ஆட்டிசம் – விடியலை நோக்கி! – சரவணன் பார்த்தசாரதி

வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

சில மாதங்களாகவே நான் பேருந்துகளின் பின்புறம், செய்தித்தாள்கள், தொலைக்காட்சிகள் என பல இடங்களில் ஆட்டிசத்தைக் குணப்படுத்துவதாகச் சொல்லும் ‘மாற்று மருத்துவ’ விளம்பரங்களைப் பார்த்து வருகிறேன். அவற்றில் சில, நவீன மருத்துவத்திற்கு சவால்விடுவதை நோக்கமாகக் கொண்டிருந்தன. முதலில் எது மாற்று மருத்துவம் என்பதை வரையறுத்துக்கொள்வோம். தங்களுடைய மருத்துவமுறைகளில் இருக்கும் போதாமைகளை ஒப்புக்கொண்டு, அலோபதி மருத்துவத்தின் முன்னேற்றங்களான நோயறிதல் முறைகளை ஏற்றுக்கொண்டு, அதன் வழியே நோய்களைத் தீர்க்கும் வல்லமைகொண்ட சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி போன்ற மருத்துவமுறைகளை நான் மாற்று மருத்துவம் என்று ஏற்றுக்கொள்கிறேன். நம்பிக்கையை மட்டுமே தீர்வாகக்கொண்டு செயல்படும் எந்தவொரு நோய்தீர்க்கும் முறையையும் மாற்று மருத்துவம் என்று ஏற்றுக்கொள்ளவேண்டிய அவசியம் இல்லை.

நிருபிக்கப்பட்ட அறிவியல் முறைகளை ஏற்றுக்கொள்ளாதவர்கள்தான் இப்படிப்பட்ட குணப்படுத்தும் விளம்பரங்களைக் கொடுக்கிறார்கள்.

உண்மையும் நம்பிக்கையும்

ஆட்டிசம் தொடர்பான விழிப்புணர்வு குறைவாக இருந்த நாட்களைவிடவும் இப்போது இப்படி ஏமாறும் மக்களின் எண்ணிக்கை அதிகரிக்கவே செய்கிறது. எனக்குத் தெரிந்த மெத்தப்படித்த ஒரு தம்பதியினரும் இப்படியான விளம்பரங்களை நம்பி, லட்சக்கணக்கான பணத்தை இழந்திருக்கிறார்கள். மனநல ஆலோசனைக்கு வரும் பல பெற்றோர் இப்படியான விளம்பரங்களைப்பற்றி விசாரிப்பதும் அடிக்கடி நிகழ்கிறது. அவர்களையும் குற்றம் சொல்லமுடியாது. எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலையில் இருக்கும் பெற்றோரின் ஏக்கத்தைப் புரிந்துகொண்ட சிலர், சிகிச்சை என்ற பெயரில் அவர்களிடம் இருந்து பணம் பறிக்கும் பணியைத் தீவிரமாகத் தொடங்கிவிட்டனர்.

பொதுவாக மருத்துவர்கள் ஒரு குழந்தையிடம் காணப்படும் நடவடிக்கை சார்ந்த அறிகுறிகளின் அடிப்படையில் அதற்கு ஆட்டிசத்தின் பாதிப்பு இருக்கலாம் என்ற முடிவிற்கு வருகிறார்கள். இது தொடர்பான சோதனைகள் மத்திய அரசின் நிப்மெட் (NIEPMD), நிமான்ஸ் (NIMHANS) (இவை குழந்தைகள் சார்ந்த எல்லாவிதமான பிரச்சனைகளுக்கும் சிறப்பான ஆலோசனைகளையும் வழிகாட்டவும் செய்யும் அரசு அமைப்புகள்) போன்ற இடங்களில் மேற்கொள்ளப்படுகின்றன. சோதனைகளின்போது பெற்றோர் மற்றும் குழந்தைகளிடம் தொடர்கேள்விகள் கேட்கப்படும்.

இச்சோதனைகளின் முடிவில் அவர்கள் அக்குழந்தைக்கு மருத்துவச் சோதனைக்கு உட்படுத்தக்கூடிய நரம்பியல் சிக்கல் ஏதும் இருக்கிறதா? என்று பார்ப்பார்கள். அப்படி ஏதேனும் இருந்தால் அக்குழந்தைக்குத் தேவையான மருத்துவ மேல்சிகிச்சைப் பரிந்துரைகள் வழங்கப்படுகின்றன. அப்படி அல்லாமல் ஆட்டிசம் மாதிரியான குறைபாடுகள் கண்டறியப்பட்டால் அவர்கள் அதைப் பெற்றோரிடம் தெரிவிப்பதோடு, அது எவ்வளவு தீவிரமானது என்பது உட்படப் பல தகவல்கள் அடங்கிய ஓர் அறிக்கையையும் அவர்களிடம் அளிக்கிறார்கள்.

அவ்வறிக்கையின்படி, மருத்துவர் அக்குழந்தையின் பெற்றோரிடம் அடுத்த கட்டமாக என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பதையும் எடுத்துச் சொல்வார். அப்போது அவர் இக்குறைபாடுகளைக் ‘குணப்படுத்த’ (Cure) முடியாது என்ற உண்மையைப் பெற்றோரிடம் கூறுவதில்லை. அது அப்பெற்றோருக்கு அதிர்ச்சியளிக்கும் செய்தியாக இருக்கும் என்பதால், போகப்போகச் சரியாகும் என்றே கூறுவார். ‘எப்போது?’ என்று கேட்கும் பெற்றோரிடம் பயிற்சிகளின் வழியே அக்குழந்தையைச் சராசரி வாழ்விற்கு மீட்டெடுப்பதுபற்றிப் பேசுவார். அவரது ஆலோசனையின்படி, பெற்றோரும் தங்கள் குழந்தைக்கு தேவையான ஆகுபேஷன் தெரபி, சிறப்புக்கல்விப் பயிற்சி, பேச்சுப்பயிற்சி போன்ற பயிற்சிகளை அளிக்கத் தொடங்குவார்கள்.

ஆட்டிசத்தின் தீவிரத்தன்மையைப் பொருத்தும், எவ்வளவு விரைவாக அடையாளம் காணப்பட்டு பயிற்சிகள் தொடங்கப்படுகிறதோ அதற்கேற்பவும் குழந்தைகளிடம் முன்னேற்றம் காணப்படும். பயிற்சிகளின் வெற்றி சதவிகிதம், காத்திருப்பு, சமூகம் தரும் அழுத்தம் ஆகியவை இக்குழந்தைகளின் பெற்றோரிடம் சோர்வையும், மன இறுக்கத்தையும் ஏற்படுத்துகின்றன. இந்நிலையில் மேற்கண்ட விளம்பரங்களில் இடம்பெற்றிருக்கும் ‘உடனடி விளைவு’ குறித்த சில மந்திரச்சொற்கள் அவர்களை ஈர்ப்பதில் ஆச்சர்யம் ஏதுமில்லை. இவர்கள்தான் ‘குணமாக்கும் கூட்டத்திடம்’ சென்று விழுகிறார்கள்.

பயிற்சி தவிர்த்து வேறு தீர்வே இல்லையா?

இன்றைய நிலையில் ‘இல்லை’ என்பதே கசப்பான உண்மை. இந்தியாவில் மட்டுமல்ல, உலகில் எங்குமே இதற்கு வேறு முழுமையான தீர்வுகள் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆட்டிசக் குறைபாடுகொண்டோர் உலகம் முழுவதும் இருப்பதால், அது தொடர்பான ஆராய்ச்சிகளும் பல்வேறு நாடுகளில் நடந்து வருகின்றன. ஆட்டிசத்தை விரைந்து கண்டறிவது, அவர்களின் குறைபாடுகளில் இருந்து அவர்களை மீட்டெடுப்பது, அங்கிருந்து முழுமையான தீர்வை நோக்கிப்போவது என்று பல நிலைகளில் இவ்வாராய்ச்சிகள் நடைபெறுகின்றன.

எட்டு வயதிற்குள் குழந்தைகளின் மூளை வளர்ச்சியில் பெரும்பகுதி முழுமையடைந்துவிடும் என்பதால் எவ்வளவு விரைவாக ஆட்டிசக்குறைபாட்டைக் கண்டறிகிறோமோ அவ்வளவு எளிதாக நாம் வழங்கும் தொடக்கநிலைப் பயிற்சிகளின் (Early Intervention) வழியே அவர்களைச் சராசரி வாழ்க்கை வாழச்செய்துவிட இயலும். இந்தியா உட்பட உலகம் முழுவதிலும் ஆட்டிசம் இருக்கிறதா என்று அறிய ‘நடத்தை சார்ந்த பகுப்பாய்வுகளே’ (Behavior Analysis) அதிகமாக நடைமுறையில் உள்ளன. இதற்குள் அக்குழந்தைக்கு இரண்டு அல்லது அதற்கு மேல் வயதாகிவிடுகிறது. அதன்பின் பெற்றோர் மருத்துவரை சந்திக்கும் காலம் இன்னும் தாமதப்படும்போது, குழந்தையின் முன்னேற்றமும் தாமதப்படும் என்பதை பலர் அறிவதில்லை. குழந்தையின் நடவடிக்கையில் சந்தேகம் தோன்றியதுமே பெற்றோர் மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவதே சிறந்தது.

நம்பிக்கை தரும் ஆய்வுகள்

சமீபத்தில் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் சிலர் அமெரிக்கக் குழந்தைகளிடையே ஓர் ஆய்வை நடத்தியுள்ளனர். அதன்படி, 38 ஆட்டிசக்குழந்தைகள் உட்பட 68 குழந்தைகளின் இரத்தம் மற்றும் சிறுநீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.

அதில் கண்டறியப்பட்ட தகவல்களை மென்பொருள்கள் துணைகொண்டு பகுத்து ஆராய்ந்தபோது, குழந்தைகளின் இரத்தத்தட்டுகளில் இருக்கும் ஒரு வகைப் புரதம் சிதைவதற்கும், ஆட்டிசக் குறைபாட்டிற்கும் தொடர்பு இருப்பதைக் கண்டறிந்தனர். 90 சதவிகிதத் துல்லியம் கொண்ட இம்முறையினைக்கொண்டு ஒரு குழந்தைக்கு ஆட்டிசக்குறைப்பாடு இருக்கிறதா என்று கண்டுக்கொள்ள இயலும். வருங்காலத்தில் இதன் வெற்றி விகிதம் இன்னும் அதிகரிக்கும்போது உலகம் முழுவதும் இம்முறை நடைமுறைக்கு வரும்.

மரபணு ஆராய்ச்சிகள்

ஆட்டிசம் ஏற்படுவதற்குக் காரணமான மரபணுக்கள் பற்றிய பல ஆய்வுகள் நடைபெற்றுவருகின்றன. இப்போது கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மூளை நரம்பியல் ஆராய்ச்சியாளரான அதிதி தேஷ்பாண்டே இது தொடர்பான புதிய கண்டுபிடிப்பை வெளியிட்டுள்ளார்.

மனித செல் ஒவ்வொன்றும் 23 இணை குரோமோசோம்களால் ஆனது. இவற்றைப்பற்றி ஆராய்ந்துவரும் அதிதி, அவற்றில் பொதிந்திருக்கும் மரபணுக்களில் ஏற்படும் மாற்றங்களுக்கும், மூளை வளர்ச்சிக்குமான தொடர்புகளை எடுத்துக்கூறியுள்ளார். பொதுவாக மரபணுக்கள் பிரதி எடுக்கப்படுவதும் (Copy), அழிக்கப்படுவதும் (Deletion) இயல்பாக நடக்கும் நிகழ்வுகள்தான். அப்படி ஒரு குறிப்பிட்ட மரபணுப்பகுதி அழிக்கப்பட்டுவிடும்போது, அந்தக் குழந்தையின் தலை பெரிதாகிறது. இதனால் மூளை வளர்ச்சி பாதிக்கப்பட்டு ஆட்டிசம் தோன்றுகிறது. இதற்கு மாறாக சிலசமயம் ஒன்றுக்கு மேற்பட்ட பிரதிகள் எடுக்கப்பட்டுவிடும்போது, அக்குழந்தையின் தலை சிறுத்துப்போய்விடும். இவர்களுக்கு ஆட்டிசம் ஏற்படுவதுடன், ஸ்கிட்ஸோஃப்ரேனியா (Schizophrenia) ஏற்படும் வாய்ப்பும் அதிகரிக்கிறது. இந்த இரண்டு நிலைகளுமே மூளைச்செல்களான ந்யூரான்களின் தோற்றத்தில் சில மாறுதல்களை ஏற்படுத்துகின்றன. இதனால் அவற்றின் திறன் பாதிக்கப்பட்டு, ஆட்டிசம் போன்ற வளர்ச்சிநிலைக் குறைபாடுகள் (Development Disorders) ஏற்படுவதாக அதிதி கண்டறிந்துள்ளார்.

குறிப்பிட்ட குரோமோசோமிற்கும் மூளை வளர்ச்சிக்குமான தொடர்பு உறுதிப்பட்டுள்ள நிலையில், ஏன் இப்படிப்பட்ட அழித்தல், அதிகப்பிரதி எடுத்தல் நிகழ்வுகள் நடைபெறுகின்றன என்ற கேள்விகளுக்கு விடை இல்லை. பதில் தேடும் வகையிலான ஆராய்ச்சிகள் தொடர்கின்றன. பதில் கிடைத்துவிட்டால் நம்மால் இக்குறையைச் சரி செய்யவும் முடியும் என்று சொல்லும் ஆராய்ச்சியாளர்கள் அதை நோக்கியே உழைத்து வருகின்றனர்.

மெய்நிகர் உலகம் தரும் தீர்வுகள்

ஆட்டிசத்தை விரைவாகக் கண்டறிதல் எவ்வளவு முக்கியமோ அதே அளவு பயிற்சிகளையும் விரைந்து தொடங்குதல் முக்கியம் என்பதால் அவை சார்ந்த ஆராய்ச்சிகளிலும் பல நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன.

ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டேனியல் யாங் என்ற ஆய்வாளர், இளம் ஆட்டிச நிலையாளர்களின் சமூக உறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக ஆராய்ந்து வருகிறார். ஆட்டிச நிலையாளர்கள் பொது இடங்களில் சந்திக்கும் சிக்கல்களைத் தீர்க்கும் வகையில் சில பயிற்சிகளை உருவாக்க வேண்டியது அவசியம் என்கிறார் அவர். அதன்படி பொது இடங்களில் நாம் சந்திக்கும் சூழல்களான நட்பு பாராட்டுதல், மோதல்களைத் தவிர்த்தல், சமூக விதிகளைப் புரிந்துகொள்ளல், ஏமாற்றுவோரை அடையாளம் காணுதல் போன்றவற்றைக் காட்சிகளாக மாற்றி, அச்சம்பவங்களை கணினி விளையாட்டுகளில் இடம்பெறச் செய்ய வேண்டும். பின்னர் ஆட்டிச நிலையாளர்களை இவ்விளையாட்டுகளில் பங்கேற்கச் செய்வதன் மூலம் அவர்களுக்கான சிறப்புப் பயிற்சிகளை வழங்கலாம் என்கிறார். மெய்நிகர் (virtual reality) விளையாட்டுகளில் வரும் காட்சிகளை ஒத்த சூழல் இயல்பு உலகில் நடைபெறும்போது அவர்கள் அதற்குச் சிறப்பான முறையில் மறுமொழி அளிப்பதுடன், சிக்கலான சூழலைச் சமாளிக்கும் திறனையும் பெறுவதை அவர் தனது ஆராய்ச்சிகளின் மூலம் உறுதி செய்துள்ளார்.

நாம் என்ன செய்யவேண்டும்?

நான் தொடர்ச்சியாகச் சந்தித்து வரும் ஆட்டிசக்குழந்தைகளின் பெற்றோரில் பெரும்பாலோர் உலகெங்கும் நடைபெறும் ஆராய்ச்சிகள் குறித்த விழிப்புணர்வு அறியாதவர்களாகவும் நமது ஊரில் காணக்கிடைக்கும் போலியான தீர்வுகளில் நம்பிக்கை கொண்டோராகவும் இருப்பதைக் காண்கிறேன். என்னுடைய நண்பர் ஒருவரின் குழந்தைக்கு நரம்பியல் சிக்கல் இருப்பதை உணர்ந்து, அக்குழந்தையை NIEPMD-ற்கு அழைத்துச் செல்லுமாறு கேட்டுக்கொண்டேன். அவரோ குழந்தையின் பாதத்தில் மசாஜ் செய்து நரம்பியல் சிக்கலைத் தீர்க்கும் ஒருவரிடம் அழைத்துச் சென்றார். இன்று அக்குழந்தை கிட்டத்தட்ட கைவிடப்பட்டுவிட்டது.

நரம்பியல் சிக்கல் சார்ந்த குறைபாடுகளோடு பிறந்து, முறையான பயிற்சிகளின் வழியே சமூகத்தில் சிறப்பாக வாழும் எத்தனையோ பேரை எனக்குத் தெரியும். மேற்கண்ட ஆய்வு முடிவுகளைப் பார்க்கும்போது அறிவியல் விரைவிலேயே இதற்கான நிரந்தரத் தீர்வுகளைக் கொண்டுவரும் என்று தோன்றுகிறது. அதுவரை பெற்றோராகிய நீங்கள், போலியான வாக்குறுதிகளைத் தரும் நபர்களைத் தவிர்த்துவிட்டு, முறைப்படுத்தப்பட்ட பயிற்சிகளில் கவனம் செலுத்துங்கள். அதுவே நீங்கள் அக்குழந்தைகளுக்குச் செய்யும் மிகப்பெரிய உதவி. போலியான விளம்பரங்களை யாரும் வெளியிடாதபடி அரசு தீவிர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மேலும் போலியோ விழிப்புணர்விற்கான விளம்பரங்களுக்குச் செலவிடப்படுவதைபோல், ஆட்டிச விழிப்புணர்வுக்கும் அரசு கொஞ்சம் செலவு செய்யலாம். அரசு மட்டுமல்ல, நாமும் ஆட்டிச நிலைக்குழந்தைகளுக்கும், அவர்தம் பெற்றோருக்கும் துணை நிற்போம். ஏனெனில் இது அவர்களுக்கான உலகமும்தான்.

உலக ஆட்டிச தினத்தை முன்னிட்டு எழுதப்பட்ட கட்டுரை. தினமணி நாளிதழில் வெளியானது.

நன்றி: தினமணி

Leave a comment