வளைய சூரிய கிரகணம் : சில புரிதல்களும் அனுபவமும் – செ.மணிமாறன்

வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

சூரியனுக்கும், பூமிக்கும் இடையே சந்திரன் நேர்கோட்டில் வரும்போது சூரியன் மறைக்கப்படும். அதாவது சந்திரனின் நிழல் பூமியில் விழும். இது சூரிய கிரகணம் ஆகும். சூரியனை சந்திரன் முழுமையாக மறைத்தால் அது முழு சூரிய கிரகணம். சூரியனின் மையப்பகுதியை மட்டும் சந்திரன் மறைத்து விளிம்பில் வளையம் போல ஒளி தெரிகிறபோது, அது வளைய சூரிய கிரகணம் என்கிறோம்.

கிரகணம்’ (Eclipse) என்ற சொல்லுக்கு, ‘மறைக்கப்பட்ட’ அல்லது ‘கைவிடப்பட்ட’ என்பது பொருளாகும். ஆனால், கிரேக்க மொழியிலிருந்தும் லத்தீன் மொழியிலிருந்தும் பெறப்பட்ட இதன் வேர்ச் சொல்லான ‘Ekleipsis’ என்பதற்கு, உண்மையான பொருள், ‘விண்கோள்கள் கருமையடைவது’ என்பதுதான்.

டிசம்பர் 26 அன்று கிரகணம் காலை 08:08 மணி அளவில் துவங்கி 11:19 மணிக்கு முடியும் என்றும் சரியாக 09:35 மணி அளவில் சூரியனை சந்திரன் முழுமையாக மறைக்கும் மற்றும் முழு கிரகண வடிவம் சுமார் 3 நிமிடங்களுக்கு நிலைபெற்றிருக்கும் என்று அறிவிக்கப்பட்டது. ஊட்டி, கோயம்பத்தூர், ஈரோடு, பாலக்காடு, திருப்பூர், திருச்சி, கரூர், புதுக்கோட்டை மற்றும் சென்னை உட்பட தென் இந்தியா முழுவதும் ஓரளவு இந்த சூரிய கிரகணத்தை முழுமையாக காணலாம் என ஆய்வாளர்கள் கூறி இருந்தனர்.

பொதுவாக சூரிய கிரகணம் அம்மாவாசையிலும், சந்திரகிரகணம் பெளர்ணமியிலும் ஏற்படும் சாதாரண வானியல் நிகழ்வுகள் தான். சூரியனை எப்போதுமே வெறும் கண்ணினால் பார்க்கக் கூடாது. ஆனால் இந்த சூரிய கிரகணத்தை தவற விட்டால் மீண்டும் காண 12 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். அடுத்த சூரிய கிரகணம் என்பது 2031 ஆம் ஆண்டில் தான் ஏற்படும். இந்த சூரிய கிரகணத்தை தமிழ்நாடெங்கும் பரவலாக பொதுமக்களால் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் பார்க்கப்பட்டது.

வரலாற்றில் கிரகணம் பற்றி தேடிப்பார்த்தால் முக்கியமான ஒரு விசயம் தென்பட்டது. அமெரிக்காவினை அடைந்த கொலம்பஸ் அந்நாட்டின் பூர்வகுடிகளை அடிமையாக்கி, அமெரிக்காவின் வளங்களை கொள்ளை அடித்து கொடுமைப்படுத்திய போது – கிளர்ந்து எழுந்தவர்களிடம் தன்னை கடவுள் அனுப்பியதாகவும் – அதனை அம்மக்கள் நம்பவைக்க கொலம்பஸ் கிரகணத்தை பயன்படுத்திக் கொண்டான். கிரகணத்தின் போது ஒளியை மறைக்கும் அளவிற்கு தனக்கு சக்தி உள்ளதாகவும் பொய்யினை கூறி அதனை அந்த அப்பாவி மக்கள் ஏற்றுக் கொண்டு தொடர்ச்சியாக பல இன்னல்களை அனுபவித்தனர்.

நம் நாட்டிலும் புராணங்களில் ஏராளமான கெட்ட சகுணங்களாக இந்த கிரகணங்களை குறித்து வருகின்றனர். முக்கியமாக கோயில்களில் கிரகணம் காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோயில் 13 மணி நேரம் அதாவது டிசம்பர் 25, 26 ஆகிய தேதிகளில் அடைக்கப்படும் என்றும் சபரிமலை ஐயப்பன் கோயிலும் டிசம்பர் 26ஆம் தேதி 4 மணி நேரம் அடைக்கப்படும் என்றும் அறிவிப்புகள் வந்தன. சூரிய கிரகணம் நிகழும் நேரத்தில் நாட்டில் உள்ள அனைத்துக் கோவில்களும் நடை சாத்தப்பட்டு இருக்கும்.

ஆனால், அதற்கு நேர்மாறாகச் சூரிய மற்றும் சந்திர கிரகணங்கள் நிகழும் நேரத்தில் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவில் வழக்கம்போல் நடை திறந்திருக்கும். பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். இது தான் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் கோவிலின் சிறப்பம்சமாகவும் சொல்லிக் கொள்கின்றனர். ஏனெனில் இவருக்கு விஷேச சக்தி உள்ளதாகவும் கூறி வருகின்றனர். இதற்கெல்லாம் ஒரு படி மேலே சென்று ஒரிஷா மாநில அரசு விடுமுறையே விட்டுள்ளது அதிர்ச்சி அளிக்கின்றது.

அய்யனார், வீரன், கருப்பன், சுடலைமாடன் – போன்ற சிறு தெய்வங்கள் கிரகணத்தைக் கண்டு அஞ்சாமல் நிற்கும் போது பெரிய தெய்வங்கள் ஏன் பயப்பட்டு அடைக்கப்படுகின்றன என்ற கேள்வியும் எழாமல் இல்லை. இதை விட கொடுமை கிரகணம் தாக்காமல் இருக்க குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் வீட்டில் எண்ணெய் விளக்கு ( அகல் விளக்கு ) ஏற்றி பாதிப்பை குறைத்துக் கொள்ள கேட்டுக் கொள்ளப்பட்டது தான்.

கிரகணம் குறித்த கட்டுக்கதைகள்:

சூரிய கிரகணம் தோன்றுவதற்கு முன்பாகவே வீட்டில் சமைத்து வைத்த உணவு, தண்ணீர் போன்றவைகளில் தர்ப்பை புல்லை போட்டு வைக்க வேண்டும். அப்போதுதான் கிரகணத்தினால் ஏற்பட்ட கதிர்வீச்சுகள் தோஷங்கள் நீங்கும். வீட்டை விட்டு வெளியே வரவேக் கூடாது. குறிப்பாக கர்ப்பமுற்ற பெண்களை கதிர்கள் பாதித்து விடும். கிரகணம் முடிந்த உடன் கடலில் குளிக்கலாம் அப்படி அருகில் கடல் இல்லாதவர்கள் வீட்டில் கல் உப்பை ஒரு கை நிறைய எடுத்து வாளியில் போட்டு தண்ணீர் ஊற்றி குளிக்க வேண்டும். இதனால் தோஷங்கள் நீங்கும். அருகில் உள்ள கோவிலுக்கு போய்விட்டு வரவேண்டும். சில அறிவிலிகள் வீட்டில் அண்டா தண்ணீருக்குள் மூழ்கி இருந்த வேடிக்கை கதைகளும் நிறைய உண்டு. இதைப் போன்று ஏராளமான கட்டுக்கதைகளை பரப்பி விட்டுள்ளனர்.

பார்த்து ரசித்த கிரகணம் :

சூரியனை எப்போதும் வெறும் கண்களினால் பார்க்க கூடாது. பார்த்தால் கண்கள் பாதிக்கும். அதனால் சூரிய ஒளியை வடிகட்டும் தன்மையுள்ள கண்ணாடிகளைக் கொண்டு பார்க்கலாம். கர்ப்பிணி பெண்கள் பார்க்கலாம். எவ்வித பாதிப்பும் ஏற்படாது. எல்லோரும் காணலாம். உணவு கண்டிப்பாக இந்த நேரங்களில் கெட்டுப்போகாது. அதற்கென ஆய்வு முடிவுகளும் இந்தியாவில் நடத்தப்பட்டு 2012 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் நிரூபிக்கப்பட்டு உள்ளன. இதுபோன்று மக்கள் மத்தியில் பொதுவாக நிலவும் கேள்விகளுக்கு பதில் தரும் வகையில் தமிழநாடு அறிவியல் இயக்கம் குறைந்த விலையில் சிறு புத்தகமும் அதனுடன் சூரிய கண்ணாடியையும் தமிழ்நாடெங்கும் பரவலாக்கியது.

நாங்களும் சூரிய கிரணக நாளன்று குடும்பத்துடன் வீட்டில் கண்டதுடன், ஏற்கனவே வடிவமைத்த ஊசித்துளை கேமிரா மூலம் சுவரில் அதன் பிம்பத்தை வரவழைத்தோம். அனன்யா (மகள் 8 வயது) கேட்ட கேள்விகளுக்கு பதிலுரைக்காமல் தேர்தல் அவசரம் என்று முத்துப்பேட்டை நோக்கி ஓடினோம்.80 கிமீ பயணம் செய்த போது, வழிகளில் எதிர்பட்ட சிறுவர்கள், பெரியவர்கள் என கையோடு வைத்திருந்த சூரிய கண்ணாடியினைக் கொடுத்து சூரயகிரகணத்தை காணச் செய்தோம். இன்று சாப்பிடவே கூடாது – செரிக்காது என்பதில் இருந்து எளிய உணவாக சாப்பிட எச்சரிக்கை அளித்த வாட்சப் வதந்திகளை மறந்து எளிய உணவான பிரியாணியை உண்டு கிரகணத்தை வழி அனுப்பினோம்.

எல்லா கிரகணங்களையும் விட இந்த கிரகணம் பொது மக்களிடையே பரவலாக கொண்டு சேர்க்கப்பட்டுள்ளதை கவனிக்க முடிந்தது. சில இடங்களில் காவல்துறை நண்பர்களும் வெறும் கண்களால் கிரகணங்களை பார்க்க கூடாது என்று பொது மக்களுக்கு அறிவுறுத்தினர். பல இடங்களில் மாவட்ட கலெக்டர்கள் பொது மக்களுடன் சேர்ந்து கிரகணத்தை பார்த்ததோடு அல்லாமல் தேநீர் விருந்தும் நடத்தி மூட நம்பிக்கைகளை தகர்த்தனர். சில இடங்களில் பொங்கல் வைத்தும் கொண்டாடினர். மதுரை கலிலியோ அறிவியல் மையமும் கிரகணம் குறித்த விழிப்புணர்வை 100 க்கும் மேற்பட்ட கருத்தாளர்களை உருவாக்கி அவர்கள் வழியே ஏற்படுத்தி இருந்தது. நம்மை விடவெல்லாம் புத்திசாலித்தனமான குழந்தைகள் அருகில் உள்ள வெல்டிங் பட்டறைகளுக்குச் சென்று அங்குள்ள கண்ணாடிகளை பயன்படுத்தி கிரகணத்தை பார்த்தனர். இக் குழந்தைகள் போன்ற தன்னுனர்வில் அறிவியல் ஆர்வமுள்ள குழந்தைகளை சரியாக வழிநடத்தி செல்லுவதே நமது கடமை ஆகும்

மேலும் ஊடகங்களும் இயற்கை நிகழ்வை மக்களுக்கு கொண்டு சேர்த்தது மட்டுமில்லாமல், அறிவியல் சார்ந்த விஷயங்களையும் மக்கள் பேசிய மூடநம்பிக்கை தகர்ப்பு கருத்துக்களையும் பதிவு செய்தது. இது பலரது அச்ச உணர்வதை போக்குவதாக அமைந்தது. அதிலும் முக்கியமாக 2010 கிரகணம் பார்க்க வந்த கரிப்பினி ஒருவரின் பதிவு மிக முக்கியமானது. ஆனால் ,இக்காலத்தில் தான் மக்களுடன் இந்நிகழ்வில் பங்கெடுக்க வேண்டிய பொறுப்புள்ள ஆசிரியர்கள் உள்ளிட்ட ஊழியர்கள் தேர்தல் வேலைகளில் பணியாற்றும்படி சூழல் இருந்தது. இதையெல்லாம் கடந்து இந்தக் கிரகணம் பொதுமக்களால் திருவிழா போன்று கொண்டாடப்பட்டது என்று சொன்னால் அது மிகையாகாது. அதற்கு இங்குள்ள அறிவியல் இயக்கம் நண்பர்களின் உழைப்பும் மிக முக்கியமான காரணம். அனைத்து விதமான உழைப்பிற்க்கு அன்பும் வாழ்த்துக்களும்.

கிரகணம் முடிந்த அன்றைய பொழுதே உலக்கை நிற்கும் சோதனை வீடியோக்கள் வரவும் துவங்கியது என்பதையும் குறிப்பிட விரும்புகிறேன். பல்வேறு நண்பர்கள் இதனை பழமைவாதத்துடன் முடிச்சுப் போடவும் செய்கின்றனர். இதையெல்லாம் கடந்து, அது உண்மையா? உண்மையென்றால் அதன் பின்னால் இருக்கும் அறிவியலுடன் பதிவுகள் வந்தால் நன்றாக இருக்கும்.

Leave a comment