உதிரி நாடக நிலம் பற்றி கொஞ்சம் அறிமுகம் செய்யுங்கள்…
உலக நாடக தினமான மார்ச் 27 அன்று 2015ஆம் ஆண்டில் உதிரி நாடக நிலம் தொடங்கப்பட்டது. நிறைய ஆக்கபூர்வமான விசயங்களின் துவக்கப்புள்ளியாக இருக்கட்டும் என்ற நோக்கில் முதல் நாடகமாக “உதிரி” என்ற நாடகத்தை தனி நபர் நாடகமாக உருவாக்கி நானே நடித்தேன். இந்த நான்கு ஆண்டுகளில் தொடர்ச்சியாக 14 நாடகங்கள் சொந்தமாக எழுதி மேடை ஏற்றி இருக்கிறோம்.
உதிரி நாடகத்தின் முக்கியமான வேலையாக நினைப்பது எதுவென்றால், கலைகள் வழியாக நமது மரபு, பண்பாடு, சடங்கு நிலை இவை அனைத்தையும் தொடர்பு படுத்தி கல்வி நிலையங்களுக்குள் ஒத்துழைப்பு தருவது தான்.
பொழுதுபோக்குக்கு சினிமாவும் சீரியலும் தொடுதிரையில் நிறைந்திருக்கும் இந்தக் காலத்தில் மேடை நாடகத்தின் அவசியம் என்ன?
நீங்க சொன்ன சினிமாவும் சரி சீரியலும் சரி, அவை அனைத்துமே ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட காட்சிகள். அதை நாம் எத்தனை முறை வேண்டுமானாலும் எப்ப வேண்டுமானாலும் திரும்ப திரும்ப பாக்கலாம். ஆனால் அதில் உயிர் உள்ளதா என்று கேட்டால், பெரும்பான்மையான நேரத்தில் அந்த உயிர்ப்பு நிலையை நாம் உணர்வது அதுவும் ஒரு பார்வையாளராக உணர்வது என்பது மிகவும் கடினமானது. ஆனால் நாடகத்தில், படைப்பில் உள்ள உயிர்ப்பை நேரடியாக உணர முடியும். எப்படி பசி என்பதை உணர்கிறோமோ எப்படி உண்டதும் பசி மறைவதை உணர்கிறோமோ அதேப் போல் தான் நாடகத்தை பார்ப்பது என்பது. இதே நாடகத்தை வீடியோவாக பதிவு செய்து பார்த்தாலும்; நேரடியாக பார்த்த போது கிடைத்த உணர்வு பதிவு செய்யப்பட்ட காட்சியில் கிடைக்கவே கிடைக்காது.
அப்போ ஒவ்வொரு முறையும் நாடகத்தை மேடை ஏற்றும் போதும் வித்தியாசம் இருக்கும் என்கிறீர்களா ?
கண்டிப்பாக , ஏனென்றால் அந்த நாடகம் நடக்கின்ற மேடையும், இடமும் ஒவ்வொரு முறையும் பலவிதமான உயிர்ப்பு தன்மையை கொடுத்துக்கொண்டே இருக்கும். அதை தான் எனர்ஜி என்று கருதுகிறேன். அந்த எனர்ஜி என்ன செய்யுமென்றால் , அந்த மேடையில் பல கலைஞர்கள் வந்து நடித்திருப்பார்கள். அவர்களின் வியர்வை அங்கு விதையாக இருப்பதை நடிகர்களாக நாங்கள் பலமுறை உணர்ந்துள்ளோம். அப்போ ஒவ்வொரு இடமும் வெவ்வேறு விதமான சக்தியை கொடுத்துக்கொண்டே இருக்கும். Indoor auditorium என்றால் அது ஒருவிதமான சக்தியை தரும், திறந்தவெளி என்பது இன்னும் பலமடங்கு சக்தியை தரும். இவை அனைத்துமே ஒரு நாடகத்திற்கு பலமடங்கு உற்சாகத்தையும் சக்தியையும் தரும். அதை அனுபவித்து செய்யும் போது; நமது சிந்தனைகளை சரியான முறையில் நாடகத்தின் வழியே பார்வையாளரின் மனசுக்குள்ள பதிய வைக்க முடிகிறது.
மேடை நாடகத்தின் உட்சம் என்று நீங்க நினைப்பது எதை ..
தொடர்ச்சியாக பார்வையாளர்களை நாடகங்களை பார்க்க வைப்பது தான் மேடை நாடகத்தின் உச்சம் என்று கருதுகிறேன். நாடகம் சார்ந்து என்னை நோக்கி அடிக்கடி கேட்கப்பட்ட முக்கியமான கேள்விகளில் ஒன்று “இன்னும் நாடகங்கள் எல்லாம் இருக்கிறதா? சுத்தமா அழிஞ்சிடுச்சில..” என்பது தான். தொடர்ச்சியாக வேலை செய்தது மூலமாக நான் கண்டுபிடித்தது என்னவென்றால் ..நாடகம் என்பது ஒரு கலை வடிவம் அது அழிவதற்கு வழியே இல்லை. மொழி உள்ள வரை நாடகம் இருக்கும். இங்கு நாடகத்தை தொடர்ந்து நடத்த வேண்டிய தேவை மட்டுமே இருக்கிறது. பார்வையாளர்கள் தான் கலைஞனின் பெரிய இலக்கு, உச்சம் என்பது நிறைய உலக தரமான படைப்புகளை பார்வையாளர்களுக்கு கொடுப்பது தான் உச்சம். இந்த சமூகத்தில் இருக்கும் சிக்கல்களை சரிசெய்யும் ஆயுதமாகவும், இந்தப் பழக்கப்படுத்துதல் இருக்கும் என்று நம்புகிறேன்.
புராண நாடகங்களின் பார்வையாளர்கள் நவீன நாடகங்களின் பார்வையாளர் இரண்டிற்குமான வேறுபாடுகள் என்று நீங்கள் உணர்ந்தது
புராண கதைகள் எதுவும் நடந்த கதைகள் அல்ல. அதை திரும்ப திரும்ப பார்க்கும் போது அந்த கதைகள் மனதில் உண்மையென நம்ப துவங்கிவிட்டனர். ஏனென்றால் கலைகளை மக்கள் நம்பினர். புராணங்கள் நமது வாழ்வின் மீதான தாக்கத்தை கலைகளின் வழியே தான் ஏற்படுத்தியது. ஒரு கற்பனையை நம் மீது திணித்தது இப்படித்தான். ஆனால் நவீன நாடகங்கள் செய்வது பார்வையாளர்களை மக்களை சிந்தனைக்குள் குறிப்பாக அடுத்த சிந்தனைக்குள் நகர்த்துவது. குறிப்பாக நவீன நாடகத்தின் வடிவமும் வெறுமனே முகத்தை மட்டுமல்லாமல் மொத்த உடலையும் உட்படுத்தி நாடகத்தின் வழியே புதிய அசைவுகளை காட்டும்போது அந்த புதுமை பார்வையாளர்களின் கவனங்கள் அனைத்தும் நாடகத்தினுள் இருக்கும் சிந்தனை ஓட்டத்துடன் பயணிக்கிறது. நாடகம் முடிந்த பிறகும் அவர்கள் பயணிப்பார்கள்.
ஒரு நாடகத்திற்கான கருவை எப்படி எப்பொழுது தேர்வு செய்வீர்கள் ? நடிகர்கள், பார்வையாளர்கள் அல்லது அன்றைய சமூக சூழல் எதை வைத்து கருவை முடிவு செய்றீங்க ?
ஏற்கனவே மனதில் தோன்றிய கருவை ஓர் முன்வடிவாக எடுத்துக்கொண்டு பல முறை நாடகத்தின் பயிற்சியை துவங்கி இருக்கேன். ஆனால் ஒரு முறை கூட எனது முன்முடிவுகள் கருவாக உருவானதில்லை. முக்கியமாக சொல்ல வேண்டுமானால் பயிற்சிக்காக வந்திருந்த இளைஞர்களையோ அல்லது குழந்தைகளையோ பார்த்த நொடியிலே எனது முன்முடிவுகள் நினைவிற்கு வருவதே இல்லை. அங்கிருக்கும் இடமும் சூழலும் தான் கதையின் கருவை கண்டுப்பிடிக்க வைக்கும். அந்த கரு உருவாக்கத்தில் சமகால சமூக சூழலும் தானாகவே உள்ளே வந்துவிடும்.
நாடகத்திற்கான அடிப்படை பயிற்சியின் போதே ஒவ்வொருவரின் வியர்வை வாசமும் உரையாடலும் ஒவ்வொரு கதாப்பாத்திரத்தையும் மனதில் முடிவு செய்யும். அது அப்படியே பயணிக்கும் போது அதுவே கருவாக உருமாறும்.
சமீபத்தில் பஞ்சுமிட்டாய் நூறாவது நிகழ்வில் மேடை ஏற்றபட்ட “எல்லாரும் சமம்” அனுபத்தினை பகிருங்கள்..குறிப்பாக கானகத்து விலங்கின் ஒலியை சரியாக தேர்ந்தெடுத்து பயன்படுத்தி இருந்தீர்கள்..அதை எப்படி செய்தீர்கள் ..
சரியா கண்டுபிடிச்சு கேட்டிருக்கிங்க…எறும்பு,யானை
அதே மாதிரி புலி வேடத்திற்கான ஒலியும் உருவானது. பயமூட்டும் விளையாட்டை நாம் விளையாடி இருப்போம். அதில் பயமூட்டுபவர்கள் எப்பொழுதும் பயமூட்டும் தன்மையை மிகவும் மகிழ்வுடன் செய்வார்கள். அது மாதிரியான தன்மையை தான் உபயோகித்தேன். புலி புலி புலி புலி என்று வெறும் நான்கு முறை ஒரே வார்த்தையை சொல்லும் போதே பயத்தினை ஏற்படுத்த முடியும் என்ற உணர்வை தான் நாடகத்தில் கையாண்டேன்.
குழந்தைகள் மத்தியில் புழங்கும் சொல்லையே அவர்களுக்கு பிடித்ததையே வசனமாக தரும் போது அதை ஒரு தாளத்திற்குள் கொண்டுவரும் போது அவர்கள் மகிழ்ச்சியாக உணர்வதையே இவை அனைத்திற்கும் காரணமாக அமைகிறது.
குழந்தைகளை வைத்து நாடகம் செய்யும் போது எப்படி அவர்களை மனநிலைக்கு தயார்படுத்துறீங்க? அதில் சிறப்பான சுவையான விசயங்களை பகிருங்கள்..
சிறப்பான சுவையான விசயம் குழந்தைகள் மட்டும் தான். ஒவ்வொரு குழந்தையும் வெவ்வேறு விதமாக இருப்பார்கள். அவர்களின் சேட்டைகளையும் குறும்புத்தனத்தையும் தான் நான் நாடகமாக மாற்றுகிறேன், அது தான் நவீன நாடகத்தின் வடிவம். அவர்களின் குறும்புத்தனத்தை அவர்களுக்கே தெரியாமல் கலை வடிவமாக நான் மாற்றுவதை தான் அவர்கள் மிகவும் ரசிக்கிறார்கள்.
என்னையே குழந்தையாக அவர்கள் பார்க்கும் தருனம் தான் மிக முக்கியமானது. அவர்கள் கூட நான் குழந்தையாக இருந்தால் மட்டுமே இவை சாத்தியமாகும். நான் அவர்களை குழந்தையாக பார்ப்பதும், அவர்கள் என்னை குழந்தையாக பார்பார்ப்பதும் இவை இரண்டும் ஒரே புள்ளியில் சந்திக்கும் போது தான் எனது நேரம். அதுக்குள்ள தான் மொத்த நாடகமும் உருவாகும். சமீபத்தில் பெங்களூரில் நடந்த நிகழ்வில் ஒரு நாள் பொழுது தான் அதில் இதுப் போன்ற தருனம் 3-4 மணி நேரம் தான் அதுக்குள் வைத்து 20 நிமிட நாடகத்தை உருவாக்கினோம். இந்த குழந்தை இந்த சேட்டைதான் செய்யும் என்பதை புரிந்துக்கொண்டு அதையே நாடகமாக மாற்றுவது தான் நவீன நாடகம் தரும் பெரிய இடம். அதை சரியாக பயன்படுத்துவது தான் முக்கியம்.
சிறுவர்கள் சிரிப்பதையே நாடகத்தின் காட்சியாக நினைத்துப் பாருங்களேன். அவர்கள் ஊ ஆ என பலவிதமாக சிரிப்பார்கள். இந்த மாதிரி நேரத்தில் யானை மாதிரி சிரிங்க என்று சொன்னால் உடனே யோசித்து உடனே செய்வார்கள், நாம் அவர்களுக்கு முன் வைக்க வேண்டியது இந்த கேள்வியை தான்.
அது சரி மேடை கூச்சம் இல்லாமல் எப்படி அவர்களை யானை போலவோ மாடு போலவோ சிரிக்க வைப்பிங்க? மேடை கூச்சம் தடுக்காதா ?
அதுக்கு தான் நாடகம் துவங்குவதற்கு முன்னாடி நிறைய விளையாடுவோம். நானும் புதுசு அவர்களும் புதுசு இந்த இரண்டு புதுசும் உடனடியாக இணைய அங்கு தேவையானது விளையாட்டு தான். விளையாட்டு விளையாட விளையாட என் மீது அவர்களுக்கு நம்பிக்கை வந்திடும். நான் அவர்களுடைய ஆளாக பார்க்க துவங்கிடுவார்கள். எப்படி வீட்டில் அம்மா-அப்பாவிடம் கூச்சம் இல்லாமல் இருப்பார்களோ அதேப் போல் தான் என்னிடமும் இருப்பார்கள். நான் அவர்களிடம் விளையாடும் ஆளாகாவும், பழைய ஆளாகவும், பிடிச்ச ஆளாகவும் மாறினாலே போதுமானது, அவர்கள் நான் கேட்பதை தர துவங்கிவிடுவார்கள். அதேப் போல் அவர்களிடம் என்ன கேட்க வேண்டும் என்பதை நான் உணர்ந்திருப்பதால் அங்கு வெட்கம் கூச்சம் போன்றவைக்கு இடமே இல்லை. அதுவே எங்கள் இருவரின் மனதளவு நெருக்கத்தை தந்துவிடும். புதிதாக அறிமுகமாகிய என்னையே அவர்கள் புதிதாக பார்க்காத போது அவர்களுக்கு அவர்களின் செயலின் மீது மட்டுமே முழு கவனமும் இருக்குமே தவிர கூச்சம் வெட்கம் போன்றவை மேல் இருக்கவே இருக்காது.
நாடகத்தின் வழியா பெரியர்களுக்கு (குறிப்பாக பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு) சிறார் உலகம் பற்றி என்ன சொல்ல விரும்புறீங்க ?
குழந்தைகளை குழந்தையாக பார்க்க வேண்டும் என்பதையே மீண்டும் மீண்டும் நாடகத்தின் வழியா சொல்ல விரும்புகிறேன். குழந்தையை ஒரு பொருளாக பார்க்கும் மனப்பான்மை நமக்குள் வளர்ந்து வருகிறது. கூட்டுக்குடும்பத்தை விட்டு நகர்ந்ததால் கூட இந்த மாற்றங்கள் வந்திருக்கலாம். தற்போது நமக்கு இந்த கூட்டுக்குடும்ப தன்மையை மீட்டு எடுக்க வேண்டிய அவசியம் இருப்பதாக நினைக்கிறேன். ஏன் இதை சொல்கிறேன் என்றால், நன்றாக குறும்புத்தனமோ சேட்டை செய்யும் குழந்தைகளை நாம் தற்போது நோயாளியாக பார்க்க ஆரம்பித்துவிட்டோம். அதற்கு புதுப்புது பெயர்கள் கூட தற்போது வந்துவிட்டது. ஆனால் உண்மையில் ஒரு குழந்தை தனக்கு அனுமத்தித்த இடத்தில் விளையாட மட்டுமே அந்தக் குழந்தை முயற்சி செய்கிறது. ஒரு கூட்டு குடும்ப தனத்தில் ஒரு குழந்தை இருக்கும் போது தனக்கு வேண்டுமென்ற நேரத்தில் திறந்த வெளியில் விளையாடுவதும் விரும்பிய பொழுதில் தனது தாத்தா பாட்டியுடன் உரையாடவும் செய்கிறது.பறவைகளுடன் பேசுவது, மரங்களுடன் பேசுவது என இயற்கையுடன் உறவாடுகிறது. குழந்தை இயற்கையாகவே நிறைய கேட்கவும் பேசவும் ஆசை படுகிறது. இது எல்லாம் இல்லை என்ற சூழலில் தான் ஒரு குழந்தை தனித்து விடப்படுகிறது.
இந்த இடத்தில் தான் நாடகம் மற்றும் இன்னும் பல கலை வடிவங்களும் இந்த கூட்டு குடும்ப தன்மையை உருவாக்கும். பள்ளிகளில் இதை எல்லாம் extra curricular activities என்று மட்டுமே சுருக்கி பார்க்கின்றனர். ஆனால் இவையெல்லாம் தான் குழந்தை வளர்ப்பின் அடிப்படை. இந்த மனப்பக்குவம் தான் குழந்தையை குழந்தையாக பார்க்க வேண்டும். ஒரு ஆசிரியரோ பெற்றோரோ குறைந்தது 5 நிமிடமாவது குழந்தையோடு உரையாட வேண்டும். அவர்கள் தானாகவே தங்களது எல்லையை விரித்துக்கொள்வார்கள். பெரியவர்களும் ஒரு முழுமனதுடன் குழந்தைகளை பார்க்க துவங்குவார்கள். இதை உருவாக்குவதே கலையின் நோக்கம். இந்த நிலையை தான் நாடகத்தின் வழியே சொல்ல விரும்புகிறேன்.
நாடக வெளிக்கு புதிய நண்பர்களுக்கு நீங்க சொல்ல விரும்புவது ..
[அவ்வளவு பெரிய ஆள் கிடையாது… சிறிய புன்னகையுடன்] நிறைய பயணிக்க வேண்டும். சமகாலத்தில் நடக்கும் நாடகத்தினை முதலில் பார்க்க வேண்டும். நவீன நாடகங்கள், நாடகப்பட்டறை, தெருக்கூத்து , பொம்மலாட்டம், நாட்டுப்புற கலைகள், ஓவியக்கண்காட்சி என அனைத்து கலை தொடர்பான அனைத்தையும் பார்த்த பிறகு கிடைக்கும் அனுபவங்கள் ஓர் ஊற்று போல் நம்முள் இருக்கும். அதை நம்மை சும்மா விடாமல், அது தானாகவே வேலைச் செய்ய வைக்கும். குறிப்பாக புத்தக வாசிப்பு கண்டிப்பாக தேவை, நிறைய கூட படிக்க தேவையில்லை தேர்ந்தெடுத்த படைப்புகளையாவது குறைந்தபட்சம் வாசித்துவிட வேண்டும். மேலும் கலை நம்முள் வரும் வரை சிறிது காத்திருக்க வேண்டும், அதுவரை பொறுமையாக காத்திருக்க வேண்டும். அது நம்முள் வருவதை உணர்ந்துவிட்டால் போதும் அது நம்மை குழந்தை போல் கையில் சுற்ற வைக்கும்.சுற்றும் போது சும்மாவாக இருப்போம், நடிப்போம் நாடகம் போடுவோம் எழுதுவோம் எல்லாமே நடந்துக்கொண்டே இருக்கும். அந்தமாதிரியான இடம்வரும் வரை வேலை செய்யுங்கள். அங்கிருந்து நாம் புதிய உலகத்திற்கு நாம் செல்லும் போது கலை நம்மை பத்திரமாக பார்த்துக்கொள்ளும்.
உதிரி நாடக நிலத்தின் படைப்புகள் :
01. குழந்தைகள் உலகம் (ஜனவரி 2014)
02. உதிரி (தனி உடல் நாடகம்/மார்ச் 2015)
03. நாடி(ஜூன் 2015)
04. கோமாளிகளின் குதிரை( பிப்ரவரி 2016 )
05. கனவுக் குதிரை(மே 2016)
06. வண்ணத்துப்பூச்சிகளின் ஆறு (ஜூலை 2016 )
07. மீளல்(ஜனவரி 2017)
08. பூவையர்(மார்ச் 2017)
09. நமக்கு நிலங்கள் இருந்தபோது (தனி உடல் நாடகம்/எழுத்தாளர்’ அம்பை’யின் சூரியன் சிறுகதையைத் தழுவியது/ஏப்ரல் 2017)
10. இறந்த நதிகளின் ஆவிகள்(கவிஞர் மனுஷ்யபுத்திரன் கவிதைகள்/ஏப்ரல் 2017)
11. இராசா என்கிற குதிரை(மே 2017)
12. ஆதவன் தீட்சண்யா கதைகளின் முன்னுரை(செப்டம்பர் 2017)
13. மாள்வுறு(மார்ச் 2018)
14. ஆயிரத்து ஒரு நெல்லும் காக்கையக்காவும்(செப்டம்பர் 2018)
15. இராசணங்காள்(மார்ச் 2019)
16. பொம்மை முகச் சிங்கங்கள்(மே 2019)
17. எல்லாரும் சமம் தான் (ஆகஸ்ட் 2019)