“கதைப் பெட்டி” – உங்கள் வீடு தேடி வருகிறது

வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

குழந்தைகளை எப்படி சமாளிப்பது ? இது தான் தற்பொழுது கொரோனா சூழலால் பெற்றோர்கள் மத்தியில் எழுந்து வரும் கேள்விகள். உரையாடல், வீட்டினுள் ஆடும் விளையாட்டுகள், ஓவியம், ஓரிகாமி போன்ற கலை சார்ந்த விசயங்கள், தொலைக்காட்சி, புதிய திரைப்படங்கள் என பெற்றோரும் தங்களால் முடிந்தவரை குழந்தைகளை  சிறப்பாக கவனித்து வருகின்றனர். அவர்களுக்கு உறுதுணையாக பஞ்சு மிட்டாய் சிறார் இதழ் சார்பாக “கதைப் பெட்டி” பற்றிய செய்தியை மீண்டும் அறிமுகம் செய்கிறோம்.

சிறார்களின் படைப்புகளின் வழியே பஞ்சு மிட்டாய் இதழ் இயங்கி வருகிறது. சிறார்களின் கற்பனைக்கு ஒரு தளம் அமைப்பதே பஞ்சு மிட்டாய் செயல்பாடுகளின் முக்கிய நோக்கமாகும். சிறார்கள் சொல்லும் கதை, கதைகளுக்கான ஓவியம், அவர்களின் கேள்விகள், கேள்விகளின் வழியே சில இயற்கை & அறிவியல் சார்ந்த அறிமுகங்கள், புத்தக அறிமுகங்கள், பாடல், பாரம்பரிய விளையாட்டு அறிமுகம் என பயணித்து வருகிறோம். பள்ளிகள், செயற்பாட்டாளர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் என அனைவருடன் சேர்ந்து இந்தப் பயணம் பல்வேறு அனுபவங்களை தந்துள்ளது. அதன் வழியே சிறார் உலகம் குறித்த புரிதல்களையும் ஏற்படுத்தியுள்ளது . 

“கதைப் பெட்டி” என்ற முயற்சியையும் இதன் ஒரு பகுதியாக நீண்ட காலமாக செய்துவருகிறோம். பள்ளிகள், நிகழ்வுகள், புத்தக திருவிழாக்கள் என சிறார்கள் கூடும் இடங்களில் “கதைப் பெட்டி” வைத்து அதன் வழியாக சிறார்களின் படைப்புகளை சேகரித்து வந்திருந்தோம். தற்போது அனைவரும் வீட்டினுள் முடங்கி கிடக்கும் சூழலில் “கதைப் பெட்டி”யை பெற்றோர்களாகிய உங்களின் துணையுடன் உங்கள் வீட்டிற்கு உங்கள் குழந்தைகளின் படைப்புகளை தேடி இணையத்தின் வழியாக வருகிறோம். 

சில குறிப்புகள்:

 1. எந்தவித இடையூறுமில்லாமல் சிறார்கள் தங்களது படைப்புகளை உருவாக்க வேண்டும்,
 2. பெரியோர்களின் தலையீடு இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். ( சிறார்களின் கற்பனை திறனை வளர்ப்பது மட்டுமே இதன் நோக்கம்),
 3. சிறார்களைஅவர்களே எழுத உற்சாகப் படுத்துங்கள், இன்னும் எழுத தெரியாத வயதில் இருந்தால் அவர்கள் சொல்ல சொல்ல பெற்றோர்கள் எழுதலாம்.

என்ன மாதிரியான படைப்புகளை அனுப்பலாம்:

 1. கதைகள் (எவ்வளவு சிறியதாக இருப்பினும்),(நீதி போதனை கதைகளை முடிந்தவரை  தவிர்க்கவும்), 
 2. கட்டுரைகள் – (பயணம் சார்ந்தோ , அவர்கள் கவனித்த விசயங்கள் சார்ந்தோ), 
 3. புத்தக அறிமுகங்கள் , 
 4. கேள்விகள் – சிறார்கள் வீட்டில் கேட்கும் சுவார்ஸமான கேள்விகளை பகிருங்கள் ,
 5. பாடல்கள் – கவனம் பெறாத நாட்டுப்புற பாடல்கள் ஏதேனும் தெரிந்தால் , அல்லது சொந்தமாக எழுத வாய்ப்பிருந்தால். (பெரியவர்களும் இதில் பங்கு பெறலாம்)  ,
 6. பாரம்பரிய விளையாட்டுகள் – உங்கள் பகுதியில் உள்ள பாரம்பரிய விளையாட்டுகள் , அதுவும் பாடலுடன் இருக்கும் விளையாட்டுகள் இருந்தால் கண்டிப்பாக பகிருங்கள். (பெரியவர்களும் இதில் பங்கு பெறலாம்),
 7. கடிதங்கள் அல்லது நாட்குறிப்பு பதிவுகள் ,
 8. ஓவியங்கள் .

இந்தப் படைப்புகளை சேகரித்து வாட்ஸ் ஆப் அல்லது மின்னஞ்சல் மூலம் அனுப்புங்கள். அதிலிருந்து தேர்வாகும் படைப்புகள் அடுத்தடுத்து வரும் பஞ்சு  மிட்டாய் இதழை அலங்கரிக்கட்டும்.

மேலும் விபரங்களுக்கு…

பிரபு (வாட்ஸ்ஆப்) 9731736363

மின்னஞ்சல் : editor.panchumittai@gmail.com

நன்றி,

பஞ்சு மிட்டாய் சிறார் குழு.

Leave a comment