‘உலகத் தாய்மொழி நாள்’ எதை நமக்கு உணர்த்துகின்றது? – பொழிலன்

வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

பிப்ரவரி 21 ஆம் நாள் உலகத் தாய்மொழி நாள் என்று தெரிந்து வைத்திருக்கிறோம்.
வங்காள மொழி உரிமைக்காக வங்க தேச மாணவர்கள் போராடி உயிர் ஈந்த நாளினை நினைவு படுத்துகிற வகையில்தான் உலக ஒன்றிய அவை 1999ஆம் ஆண்டு உலகத் தாய்மொழி நாளென அந்த நாளை அறிவித்தது.

தங்களுடைய மொழி உரிமைக்காகப் போராடி உயிர் ஈந்த அந்த வங்க மாணவர்களுக்கு நாமும் வீரவணக்கம் செலுத்துவோம். ஆனால் அதற்கு இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பாகவே தமிழ்நாட்டில் தமிழ்மொழி உரிமைகளுக்காகப் பல ஆயிரக் கணக்கினர் போராடினர். நடராசன், தாளமுத்து ஆகியோர் போராட்டக் களத்திலேயே தங்களின் இன்னுயிர் ஈந்தனர். தாய்மொழி என்பது ஏதோ அம்மா அவர்களின் மொழி என்று பொருள் கொண்டதன்று. தாய் என்றாலே உரிமை கொண்டவள் என்று பொருள். குழந்தைகளுக்கு பிள்ளைகளுக்கு உரிமை கொண்டவளே தாய் என்ற பொருளில் தமிழில் வழங்கப்படுகிறது.

நீங்கள் தாயம் விளையாட்டு விளையாடியிருப்பீர்கள்.அதில் தாயம் போட்டால்தான் விளையாட்டுக்குள் நுழைய முடியும் என்று உங்களுக்குத் தெரியும். ஆக தாயம் என்பது விளையாட்டினுள் நுழைகிற உரிமை என்று பொருளாகின்றது. தாயம் என்பது தாய் என்ற சொல்லிலிருந்து வளர்ந்த சொல். எனவே தாய் என்பதற்கு உரிமை உடையவள் என்பது போல் தாய்மொழி என்பது உரிமையுடையதான மொழி என்று பொருளாகின்றது.

ஒருவன் தான் சிந்திக்கவும் கருத்துகளை வெளிப்படுத்தவும், எழுதிடவும் உரிமையுடைய மொழியையே தாய்மொழி என்கிறோம். தமிழர்களுக்குத் தாய்மொழி தமிழ்போல் ஒவ்வொருவருக்கும் அவரவர்களின் தாய்மொழி உரிமையுடையது.

உரிமையுடையது என்றால் என்ன?

பேசுவதற்கு எழுதுவதற்கு மட்டுமல்ல சிந்திற்பதற்கும் வாழ்வதற்கும் மொழி தேவையுடையது. மொழியில் எப்படிச் சிந்திக்கவும் வாழவும் முடியும் என்று சிலர் நினைக்கலாம். ஒவ்வொரு மொழியும், ஒவ்வொரு வகைச் சிந்தனையையும், வாழ்க்கையையும் கொண்டது. ஐரோப்பாவில் பிறந்து வளர்ந்த ஒருவர் தமிழ்நாட்டிற்கே வந்து வாழ வேண்டுமானால், தமிழ் நாட்டோடும், தமிழோடும் வாழவும் சிந்திக்கவும் வேண்டும். ஐரோப்பிய தட்பவெப்ப நிலையை தமிழ்நாட்டில் எதிர்பார்க்க முடியாதது போலவே, ஐரோப்பிய வாழ்வியல் முறைகளையும் தமிழ்நாட்டில் எதிர்பார்க்க முடியாது.

அதுபோல்தான் இங்கிருந்து அமெரிக்காவுக்குச் சென்று வாழ்கிற ஒருவர் அங்கு தமிழக வாழ்வியல் முறையில், சிந்தனை முறையில் இருந்திட இயலாது. ஆக ஒருமொழி என்பது அந்தந்த நிலத்திற்கு வாழ்வியல் முறைக்கு சிந்தனை முறைக்குத் தொடர்புடையது. காசுமீரில் இருக்கிற ஒருவர் கடல்வழியான வாழ்வியல் முறைகளைத் தெரிந்துகொள்ள வேண்டிய தேவையில்லை. எனவே கடலியல் தொடர்புடைய சொல்வளம் கொண்ட மொழியாகக் காசுமீரி மொழி இருந்திட இயலாது.

அதே போல் பனிபடர்ந்த மலைவாழ்வியல் முறைகளைக் கொண்டவர்களாகத் தமிழர்கள் இருந்திட இயலாது. நம் தமிழ்மொழியிலும் அவை தொடர்பான சொல் வளங்கள் நிறைய இருக்க வாய்ப்பில்லை. ஒரு தேசம் என்ன வகை இயற்கை அமைப்பு கொண்டதோ, வாழ்க்கை அமைப்பு கொண்டதோ அந்த அளவிலேயே அவற்றைச் சார்ந்தே அந்தத் தேச்த்தின் மொழியும் சிந்தனை அறிவும் வளர்ச்சி கொண்டிட இயலும். எனவே ஒரு தேசத்தின் தேவைக்கேற்பவே அந்தத் தேச மக்களின் வாழ்வியல் முறைகள், தொழில்கள், அத்தொழில் தொடர்பான கல்வி முறைகள் இருக்க முடியும், இருக்க வேண்டும். நாம் நம் தமிழ்நாட்டின் தேவைக்கான வாழ்வியல் முறையோடு வாழ்ந்தால்தான் நம் தமிழ்நாட்டு வளமும் வாழ்வும் உயரும். தமிழ்நாட்டின் வாழ்வியல் தேவைக்கான கல்வியை நாம் கற்கவும் முடியும்.

இன்றைக்கு நம் தமிழ்நாட்டின் வாழ்வியல் தேவைக்கான கல்வி தமிழ்நாட்டில் இல்லை அக்கல்வி தாய்மொழி தமிழிலும் இல்லை. வெளிநாட்டு நிறுவனத்தினர் ஏராளமாய் அவர்களின் சுரண்டல், கொள்ளை நலன்களுக்கான இங்கு வந்து தொழில்கள் தொடங்குகின்றனர். அந்தத் தொழில் நிறுவனங்களில் கூலிகளாக வேலைசெய்வதற்காக் அவர்கள் உருவாக்கித் தருகிற கல்வியையே நாம் படிக்க வேண்டியவர்களாகின்றோம். அதாவது, அவர்களின் தேவைக்கான கல்வியை அவர்களின் மொழியிலேயே படிக்க கட்டாயப்படுத்தப் பட்டிருக்கின்றோம். அன்றைக்கு ஆங்கிலேயன் வந்து நடத்திய வணிகத்தை எதிர்த்தார் வ.உ.சி. தொழில்களை,அதிகாரங்களை எதிர்த்தனர் திருப்பூர் குமரன் உள்ளிட்ட விடுதலை வீரர்கள். இன்றைக்கு எல்லாத் தொழில்களும், உருவாக்கங்களும் கனிமவளங்களும் வெளிநாட்டிற்கு உரிமையுடையனவாகச் சூறையாடப்படுகின்றன. குடிதண்ணீர் கூட வெளிநாட்டு நிறுவனங்களே விற்றுக் கொள்கின்றன. எனவே மண்ணின் உரிமைக்குரிய நம் தமிழ்நாட்டு மக்கள் அவர்களுக்கு முழு அடிமைகளாக மாறியிருக்கிறோம். தமிழ்நாடு வெளிநாட்டினரின் வேட்டைக் காடாக மாற்ற்ப்பட்டிருக்கிறது. எனவே தமிழ்நாட்டுக் கல்வி முறை என்பதும், தமிழர்கள் தாங்களே தீர்மானித்துக் கொள்கிற கல்வி முறையாக இல்லை. தமிழ்நாடு முழுமையும் ஒரே கல்வி முறையாகவும் இல்லை. பல கல்வி முறைகள் தமிழ்நாட்டில் மேய்கின்றன. பல்வேறுபட்ட அரசுகள் அவரவர்களின் கல்விமுறைகளை இங்குவந்து திணிக்கின்றன. அமெரிக்கக் கல்வி நிறுவனங்கள், ஜெர்மன் கல்வி நிறுவனங்கள், பிரஞஂசு கல்வி நிறுவனங்கள் எல்லாம் அந்த அந்த நாட்டுக் கல்வித் திட்டங்களைத் அவரவர் மொழிகளில் இங்கு வந்து நடைமுறைப்படுத்துகின்றன. மேலும் இந்திய கல்வி நிறுவனமும் இங்கு வந்து கல்விக்கூடங்களை நிறுவியுள்ளது.

எனவே, தமிழ்நாடு அரசு மட்டுமே கல்வி அதிகாரத்தை வைத்திருக்க முடியவில்லை. தமிழ்நாட்டுக் கல்வி முறை என்பது அதிகாரங்களை இழந்து கொண்டே வருகிறது. அதனால்தான் தமிழ்வழிக் கல்வியும் குறைந்து வருகிறது. உலகில் தாய்மொழிக் கல்வியில் உயர்வு பெற்ற நாடுகள்தாம் அரசியலாலும் பொருளியலாலும் வளர்ந்திருக்கின்றன. நம் தமிழ்நாட்டில் தாய்மொழிக் கல்வியும் இல்லாது, தமிழ்நாட்டு அரசின் கல்வி உரிமையும் இல்லாது போவதால்தான் அரசியலாலும் பொருளியலாலும் ஓர் அடிமை நாடகவே தமிழ்நாடு முடங்குகிறது.

இவற்றையெல்லாம் விழிப்படைந்து மாற்றிட வேண்டுவதே தமிழர்களின் இன்றைய கடமையாக இருக்கிறது. அக்கடமையைச் செய்ய வேண்டும் என்பதே தமிழர்களின் வாழ்வியல் கல்வி நமக்குச் சொல்லித் தரும் பாடமாகும். தாய்மொழி என்கிற உரிமைக் கல்விக்குப் போராட வேண்டும் என்பதன் வழியையே உலகத் தாய்மொழி நாள் நமக்குக் கடமையாக உணர்த்துகின்றது.

நன்றி : தாய்மொழிக் கல்விச் சிறப்பு மலர், தாய்த்தமிழ் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி, திருப்பூர். தங்களது கல்விச் சிறப்பு மலர் கட்டுரையை இணையத்தில் வெளியிட அனுமதி தந்த திரு.தங்கராசு அவர்களுக்கு பஞ்சு மிட்டாய் சார்பில் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

Leave a comment