பொம்மைமுகச்‌ சிங்கங்கள்‌ – தஞ்சாவுரில் சிறார் நாடக நிகழ்வு

வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

சிறார் நாடகங்கள் என்றதும் நமது மனங்களில் ஓடுவது சிறுவர்கள் மைக் முன் நின்று மேடைப் பயத்துடன் பேசும் வசனங்களும், அவர்கள் அணியும் ஆடைகளும் தான். ஆனால் இந்த எதிர்ப்பார்ப்புகளையெல்லாம் உடைத்து சிறார்களின் குறும்புகளையும், விளையாட்டுகளையும், எதார்த்தையும் நாடகமாக மாற்றி வருகிறது தஞ்சாவூர் பிள்ளையார்பட்டியை சேர்ந்த “உதிரி நாடக நிலம்”. நவீன நாடக உலகில் சிறார்களுக்கான இடத்தினை தனியாக கட்டமைத்து வருகிறது உதிரி நாடக நிலம்.

அப்படிப்பட்ட உதிரி நாடக நிலம் தொடர்ந்து தஞ்சையில் தமிழ் நவீன நாடகப் பேராசான் பேரா.சே.இராமானுஜம் அவர்களின் நினைவு நாள் நிகழ்வுகளை ஒருங்கிணைத்து வருகிறது. சென்ற வருடம் ரெங்கபிரமாத் குழந்தைகள் நாடக அரங்கின் (கேரளா) “பார்வையற்ற நாய்” என்ற மலையாள நாடகத்தினை மிகவும் வெற்றிக்கரமாக தமிழ் மக்களுக்கு கொண்டு சேர்த்தது. அதேப் போல இம்முறையும் தமிழ் நவீன நாடகப்பேராசான் பேரா.சே.இராமானுஜம் அவர்களின் 4ஆம் ஆண்டு நினைவு நாளை தனது நாடகத்தின் வழியே நினைவு கொள்கிறது.

நாகை வானவில் பள்ளி குழந்தைகள் தயாரிப்பில் உதிரி நாடக நிலம் விஜயகுமார் அவர்களின் ஒருங்கிணைப்பில் “பொம்மைமுகச்‌ சிங்கங்கள்‌” என்ற நாடகம் தஞ்சாவூர் தென்னக பண்பாட்டு மையத்தில் நடக்க இருக்கிறது. தஞ்சை பகுதியை சார்ந்த நண்பர்கள் அவசியம் சிறார்களுடன் இந்த நாடகத்தை பார்க்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

நிகழ்வு விபரங்கள் :

நாள் : 07/12/2019 (சனி)
நேரம் : மாலை 6 மணிக்கு
இடம் : தஞ்சாவூர் தென்னகப் பண்பாட்டு மையம்
தொடர்புக்கு : 97513 72248

நாடக கதை களம்:

மலர்ந்த பூக்களின்‌ மணம்‌ காடெங்கும்‌ பரவியிருக்கிறது.மலர்களிலுள்ள தேனை உறிஞ்ச தேனீக்கள்‌ பறந்தவாறு தேனைச்‌ சேகரித்துக்கொண்டே இருக்கின்றன. பூக்களோ தேனீக்களின்‌ வந்தமர்ந்து தேனுறிஞ்சும்‌ வேகத்திற்கேற்றவாறு மெல்ல அசைந்தாடியபடியே விளையாட்டுக்‌ காட்டும்‌ விதமாய்‌ அசைகின்றது.வீசும்‌ காற்றிற்கேற்றவாறு கிளை பரப்பிய மரங்களின்‌ இலைகள்‌ காற்றைப்‌ புல்லாங்குழலாக்குகிறது.கூட்டமாகப்‌ புற்களை மேய்ந்துக்‌ கொண்டிருக்கின்றன மாடுகள்‌, இளங்கன்றுகள்‌ துள்ளிக்குதித்து ஓடியாடி விளையாடிக்‌ கொண்டிருக்கின்றன,இவையனைத்தையும்‌ மறைந்து நின்று வேவு பார்த்துக்‌ கொண்டிருக்கிறது பேராசைப்‌ பிடித்த சிங்கமொன்று,தேனீக்கள்‌ தேனுறிஞ்சிச்‌ சென்றுவிட, மாடுகள்‌ மட்டும்‌ விளையாடிக்‌ கொண்டிருக்கையில்‌ சிங்கமானது மாடுகளைத்‌ துரத்த, ஒரு மாடு மட்டும்‌ மூச்சு வாங்கி ஓடிக்கொண்டிருக்க,பயம்‌ வேண்டாம்‌ நான்‌ காயம்பட்டிருக்கிறேனென்று அருகில்‌ வரச்சொல்ல,சிங்கமானது தான்‌ மறைத்து வைத்திருந்த சிங்கமுகத்தைமாட்டி இழுத்துச்‌ சென்றுவிடுகிறது.

பின்னர்‌,சிங்கங்களெல்லாம்‌ கூடி இந்த இடத்தைத்‌ தமது இடமாக மாற்ற எண்ணி மாடுகளை ஒவ்வொன்றாகப்‌ போலிச்சிங்கமுகத்தை மாட்டி இழுத்துச்சென்றுவிடுகிறது. இதைக்கண்ட மரங்களும்‌, பூக்களும்‌ பயந்தபடியேயிருக்கின்றன. தேனீக்கள்‌ வந்து நடந்ததைக்‌ கேட்டு மாடுகளை மீட்டுவரத்திட்டம்‌ தீட்டுகின்றன.மிஞ்சியிருக்கும்‌ மாடுகளை சிங்கத்தின்‌ குகையருகே மாடுகளை அனுப்பிச்‌ சிங்கத்தின்‌ பேராசையைத்‌ தூண்டிவிட, குகையினருகே தேனடைக்கட்டிக்‌ காத்திருந்தத்‌ தேனீக்கள்‌ பறந்துவந்து மாடுகளைத்‌ தாக்க வந்த அனைத்தையும்‌ தங்களின்‌ உறுதியானக்‌ கொடுக்குகளால்‌ கொட்டுக்கொட்டென்று கொட்டி விரட்டியடிக்க சிங்கங்கள்‌ அனைத்தும்‌ வலி தாங்காமல்‌ பிடரித்தெறிக்க ஓடிவிடுகின்றன. பின்னர்‌, அனைத்து மாடுகளையும்‌ அழைத்து போலிச்சிங்கமுகத்தைக்‌ கிழித்தெறிந்து அவர்களின்‌ இடத்திற்கு வந்து முன்பு போல அனைவரும்‌ மகிழ்வுடன்‌ விளையாடிக்கொள்கின்றன.

இந்த நாடகம் ஏற்கனவே சென்னை & திருவண்ணாமலையில் அரங்கேறியுள்ளது. அதிலிருந்து சில காட்சிகள் :

https://www.youtube.com/watch?v=NTcRlEmCDx4

Leave a comment