ஆசிரியர்கள் கொண்டாட வேண்டிய கல்வி வளர்ச்சி நாள் – சம்பத் குமார்

வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

கல்வி வளர்ச்சி தினம் என அறிவிக்கப்பட்டதற்கு பிறகு காமராஜர் அவர்களின் பிறந்ததினம் தமிழகமெங்கும் பள்ளிகளில் வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்நாளை ஒட்டி பள்ளிகளில் குழந்தைகளுக்கு
இனிப்பு வழங்கியும் பல்வேறு விதமான கலைத்திறன்களை வெளிப்படுத்தி குழந்தைகளின் நிகழ்வுகள் நடைபெறுவதும் வழக்கமாகி வருகிறது. ஊர் பிரமுகர்கள் தொடங்கி அரசியல் கட்சி தலைவர்கள் உட்பட அனைவரும் அந்நாளில் ஏதேனும் ஒரு வகையில் காமராஜர் அவர்களோடு தன்னை தொடர்புபடுத்திக்கொண்டு பள்ளிகளில் கலந்து கொள்வதும் நடைமுறையாக மாறியிருக்கின்றது. இதில் தவறு ஏதும் இல்லைதான். கல்வி வளர்ச்சி நாள் என்பதாக காமராஜர் அவர்களின் பிறந்தநாள் நினைக்கப்படுவதன் வாயிலாக இன்றைய இளைஞர்களுக்கு காமராஜர் அவர்களின் கல்வி குறித்த பணிகள் வெகுவாக சென்றடைந்திருக்கிறது. அரசியலில் அப்பழுக்கற்ற ஒரு சிறந்த தியாகியாக அவர் இன்றைய இளைஞர்களுக்கு தோற்றம் தருபவராக மாறி இருக்கிறார். இது அவசியமானதும் கூட.

காமராஜர் போன்ற ஒரு தலைவரை இன்று அடையாளங்காட்ட முடியாத சூழல் அரசியல் இயக்கங்கள் இடையே  நிலவி வருகிறது. இத்தகையவர்களின் கீழ் ஆளப்பட்டு வருகின்ற பொதுமக்களிடையேயும் தியாகம் குறித்தும் சமூகம் குறித்தும் ஒரு பெரிதான மதிப்பு இருப்பதாகத் தெரியவில்லை. எல்லா வகையிலும் ஆபத்து சூழ்ந்து நிற்கின்ற ஒரு இடத்தில் ஒவ்வொரு தனிநபரும் எப்படியான மனநிலையில் செயல்படுவார்களோ அத்தகைய ஒரு அச்ச உணர்வோடு சராசரியான மனிதர்கள் அனைவரும் தமக்குள்ளேயே தன்னை சுருக்கிக் கொண்டு வாழ்ந்து வருகின்றனர். சமூகத்தில் நிலவும் அனைத்து விதமான தவறுகளுக்கும் காரணங்கள் புரிந்தாலும் அதுகுறித்த கோபங்கள் அவர்களுக்குள் இருந்தாலும் அதனை முழுமையாக வெளிக்காட்டி செயல்பட முடியாத வகையில் அவர்களுக்கான சொந்த வாழ்க்கை குறித்த அழுத்தங்கள் தடுத்து நிறுத்துகின்றன. இப்படியான சூழ்நிலையில் தத்தமது பள்ளிகளில் காமராஜரை குறித்தும் அவரது செயல்பாடுகள் குறித்தும் மாணவர்களிடம் எடுத்துச் சொல்கிற ஆசிரியர்கள் மற்றும் ஆசிரிய இயக்கங்கள் இன்றைய கல்வி நிலை குறித்து என்னவாக சிந்திக்கிறார்கள் என்பது அவசியமாகப்படுகின்றது.

இந்தியா சுதந்திரம் அடைந்த காலம் தொட்டு மத்தியிலும் மாநிலத்திலும் உள்ள அரசாங்கங்கள் கல்வி குறித்து பல்வேறு வகையான சிந்தனைகளை செயல்படுத்த முனைந்திருக்கிறார்கள். பல்வேறு வகையான கல்விக் குழுக்கள் துவங்கப்பட்டு கல்வி குறித்தும் அது சார்பான செயல்பாடுகளுக்கும் திட்டங்களைத் தீட்டி இருக்கின்றார்கள். அவர்கள் செயல்படுத்த முனைந்த அந்த திட்டங்களின் நோக்கங்கள் இன்றைய காலம் வரை ஒரு முழுமையை எட்ட முடிந்ததில்லை. வகுப்பிற்கு ஒரு ஆசிரியர் என்பது முதற்கொண்டு எத்தனையோ பல கோரிக்கைகள் இன்னும் நிறைவேற முடியாத சூழலிலும் ஆசிரியர்களுக்கான பொருளாதார மேம்பாடுகள் ஒவ்வொரு கட்டத்திலும் உயர்வடைந்து கொண்டே வந்து இருக்கின்றது. பொருளாதாரரீதியாக ஆசிரியருக்கு  கிடைக்கும் சமூக மரியாதை அவர்கள் கற்பிக்கும் கல்வியிலும் மாணவர்களின் மத்தியிலும் பொது மக்களிடமும்  நல்ல மாற்றத்தை உருவாக்கும் என்பதான அன்றைய தலைவர்களின் சிந்தனையின் வெளிப்பாடே இன்றைய  ஆசிரியர்களின் மேன்மையான வாழ்க்கை வசதிகளுக்கு காரணமாக அமைகிறது. காமராஜர் காலத்தில் ஊர் தோறும் பள்ளிகள் துவக்கப்பட்டாலும் பள்ளிகளில் பணியாற்ற போதிய ஆசிரியர்கள் இல்லாத நிலையையும் அதேவேளையில் பஞ்சு மில் கூடங்களில் பணியாற்றுவதை உயர்வாக பலர் கருதியதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

இப்படி காமராஜர் போன்ற தலைவர்களின் முயற்சியால் கல்வி கற்றுக் கொண்டும் பெரியார் போன்ற திராவிட இயக்க தலைவர்களால் இட ஒதுக்கீடு அடிப்படையில் நல்ல பணி வாய்ப்பையும் பெற்றுக்கொண்ட ஆசிரியர்கள் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்படும் காமராஜர் அவர்களின் பிறந்த தினத்தில் அவருடைய சமூக நோக்கு குறித்தும் தியாக ரூபமான அவருடைய வாழ்வு குறித்தும் என்னவாக சிந்திக்கிறார்கள் என்பது மிக அவசியமான ஒன்று ஆகும். “சமூகத்தில் நிலவும் அனைத்து விதமான குற்றங்களுக்கும் ஆசிரியர்களை குறை கூறுவது வழக்கமான ஒன்றாக மாறிப்போனது. மற்றவர்கள் குறிப்பிடுவது போல ஆசிரியர் பணி என்பது அவ்வளவு இலகுவானது அன்று. எத்தனையோ அழுத்தங்களுக்கு இடையே ஆசிரியர்களாகிய நாங்கள் பணி செய்து வருகிறோம். அப்படி இருந்தும் ஆசிரியர்களை மட்டும் குறிவைத்து தாக்கும் ஒரு சில மனிதர்களின் தவறான சிந்தனைகளுக்கு நாங்கள் எப்படி பொறுப்பாக முடியும்.”; என்பதாக இன்றைய ஆசிரியர்களின்  மனக்குமுறல்கள் இருக்கின்றன. உண்மையில் இன்றைய ஆசிரியர்கள் தங்களுடைய பணியை முன்னெப்போதும் இருந்திராத வகையில் சிறப்பாகவே செயல்படுத்தி கொண்டுதான் வருகிறார்கள். ஆனால் இவை அனைத்தும் ஒரு வகையில் கல்வித்துறையின் மிக மோசமான நெருக்கடியின் விளைவாக நிகழும் ஒன்றாக மாறியிருக்கிறது. ஒரு அடிமையைப் போல செய்யும் செயலின் பலன் குறித்து ஏதும் சிந்திக்காது செயல்படும் ஆசிரியர்களாக இவர்கள் மாறி இருக்கிறார்கள். இப்படியான நிலையில் ஆசிரியர்கள் இருப்பது முறைதானா? என்பதுதான் இவ்வேளையில் நாம் எழுப்ப வேண்டிய கேள்வியாக இருக்கிறது.

தொடக்கக்கல்வி முதற்கொண்டு உயர்கல்வி வரையில் கல்வியின் முகம் இன்று பல்வேறு வகையில் மாறியிருக்கின்றது மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி செய்யும் அரசாங்கங்கள் கல்வி குறித்து பல்வேறு செயல்பாடுகளை முன்னெடுக்கின்றன. இவை எந்த வகையில் மாணவர்களின் நலனையும் கல்வியின் நலனையும் பாதிக்கப்படுகின்றன என்பது குறித்து வெகுஜன மக்களை விட களத்தில் பணியாற்றுகின்ற ஆசிரியர்களே நன்கு அறிவார்கள். மருத்துவ கல்விக்கான நீட் தேர்வு, புதிய கல்விக் கொள்கை, பள்ளிகள் இணைப்பு, பணிநிரவல் என ஆசிரியர்களும் மாணவர்களும் கல்வியின் வாயிலாக பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். இப்படியான மாற்றங்கள் மாணவர்களின் ஆழமான கற்றலை தவிர்க்க செய்து பள்ளிகளை தனிப்பயிற்சிக்கூடமாக மாற்றுகிறது; கல்வியும் வேலைவாய்ப்பு நோக்கிய கல்வியாக மாற்றம் பெற்றுக் கொண்டு வருகிறது. இவை குறித்த சிந்தனைகள் கல்வியின் மீது ஆர்வம் கொண்ட கல்வியாளர்கள் மத்தியிலும் மக்களின் நலன் நாடும் அரசியல் இயக்கங்களின் மத்தியிலும் விவாதப் பொருளாகி இருக்கின்றது. ஆனால் ஆசிரியர்கள் இதுகுறித்த உரையாடலை சிறிய அளவிலாவது துவக்கி செயல்பட்டிருக்கிறார்களா? என சிந்திக்க வேண்டியதாக இருக்கிறது.

கல்வித்துறை கொடுத்துவரும் அழுத்தம் மாணவர்களை மட்டுமின்றி ஆசிரியர்களையும் பாட புத்தகம் மற்றும் பாடப்பொருள் சார்ந்து மட்டுமே சிந்திக்க வைக்கின்றது. இதை கடந்து சிந்திக்க அவசியம் ஏதுமில்லை என்பதான தோற்றத்தை கல்வித் துறை வாயிலாக அரசு செய்து வருகின்றது. அதன்படியே செயல்பட ஆசிரியர்களும் தலைப்படுகின்றனர். உதிரி உதிரியாக இருக்கும் ஆசிரியர்களின் மனநிலை இவ்வாறு இருந்தாலும் ஆசிரியர்கள் நலன் சார்ந்து சிந்திக்கும் ஆசிரிய இயக்கங்கள் இவ்வாறான வேளைகளில் கூடி முடிவெடுத்து  தங்களுடைய கருத்துக்களை மக்களிடம் கொண்டு செல்ல முயற்சி எடுத்து இருக்க வேண்டும். நீட் தேர்வு தமிழகத்தில் பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்த வேலையிலும் 2016ம் ஆண்டு புதிய கல்விக் கொள்கை வரைவு வெளியிடப்பட்ட வேலையிலும் தற்சமயம் தேசியக் கல்விக் கொள்கை 2019 வரைவு வெளியிடப்பட்ட வேலையிலும் மும்மொழிக் கொள்கை திட்டம் ஆலோசிக்கப்பட்ட நிலையிலும் ஆசிரியர் இயக்கங்களிளும் ஆசிரியர்கள் மத்தியிலும் எந்தவிதமான சலனத்தையும் நம்மால் பார்க்க முடியவில்லை. அவர்களுக்கென இயங்கக்கூடிய whatsapp குழுக்களிலும் facebook உள்ளிட்ட சமூக ஊடகங்களிலும் பெரும்பாலும் இவை சார்ந்த கருத்துக்கள் இடம்பெறவில்லை. அப்படியாயின் ஓர் ஆசிரியராக சமூகத்திற்கு இவ்விஷயங்களில் கருத்துச் சொல்ல இவர்களிடம் எவ்வித ஆர்வமும் இல்லை என்பது நன்கு புரிகிறது. மேலே சொன்ன விஷயங்களில் எல்லாம் எதிர்ப்பு நிலையை மட்டுமே இவர்கள் எடுக்க வேண்டும் என்பது அல்ல நமது நோக்கம். ஆனால் கல்வி சார்ந்த பிரச்சினைகளில் எவ்வித கருத்தும் இல்லாமல் இவர்கள் இருப்பார்களேயானால் இவர்களின் நலன் சார்ந்த விஷயங்களில் பிற மக்களின் ஆர்வம் எந்த வகையில் பிரதிபலிக்கும் என்பதையாவது ஆசிரியர்கள் உணர வேண்டும்.

அரசின் கைகளுக்கு கல்வி வழங்கும் உரிமை கிடைத்தால் மட்டுமே பாரபட்சமின்றி அனைவருக்குமானதாக கல்வி வாய்ப்பு கிட்டும் என சிந்தித்து காமராஜர் போன்றவர்களால் உருவாக்கப்பட்ட அரசுப்பள்ளிகள் கொஞ்சம் கொஞ்சமாக பொழிவிழப்பதும் வசதி வாய்ப்பிற்கு தக்கபடி கல்வித்தரம் உயர்வதும் சமூகத்தை சமத்துவமாக மாற்ற உதவாது. சமூகம் கடந்து வந்த பாதை குறித்த வரலாறு தெரிந்த மனிதர்களால் மட்டுமே அச்சமூகத்திற்கென இரத்தம் சிந்திய மனிதர்களின் வலியை உணர்ந்து கொள்ள முடியும்.ஆசிரியர்கள் தங்களை ஒரு இயக்கமாக அணிதிரட்டிக் கொண்டு செயல்பட வேண்டும் என கேரளாவில் இருந்து மிதிவண்டியிலேயே வந்து செயலாற்றி நம் மாநிலத்தின் ஆசிரிய இயக்கங்களுக்கு முன்னோடியாகத் திகழ்ந்த “மாஸ்டர் இராமுன்ணி ”  அவர்களின் பிறந்ததினம் இன்று. அவரது இயக்கச் சிந்தனையை இன்றைய ஆசிரியர்களும் உள்வாங்கி உண்மையில் ஆசிரியர்கள் கல்வியின் வளர்ச்சி குறித்து செயல்படத் துணிய வேண்டும்.

புதிய மாற்றங்கள் குறித்தும் இன்றைய கல்விச் சூழலின் நெருக்கடி குறித்தும் உரையாடத் துவங்க வேண்டும்.
தனக்கு கிடைத்த சினிமா வெளிச்சத்தையும் பொருட்படுத்தாமல் நடிகர் சூர்யா போன்றவர்கள் கூட புதிய கல்விக் கொள்கை உள்ளிட்ட பாதிப்புகளின் போது குரல் உயர்த்த தயங்காத போது ஆசிரியர்கள் தமது பகுதிகளில் சிறிய அளவிலாவது உரையாடல்களை முன்னெடுக்க வேண்டும். ஏனென்றால் காமராஜரும் இன்னபிற சமுதாய சிற்பிகளும் ஆசிரியர்களை மேம்படுத்த விரும்பியதும் பொருளாதார தரத்தில் உயர்த்த எண்ணியது உண்மையில் சமூகத்தின் நலனை மேம்படுத்தவே.

Leave a comment