன் ஆறுதல் சொல்ல சசாகி தினமும் ஓரிகாமி கொக்கு செய்யத்துவங்குகிறார். ஒவ்வொரு நாளும் 20, 30 என கொக்குகள் செய்கிறார் . நோய் குணமடையும் என்ற நம்பிக்கை அவளுக்குள் பிறக்கிறது. சிறிது சிறிதாக 300 கொக்குகள் செய்துவிட்டார். நோய்குணமடைந்து வீட்டிற்கு அழைத்து செல்கிறார்கள். இப்போது இன்னும் கொஞ்சம் நம்பிக்கை வருகிறது.

வீட்டிலும் தினமும் கொக்கு செய்கிறார். 500 கொக்குகள் செய்துவிட்டார். மீண்டும் உடல் நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார். ஆனால் தினமும் கொக்கு செய்வதை அவள் நிருத்தவேயில்லை. காகிதங்கள் தீர்ந்து கையில் காகிதம் இல்லாமல், மருந்து சீட்டுக்கள் வழியே கிடைக்கும் சின்ன சின்ன காகிதங்களை பயன்படுத்தி கட்டைவிரல் அளவு சிறிய கொக்குகளை செய்கிறார். இப்படியாக 644 கொக்குகள் சடாகோ தீராத உடல் உபாதைகளுக்கு இடையே மடித்திருக்கிறார். அந்தப் பிஞ்சு உள்ளம் எப்படியாவது இந்த உலகில் வாழவேண்டும் என்ற நம்பிக்கையில் 644 கொக்குகளை மடித்திருக்கிறது. சடாகோவின் கைகள் 644வது கொக்கை செய்துவிட்டு இயற்கையோடு கலந்துவிடுகிறாள். 1000 கொக்குகளில் 644 போக மீதம் உள்ள 356 கொக்குகளை சசாகியின் வகுப்பு தோழர்கள் செய்தார்கள்.

ஹிரோஷிமா அமைதி பூங்காவில்,  ஓரிகாமி காகித கொக்கை சசாகி கையில் பிடித்திருக்கும் உருவ  சிலை 1958 ல் நிறுவப்பட்டது. ஹிரோஷிமா அமைதிப்பூங்கா இரண்டாம் உலகப் போர் அணுகுண்டு தாக்குதலில் உயிரிழந்வர்களுக்காக உருவாக்கப்பட்டது. சடாகோ சசாகி 1943 லிருந்து 1955 வரை 12 ஆண்டுகள் மட்டுமே இந்த பூமியில் வாழ்ந்தவர், இந்த சிறுமியின் இறப்பு இயற்கையாக நடக்கவில்லை, மனிதனின் கொடுர மனநிலையால் நடந்தது என்பதை நாம் உணரவேண்டும்.

உலக நாடுகள் அனைத்தும் மனிதர்களை மனிதனே அழிக்கும் ராணுவத்திற்கே அதிகம் செலவு செய்கிறது. இந்த நிலை மாற வேண்டும். சசாகி கடைசியாக கொக்கை கையில் வைத்துக்கொண்டு சொன்னது இதுதான்,

“நான் உங்கள் சிறகுகளில் அமைதியை எழுதுகிறேன் நீங்கள் உலகம் முழுவதும் பறந்து சொல்லுங்க”

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 25 ம் நாள் ஜப்பானில் சடாகோ சசாகியின் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. உலகம் முழுவதும் உள்ள பள்ளி குழந்தைகளிடமிருந்து பல லட்சம் கொக்குகள் சடாகோவை நோக்கி ஒவ்வொரு ஆண்டும் வந்துகொண்டிருக்கிறது. சடாகோவும், ஓரிகாமி கொக்கும் பள்ளி குழந்தைகளுக்கு பாடமாக இருக்கிறார்கள், உலகம் முழுவதும் அன்பையும் அமைதியையும் பரப்பிக்கொண்டிருக்கிறார்கள்.

அன்பு சாத்தியமே.

Leave a comment