7. குழந்தைகளே படைக்கும் இலக்கியம் குறித்து உங்களின் நிலைப்பாடு என்ன? குழந்தைகளின் படைப்பை நாம் எப்படி அணுக வேண்டும்?
குழந்தைகளின் படைப்பூக்கம் முழுக்க முழுக்க மாயாஜாலமிக்கது. எந்த ஒரு வளர்ந்த மனிதனும் கற்பனை செய்ய முடியாத புனைவுகளைக் கொண்டது. அந்த படைப்பூக்க மனம் உலகை வேறு மாதிரியாகப் பார்த்துச் சித்தரிக்கிறது. அந்தச்சித்தரிப்பின் வழியே உலகைப் புதிதாகப் பார்க்கிறது. புதிதாகக் கண்டுபிடிக்கிறது. இதுவரை யாரும் பார்க்காத கோணத்தில் கண்டுபிடித்துச் சொல்கிறது. வாழ்வின் அர்த்தங்கள் என்று சமூகம் கருதுபவற்றை கலைத்துப்போடுகிறது. குழந்தைகளின் படைக்கும்போது முழுமையாக தங்களுடைய கற்பனைத்திறன் சார்ந்தே இயங்குகிறார்கள். தர்க்கநியாயங்களைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. அந்தக் கற்பனை இன்பம் தருகிறதா என்பது மட்டும் தான் கேள்வி. கலையின் தவிர்க்கவியலாத விதிகளில் ஒன்று அது நுகர்பவனுக்குக் கலை இன்பம் தரவேண்டும். குழந்தைகளின் படைப்புகள் அந்த அளவில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவை என்றே கருதுகிறேன்.
குழந்தைகள் பெரியவர்களின் இந்த உலகத்தை எப்படிப் பார்க்கிறார்கள்? எப்படிப் புரிந்து கொள்கிறார்கள்? எப்படி எதிர்வினை புரிகிறார்கள்? இவை தான் அவர்களுடைய படைப்புகளில் வெளிப்படுகிற விஷயங்கள். குழந்தைகளின் படைப்புகளைப் புரிந்துகொள்ள சில அடிப்படையான விதிகள் இருக்கின்றன. குழந்தைகளாக மாறவேண்டும். குழந்தைகளின் கண்கள் வழியே இந்த உலகத்தை அல்லது அவர்கள் காட்டும் உலகத்தைப் பார்க்கவேண்டும். இந்த உலகத்தின் சரி தவறு போன்ற மதிப்பீடுகளின் வழியே அவர்களுடைய படைப்புகளைப் புரிந்து கொள்ளக்கூடாது. அவர்களின் கட்டற்ற படைப்பூக்கம் செல்லும் திசையில் கைகாட்டியாக இருக்கவேண்டும். தடைக்கற்களாக இருக்கக்கூடாது. குழந்தைகளின்மனநிலையை, உளவியலை பெரியவர்கள் புரிந்து கொள்ள அவர்களுடைய படைப்புகள் உதவும்.
8. [தொடர் கேள்வி] குழந்தைகளின் படைப்புகள் முக்கியமாக கதைகள், ஓவியங்கள் சில தவறான உதாரணங்களை கொடுத்துவிடும் என்ற அச்சம் இங்கு நிலவுகிறது உண்மையா? அப்படியென்றால் அந்த அச்சம் தேவையானதா ? தேவையில்லை என்றால் அதை எப்படி போக்க வேண்டும்
குழந்தைகளுக்கு எதுவும் தெரியாது என்ற நம்முடைய பார்வையைத் தான் மாற்ற வேண்டும். குழந்தைகளுக்கு எல்லாம் தெரியும். இந்த பூமியில் பிறந்த கணத்திலிருந்தே குழந்தைகள் தங்களுடைய ஐம்புலன்கள் வழியாகக் கற்றுக் கொண்டேயிருக்கிறார்கள். இந்த உலகத்தைப் புரிந்து கொள்ள முயற்சி செய்து கொண்டேயிருக்கிறார்கள். குழந்தைகளின் படைப்புகள் நம்முடைய படைப்பு இலக்கணப்படி இருக்கவேண்டும் என்று நினைப்பது சரியல்ல. குழந்தைகளின் படைப்பூக்கம் களங்கமற்றது இயல்பானது. இயற்கையானது. தர்க்கநியாயங்களற்றது கட்டுப்பாடுகளற்றது. எனவே அவர்களுடைய படைப்பு அந்தக்கணத்தின் படைப்பு. நாம் அந்தப்படைப்பின் வழியே நம்முடைய பிரபஞ்சத்தையே பார்க்கமுடியும். இதை நான் அபிமன்யூவின் படைப்புகளில் உணர்ந்தேன். பஞ்சுமிட்டாய் 9 ஆவது இதழில் எழுதியிருந்த குழந்தைப்படைப்பாளிகளிடமும் உணர்ந்தேன். குழந்தைகள் வளரும்போது அவர்கள் வழியில் உலகைப் புரிந்து கொள்வார்கள். எவ்வித அச்சமும் தேவையில்லை என்று கருதுகிறேன்.
9. சிறார் இலக்கியத்தில் கடவுள் மற்றும் மத நம்பிக்கைள் சார்ந்த படைப்புகள் நிறைய இடத்தினை பிடித்திருக்கிறது. குறிப்பாக வலுவான எதிர்காலத்தை அமைக்க இதுபோன்ற கதைகள் அவசியம் என்றும் கருதப்படுகிறது…ஆனால் உண்மையில் அதன் வழியே ஏகப்பட்ட மூட நம்பிக்கைகள் தான் இடம் பிடிக்கிறது … இங்கு மாற்று சிந்தனைகளுக்கு இடம் இருக்கிறதா?
கடவுள் மற்றும் மதநம்பிக்கைகள் வெறும் நம்பிக்கையின் பெயரிலான மூடப்பழக்கங்களை கடைப்பிடிக்கச் சொல்பவை தான். நம்முடைய தமிழ்ச்சமூகம் ஆதியிலிருந்தே கற்பனையான கடவுள் மற்றும் மதநம்பிக்கைகளைக் கைக்கொண்டதில்லை. நம்முடைய தெய்வங்கள் அனைத்தும் நம்முடைய முன்னோர்களாக, போராளிகளாக, இருப்பது என்பது தற்செயலானதில்லை. அத்துடன் உழைப்புடன், மண்ணுடன், உற்பத்தியுடன் சம்பந்தப்பட்ட சமயச்சடங்குகளுக்கும், உழைப்பை வெறுக்கிற, உற்பத்தியுடன் தொடர்பில்லாத, மண்ணைத் தீட்டாக நினைக்கிற சமயச்சடங்குகளுக்குமான வேறுபாட்டை நாம் உணர்வதன் மூலமாகவே தமிழர்கள் உலகத்தின் தனித்துவமான தொல்குடிகள் என்ற உண்மையை விளங்கிக்கொள்ள முடியும்.
குழந்தைகளிடம் இந்தப் பெருமிதத்தை உண்டுபண்ணும் படைப்புகள் வேண்டியதிருக்கிறது. மாற்று சிந்தனைகளை விதைக்க வேண்டும். அறிவியல் பார்வையுடன், பகுத்தறிவுப்பூர்வமான படைப்புகள் எண்ணிக்கையில் பெருக வேண்டும். அப்போது தான் பழைய சமத்துவமற்ற சநாதன மதிப்பீடுகளுக்கு மாற்றாக புதிய சமத்துவ ஜனநாயக மதிப்பீடுகளை உருவாக்கமுடியும். அதற்கான வழிமுறைகளைக் கண்டுபிடிக்கவேண்டும். மூவாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த தமிழ் மொழி இன்னமும் அதே உயிர்த்துடிப்புடன் இயங்கிக்கொண்டிருப்பதற்கான காரணம் அது தன் தனித்துவத்தை இழக்காமலிருப்பதனால் தான் நாம் புரிந்து கொள்ள வேண்டும். அந்த வகையில் ஆயிஷா நடராசனின் அறிவியல் புனைகதைகள், அறிவியல் கட்டுரை நூல்கள், ஆதிவள்ளியப்பனின் அறிவியல் நூல்கள், சூழலியல் நூல்கள், குழந்தைகளுக்கான செவ்வியல் நூல்களின் சுருக்கப்பதிப்புகள், முக்கியமானவை.
10. கதைகள், கட்டுரைகள் தாண்டி குழந்தை இலக்கியத்தில் பாடல்கள் மிக முக்கியமான இடத்தினை கொண்டது. இந்தப் பாடல்களின் வளர்ச்சி எத்தகையது? விலங்குகள், பறவைகள், இயற்கை காட்சிகள், அறிவுரைகள், தலைவரிகளின் பெருமைகள் என கருப்பொருட்கள் கொண்டதாகவே இருக்கின்றதே? இவற்றை கடந்து அறிவியல், சமதத்துவம், உண்மை என வளர்ச்சியை நோக்கி செல்ல வேண்டிய அவசியம் பற்றி …
குழந்தை இலக்கியத்தில் பாடல்கள் மிகமுக்கியமானவை. குழந்தைகள் இசையுடன் மொழியை கற்றுக்கொள்ள உதவுகிறது. இசையுடன் கூடிய பாடல்கள் குழந்தையை அமைதிப்படுத்துகின்றன. அவை குழந்தைகளின் மனதில் கல்வெட்டாய் பதிந்து விடும் ஆற்றல் கொண்டவை. பொதுவான ஐம்பது தலைப்புகளைத் தவிர்த்து புதிய நவீன பாடுபொருட்களைப் பாடல்களாக எழுதுபவர்கள் மிகவும் குறைவு. குழந்தைப்பாடல்கள் என்றாலே அழ.வள்ளியப்பாவின் நினைவு வரும். அவரளவுக்கு பாடல்களில் எளிமை, இனிமை, இசை சேர்ந்து எழுதுபவர்கள் குறைவு. அழ.வள்ளியப்பா 2000 பாடல்களை எழுதி ஒரு சாதனை புரிந்திருக்கிறார்.
சமகால சூழலுகேற்ப அறிவியல், சமத்துவம், பகுத்தறிவு, ஜனநாயகம், பெண்சமத்துவம், போன்ற புதிய மதிப்பீடுகளை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்தும் பாடல்களை எழுதவேண்டும்.அதற்கு குழந்தைக்கவிஞர்கள் உடனடியாக முன்வரவேண்டும்.
11. தமிழில் பதின் பருவ சிறார்களுக்கான இலக்கியம் குறித்து…
சிறார் இலக்கியப்பகுதியில் இடைவெளி இருக்கிற இன்னொரு பகுதி பதின்பருவ சிறார் இலக்கியம் என்று சொல்லலாம். இன்னமும் அந்தப்பகுதியில் பங்களிப்பு செய்ய நிறையப்பேர் வரவேண்டியதிருக்கிறது. அந்த வகையில் ரமேஷ் வைத்யாவின் அபாயப்பேட்டை, இருட்டு எனக்குப்பிடிக்கும் என்ற நாவல்களும், யெஸ்.பாலபாரதியின் ஆமைகள் காட்டிய அற்புத உலகில், புதையல் டையரி, தலைகீழ்புஸ்வாணம் கோ.மா.கோ.இளங்கோவின் சஞ்சீவி மாமா ஆகியவற்றை குறிப்பிட்டுச் சொல்லவேண்டும். சுகுமாரன் ஆங்கில செவ்வியல் குழந்தை இலக்கிய சுருக்கநூல்களான கடல்கன்னி, ரகசியத்தோட்டம் மொழிபெயர்த்திருக்கிறார்.
90-களில் உலக செவ்வியல் இலக்கியங்களான ஹெமிங்வேயின் கடலும் கிழவனும், மாப்பசானின் கதைகள், மொபிடிக், ஓ ஹென்றி கதைகள், போன்றவை காமிக்ஸ் புத்தகங்களாக வெளிவந்தது. அதைப் போன்ற முயற்சிகள் இன்றும் அதிகமாக தேவைப்படுகிறது. இன்னும் துப்பறியும், சாகசக்கதைகள், சமூகக்கதைகள் அறிவியல் கதைகள், என்று பதின்பருவ சிறார் இலக்கியத்துக்கான களங்கள் காத்திருக்கின்றன எழுத்தாளர்களுக்காக. இன்னும் நிறைய எழுத்தாளர்கள் சிறார் இலக்கியம் எழுதமுன்வரவேண்டும். நூறு பூக்கள் மலரவேண்டும்.
முற்றும்.
எழுத்தாளர் உதயசங்கர் அவர்களின் சிறார் இலக்கிய படைப்புகள் :
1.தலையாட்டி பொம்மை – குழந்தைப்பாடல்கள் – காலம் வெளியீடு-2002
2.பச்சை நிழல் – சிறுவர் கதைகள்- என்.சி.பி.ஹெச்.- 2014
3.குழந்தைகளின் அற்புத உலகில் – கட்டுரை நூல் – என்.சி.பி.ஹெச் – 2015
4.மாயக்கண்ணாடி – சிறுவர் கதைகள்- நூல்வனம்- 2016
5.பேசும் தாடி – சிறுவர் நாவல் – வானம்- 2016
6.விரால் மீனின் சாகசப்பயணம் – விகடன் பிரசுரம் – 2017
7.கேளு பாப்பா கேளு – குழந்தைப்பாடல்கள் – வானம் 2017
8.பேய் பிசாசு இருக்கா? – கட்டுரை நூல் – வானம் 2017
9.அண்டாமழை – சிறுவர் கதைகள் – வானம் 2018
10.ரகசியக்கோழி – சிறுவர் கதைகள் – வானம் 2018
11.ஏணியும் எறும்பும் – சிறுவர் கதைகள் –வானம் 2018
12.மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி – சிறுவர் கதைகள் வானம் 2018
மலையாளத்திலிருந்து மொழிபெயர்ப்பு :
1.வாயும் மனிதர்களும் – அபிமன்யு- பாரதி புத்தகாலயம்–2002
2.தயா – எம்.டி.வாசுதேவன் நாயர்- பாரதி புத்தகாலயம்– 2004
3.புத்தகப்பூங்கொத்து – குழந்தைகளுக்கான படக்கதைகள் – 25- பாரதி புத்தகாலயம்-2009
4.புத்தகப்பரிசுப்பெட்டி – குழந்தைகளுக்கான படக்கதைகள் -15- பாரதிபுத்தகாலயம்-2014
5.லட்சத்தீவின் கிராமியக்கதைகள் – எம்.முல்லக்கோயா- என்.சி.பி.ஹெச். – 2013
6.லட்சத்தீவின் இராக்கதைகள் – எம்.முல்லக்கோயா – பாரதி புத்தகாலயம்-2008
7.மீன் காய்க்கும் மரம் – வைசாகன்- வானம்-2016
8.மரணத்தை வென்ற மல்லன் – உரூபு – வானம்- 2016
9.பறந்து பறந்து – சி.ஆர்.தாஸ் – வானம் – 2016
10.அய்யாச்சாமி தாத்தாவும் ஆட்டுக்கல் மீசையும் – மாலி- வானம் 2016
11.இயற்கையின் அற்புத உலகில் – பேரா.சிவதாஸ் – வானம் 2016
12.பாருக்குட்டியும் அவளுடைய நண்பர்களும் – பேரா.சிவதாஸ் – வானம் 2018
13.பூதத்தான் மலையில் இருளாண்டி ராட்சசன் – சிப்பி பள்ளிபுரம் – வானம் 2018
14.இரண்டு தவளைகள் – அப்துல்லாபேரம்பரா – வானம் 2019
குழந்தை இலக்கியத்துக்கான விருதுகள் :
1. கலைஇலக்கியப்பெருமன்றம் – சிறுவர் இலக்கிய விருது – 2016
2. விகடன் விருது – சிறுவர் இலக்கிய விருது -2017
3. கு.சி.பா. நினைவு சிறுவர் இலக்கிய விருது – 2017
4. தமிழ்ப் பேராயத்தின்-அழ.வள்ளியப்பா குழந்தை இலக்கிய விருது -2017
5. கவிதை உறவு சிறுவர் இலக்கிய விருது – 2018