குழந்தையின் விளையாட்டுகள் பொழுதைப் போக்குவதன்று – கோவை சதாசிவம்

வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

குழந்தையின் விளையாட்டுகள் பொழுதைப் போக்குவதன்று; பொழுதை ஆக்குவதாகும்! மனிதனை முழுமையாக்குவதில் விளையாட்டின் பங்கு அளப்பரியவை. பண்டைய தமிழர்கள் பண்பாட்டுவெளி விளையாட்டும், பாடல்களும் நிரம்பியவை. மனிதப் பண்புகளை, சமூக அறங்களை உழைப்பிலிருந்தும் இயற்கையிலிருந்தும் மனிதர்கள் கற்றுக் கொண்டார்கள்.

உள்ளம், உடல் பலத்தை விளையாடும் போதுதான் குழந்தைகளால் பெறமுடியும்! குழுவின் உழைப்பும் கூட்டுச் சிந்தனையுமே வெற்றியின் ஆதாரம் என்பதை விளையாட்டுகள் எல்லாக் காலங்களிலும் உணர்த்துகின்றன.

மழைக்காலத்தில் கால் விரல்களின் இடுக்கில் சேறு பிதுங்க நடப்போம்! பள்ளிக்குப் போகும் வழி நெடுக விளையாடுவோம்! மழைக் காலத்தில் தான் மொட்டைப் பாப்பாத்தியைப் பார்க்க முடியும். மணல் வெளியில், புல்வெளியில் பளபளக்கும் சிவப்பு நிறத்தில் ஊர்ந்து போகும் பூச்சியைத்தான் மொட்டைப் பாப்பாத்தி என்போம். மொழுமொழுப்பான பூச்சியைப் பிடித்து உள்ளாங்கையில் வைத்துக் கொண்டால்…இனம் புரியாத ஒரு குறுகுறுப்பு உடலில் பரவும்.

பூச்சிகளை அருவருக்காத உலகத்தில் நாங்கள் வந்தோம்! பொன்னாம் பூச்சியைப்(பொன்வண்டு) பார்த்த மாத்திரத்தில் பிடித்து மல்லாக்க கிடத்துவோம். படபடக்கும் இறக்கைகளின் ஒலி காற்றில் இசையாய் கசியும். சமநிலை அடைய குட்டிக்கரணம் போடும். உருண்டு, புரண்டு எழுந்து பறக்கையில் பளிச்சிடும் மயில் நீல வண்ணம் மனதைக் கிறங்கடிக்கும்.

குள்ளாம் பூச்சியோடு கொஞ்சநேரம் விளையாடுவோம்! மணல்வெளியில் கூம்புவடிவில் சிறுசிறு குழிகள் தென்பட்டால். கண் இமைக்கும் நேரத்தில் அதனைப் பிடிக்கும் எறும்பின் உடலுள் மயக்கம் தரும் திரவம் செலுத்திகுழிக்குள் இழுத்துப்போய் நிதானமாக உண்ணும். குள்ளாம் பூச்சியின் குழி..எறும்பை விழச்செய்யும் ஒரு பொறிதான். விளம்பில் ஊறும் எறும்பு,குழிக்குள் விழுந்ததும், பிடித்துப்போய் தின்று தின்று கொழுத்த பிறக..தன்னைச் சுற்றி உருண்டையான வலையை உருவாக்கி அதனுள் கூட்டுப்புழுவாய் ஒருமாதம் இருந்து பிறகொரு நாளில் தும்பி போன்ற உடல் அமைப்பில் சிறகுகள் விரித்துப் பறக்கும்.

குள்ளாம் பூச்சிக்கு எந்த மொழியும் பொருத்தமான பெயரில்லை! குழிமுயல்,குழிநரி, என்று தமிழிலும் குழியானை என்று மலையாளத்திலும் ANT LION என்று ஆங்கிலத்திலும் குறிப்பிடுகிறார்கள். கொங்கு வட்டார வழக்கில் குள்ளாம்பூச்சி என்கிறோம்.

உயிற்களின் படிநிலை வளர்ச்சியை இயற்கையிலிருந்தே கற்றுக்கொண்டோம்! பூச்சிகள், பறவைகள், விலங்குகள், தாவரங்கள், ஊர்வன, நீந்துவன என்று பல்லுயிர் குடும்பத்தின் உறவுகளோடு வாழ்ந்தவர்கள் தமிழர்கள்.

தும்பை, கொளுஞ்சி செடிகளைப் பிடுங்கி பட்டாம் பூச்சிகளைத் துரத்துவோம்! வெள்ளை, ஊதா நிறப் பூக்களில் வந்தமரும் பட்டாம் பூச்சிகள் அழகானவை. எவரையும் எளிதில் ஈர்ப்பவை.பிடித்துப் பார்க்கும் இயல்பான மனநிலையைத் தோற்றுவைப்பவை. அண்மையில் ஒருமலைக் கிராமத்தில் புதர்போல் மண்டிக்கிடந்த கொளுஞ்சி செடியருகே நின்றிருந்தேன்! உடனிருந்த நண்பர் இது “காளைக் கொம்பன்” என்றார். எப்படி என்றேன்? ஒரு இலையைப் பறித்து இரண்டாக பிய்த்தார். காளை முகமும் இரண்டு கொம்புகளும் கொண்ட தோற்றத்தி இலை பிய்ந்தது. வியப்போடு நூறு இலைகளைப் பிய்த்துப்பார்த்தேன். நூறு காளை முகத்தோடும், கொம்புகளோடும் இருந்தன. புதியன தேடத் தேடக் கிடைக்கும்.

காலத்திற்கேற்ப குழந்தைகளின் விளையாட்டும் அவை சார்ந்த பாடல்களும் மாற்றமடைகின்றன. இன்றைய கல்விச் சூழலில் உலகமயமாக்கப்பட்ட மேலைநாட்டு விலையாட்டுக்களில் குழந்தைகள் ஈடுபட்டாலும் மண் சார்ந்த பாரம்பரியத்தை அவைகள் பிரதிபலிப்பதில்லை! தமிழர்களின் வரலாறு, பண்பாடு, பாரம்பரியம், கலை வாழ்வியல் தடங்களில் பதிந்த சுவடுகள் மெல்ல மெல்ல அருகி வருகின்றன.

கிட்டிப்புள், சில்லுக்கரம், கிச்சுகிச்சுதாம்பாளம், கண்ணாம்பூச்சி, குலைகுலையாய் முந்திரிக்காய், பச்சைக்குதிரை, பல்லாங்குழி, தட்டாமாலை, தட்டாங்கல், கரகரவண்டி, ஒருகுடம் தண்ணி ஊத்தி.. போன்ற விளையாட்டுகளும் அதனூடே ஊடடும் பாடல்களும் புதிய தலைமுறைக்கு புரியாத வார்த்தைகள்.

இன்றைய குழந்தைகள் தெருவில் விளையாடுபவர்கள் இல்லை! தெரு வாகனங்களின் வன்முறைக்களமாய் மாறிவிட்டது. கூடி வாழ்ந்தாலும், விளையாடினாலும், கைப்பேசிகளிலும் நேரத்தை மட்டுமன்று, பொது வெளியில் கிடைக்கும் சமூக அறிவையும் சேர்த்தே இழந்து வருகிறார்கள். தமிழை மறக்கும் குழந்தைகள் பாட்டிகளையும் பிறகு அம்மாக்களையும் மறந்து விடுவார்கள். மொழி சார்ந்த நல்ல பண்பாட்டை மீட்டெடுப்போம்! அருகியும், அழிந்தும் வரும் விளையாட்டுகளுக்கும் பாடல்களுக்கும் புத்துயிர் கொடுக்க கல்விக் கூடங்கள் முன்வர வேண்டும்! மரபு சார்ந்த விளையாட்டுக்களில் மூதாதைகளின் வரலாறு இருப்பதை குழந்தைகள் உணருவார்கள். உணரச்செய்வத் பெற்றோர், ஆசிரியர்களின் கடமை! கடமையச் செய்வோம்!

நன்றி : தாய்மொழிக் கல்விச் சிறப்பு மலர், தாய்த்தமிழ் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி, திருப்பூர். தங்களது கல்விச் சிறப்பு மலர் கட்டுரையை இணையத்தில் வெளியிட அனுமதி தந்த திரு.தங்கராசு அவர்களுக்கு பஞ்சு மிட்டாய் சார்பில் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

3 Comments

Leave a comment Cancel reply