பஞ்சு மிட்டாய் செயல்பாடுகள் குறித்த நேர்காணல் – அபி (எலிபுலி இணையம்)

வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்
கே: Tell us about your journey as a writer and publisher
நான் பிரபு. ‘பஞ்சு மிட்டாய்’ பிரபு என்ற பெயரில் எழுதியும் சிறுவர்கள் மத்தியில் நிகழ்வுகள் மூலம் அறிமுகமாகியும் உள்ளேன். பஞ்சு மிட்டாய் சிறார் இதழின் ஆசிரியர், www.panchumittai.com இணையத்தின் ஆசிரியர் மற்றும் சிறார் நிகழ்வுகளை நடத்தியும் வருகிறேன். சென்ற சென்னைப் புத்தகத் திருவிழாவில் எனது சிறுவர் நாவலான‌ “எனக்குப் பிடிச்ச கலரு” வெளியாகியுள்ளது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்தச் செயல்பாடுகள் அனைத்தும் பஞ்சு மிட்டாய் சிறார் குழு என்ற பெயரில் நடத்தி வருகிறேன். பஞ்சு மிட்டாய் துவங்கி மூன்று வருடங்களுக்கு மேலாகிறது . இங்கு பெங்களூரில் எங்களது குடியிருப்பிலுள்ள வாண்டுகளுக்காக முதன்முதலாக கதை சொல்லலாம் என்று பேசி முடிவெடுத்து சின்னதாக துவங்கியது தான் பஞ்சு மிட்டாய் நிகழ்வு.
கதைகள் என்றதும் வழக்கமான நீதி போதனை கதைகளை தேர்வு செய்யாமல் சிறார்களை மகிழ்விக்கும் கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. கதையுடன் பாடல்கள், பாரம்பரிய விளையாட்டுகள்,ஓவியங்கள் என தங்களது தேவைக்கேற்ப நிகழ்வுகள் உருமாறியது. வாரந்தோறும் பெரியோர்களும் சிறார்களும் குடும்பமாக ஒன்றுக் கூடி கதைகள் பேசி விளையாடி வந்த இந்தப் ப‌யணத்தின்  ஒரு தருணத்தில் பெரியோர்கள் கதைகள் சொல்லி அதனை மகிழ்ந்த சிறுவர்கள் திடீரென தங்களது கற்பனைகளுக்கு வடிவம் தந்து கதைகள் சொல்லத் துவங்கினர். அதுவே பஞ்சுமிட்டாய் இதழாக உருமாறியது. முதல் நான்கு இதழ்கள் இணைய இதழாக வெளியானது. இதழுக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து பஞ்சுமிட்டாய் ஐந்தாம் இதழிலிருந்து அச்சு இதழாக வெளியாகி வ‌ருகிறது. இதுவரை நான்கு இதழ்கள் அச்சு இதழாக வெளிவந்துள்ளது.
அதேப் போல் எங்களது குடியிருப்பிலுக்குள் மட்டுமே இருந்துவிடாமல் நிகழ்வுகளை தமிழகத்தில் வெவ்வேறு ஊர்களில்  நடத்தி வருகிறேன். இதுவரை பஞ்சு மிட்டாய் சுமார் 90க்கும் மேலான சிறார் நிகழ்வுகளை நடத்துயுள்ளது. இப்படி நிகழ்வுகள் மற்றும் இதழ்கள் மூலம் நிறைய நண்பர்களை (சிறார் உலகம் சார்ந்து இயங்கும்) சந்திக்க வாய்ப்பு கிடைத்தது. இவர்கள் அனைவரையும் இணைக்கும் நோக்கத்திலும் தமிழில் சிறுவர் உலகத்தினைப் ப‌ற்றி உரையாடும் நோக்கத்திலும்  www.panchumittai.com என்ற இணையதளத்தினை நடத்தி வருகிறேன். சிறிய கதை சொல்லலில் துவங்கிய பயணம் இன்று வெவ்வேறு வடிவங்களாக‌ உருமாறி இருக்கிறது.  கடந்து வந்தப் பாதையை திரும்பிப் பார்க்கையில் மிகவும் உற்சாகமாக இருக்கிறது.
பஞ்சு மிட்டாய் தற்போது மூன்று தளங்களில் இயங்கிக் கொண்டிருக்கிறது. இதன் சிறகுகள் மென்மேலும் விரியும் என்ற நம்பிகையுடன் பயணம் தொடர்கிறது..
கே: Who has been your biggest support in this journey?
முதலில் எனது குடும்பத்திலுள்ள அனைருக்கும் நன்றி சொல்லிட வேண்டும். குடும்பத்திற்கான நேரத்தில் தான் இவை அனைத்தையும் முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். இந்த செயல்பாட்டினை தங்குதடையின்றி செயல்படும் வகையில் குடும்ப சூழல் இருப்பதாலே இவை அனைத்தும் சாத்தியமானது. அதுமட்டுமில்லாமல் எனது செயல்பாடினை ஆதரிக்கும் அதே வேலையில் ஆக்கப்பூர்வமான நகர்தலுக்கும் தேவையாக இடத்தில் பங்களிப்பும் கொடுத்து மிகுந்த‌ உறுதுனையாக இருக்கும் எனது மனைவிக்கு எனது நன்றிகள்.
அதேப் போல் நண்பர்கள், செயற்பாட்டாளர் & எழுத்தாளர் நண்பர்களின் ஆதரவுகள், அவர்கள் தரும் ஆலோசனைகள் மிக முக்கியமானதாக கருதுகிறேன். நிகழ்ச்சி ஒருங்கினைப்பு, பொருளாதார உதவிகள், பொருளாதார சார்ந்த யோசனைகள், விமர்சனங்கள், இதழ் சார்ந்த உரையாடல்கள், இதழின் போக்கு, இணையதளத்திற்கு தேவையான தொழிநுட்ப ஆலோசனைகள், இதழை கொண்டு சேர்ப்பது, இதழுக்கு தேவையான படைப்புகள் வழியே பங்கெடுப்பது என பல்வேறு உதவிகள் கிடைக்கிறது. அச்சு இதழாக மாறியதற்கும், நேர்த்தியான வடிவமைப்பை கொடுக்கும் வானம் பதிப்பகம் பஞ்சு மிட்டாய் இதழின் வளர்ச்சியில் மிக முக்கியாமனதாகும். அதேப் போல் குட்டி ஆகாயம் நண்பர்களும். பெற்றோர்களும் ஆசிரியர்களும் பஞ்சு மிட்டாயின் பயணத்தில் மிக முக்கியமானவர்கள். இவர்கள் அனைவரின் ஒன்றுக்கூடலே பஞ்சு மிட்டாயின் மிகப்பெரிய பலமாக கருதுகிறேன்.
கே: What are the products that you offer now? What are their highlights?
பஞ்சு மிட்டாய் சிறார் இதழ் தற்போது குட்டி வாசகர்களுக்கு கிடைக்கிறது. 12 வயதிற்குள் இருக்கும் குழந்தைகளுக்கு ஏற்றதாக இருக்கும். சிறுவர்களின் கற்பனைகளை முதன்மைப் படுத்துதல், வண்ணமையான வடிவமைப்பு, எளிமையான மொழி, தரமான அச்சிடல்  என பஞ்சு மிட்டாய் சிறார்களின் மகிழ்ச்சையை மட்டுமே ஆதரமாக கொண்டு செயல்பட்டுவருகிறது பஞ்சு மிட்டாய் இதழ்.
இதில் குழந்தைகள் சொல்லும் கதைகள் அதே மொழியில் பதியப்படுகிறது. ஓவியங்களைப் பெற‌ பள்ளிகளுடன் சேர்ந்து நிகழ்வினை திட்டமிட்டு எதேச்சையான சூழலில் பெறுகிறோம். தற்கால சிறார் எழுத்தாளரின் படைப்பு, எளிமையான புதிர், காமிக்ஸ் வடிவில் எளிமையான அறிவியல் சார்ந்த கதைகள், பாரம்பரிய விளையாட்டு அறிமுகங்கள், சிறார்கள் ஆடிப்பாடி மகிழும் வகையில் அமைக்கப்படும் சிறார் பாடல்கள் என ஒவ்வொரு பக்கமும் குழந்தைகள் விரும்பும் வண்ணத்தில் இருக்கிறது.
பஞ்சு மிட்டாய் சிறார் நிகழ்வுகள் : சிறுவர்களுக்காக கதை, பாடல், விளையாட்டு என 2-3 மணி நேர நிகழ்வாக இருக்கும். இதுவரை சுமார் 90க்கும் மேலான நிகழ்வுகளை பெங்களூர் மற்றும் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நடந்துள்ளது. நண்பர்கள் தங்கள் பகுதிகளில் நிகழ்வுகள் நடத்த விருப்பப்பட்டால் தொடர்பு கொள்ளலாம். (விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது)
பஞ்சு மிட்டாய் இணையதளம் (www.panchumittai.com):  சிறார் உலகத்தினைப் பற்றி தமிழில் உரையாட இணையதளம் இயங்கி வருகிறது. கலை, தற்கால சிறார் இலக்கியம், தற்கால சிறார் நிகழ்வுகள், குழந்தை வளர்ப்பு என பல்வேறு தலைப்புகளில் உரையாடி வருகிறது. எழுத்தாளர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், செயற்பாட்டாளர்கள், பதிப்பகங்கள், பள்ளிகள், மருத்துவர்கள், இயற்கை சார்ந்து உரையாடும் நண்பர்கள், விழிப்புணர்வு ஏற்படுத்தும் நண்பர்கள், கலைஞர்கள் என சிறார் உலகம் சார்ந்து இயங்கும் நண்பர்களை இணைக்கும் ஒரு புள்ளியாக பஞ்சு மிட்டாய் இணையதளம் இருக்கிறது.
கே: What were the challenges/road blocks you faced in setting up and telling the world about Panjumittai?
1970-80 களில் தமிழ் சமூகத்தில் 70க்கும் மேலான சிறார் இதழ்கள் வெளியாகியுள்ளது. ஆனால் இன்று? எண்ணிப் பார்த்தால் 10 இதழ்கள் கூட இருக்காது. மொத்தத்தில் 10 இதழ்கள் கூட இல்லாத நிலையில் வயது வாரியாக குழந்தைகளுக்கு இதழ் வர வேண்டியதின் அவசியம் பற்றியெல்லாம் எப்படி யோசிக்க முடியும். ஏற்கனவே இருக்கும் சிறார் இலக்கிய படைப்புகள் இங்கு பரவலாக முக்கியத்துவம் பெறவில்லை. அப்படி இருக்கையில் புதிய முயற்சிகளோ அல்லது வளர்ச்சிகளோ எப்படி ஆக்கப்பூர்வமான வழியில் நேரிடும்.
தமிழ் சமூகத்தில் சிற்றிதழ்கள் என்பதே பெரிய சவாலான விசயம் அதிலும் சிறுவர்களுக்கான சிற்றிதழ் என்பது மிகவும் சவாலாக இருக்கிறது, அதிலும் இதழியல் அனுபவம் ஏதுமின்றி பெற்றோராக இதழை துவங்கி குழந்தைகளின் படைப்புகளை முன்னிறுத்தி பஞ்சு மிட்டாய் இயங்கிவருகிறது. இதழை பரவலாக கொண்டு சேர்ப்பதே தற்போதைய பெரிய சவாலாக நினைக்கிறேன். ஏனென்றால் அச்சு இதழ் என்பது அதற்கான பொருளாதாரத்தை உள்ளடக்கியது. சிறுவர் உலகம் சார்ந்து இயங்குவது, அதற்கான வாசிப்பு, மற்ற நண்பர்களுடன் உரையாடுவது என‌ இயங்கும் வேலையில் அச்சு இதழுக்கான பொருளாதார தேவைகளையும் பார்க்க வேண்டியுள்ளது.
இதழை அச்சிட்டு அதனை பரவலாக எடுத்துச் செல்லும் பொறுப்பும் வந்து சேர்கிறது. இதழ் நண்பர்கள் வழியே தற்போது பரவலாக சென்றடைகிறது தவிர வேறு எந்த விழியிலும் அது மக்களை சென்றடையவில்லை. புத்தக வாசிப்பு குறித்தும், சிறார் இதழ் தேவைக்குறித்தும் இங்கு ஒரு விழிப்புணர்வு உண்டாகி அதன் வழியே தான் பொது மக்களை சென்றடைய முடியும். அதற்கான சாத்தியக்கூறுகள் தான் தற்போது கண்முன் நிற்கும் பெரிய சவாலாக இருக்கிறது.
கே: What do you think are the general sentiments towards early childhood Tamil these days? Why is it important to build a foundation in mother tongue while in preschool (ages 0-6) rather than waiting till the Primary years (7+ years)?
தமிழ் குடும்பங்களில் தமிழ் இயல்பாக இருந்திட வேண்டும். குழந்தைகளின் கல்விக்காக இங்கும்(இந்தியாவில்) பலர் ஆங்கிலத்தில் பேசினால் நல்லது தானே என்று நினைக்கின்றனர். ஆனால் உண்மை நிலை வேறுவிதமாக இருக்கிறது. ஒரு குழந்தை தனது சுற்றத்தை சந்திக்கும் போதும், வெளியுலகத்துடன் இணையும் போதும், தனது தாத்தா பாட்டியுடன் உரையாடும் போதும் எதுவும் இயல்பாக இருப்பதில்லை. தாத்தாவும் பாட்டியும் குழந்தையை கட்டி அனைத்து முத்தம் கொடுத்து கொஞ்சுவது அந்த குழந்தைக்கு புரியவில்லை என்றால்…நாம் இழந்திட வேறென்ன இருக்கிறது. அதைவிட எதிர்கால கல்வி என்பது முக்கியமானதா என்ற கேள்வியே என்னிடம் இருக்கிறது.
ஆக, குழந்தை முதன்முதலாக பேசும் சூழலில் தாய்மொழி உயிர்ப்புடன் இருந்திட வேண்டும். அதுவே இயற்கையானது. இந்த சூழலில் அவர்கள் தமிழில் உரையாட முழுவதுமாக கற்றிருப்பார்கள். 5 வயதிலிருந்தே தமிழில் கதை, பாடல், வாசிப்பு, விளையாட்டு என துவங்கிட வேண்டும்.
மொழியை வகுப்பு வடிவத்தில் குழந்தைகளுக்கு நாம் எடுத்துச் செல்வது மிகவும் சிரமமான விசயமாக நான் கருதுகிறேன். வீட்டிலும், சுற்றத்தில் நண்பர்களுடன் உரையாடும் சூழலில் எந்த மொழி இருக்கிறதோ அதனை குழந்தைகள் இயல்பாக கற்றுக்கொள்வார்கள். குழந்தைகள் முதலில் உரையாடுவதற்காக தமிழை தேர்ந்தெடுக்க வேண்டிய சூழல் நிலவ வேண்டும். பாடத்திட்டத்தில் இருக்கிறது என்பதற்காக நாம் அதனை கற்பிக்க முயற்சிக்கும் போது மொழி முழுவதுமாக அடுத்த தலைமுறைக்கு செல்லாது.
குழந்தை முதன்முதலாக பேசுவது ஒரு குடும்ப சூழலில் தான் முதலில் அந்த சூழலில் நமது தாய்மொழி இருந்திட வேண்டும். அடுத்து சுற்றம், தமிழ் இல்லாத இடத்தில் வசிக்கும் போது நண்பர்கள் ச்ந்தித்துக்கொள்ளும் போது தமிழே உரையாடுவதற்கான மொழியாக இருந்திட வேண்டும், பெரியவர்கள் குழந்தைகளுடன் உரையாடும் போதும் தமிழில் உரையாடிட வேண்டும். இவற்றை எல்லாம் பார்த்து வளரும் போது குழந்தைகள் மொழிக்கான தேவைகளை உணர்வார்கள். அதன் வழியே மொழியை கற்றிட ஆவல் கொள்வார்கள்.
கே: Tamil vs English – What are your thoughts on how the gap can be closed in terms of the mind set of Tamil being far more difficult to teach and engage in than English at the preschool level?
ஒரு குழந்தை தன்னிச்சையாக தனது தாய் மொழியை பேச கற்றுக்கொள்வதை விட சிறந்த கற்றல் வேறு எந்த வயதிலும் நிகழாது என்கிறார் மாண்டிசோரி அம்மையார். அதே நேரத்தில் சுற்றத்தில் வழக்கத்தில் எதேச்சியாக எந்த மொழி இருக்கிறதோ அதையே நாம் தாய் மொழியாக கருதிட வேண்டும் என்று நினைக்குறேன்.
தமிழகத்திற்கு வெளியே வசிக்கும் தமிழ் குடும்பங்களுக்கு சுற்றத்தில் தமிழ் இயல்பாகவும் எதேச்சையாகும்  இல்லாத பட்சத்தில் குழந்தைகளுக்கு அது தாய்மொழியாக அமைவதில் சிக்கல் கண்டிப்பாக இருக்கும். மொழி வாழ்வியலில் ஒரு அங்கமாக அமையும் போது அதை குழந்தைகளிடம் இயல்பாக எடுத்துச் செல்ல முடியும். ஆங்கிலத்தினை எளிமை என்று குறிப்பிடும் சூழல் ஏன் இருக்கிறது என்று நாம் யோசிக்க வேண்டும். வீடு, பள்ளி, சுற்றத்தில் ஆங்கிலமே நிறைந்திருக்கும் போது அது இயல்பாக குழந்தைக்கு வருகிறது. ஆங்கிலத்தை அவர்கள் தாய்மொழியாக நினைக்கின்றனர் என்றே சொல்ல வேண்டும்.
குழந்தைகளால் பல மொழிகளை சுலபமாக கற்றுக்கொள்ள முடியும் என்று பல ஆய்வுகள் சொல்வதை நாம் கேட்டுவருகிறோம். ஆனால் அதனை நாம் முழுவதுமாக புரிந்துக்கொள்ள வேண்டும். பல மொழிகள் இயல்பாக இருக்கும் சூழலிலே ஒரு குழந்தை பல மொழிகளை சுலபமாக கற்றுக்கொள்ள முடியும். பெங்களூரில் நான் குடியிருந்த வீட்டின் காவலாளியின் மகன் (வயது 5+) தாய்,தந்தையிடம் நேபாளத்திலும், எங்களிடம் தமிழிலும், அருகேயுள்ள கடைகளில் கன்னடத்திலும் பேசுவான். அவனுக்கும் எங்கும் எந்த மொழியும் பாடமாக கற்பிக்கப்படவில்லை. அனைத்து மொழிகளும் அவனுக்கு சுற்றத்தில் எதேச்சையான சூழலில் இருந்தது என்பதே நிதர்சனம்.
இப்படி பல மொழிகள் இயற்கையான சூழலில் இருக்கும் என்றால் மட்டுமே குழந்தைகளால் அதனை முழுவதுமாகவும் ஆர்வத்துடனும் உள்வாங்கிக்கொள்ள முடியும். சிங்கப்பூர் போன்ற நாடுகளில் தமிழை தாய்மொழியாய் கொண்ட குழந்தைகள் தமிழ் கற்பதில் சிக்கல் இருக்கிறது என்றால் நாம் கவனிக்க வேண்டியது குழந்தைகள் வசிக்கும் சுற்றத்தையும் சூழலையும் தான்.
கே: What advice do you have for parents who want to engage their children in Tamil at home? How can they make it fun for the whole family?
தமிழ் வாழ்வியலாக இருக்கும் சூழலை நாம் பார்த்துக்கொண்டாலே போதுமானது என்று நம்புகிறேன். அதற்கு கதைகளும், பாடல்களும்(சினிமா பாடல்கள் அல்ல), விளையாட்டுகளும், கலைகளும் கண்டிப்பாக துனை நிற்கும்.
பெரியவர்களாகிய‌ நாம் ஏன் விளையாட நிறுத்திக்கொண்டோம்? விளையாட்டின் வழியே கிடைத்த மகிழ்வினை ஏன் இழந்தோம்? “அந்தக் காலத்தில் நாங்கள் விளையாண்ட விளையாட்டெல்லாம் இப்போ குழந்தைகள் விளையாட மாட்றாங்க” என்று நாம் தொலைத்துவிட்டு பழியை மட்டும் சிறார்களின் மேல் சுமத்திவிட்டு ஒதுங்கிக் கொள்கிறோம்.
அதற்கு பதிலாக குடும்பங்களில் ஆசைத் தீர விளையாடி பார்க்கலாம். குடும்பமாக பழங்கதைகள் பேசிக்கொள்ளலாம். குழந்தைகளுக்கு வாசிப்பு பழக்கத்தினை ஏற்படுத்த வேண்டும் என்று ஆசை மட்டும் படாமல்  நாம் முதலில் வாசிக்க துவங்கலாம். நமது அன்றாட செயல்பாடுகளில் வாசிப்பு இருக்கும் பட்சத்தில் குழந்தை அதனை வாழ்வியலின் தேவையாக வாசிப்ப்பை நினைத்திட அதிக வாய்ப்புகள் இருக்கிறது.
இவற்றை முயற்சிக்கும் போது எந்த நேரத்திலும் பள்ளியில் சாயல் இல்லாமல் பார்த்துக்கொள்வது நல்லது. குழந்தை இதனைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தை உள்ளே வைத்துக்கொண்டு பொழுதினை குடும்பத்துடன் மகிழ்வாக செலவு செய்வதை மட்டும் ஆதாரமாக கொண்டு செயல்படுவது முக்கியமானதாக கருதுகிறேன்.
கே: Do you have a dream project that you hope to bring to children?
இது போட்டி உலகம் என்ற கூற்றை பொய்பித்து இது நம்மால் நமக்காக  உருவாக்கப்படும் உலகம், இதில் அனைவரும் ஒற்றுமையாக மகிழ்வுடன் போட்டியின்றி வாழ்ந்திட முடியும் என்பதினை குழந்தைக்கு காட்டிட வேண்டும். இதற்கு ஏற்கனவே கையில் எடுத்த செயற்பாடுகள் உறுதுனையாக இருக்கும் என்று நம்புகிறேன். ஆகையால் துவங்கிய செயற்பாடுகளை எந்தவித சமரசமும் இன்றி தொடர்ந்திட வேண்டும். காலாண்டு இதழை மாத இதழாக மாற்றிட வேண்டும். குழந்தைகளின் உலகை முழுமையாக பிரதிபலிக்கும் அத்தனை முயற்சிகளையும் செய்திட வேண்டும். இலக்கியம், கலை, இதழ் வழியே குழந்தைகளுக்கான திருவிழாக்களை (நண்பர்களின் உதவியுடன்) பல்வேறு ஊர்களில் நடத்திட வேண்டும்.
எந்தவித பதட்டமுமின்றி இயற்கையான கற்றல் வழியே குழந்தைகள் வளர வேண்டும், அதற்கான முன்னெடுப்புகளை  பஞ்சு மிட்டாய் எதிர்காலத்தில் எடுக்கும்.
கே: How/where can our readers find you and your products?
புத்தகங்களைப் பெற நண்பர்கள் என்னை தொடர்புக்கொள்ளலாம். புத்தகங்களை தபால் வழியாக அனுப்பி வைக்கப்படும்.
மேலும் பஞ்சு மிட்டாய் செயல்பாடுகள் சார்ந்து உரையாட: 
கைபேசி எண்: +91-9731736363
மின்னஞ்சல்:editor.panchumittai@gmail.com
முகப்புத்தகம்:https://www.facebook.com/panchumittaisiraarkuzhu/
இணையதளம்:www.panchumittai.com
குறிப்பு: சிங்கப்பூரிலிருந்து இயங்கிவரும் எலி-புலி குழுவிற்காக எடுக்கப்பட்ட‌ நேர்காணல். சிங்கப்பூரில் வசிக்கும் தமிழ் குடும்பங்கள் குழந்தை வளர்ப்பில் சந்திக்கும் பிரச்சனைகளின் அடிப்படையில் கேள்விகள் அமைந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment