பயப்படுத்தலாமா? – பெ.தூரன்

வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

ஒரு நாள் ரெயிலிலே பிரயாணம் செய்துகொண்டிருந்தேன். ஒருவர் தம் குடும்பத்தோடு அதே வண்டியில் வந்தார். அவருடைய சின்னக் குழந்தை ஜன்னல் வழியாக எட்டிப் பார்க்க வேண்டுமென்று ஒரே பிடிவாதமாகத் தொந்தரவு செய்து கொண்டிருந்தது. “ஐயோ! வேண்டாம். கீழே விழுந்துவிடுவாய்! வெளியே பார்க்கப்படாது” என்று குழந்தையின் பாட்டி பயங்காட்டி எச்சரிக்கை செய்தாள். அதனுல் கொஞ்ச நேரம் குழ்ந்தை பேசாதிருந்தது. பிறகு மறுபடியும் அது தலையை நீட்ட யத்தனிதது. “ஐயோ, குழந்தை போச்சு” என்று தாய் வீறிட்டுக் கத்தினாள். “இன்னும் கொஞ்ச நேரம் பார்க்காமலிருந்தால் என்ன ஆகியிருக்குமோ?” என்று பாட்டி அலறினாள். அவள் அதோடு நிற்கவில்லை. குழந்தையை மிரட்டி வைப்பதற்கு ஒரு புதிய வழியையும் கண்டு பிடித்தாள். எதிர்ப் பக்கத்திலே உட்கார்ந்திருந்த ஒருவரைக் காண்பித்து, “உஸ், அதோ பார், அவர் உன்னைப் பிடித்துக் கொண்டு போய் விடுவார் – பேசாமல் என் மடிமேல் வந்துவிடு” என்று சொன்னாள். அந்த ஆசாமியும் பாட்டிக்குத் துணையாக வந்துவிட்டார். “டேய்-பேசாமே உட்கார். இல்லாத போனால் இந்தப்பைக்குள்ளே பிடித்துப் போட்டுக்கொண்டு போய்விடுவேன்” என்று சத்தம் போட்டார். கண்ணைத் திரு திருவென்று விழித்தார்.குழந்தை பயந்து அரண்டுபோய்விட்டது. பேசாமல் பாட்டியின் மடியில் அமர்ந்துகொண்டது.

பாட்டியின் தந்திரம் பலித்துவிட்டது. ஆனால் அதனால் குழந்தைக்கு எவ்வளவு தீங்கு விளைகிறதென்பதை அவள் உணருவதில்லை. இந்தச் சம்பவத்தைக் கண்ணுற்ற எனக்கு மனத்திலே அதிக வேதைனை யுண்டாயிற்று. எதிர்கால இந்தியாவில் வாழப்போகிற மக்களை இப்படிப் பயமுறுத்திக் கோழைகளாக்குவது நியாயமா என்ற கேள்வி என் மனத்திலே வெடித்தெழுந்தது.

சின்னக் குழந்தைகளுக்கு எதைக் கண்டாலும் ஆச்சரியம். எதையும் பார்த்துத் தெரிந்துகொள்ள வேண்டும் என்று மட்டில்லாத ஆசை. அந்த ஆசையை போற்றத் தகுந்தது. புதிது புதிதாக எல்லாவற்றையும் பார்த்து அந்த அனுபவத்தால் குழந்தைகள் தங்கள் அறிவை விருத்தி செய்து கொள்ளுகின்றன. அந்த ஆசையை இப்படி நசுக்கி விடுவது நல்லதா என்று நான் யோசித்தேன். அது மட்டுமல்ல இம்மாதிரி பயப்படுத்தி வைத்தால் அவன் பெரியவனானபொழுது வாழ்க்கையில் நேரிடுகின்ற கஷ்டங்களைச் சமாளிக்க எப்படித் தைரியமடையப் போகிறான்? எந்தக் காரியத்தையும் சாதிக்க முடியும் என்ற மனோதிடம் எப்படி உண்டாகப் போகிறது? புதிய மனிதர்களைக் காட்டி அவர்களை ராட்சசர்கள் என்று எண்ணும்படி செய்தால் அவன் எவ்வாறு பின்னால் சமூகத்தில் மற்றவர்களோடு சமமாக இருந்து பழகப்போகிறான்? இம்மாதிரி கேள்விகள் என் மனதில் தொடர்ந்து தோன்றின.

இப்படிக் கூறுவதால் குழந்தைகளுக்கு ஏதாவது தீங்கு நேரிட்டாலும் சரியென்று அவற்றின் இஷ்டப்படி யெல்லாம் விட்டுவிடலாம் என்று நான் சொல்லுவதாக நினைக்கக் கூடாது. இளங்கன்று பயம‌றியாது என்பது வாஸ்தவந்தான். ஆனால் குழந்தைக்குப் பயத்தை உண்டாக்காமலேயே இம்மாதிரி சந்தர்ப்பங்களில் சமாளித்துவிட முடியும் என்பது எனது கட்சி. நாம் மட்டும் கொஞ்சம் கவனமாக இருந்தால் போதும். ரெயில் ஜன்னல் வழியாகக் குழந்தை பார்க்க விரும்பினால் அதைத் தடுக்க வேண்டியதில்லை. குழந்தையைப் பார்க்கும்படி விட்டுவிட்டுப் பின் புறம் மெதுவாகப் பிடித்துக்கொள்ளலாம். குழந்தைக்காக நாம் கொஞ்சம் சிரமப்படத்தான் வேண்டும்.

குழந்தை இந்த உலகத்திற்கு வந்து சில வருஷங்கள் தானாகின்றன. அதற்கு இங்குள்ள பொருள்களெல்லாம் புதியவை. அவற்றை யெல்லாம் பார்க்க அதற்கு அளவு கடந்த ஆசை. அந்த ஆசையைக் கூடியவரை நாம் பூர்த்தி செய்ய வேண்டும். அப்பொழுதுதான் அதன் அறிவு நன்றாக விரிவடையும். ஆராய்ச்சி மனப்பான்மை குழந்தைக்கு உண்டு. அதை வளர்க்க நாம் உதவ வேண்டும்.

பிறந்தது முதற்கொண்டே பய உணர்ச்சியைப் பல வகைகளில் நாம் குழந்தைக்கு உண்டாக்கி விடுகிறோம். இருட்டறையில் குழந்தை தூங்கக் கூடாது என்கிறோம் இருட்டிலே போகக் கூடாது என்று தடுத்து விடுகிறோம். குழந்தை தூங்காமல் தொந்தரவு கொடுத்தால், “உஸ்-உஸ்! அதோ பூனை வருகிறது” என்று பயமுறுத்தி ‘மியாவ் மியாவ்’ என்று சத்தமும் போடுகிறோம். இல்லாவிட்டால் “அதோ இரண்டு கண்ணன் வருகிறான், அதோ போலிஸ்காரன் வருகிறான், உன்னைப் பிடிதுக் கொண்டு போய்விடுவான். கண்ணை மூடிப் படுத்துக் கொள்” என்று மிரட்டுகிறோம்.

இப்படி பல வழிகளில் நாம் குழந்தைகளைப் பயங்கொள்ளிகளாகச் செய்துவிடுகிறோம். இது மிகப் பெரிய தவறு குழந்தைக்குப் பெரியதோர் பாதகம். வாழ்க்கையில் அவன் தைரியமாக முன்னோக்கிச் செல்ல வேண்டாமா? அதற்குத் தேவையான அங்கா நெஞ்சத்தைக் குழந்தைப் பருவத்திலிருந்தே வளர்க்கவேண்டாமா? உருவத்திலே மட்டும் குழந்தை வளர்ந்தால் போதுமா? அதன் மனத்திடமும், துணிச்சல் தன்மையும் வளர வேண்டாமா? இவையெல்லாம் சரியானபடி வளர்ந்தால்தான் அவன் வாழ்க்கையில் வெற்றியுடன் முன்னேற முடியும்.

இயல்பாக குழந்தைக்கு இரண்டு விதமான வபயந்தான் உண்டு. பெரிய சப்தத்தைக் கேட்டால் அது பயப்படும். மேலேயிருந்து கீழே திடீரென்று விழுவது போன்ற உணர்ச்சி ஏற்பட்டால் அது பயப்படும். மற்றப் பயங்களெல்லாம் நாம் உண்டாக்கியவை என்று டாக்டர் வாட்சன் போன்ற மனத் தத்துவர்கள் கூறுகிறார்கள். ஆதலால் நாம் மட்டும் கொஞ்சம் கவனமாக இருந்தால் குழந்தையைப் பயமறியாமல் வளர்க்க முடியும். துணிச்சலாகக் காரியங்கள் செய்யவும் பழக்கலாம். ஏதாவது ஒன்று குழந்தைகளுக்கு நிச்சயமாகப் பெரிய அபாயத்தை உண்டாக்கும் என்று தோன்றினால் அதை மட்டும் முன்கூட்டியே அகற்றிவிட வேண்டும் மற்றபடி குழந்தையைத் தாராளமாக விட்டுவிட வேண்டும். நான் ஒரு நாள் கடற்கரையில் உலாவிக் கொண்டிருக்கும்போது ஒர் இரோப்பியச் சிறுவன் கடலில் குதிப்பதைப் பார்த்தேன். அவனுக்கு ஐந்தாறு வயதிற்கு மேலிராது. அதிகமாக உள்ளே செல்லாமல் கரை அருகிலேயே இருந்து அவன் அலைகள் வரும்போது முழுகிக் கொண்டிருந்தான். அவனுடைய தந்தை பக்கத்திலே நின்று கவனித்துக் கொண்டிருந்தார். இம்மாதிரி பழக்குவது நல்லது.

ஓடி விளையாடினுல் கீழே விழுந்து காயமாகி விடுமே, குதித்தால் கால் ஒடிந்து போகுமே என்று எதற்கெடுத்தாலும் ஓர் அபாயம் கற்பித்துக்கொண்டு குழந்தையைத் தடுப்பது அறியவுடைமையல்ல. வேத‌க் கதைகளைக் கூறிச் சிவாஜியின் தாய் அவரைச் சிறுவயதில் வளர்த்தாகச் சரித்திரம் கூறுகின்றது. பயத்தை அகற்றுவதோடு தைரியமாகத்காரியங்கள் செய்யவும் நாம் குழந்தைக்கு உற்சாகமளிக்க வேண்டும் பயமென்பது மிக மோசமாக உணர்ச்சி. அதை அதிகமாக உடையவர்கள் வாழ்க்கையில் எந்தத் துறையிலும் வெற்றிடைய முடியாது. வாழ்க்கையில் வெற்றி வேண்டுமானால் மனோபலம் வேண்டும்; தைரியம் வேண்டும்; எதையும் செய்து சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையும் துணிச்சலும் வேண்டும். அவற்றையெல்லாம் குழந்தைப் பருத்த்லிருந்தே வளர்க்க உதவ வேண்டியது பெற்றோர்களின் முக்கியக் கடமையாகும்.

அச்சம் என்பது மடமையா? குழந்தை வளர்ப்பில் அச்ச உணர்வு குறித்த அனைத்து பதிவுகளையும் வாசிக்க இங்கே சுடக்கவும்.

குறிப்பு: இந்தக் கட்டுரை பெ.தூரன் அவர்களின் நாட்டுடமையாக்கப்பட்ட புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. இணையத்தில் வாசிக்க இங்கே சுடக்கவும்.

அச்சில் : குழந்தை மனமும் அதன் மலர்ச்சியும் வெளியீடு : இயல்வாகை, விலை: 75/- குழந்தை உளவியலும் மனித மனமும் (உளவியல் நூல்களின் தொகுப்பு), பெ. தூரன், சந்தியா பதிப்பகம். விலை: 250/-

1 Comment

Leave a comment