சூட்டி மகிழ்வோம் தூய தமிழ்ப்பெயர்கள் (புத்தக அறிமுகம்) – மரு.கு.செந்தில்ராசா

வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

குழந்தை பிறந்ததும் வீட்டில் அடுத்தகட்ட முக்கியமான வேலை பெயர் தேடுவதே. கணவன்- மனைவி, வீட்டில் உள்ள பெரியவர்கள், உறவினர் என ஆளுக்கொரு பெயர்களை தேடிப் பிடிக்க துவங்கிவிடுவர். அந்த தேடலில் ராசி, நட்சத்திரம் என சோதிட நம்பிக்கைகளும் எண் கூட்டுத்தொகை என எண்ணியல் நம்பிக்கைகளும் ஒரு புறம் சேர்ந்துக் கொள்வது வழக்கம். இந்த நம்பிக்கைகள் மீது கவலைப்படாமல், கணவன்-மனைவி அல்லது தாத்தா-பாட்டியின் பெயர்களை சேர்த்து புதுப் பெயர்களை உருவாக்குவதும், அழகிய தமிழ்ப் பெயர்களை சூட்டும் வழக்கமும் வளர்ந்துக் கொண்டிருக்கிறது.

அருந்தமிழ் பெயர்கள் வைக்க வேண்டும் என்று முடிவு செய்ததும் அதற்கான பெயர்களை தேட இணையத்தையே பெரும்பான்மையினர் நாடுவது வழக்கம். அப்படி இணையம் இல்லாமல் சிலபல புத்தகங்களை தேடிப்பிடிப்பதும் உண்டு. ஆனால், நமது தேடலுக்கு கிடைப்பது வெறும் 20-30 பக்கங்களே கொண்ட புத்தகங்களே. அதுவும் மிகவும் பரிச்சயமான பெயர்களும், கலப்பு பெயர்களும், ஒரே மாதிரியான பெயர்களுமே இந்தப் புத்தகங்களில் கிடைக்கின்றன. இவற்றில் தூய தமிழ்ப் பெயர்கள் அதிகம் கிடைப்பதேயில்லை.

இந்தக் குறையை நிவர்த்தி செய்யும் நோக்கிலும் தூய தமிழ்ப் பெயர்களைப் பரவலாக்கும் நோக்கிலும் சமீபத்தில் வெளியாகியுள்ள புத்தகம் தான் “சூட்டி மகிழ்வோம் தூய தமிழ்ப்பெயர்கள்(பெயர் அகராதி)” புத்தகம். வாஷிங்கடனிலிருந்து வலைத்தமிழ்.காம் நடத்தி வரும் திரு.பார்த்தசாரதி அவர்களும், ஈரோட்டை சேர்ந்த பவள சங்கரி திருநாவுக்கரசு அவர்களும் பார்த்து பார்த்து தொகுத்து வைத்த 53,000 பெயர்களை வாங்கி அவற்றுள் பிழைகள், இரண்டாம் முறை திரும்ப வருதல், தமிழ்ப் பெயர்கள் போல தோன்றும் கலப்பு பெயர்கள் இவை அனைத்தையும் புலவர் பதுமனார் தலைமையிலான அறிஞர்கள் பல மாதங்களின் கடும் உழைப்பில் நீக்கி 46,000 பெயர்களை நமக்கு கொடுத்துள்ளனர். உண்மையில் இது மிகவும் பாராட்டத்தக்க முயற்சி.

348 பக்கங்கள் உள்ள இந்தப் புத்தகத்தில் சரியாக 50 சதவீதம் ஆண் – பெண் பெயர்கள் பிரிக்கப்பட்டுள்ளது. பொதுவாகத் தமிழ்ப் பெயர்கள் ஒற்றைப் பெயராக இருத்தல் மிகக் குறைவே. இரண்டு பெயர்களாக பண்பு,குணம்,தன்மை வெளிபப்டுத்துவதாக முதல் பெயரும், பின் பகுதி அதன் தொடர்ச்சியாக அமைவதும் வழக்கம். மற்ற புத்தகங்களில் ஒரு முதல் பகுதியை வைத்துக் கொண்டு பல பின் பெயர்களை சேர்த்துமீண்டும் மீண்டும் ஒரே பெயரையே கொடுத்திருப்பார்கள். இதுப் போன்று திரும்ப திரும்ப ஒரே பெயர்கள் வராமல் பார்த்துக்கொண்டிருப்பது இந்தப் புத்தகத்தின் சிறப்பு.

முடிந்த வரை மதம் ,சாதி அடையாளங்கள் தவரிக்கப்பட்டிருக்கிறது. அருமையான தமிழ்ப்பெயர்களின் முழுமையான முதல் தொகுப்பு என்று இந்தப் புத்தகத்தை சொல்லலாம். இந்தப் புத்தகத்திற்காக உழைத்த அனைத்து நல் உள்ளங்களுக்கு நாம் அனைவரும் சொல்ல கடமைப்பட்டுள்ளோம். அவர்களுக்கான நன்றிகளை நம் குழந்தைக்கு நல்ல தமிழ்ப் பெயர்களை சூட்டி தெரிவிப்போமாக.

நன்றி,

மரு.கு.செந்தில்ராசா

புத்தகத்திலிருந்து சில வாழ்த்துரைகள் :

நல்ல தமிழ்ப் பெயரைப் பிள்ளைகளுக்குச் சூட்டுங்கள் :

உலகெங்கும் பரவி வாழும் தமிழர்கள் தங்கள் குழந்தைகளுக்குத் தமிழல்லாத பிறமொழிப் பெயர் வைப்பது நாளும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக இளம் தலைமுறை பெற்றோர்களில் ஒரு பகுதியினர் தனித்தமிழ் பெயர்களைத் தேடி அலைவதும், மறுப்பக்கம் பெரும்பான்மையானவர்கள் பிறமொழிப் பெயர்களை வைப்பதைப் பெருமையாகக் கருதும் நிலையம் நாளும் வளர்ந்துவருகிறது. இந்தப் பெயர்கள் தமிழ் அல்லாதன மட்டுமல்ல. அவை பொருளாற்றனவாகவும் இருக்கின்றன. பன்னாட்டு வாழ்வியல் சூழலில் தமிழில் பெயர் வைத்தால் மிக நீண்ட பெயர்களாக இருக்கும் என்னும் கருத்தும் சுருக்கமான பொருள் பொதிந்த இனிமையான பெயர்கள் அதிகம் தனித்தமிழில் இல்லையே என்ற எதிர்பார்ப்பும் தொடர்ந்து இளம் தலைமுறைப் பெற்றோர்களிடம் இருப்பதை அறிவோம். சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்ப் பெயர்களைத் தொகுத்து வலைத்தமிழ் இணையதளத்தில் வெளியிட்டதும் ஒரு ஆண்டுக்கு ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் அதைப் பயன்படுத்துவதை அறிந்து அதில் சிறப்புக் கவனம் செலுத்தி மேலும் பல்வேறு எளிய தேடும் வசதிகளை சேர்த்தோம்.

இணையத்தில் உள்ளவர்களே தமிழ்ப்பெயர்களைத் தேடும்போது, இணையம் தெரியாதவர்கள், கிராமப்புறங்களில் வசிப்பவர்கள், தமிழ்ப் பெயர்கள் எங்கு கிடைக்கும் என்று தெரியாதவர்களின் எண்ணிக்கை பலமடுங்கு இருக்கும். அவர்களுக்குத் தமிழ்ப்பெயர்கள் எளிதில் கிடைக்கும் வகையில் கொண்டுசேர்ப்பதே இன்றைய மிகப்பெரிய தேவையாகும்.

ச.பார்த்தசாரதி
நிறுவனர் – வலைத்தமிழ்.காம்

தமிழர் அடையாளத்தை மீட்டெடுக்கும் பணி

வடமொழி தமிழ்மொழி இரண்டிலும் ஆழங்கால் பட்ட பேராசிரியர் சூரிய நாராயண் சாஸ்திரியார் முதன்முதலில் தம் பெயரைப் பருதிமாற்கலைஞர் எனத் தமிழில் வழங்க தலைப்பட்டார். அவரைத்ததொடர்ந்து சாமிவேதாசலம் அவர்கள் தம் பெயரை மறைமலைஅடிகள் என்று மாற்றி வழங்கியதோடு தாம் இதுவரை வட மொழி கலந்து எழுதிய தம் தமிழ் நூல்களை மறுபதிப்புச் செய்யும்போது வட சொற்களின் தூய தமிழ் வடிவத்தையே கொண்டு எழுதி வெளியிட்டார். அவரால் தொடங்கப்பட்ட தனித்தமிழ் இயக்கம் திரு.வி.க, பாரதிதாசனார்,கு.மு.அண்ணல்தங்கோ, அறிஞர் அண்ணா காலம்வரை வேர் கொண்டது.

வடமொழிக் கலப்பை நீக்கக் கல்வி நிலையங்களில் தமிழ், ஆங்கிலம் என்னும் இருமொழிக் கொள்கையை நிலைநாட்டியதால் வடமொழி மெல்ல வழக்கொழிந்தது. ஆனாலும், கோவில்களிலும், சமயச் சடங்குகளிலும் மட்டுமே சமஸ்க்ருத சொற்கள் இடம்பெற்றன. மக்களின் பண்பாட்டு அடையாளமான பெயர்களில் சமஸ்கிருதத் சொற்கள் ஆட்சி செய்யத் தலைப்பட்டுவிட்டன. ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் கல்விச்சாலையில் ஒரு வகுப்பில் ஐந்து ஆறு வடமொழிப் பெயர்களைச் சூட்டியோர் இருந்தனர். இன்று சற்றொப்ப எல்லாப் பெயர்களும் வடமொழிப் பெயர்களாகவே காணப்படுகின்றன ஓரிண்டு தமிழ்ப் பெயர்களைத்தவிர!

பெயர்தான் ஒரு இனத்தின் அடையாளம், பண்பின் சுவடு , மரபின் மாண்பு. பெயர்களை இழந்துவிட்டு வெறும்மண்ணை வைத்துக்கொண்டு என்ன செய்யப்போகிறோம்? தமிழ் வாழ்வும் பரப்பும் குன்றி, சிறப்பும் குன்றியதால் தமிழர்களுக்கு ஏற்றம் ஏது ? ஏற்றமே இல்லையென்றால் முன்னேற்றம் எப்படி முகிழ்க்கும் ? எனவே முதலில் தமிழர் அடையாளத்தை மீட்டெடுக்கும் பணியாகச் சூட்டி மகிழ்வோம் தூய தமிழ்ப்பெயர்கள் என்னும் நூலைத் தொகுத்தும் பதிப்பித்தும் உங்கள் கையில் தவழ விட்டுள்ளது தமிழியக்கம்.

புலவர் வே.பதுமனார்
பொருளாளர் தமிழியக்கம்

புத்தக தொடர்புக்கு :

சில பக்கங்கள் :

 

    

Leave a comment