“குழந்தை இலக்கியத்துக்குள் என்னைத் தீவிரமாக இயங்கவைத்தது என்னுடைய குழந்தைகள் தான்” – எழுத்தாளர் உதயசங்கர் நேர்காணல் (பகுதி – 01)

வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

நேர்காணல் குறிப்பு : சிறார் இலக்கியத்தில் சிறுகதை,நாவல், கட்டுரை, மொழிப்பெயர்ப்பு, விமர்சனம் என பல்வேறு துறைகளில் தொடர்ந்து 25 ஆண்டுகளாக பங்களிப்பு தந்து வருபவர் எழுத்தாளர் உதயசங்கர். இவரது சொந்த ஊர் கோவில்பட்டி. 1980களிலிருந்து சிறுகதை, கவிதை, கட்டுரை, மொழிப்பெயர்ப்பு என பெரியவர்கள் மற்றும் சிறுவர்களுக்கான இலக்கியத்தில் இயங்கி வருகிறார். ஒரு நல்ல வாசகரும் கூட. சிறார்களுக்கான  கலை & இலயக்கிய துறையை தொடர்ந்து கவனித்தும், இயங்கியும் மேலும் அதில் இயங்கி வரும் சமகால செயற்பாட்டாளர் மற்றும் எழுத்தாளர்களுடன் தொடர்ந்து உரையாடி வருபவர். பஞ்சு மிட்டாய் செயல்பாடுகள் அனைத்தையும் கவனித்தும் தேவையான இடத்தில் மேற்பார்வை செய்தும் வருபவர். அவருடனான உரையாடலின் வழியே இந்த நேர்காணலை வாசகர்களுக்கு வழங்குகிறோம்.

1.பெரியவர்களுக்கான படைப்புகள் போலவே சிறார்களுக்காகவும் சமமாக எழுத வேண்டுமென்ற எண்ணம் எப்படி தோன்றியது ?

எனது பாலிய காலத்தில் 1970 – களில் அப்போது குழந்தைகளுக்கென்று வெளிவந்து கொண்டிருந்த அணில், கண்ணன், வாண்டுமாமா, அம்புலிமாமா, கோகுலம், பூந்தளிர், போன்ற பத்திரிகைகளை வாசித்துக் கொண்டிருந்தேன். எங்கள் வீட்டுக்கருகில் இருந்த பொதுநூலகத்திற்கும் சென்று குழந்தைகளுக்கான கதைப்புத்தகங்களை எடுத்து அங்கேயே உட்கார்ந்து வாசிக்கின்ற பழக்கமும் இருந்தது. பள்ளிப்புத்தகங்களைத் தாண்டி வாசிப்பின் மீதான என்னுடைய ஆர்வத்துக்கு இரண்டு பேரைச் சொல்லலாம். என்னுடைய அம்மா குமுதம் கல்கண்டு வாசகராக இருந்தார். வாராவாரம் அந்தப் பத்திரிகைகளை அம்மாவுக்கு வாங்கிக் கொண்டு வந்து கொடுப்பேன். கல்கண்டில் மூன்று வரி, ஐந்து வரித் துணுக்குச் செய்திகளை வாசித்துப்பழகினேன். பின்னர் தமிழ்வாணன் எழுதிய துப்பறியும் சங்கர்லால் இரும்புக்கை மாயாவி, மாதிரியான காமிக்ஸ் புத்தகங்களை வாசித்தேன். மற்றொன்று பள்ளியில் கைத்தொழில் வகுப்பு என்று சொல்லப்படுகிற வகுப்பு பெரும்பாலும் நூலகவகுப்பாகவே இருக்கும். நெசவு ஆசிரியர் அசோக் எங்களிடம் ஆளுக்கொரு புத்தகத்தைக் கையில் கொடுத்து வாசிக்கச் சொல்லிவிடுவார். அப்படி பள்ளிப்புத்தகங்களைத் தாண்டிய வாசிப்பு எனக்குப் பழக்கமாகியது. என் வாசிப்பின் வழியாக என்னுடைய சொந்தச் சரக்குகளை நண்பர்களிடம் அவிழ்த்து விடுவேன். எங்கள் தெருவில் நாங்கள், ராஜூ, மந்திரமூர்த்தி, முத்துச்சாமி, சின்னத்தம்பி, ராக்கையா, முருகன், அசோக், குமார், ராமலிங்கம், எல்லோரும் சேர்ந்து தெருவுக்குள் வீடு வீடாக வசூலித்து தந்தையும் மகனும் என்ற நாடகம் போட்டோம். அந்த நாடகத்தினை நான் எழுதினேன். அதன்பின்னான என்னுடைய நட்புவட்டம் மிகமுக்கியமான திருப்புமுனையை ஏற்படுத்தியது. நாறும்பூநாதன், பார்த்தசாரதி, முத்துச்சாமி, மாரீஸ்,போன்ற நண்பர்களின் நட்பினால் எனது உலகம் விரிந்தது. கவிதை, சிறுகதை, அரசியல், தத்துவம், என்று எல்லாவற்றையும் வாசிக்கவும், எழுதிப்பார்க்கவும் துணிந்தேன். 1990 – களில் குழந்தைகளுக்கான பாடல்களை எழுத் தொடங்கினேன். அவ்வப்போது கதைகளும் எழுதிப்பார்த்துக் கொண்டிருந்தேன். என் குழந்தைகளுக்குக் கதை சொல்ல புதிய கதைகளை யோசித்தேன். குழந்தை இலக்கியத்துக்குள் என்னைத் தீவிரமாக இயங்கவைத்தது என்னுடைய குழந்தைகள் தான்.

2. சிறார் இலக்கியத்தில் உங்களது ஆரம்பக்கட்ட செயல்பாடுகள் குறித்து பகிருங்கள் …

குழந்தை இலக்கியத்தின் அப்போதைய நிலைமை மிகவும் பரிதாபமாக இருந்தது. அதற்குரிய மரியாதையோ, அங்கீகாரமோ, யாரிடமும் இல்லை. வெளிவந்த புத்தகங்களும் அறிவுரை கூறும் புத்தகங்களாகவோ, கூறியது கூறலாகவோ, புராண, இதிகாச, மறுகூறலாகவோ இருந்தது. சமகாலக்குழந்தைகளுக்கான கதைகள், பாடல்கள் கிட்டத்தட்ட எழுதப்படவில்லை அல்லது பொதுவெளியில் கவனம் பெறவில்லை. இவையெல்லாம் பெரியவர்களுக்கு எழுதுவதைப் போன்றே சிறார்களுக்கு எழுதுவதும் மிக முக்கியம் என்ற உணர்வை ஏற்படுத்தியது. 2000 – ஆம் ஆண்டு என்னுடைய சொந்தச்செலவில் கேளு பாப்பா கேளு என்ற குழந்தைப்பாடல்கள் சிறுபிரசுரத்தை 2ரூ விலையில் அச்சிட்டு விநியோகம் செய்தேன். அதே ஆண்டு மலையாளக்குழந்தை எழுத்தாளரான வி.அபிமன்யூவின் வாயும் மனிதர்களும் என்ற புத்தகத்தையும் 10ரூ விலையில் பதிப்பித்து விநியோகம் செய்தேன். 2002 –ல் தலையாட்டி பொம்மை என்ற குழந்தைப்பாடல்கள் நூலை காலம் பதிப்பகம் வெளியிட்டது. 2004 – ஆம் ஆண்டில் எம்.டி.வாசுதேவன் நாயரின் தயா என்ற சிறார் நாவல் முதலில் அனன்யா பதிப்பகம் வழியாகவும், பின்னர் பாரதி புத்தகாலயத்தின் வழியாகவும் வெளிவந்தது. தமிழின் முதல் இணைய இதழான ஆறாம் திணை என்னுடைய சிறார் கதைகளையும், கட்டுரைகளையும் பிரசுரித்தது.. அதன்பிறகு பாரதி புத்தகாலயம் என்னுடைய மொழிபெயர்ப்பில் புத்தகப்பூங்கொத்து 25 நூல்கள், புத்தகப்பரிசுப்பெட்டி15 நூல்கள், முல்லக்கோயா எழுதிய லட்சத்தீவின் கிராமியக்கதைகளையும் வெளியிட்டது. அம்ருதா பதிப்பகத்தில் முல்லக்கோயாவின் லட்சத்தீவின் இராக்கதைகள் என்ற நூலும், என்சிபிஹெச்சில் பச்சைநிழல் என்ற சிறார் கதைகள் நூலும், தீக்கதிர் வண்ணக்கதிர், தமிழ் இந்துவின் மாயாபஜார், ஆகிய பத்திரிகைகளில் தொடர்ந்து படைப்புகளை வெளியிட்டு வாய்ப்பளித்தனர். மாயக்கண்ணாடி ( 2016 )முதல் அதன் பிறகான அத்தனை சிறார் இலக்கிய நூல்களும் மொழிபெயர்ப்பு நூல்களும் நூல்வனம், வானம் பதிப்பகங்களில் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. ஆரம்பத்திலிருந்தே என்னுடைய கவனம் குழந்தை இலக்கியத்தின் பக்கம் இருந்தாலும் கடந்த சில ஆண்டுகளாகத்தான் அவை கவனம் பெறத்தொடங்கின. குழந்தைகளுக்கான இலக்கியத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்ததினால் தான் இருபத்தியைந்து ஆண்டுகளாகத் தொடர்ச்சியாக சிறார் இலக்கியத்தில் இயங்கி வரமுடிகிறது.

3. “கடந்த மூன்றாண்டுகளில் மிக வேகமான வளர்ச்சி பெற்ற இலக்கியத்துறை என்றால் அது சிறுவர் இலக்கியத்துறை தான்” என்று கூறி இருந்தீர்கள்..உங்களுக்கு இந்த நம்பிக்கையை ஏற்படுத்திய சில விசயங்களைப் பற்றி சொல்ல முடியுமா ?

1970 – களுக்குப் பின்பு சிறார் இலக்கியம் பொதுச்சமூகத்திலும், இலக்கியவெளியிலும் அவ்வளவு ஆரோக்கியமானதாக இல்லை. பலபதிப்பகங்கள் நூலக ஆணைக்காகவே அறுதப்பழசான புத்தகங்களை மீண்டும் மீண்டும் அட்டையை மாற்றியோ, தலைப்புகளை மாற்றியோ வெளியிட்டுக்கொண்டிருந்த காலம் அது. எங்களுடைய தலைமுறையில் வீட்டுக்கு குறைந்தது மூன்று குழந்தைகள் இருந்தார்கள். குழந்தைகளைப் பற்றி பெற்றோர் கவலைப்பட நேரமோ, சூழலோ, பொருளாதாரமோ இடம் தரவில்லை. என்றைக்குமே அரசின் கல்வித்துறையோ, அரசோ குழந்தை இலக்கியத்தைப் பற்றிக் கவலைப்பட்டதுமில்லை. ஆனால் ஒரு புதிய தலைமுறை உருவாகி வருகிறது. அதிக பட்சம் இரண்டு குழந்தைகளைக் கொண்ட அவர்கள் குடும்பம் குழந்தைகளைப் பற்றிக் கவலைப்படத்தொடங்குகிறார்கள். நேரம், காலம், பொருளாதாரம் எல்லாம் ஓரளவுக்கு வாய்த்திருக்கும்போது தங்கள் குழந்தைகளுக்கு பள்ளிக்கல்வியைத் தாண்டி விளையாட்டுகள், பாடல்கள், கதைகள், என்று தாங்கள் கற்றுக்கொண்டு சொல்லித்தரவும், குழந்தைகளை வாசிக்கச்சொல்லவும் முயற்சிக்கிறார்கள் அத்துடன். புதிய முயற்சிகளை பாரதி புத்தகாலயம் மனந்தளராமல் முன்னெடுத்ததும், புதிய வடிவமைப்புகளில் நேர்த்தியான படைப்புகளை வானம் பதிப்பகம் கொண்டு வருவதும் குழந்தை இலக்கியத்துக்கு ஊக்கமாக அமைந்தது. இதையெல்லாம் தாண்டி ஒரு புதிய காற்றாய் புதிய தலைமுறை எழுத்தாளர்கள் ஆயிஷா நடராஜன், யெஸ்.பாலபாரதி, விஷ்ணுபுரம் சரவணன், விழியன், கோ.மா.கோ.இளங்கோ, பஞ்சுமிட்டாய் பிரபு, கன்னிக்கோவில் ராஜா, ரமேஷ் வைத்யா, ஆதிவள்ளியப்பன், மு.முருகேஷ், க.சரவணன், விஜய் பாஸ்கர்விஜய், உமையவன், ஆகியோரின் காத்திரமான படைப்புகளும் மொழிபெயர்ப்பாளர்கள் வெ.ஸ்ரீராம், எஸ்.ராமகிருஷ்ணன், யூமா வாசுகி, சுகுமாரன், உதயசங்கர், சரவணன் பார்த்தசாரதி, ஜெயந்தி சங்கர் ஆகியோரின் பன்மொழி மொழிபெயர்ப்பு தமிழ்க்குழந்தை இலக்கியத்துக்கு வளம் சேர்த்திருக்கிறது என்றால் மிகையில்லை என்றே கருதுகிறேன்.

குழந்தைப்படைப்பாளிகளாக க.சீ.சிவஸ்வேதாசெல்வி, அபிநயா, ரமணி, ரியா, போன்றோரும், கதைசொல்லிகளாக ரமணி, ரியா, ஆகிய குழந்தைகளும் உருவாகியிருக்கிறார்கள். அத்துடன் குழந்தைகளுக்கான கதை, பாடல்கள், விளையாட்டு என்று குழந்தைகளுக்கான கலை இலக்கிய நிகழ்வுகளை நடத்தித் தருகிற இளைஞர்கள், பஞ்சுமிட்டாய் பிரபு, இனியன், கதைசொல்லி சதீஷ், விஷ்ணுபுரம் சரவணன், வனிதாமணி கதைசொல்லி, முன்வந்திருப்பதும் அவர்கள் நடத்துகிற நிகழ்ச்சிக்கு பேராதரவு பெற்றோர்களிடமிருந்து கிடைப்பதும் குழந்தைகள் குறித்த சமூகத்தின் பார்வையில் குறிப்பிடத்தக்க மாற்றம் நிகழ்ந்திருக்கிறது என்பதைக் காட்டுகிறது. குழந்தை இலக்கியப்பத்திரிகைகளாக துளிர், பஞ்சுமிட்டாய், தும்பி, குட்டி ஆகாயம், பொம்மி, ரெக்கை,வகுப்பறை, சிறார், போன்ற பத்திரிகைகள் வெளிவந்து கொண்டிருப்பதையும்பார்க்கும்போது குழந்தை இலக்கியம் மிகக்குறைந்த காலத்தில் புத்தெழுச்சி பெற்றிருக்கிறது என்று தோன்றுகிறது.

4. பெரியவர்களுக்காக எழுதும் வெகு சிலரே சிறார்களுக்காக எழுதுகிறார்கள்..இதை நாம் எப்படி அணுக வேண்டும்?

பொதுவாக குழந்தை இலக்கியப் படைப்புகளுக்கு இலக்கியமதிப்போ, சந்தை மதிப்போ கிடையாது. அப்படியும் எழுதிக்கொண்டிருக்கிற எழுத்தாளர்களுக்கான அங்கீகாரம் இப்போது தான் கொஞ்சம் கிடைக்க ஆரம்பித்திருக்கிறது. குழந்தை இலக்கியப்படைப்புகளுக்கான வாசகப்பரப்பும் மிகக்குறைவு. இவற்றிலெல்லாம் மாற்றம் நிகழும்போது நிறையப்பேர் எழுத முன்வருவார்கள். ஆனால் உலக இலக்கிய ஜாம்பவான்கள் எல்லோரும் குழந்தைகளுக்காக எழுதியிருக்கிறார்கள். பொதுச்சமூகத்தில் கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்துத்தான் எழுத்தாளர்கள் குழந்தைகளுக்காகவும் எழுத முன்வருவார்கள். மலையாளத்தில் எம்.டி.வாசுதேவன் நாயரின் தயா என்ற சிறார் நாவல் திரைப்படமாக எடுக்கப்பட்டு வெற்றிவிழா கொண்டாடியது. இப்போதிருக்கிற சூழல் வளருமானால் மிகவிரைவில் எல்லா எழுத்தாளர்களுமே குழந்தைகளுக்காக எழுத முன்வருவார்கள் என்று நம்புகிறேன்.

5. மலையாளத்திலிருந்து நிறைய மொழிப்பெயர்ப்பு செய்துள்ளீர்கள்…அங்கு நீங்கள் கவனித்த சில ஆக்கப்பூர்வமான முயற்சிகளை / புதிய வகைகளை பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன்…

கேரளாவில் அரசு சிறார் இலக்கியத்தில் மிகுந்த கவனம் எடுத்துக்கொண்டிருக்கிறது. பாலசாகித்ய இன்ஸ்டிடியூட் என்ற ஒரு அமைப்பை அரசு உருவாக்கி சிறார் இலக்கிய நூல்களைப் பதிப்பித்து பள்ளிகளுக்கு அனுப்புகிறது. அங்கே குழந்தை எழுத்தாளர் சங்கம் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. குழந்தை இலக்கிய நூல்களில் வாசிக்க வேண்டிய வயது குறித்து அறிவிப்பு போடப்படுகிறது. வயது வாரியாகப் பத்திரிகைகளும் கூட வெளியாகின்றன. மிக முக்கியமான விஷயமாகக் கருதுவது அங்கே ஆண்டு தோறும் நூற்றுக்கணக்கான அறிவியல், சுற்றுச்சூழலியல், புனைகதை, சிறார் இலக்கிய நூல்கள் வெளியாகின்றன.

6. சிறார்களுக்கான புனைவு எவ்வளவு முக்கியமோ அதேப் போல தான் அபுனைவுகளும்..சிறார்களுக்கான சமகால நிகழ்வுகள் வெறும் தகவல்களாக மட்டும் இல்லாமல் ஓர் சிந்தனை தூண்டும் வகையில் இங்கு பதிவு செய்யப்படுகிறதா?

சிறார்களுக்கான அபுனைவு படைப்புகளில் அவ்வளவு காத்திரமான படைப்புகள் வரவில்லை என்றே சொல்லலாம். எனக்குத் தெரியாமலும் இருக்க வாய்ப்பிருக்கிறது. எனக்குத் தெரிந்து ச.தமிழ்ச்செல்வனின் இருட்டு எனக்குப் பிடிக்கும் என்ற அபுனைவு நூல் மிக முக்கியமானது. உதயசங்கரின் பேய் பிசாசு இருக்கா? என்ற சமீபத்தைய நூலும் குறிப்பிடத்தகுந்தது. ஆதிவள்ளியப்பனின் மொழிபெயர்ப்பு நூல்களான லெனின், மார்க்ஸ், வாழ்க்கை வரலாறு நூல்களும், முக்கியமானவை. அபுனைவில் இன்னும் போகவேண்டிய தூரம் அதிகம் இருக்கிறது.

நேர்காணல் தொடரும் …

Leave a comment