The Devil is in the Details – ஜி. ராஜேந்திரன்

வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

தேசியக் கல்விக்கொள்கையைப் பற்றி பரவலாக வரும் பிரதிபலிப்புகளைப் பார்க்கிறேன். ஜுன் முப்பதாம் தேதிக்குள் பொதுமக்கள் கருத்துச் சொல்ல வேண்டும். அந்தக் கருத்துகளை உட்கொண்டு, தேவையான மாற்றங்கள் செய்து தேசியக் கல்விக்கொள்கை 2019 க்கு இறுதி வடிவம் கொடுப்பார்கள். பிறகு அதை நடைமுறைக்கு வரும்.

அதில் நான்காவது இயலின் சில பக்கங்களை மொழி மாற்றம் செய்யும் வாய்ப்பும் கிடைத்தது. மீதியுள்ள பக்கங்களை இன்னும் படிக்கவில்லை. படிக்க நினைத்து கணினியைத் திறந்தால் கீழ்வரும் எண்ணங்கள் வருவதைத் தடுக்கமுடியவில்லை. அந்த எண்ணங்கள் இக்கொள்கையைப் படிக்கும் விருப்பத்தைத் தடுப்பதையும் கட்டுப்படுத்த முடியவில்லை. அதனால் நுனிப்புல் மேய்ந்ததோடு சரி. ஆற அமர ஆழமாகப் படிக்கவில்லை.

1981 இல் வேலையில் சேர்ந்தாலும் 1996 இல் தான் நாம் என்ன செய்துக்கொண்டிருக்கிறோம் என்று சுயபரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டேன். அதற்குப் பிறகு மாவட்டத் தொடக்கக் கல்வித் திட்டத்தின் கீழ் பாடப்புத்தகத் தயாரிப்பிலும் மாநிலப் பயிற்சியிலும் பலமுறை பங்கெடுக்கும் வாய்ப்புக் கிடைத்தது.
அப்போதுதான் கரிக்குலம், சிலபஸ், அஸ்ஸ்மென்ட் போன்ற பல வார்த்தைகள் காதில் விழுந்தன. 1986 இல் வெளிவந்த யஷ்பால் குழு பரிந்துரைகளை மெருகூட்டி வெளியிட்ட 1992 அறிக்கையின் சாராம்சத்தை வாசிக்கும் பாக்கியம் கிடைத்தது. பிறகு தேசிய கலைத்திட்ட கட்டகம் 2005 வெளிவந்தபோது அது புத்தகமாக முழு அறிக்கையும் கைக்குக் கிடைத்தது. அதை பல தேவைகளுக்காக பலமுறை வாசித்தது உண்டு.

பிறகு காத்திருப்பு தொடங்கியது இதோ 14 ஆண்டுகள் ஓடிவிட்டன. எனக்குத் தெரிந்த சூழலில் பெரிய மாற்றங்கள் எதுவும் அந்த அறிக்கையால் நிகழவில்லை.

குழந்தை மையக் கல்வி, செயல்பாட்டு வழிக்கல்வி, ஆசிரியர் ஓர் ஆய்வாளர், குழந்தைகளின் விருப்பத்திற்கு முக்கியத்துவம், பாடப்புத்தகம் ஒரு துணைக்கருவி மட்டுமே, தேர்வு பயத்தைக் குறைத்தல், புதிய சமூக அறிவியல் அணுகுமுறை, கணிதப்பாடத்தின்பால் குழந்தைகளுக்கு இருக்கும் பயத்தையும் வெறுப்பையும் போக்குதல், அறிவியல் மனப்பான்மையை வளர்த்தல்… போன்ற பல செய்திகள் அவ்வறிக்கையில் இருந்தன. அதே செய்திகள் இந்த அறிக்கையிலும் இருக்கும் என்று நினைக்கிறேன். 1986 அறிக்கையிலும் இருந்திருக்கும் என்பது என் நம்பிக்கை.
ஆனால் இத்தொடர்களின் மூலம் அறிக்கை வெளியிட்டவர்கள் என்ன நினைத்தார்களோ அது போல் நடந்துள்ளதா? அதை நடைமுறைப்படுத்துவதற்கான அமைப்புகள் நமக்கு இருக்கின்றனவா? அது பற்றிய ஒரு மதிப்பீடு நடந்ததா? இல்லையென்றுதான் நினைக்கிறேன்.

ஒன்றை மாற்ற விரும்புவதற்கு முன்பு, அதை அதன் சரியான பொருளில் முழு வீச்சில் நடத்திப் பார்த்து அதன் நிறைகுறைகளைச் சீர்தூக்கி, அதற்குப் பிறகு அதைத் தொடர்வதா, இல்லை எறிவதா, புதிய ஒன்றுக்குத் தாவுவதா என்பதை முடிவு செய்ய வேண்டும்.

ஆசிரியர் ஓர் ஆய்வாளர். பாடப்புத்தகம் என்பது பல்வேறு கற்றல் துணைக்கருவிகளுள் ஒன்று மட்டுமே… போன்ற பல்வேறு சிறப்பான பரிந்துரைகள் அவ்வறிக்கைகளில் உள்ளதை எடுத்துக்கொள்வோம்.

பாடப்புத்தகத்திற்குக் கொடுக்கும் முக்கியத்துவம் குறைந்ததா? பிற வாசிப்புப் பகுதிகளை வகுப்பில் பயன்படுத்த ஆசிரியருக்குச் சுதந்திரம் கொடுக்கப்பட்டதா? கடலையும் காட்டையும் பார்க்காத, அவை பற்றிய அனுபவம் இல்லாத குழந்தைகளுக்கென பாடப்புத்தகத்தில் இருக்கும் பாடத்தை மாற்றா ஒரு புதிய பாடத்தை எழுதுவதற்கான திறமை ஆசிரியர்களிடம் வளர்க்கப்பட்டதா? இல்லை.
அப்படியே எதையாவது முயற்சி செய்பவர்கள் வகுப்பறை அனுபவமே இல்லாத அதிகாரிகளால் மட்டம் தட்டப்பட்டுள்ளனர். அவர்கள் அம்முயற்சியைக் கைவிட்டுள்ளனர்.
அதே அறிக்கையில் தகவல்களைத் திணிப்பதல்ல கல்வி என்ற வரியும் இருந்தது என்றே நினைக்கறேன். ஆனால் இன்னும் பாடப்புத்தகத் தகவல்களின் அடிப்படையிலேயே தேர்வுகள் இருக்கின்றன. குழந்தைகளின் குறிப்பேடுகளில் கேள்வியும் பதிலுமாக பாடப்புத்தக வரிகளே நிறைந்துகிடக்கின்றன.

இங்கு நான் பேசுவது எல்லாம் உண்மையான வகுப்பறையில் நடக்க வேண்டியவை பற்றி மட்டுமே. மீதி அனைத்தும் எப்படியிருந்தாலும் கவலையில்லை. அல்லது அந்த அமைப்பு மாற்றம் எல்லாம் இந்த வகுப்பறைக்குள் சரியான மாற்றம் கொண்டுவரவே என்று நான் நினைக்கிறேன். அதுவன்றி ஆயிரக்கணக்கானோருக்கு ஊதியம் கொடுக்கவல்லவே…

நான் மொழிமாற்றம் செய்த நான்காவது இயலின் சில பரிந்துரைகளைப் பார்ப்போம்.

இயல் 4.1.1. ன்படி 3 வயது முதல் குழந்தையை இனி அதிகாரப்பூர்வமாக பள்ளிகளில் சேர்க்கலாம். மழலை வகுப்புகள் பள்ளிகளிலேயே தொடங்கும். இதன் அடிப்படையில் சில கேள்விகள்.

1. அதற்கான வகுப்பறைகளும், விளையாட்டுப் பொருள்களும், தேவையான ஆசிரியர்களும், அவர்களுக்கான பயிற்சியும் நம் இந்தியத் துணைக்கண்டத்தில் நடத்தி முடிக்க எத்தனை ஆண்டுகளாகும்? இந்த ஸ்கேலில் நடத்துவதற்கான பொருளாதாரம் அரசுக்கு உண்டா? அந்த ஏற்பாடுகள் செய்து முடிக்காமலே இதை நடைமுறைப்படுத்திய அரசுப்பள்ளிகளில் இப்போது என்ன நடக்கிறது என்பதைப் பற்றி சில நண்பர்கள் கூறினார்கள். மிகவும் கவலை அளிப்பதாக இருந்தது. பள்ளி பற்றிய முதல் அனுபவம். அந்த அனுபவம் மகிழ்ச்சியானதாக இல்லாவிட்டால் பிறகு அம்மகிழ்ச்சியைக் கொண்டுவருவது மிகவும் கடினம்.
நகர்ப்புறங்களில் இப்போதே மழலை வகுப்புகள் பள்ளிகளில் தனியார் பள்ளிகளில் இருக்கின்றனவே என்று கேட்கலாம். அப்பள்ளிகள் இரண்டு நிலைகளுக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுப்பவை. ஒன்று குழந்தையைப் பள்ளியில் சேர்க்கும்நிலை. இங்கு பெற்றோர்களைக் கவர்வதற்காக பல ஏற்பாடுகளைக் கவனத்தோடு செய்கிறார்கள். மற்றொன்று 10, 12 வகுப்புகள். இங்கு பள்ளியின் தேர்ச்சி விழுக்காடு. அது பள்ளியின் அடுத்த வருட குழந்தைகள் சேர்க்கையைப் பாதிக்கும் என்பதால். இதுபோன்ற ஒரு தேவை அரசுப் பள்ளிகளுக்கு இருக்குமா என்பதே கேள்வி.

2. இப்போது இருக்கும் அங்கண்வாடிகள், பாலவாடிகள் என்னாகும். அங்கண்வாடி ஆசிரியைகள் என்னாவார்கள்? அவர்களை பள்ளிகளில் நியமிக்குமா? ஐசிடிஎஸ் (Integrated child development services) என்றஅமைப்பு என்னாகும்? தெளிவில்லை.
3. மழலை வயதில் மொழியைக் கற்றுக்கொள்வதில் திறமையோடு இருக்கிறார்கள் என்று ஆய்வு சொல்கிறது என்று கூறி மும்மொழிக்கொள்கையை முன் வைக்கும் அறிக்கை, ஆசிரியர் நியமனத்திற்கான வழியையும் சொல்கிறது. சென்னையில் இருக்கும் பல பள்ளிகள் மூன்றாவது மொழியாக தெலுங்கைத் தேர்வு செய்கிறது என்று வைத்துக்கொள்வோம். அத்தனை பள்ளிகளில் தெலுங்கு கற்பிக்க ஆசிரியர்களுக்கு எங்கே போவது… இந்த எண்ணிக்கை ஓய்வு பெற்ற தெலுங்கு ஆசிரியர்களின் எண்ணிக்கையை விட பலநூறு மடங்கல்லவா (அறிக்கையில் ஒரு பரிந்துரை ஓய்வுபெற்ற ஆசிரியர்களை நியமிப்பது)
4. தமிழ் நாட்டில் தமிழுக்கு மதிப்பில்லை. இதே பல்லவியை கேராளவிலும் கேட்கிறேன். பிற மாநிலங்களிலும் இதே நிலைமைதான். ஆங்கிலத்தின் தாக்கம் அவ்வளவு இருக்கிறது. அப்படியானால் மொழிக்கற்பிப்பதில் ஒரு பெரிய மாற்றம் தேவையல்லவா.. குழந்தைகள் மொழியை விரும்புவதற்கு என்ன செய்ய வேண்டும் என்பது முக்கிய கேள்வி அல்லவா… நம் கலாச்சாரம், பாரம்பரியம், நம் முன்னோர்கள் படைத்த படைப்புகள், காலத்தை வென்று நிற்கும் படைப்புகளை எளிய மொழியில் மாற்றம் செய்து… என்று போகும் பரிந்துரை இந்தக் குழந்தைகளிடம் எடுபடுமா? இதை நேரடியாகச் சொல்லாமல் இவற்றை மதிக்கும் மனப்பான்மையை வளர்ப்பது எப்படி? ஆனால் வளர்க்க வேண்டும், பாரம்பரியம் போற்றப்பட வேண்டும், என்று இந்த அறிக்கையின் உள்ளுணர்வைப் பாராட்டாமல் இருக்க முடியவில்லை. ஆனால் எப்படி என்பது மிகப்பெரிய கேள்வி (The devil is in the details)
5. மாவட்டத் தொடக்கக் கல்வித்திட்டத்தை பரவலாக்கும் முன்பு ஆறு மாவட்டங்கள். – அவற்றுள் தேர்ந்தெடுத்த பள்ளிகளில் – அப்பள்ளிகளில் புதிய புத்தகங்களும் மாற்றுக் கற்பித்தல் முறையையும் பயன்படுத்திப் பார்த்தல் – அதன் நிறைகுறைகளைச் சீர்த்தூக்கிப் பார்த்து, தேவையான மாற்றங்கள் செய்து – அதற்குப் பின் மாநிலம் எங்குமுள்ள பள்ளிகளில் அமல்படுத்தினார்களோ… அதே முறையை இங்கும் கையாளலாம் அல்லவா… (2047 வரை நாங்கள்தான் ஆளப்போகிறோம் என்று வேறு பேசிக்கொள்கிறார்கள். அப்புறம் என்ன)
பல மாநிலங்களின் சில பகுதிகளில், சில பள்ளிகளில் இந்தப் பாரம்பரியத்தை சிறு குழந்தைகளிடம் எடுத்துச்சென்று… கற்பித்து அவர்கள் மும்மொழியையும் கற்று. காளிதாசன் என்றவுடன் பெருமிதம் கொண்டு…. என்று சோதித்த பிறகு நாடெங்கும் நடத்தலாம் அல்லவா… அதுதானே முறை… எடுத்தோம் கவிழ்த்தோம் என்று இருக்காமல்…

இயல் 4.1.1 ன் இறுதியில் தடித்த எழுத்துகளில் தரப்பட்ட பகுதி இதோ

மகிழ்வான வகுப்பறை, அச்சமில்லா கருத்துப் பரிமாற்றம், தயக்கமின்றி வினா எழுப்புதல், படைப்பாற்றல், பங்களிப்பு, கண்டறிந்து கற்றல், தேடிக் கற்றல்… போன்ற பல சூழல்களின் மூலம் ஆழமான, அனுபவப்பூர்வமான கற்றல்.

நான் மொழிமாற்றம் செய்த பகுதியில் எனக்குப் பிடித்த வரிகளுள் ஒன்று இது. ஆனால் இந்த வாக்கியத்திலுள்ள ஒவ்வொரு தொடரும் செறிவானது. பொருள் பொதிந்தது. இது சாத்தியமானால் ஆகா.. இந்தியா வல்லரசாகும்.

ஆனால் என்ன பிரச்சனை…. நான் முன்பு குறிப்பிட்டது போல் – அனைத்து அறிக்கையிலும் இதே கருத்து பரிந்துரைக்கப்பட்டிருந்தது. ஆனால் நடைமுறையில் வரவில்லை. அப்படியானால் இதை நடைமுறைப்படுத்துவதற்கு என்ன செய்வது… எதை மாற்றுவது… தெளிவில்லை.

இயல் 4.3. பாடச்சுமை குறைப்பின் மூலம் அடிப்படைத் திறன் வளர்ச்சியும் விமரிசன சிந்தனையும் என்ற பகுதியின் கீழ் ஒவ்வொரு பாடத்திலும் அடிப்படைக் கருத்துகளை மட்டும் கற்பித்து மீதியுள்ள நேரத்தில் ஆழமாகக் கலந்துரையாடவும், நுண்மையாகப் புரிந்துகொள்ளவும் பகுப்பாய்வு செய்யவும். முக்கிய கருத்துகளைப் பொருத்தமான சூழலில் பயன்படுத்தவும் நேரமும் வாய்ப்பும் கிடைக்கும்.

இதே கருத்தை சற்று விரிவாக யஷ்பால் கமிட்டி கூறியுள்ளது என்பது என் நினைவு. கற்பது எப்படியெனக் கற்பதே உண்மையான கல்வி. என்ற வரியும் அதிலுண்டு என்று நினைக்கிறேன். ஆனால் நடைமுறையில் —. எடுத்துக்காட்டாக தமிழ்நாடு அரசு தயாரித்த புதுப்புத்தகங்களின் மிகப்பெரிய விமரிசனம் ஏராளமான பகுதிகள் திணிக்கப்பட்டுள்ளன என்பது…

பாடப்பகுதிகள் குறைவதை இன்றைய சமூகம் ஏற்றுக்கொள்ளுமா? ஏற்றுக்கொள்வதற்காக என்ன செய்யப்போகிறோம்?

இதோ அடுத்த பரிந்துரை

இயல் 4.4.2. பாடப்புறச் செயல்பாடுகள், பாட இணைச்செயல்பாடுகள் என்று அதிக கட்டுப்பாடுகள் கொண்ட பாகுபாடு கலைத்திட்டத்தில் இல்லை. பள்ளிக்கூடத்திலுள்ள எல்லா பாடங்களும் கலைத்திட்டத்தின் பகுதியாகக் கருதப்படும். பாடப்புறச் செயல்பாடு, பாட இணைச்செயல்பாடு என்ற பாகுபாடு இல்லை. விளையாட்டு, யோகா, நடனம், இசை, வரைதல், ஓவியம், சிற்பம், பானை வனைதல், மரவேலை, தோட்டக்கலை மற்றும் மின்வேலை ஆகியவை அனைத்தும் கலைத்திட்டத்தின் பகுதியாகவே கருதப்படும். என்சிஇஆர்டி தேசியக் கல்விக்கொள்கைக்கு ஏற்ற பாடப்புத்தகங்கள் தயாரிக்கும். அப்புத்தகங்களில் மேற்குறிப்பிட்ட துறைகள் யாவும் கலைத்திட்டத்தின் பகுதியாக உட்பட்டிருக்கும். எஸ்சிஇஆர்டி மாநிலங்களின் தேவைக்காக இப்புத்தகங்களை மேம்படுத்தலாம். மேலும் சேர்க்கலாம். குழந்தைகளின் தேவைக்கு ஏற்ப, விருப்பத்திற்கேற்ப ஆபத்தில்லாத உடற்கல்வி, கலைக்கல்வி, தொழிற்கல்வி, நுண்தொழில் ஆகியவற்றைக் கலைத்திட்டத்தில் உட்படுத்தலாம்.

மிக நல்லது. ஆனால் பள்ளிகளின் எண்ணிக்கை எத்தனை? அத்தனை பள்ளிகளிலும் இதற்கான ஆசிரியர்கள்? அவர்களுக்கான ஊதியம்? இப்போதே அரசு வருவாயின் பாதியை ஆசிரியர்கள் ஊதியமாக வாங்குகிறார்கள் என்கிறது சமூகம். அப்படியானால்….

சுருக்கமாக…
எந்தக் கலைத்திட்டமும் மக்களின் எதிர்காலத்திற்கு ஏற்றவகையில் மட்டுமே இயற்றப்படும். அல்லது அதை இயற்றுபவர்கள் அப்படி நினைப்பார்கள். ஆனால் நடைமுறைப்படுத்தும்போது வரும் சிக்கல்களைச் சமாளிக்கும் துணிவு இருக்குமா? தேவையெனில் கலைத்திட்டத்தில் மாற்றம் கொண்டுவருமா? அதற்கான பொருளாதாரத்தை ஒதுக்குமா? அரசு யந்திரத்தால் இப்பெரும் சுமையைச் சுமக்க முடியுமா? இல்லை தனியார் வசம் போய்விடுமா? காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

ஒன்று மட்டும் நிச்சயம்
தேவையே அடிப்படை. அந்தந்த காலத்திற்கு எது தேவையோ அது நிலைநிற்கும். அல்லது தேவைக்கேற்றாற்போல் பிறவற்றைக் காலம் மாற்றிக்கொள்ளும். திணிக்கப்படுபவை எல்லாம் புறக்கணிக்கப்படும்… என்ன? கொஞ்சம் நாளாகலாம்.

என் ஆசை…
இக்கல்விக்கொள்கையில் சமூகத்திற்கு ஏற்றதல்லாதவை எப்படி பிற கல்விக்கொள்கைகளில் இருந்தும் நடக்காமல் போயினவோ அப்படி நடக்காமல் போகட்டும். நல்ல கருத்துகளை நடைமுறைப்படுத்துவதற்கான விடமுயற்சியும் துணிவும் இவ்வரசுக்கு உண்டாகட்டும்.

 

1 Comment

  • கோமதி சங்கர் says:

    அருமையான பதிவு. ஒரு மாறுதலுக்காக, இந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ள எல்லாம் நடைமுறைக்கு வருவதற்கு சாத்தியம் குறைவு என்ற நடைமுறைச் சிக்கலே எதிர்காலத்தின் மேல் நம்பிக்கை கொடுக்கிறது.

Leave a comment Cancel reply