புத்தெழுச்சி பெறும் குழந்தை இலக்கியம் – உதயசங்கர்

வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

குழந்தைகளை வளர்க்காதீர்கள், வளரவிடுங்கள் – லெனின்

குழந்தைகள் குட்டி மனிதர்கள். கவித்துவமும் கற்பனையும் பொங்கித்ததும்பும் அந்தக்குட்டி மனிதர்களின் உலகம் விநோதப்பூக்கள் பூக்கின்ற காடு. அந்தக்குழந்தைகளின் உலகத்தில் கதை, பாடல், விளையாட்டு, என்று சிறகுகள் விரிக்கும் வானம் உதிக்கத்தொடங்கிவிட்டது. 

கடந்த மூன்றாண்டுகளில் மிக வேகமான வளர்ச்சி பெற்ற இலக்கியத்துறை என்றால் அது சிறுவர் இலக்கியத்துறை தான். பொதுவாகவே குழந்தைகள் எதையும் சுலபமாக நம்பி விடுவார்கள். அதுவும் உண்மையாகவே நம்பி விடுவார்கள். அவர்களுடைய குழந்தமை அவர்களுக்கென்று ஒரு உலகை உருவாக்குகிறது. அந்த உலகத்தில் மரப்பாச்சி பொம்மை அம்மாவாக, மகளாக, உருமாறுகிறது. மரப்பாச்சி பொம்மை பல் தேய்க்கிறது. குளிக்கிறது. பள்ளிக்கூடம் போகிறது. டீச்சரிடம் பாடம் கேட்கிறது. மரப்பாச்சிக்குக் காய்ச்சலோ வயிற்றுவலியோ வருகிறது. டாக்டரிடம் போய் மருந்து வாங்கிக் கொடுக்கிறாள் அம்மா. கசப்பு மருந்தைக் குடிக்க கஷ்டப்படுகிறது. டாக்டர் ஊசி போடும்போது அழுகிறது. தூங்க மறுக்கிறது. அப்போது அம்மா பூச்சாண்டி வந்துருவான் என்று பயமுறுத்த்துகிறாள். மரப்பாச்சி சமர்த்தாய் உறங்குகிறது. எல்லாவற்றையும் உயிருள்ள குழந்தையைப் போல மரப்பாச்சி செய்கிறது.

       இந்தப் போலச்செய்தலை குழந்தை உண்மையாக நம்புகிறது. இதில் எங்கெல்லாம் எதையெல்லாம் யதார்த்தமாய் செய்யமுடியாதோ அங்கெல்லாம் அதையெல்லாம் ஃபேண்டஸியாக மாற்றுகிறது. இரண்டடி இடத்திலேயே வீடு, பள்ளிக்கூடம், ஆசுபத்திரி, கார், பைக், என்று நொடிக்கு நொடி எல்லாவற்றையும் மாற்றுகிறது. கைக்குக் கிடைக்கிற பொருட்களின் வழியே தன் கற்பனையின் எல்லைகளை விரிப்பதில் குழந்தமைக்கு எந்த தடையுமில்லை. அது தான் குழந்தைமையின் மாயாஜாலம்.

       குழந்தை இலக்கியத்தைப் பொறுத்தவரை பல்வேறு கருத்துக்கள் வலியுறுத்தப்படுகின்றன. முதலில் இப்படியான கருத்துக்களை பொருட்படுத்தக்கூடிய சூழல் உருவாகியிருப்பது மிக முக்கியம். குழந்தை இலக்கியம் என்றாலே ஃபேண்டசியாகத்தான் இருக்க வேண்டும். ஃபேண்டசி இல்லாத கதைகளை குழந்தைகள் வாசிக்க மாட்டார்கள். குழந்தை இலக்கியம் நம்பமுடியாதவற்றை நம்பச்சொல்கிற மாதிரி இருக்கக்கூடாது. அது அறிவியல் கண்ணோட்டத்தை வளர்க்கும் விதமாக இருக்க வேண்டும். அறிவியல் சிந்தனைகளை விதைக்க வேண்டும். குழந்தை இலக்கியத்தில் நன்னெறிகளும், அறநெறிகளும் போதிக்கப்பட வேண்டும். குழந்தை இலக்கியம் யதார்த்தத்தைப் பிரதிபலிக்க வேண்டும். யதார்த்தமான படைப்புகளின்வழி குழந்தைகள் வாழ்க்கையைப் புரிந்துகொள்ள ஏதுவாக இருக்க வேண்டும். இப்படிப் பல்வேறு கருத்தோட்டங்கள் இருந்தாலும் உலகச்சிறந்த குழந்தை இலக்கியம் எல்லாம் பெரும்பாலும் ஃபேண்டசி என்று சொல்லப்படுகிற அதிமாயாஜாலக்கதைகளாக இருக்கின்றன. ஃபிரெஞ்ச் செவ்வியல் குழந்தை இலக்கிய நூலான அந்து வான் எக்சுபரியின் குட்டி இளவரசன் ஆக இருக்கட்டும் லூயி கரோலின் ஆலிசின் அற்புத உலகம் ஆக இருக்கட்டும் அல்லது மற்ற நாடுகளின் குழந்தை இலக்கியமாக இருக்கட்டும் பெரும்பாலும் ஃபேண்டசியாகவே இருக்கின்றன என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டியதிருக்கிறது.

 குழந்தைகளின் ஆளுமையில் குழந்தை இலக்கியம் மிக முக்கியமான பங்கு வகிப்பதை இப்போது பெற்றோர்கள் உணரத்தொடங்கியிருக்கிறார்கள். கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்குப்பிறகு கவனம் பெறத்தொடங்கியிருக்கும் நம்முடைய குழந்தை இலக்கியத்தின் கடந்த காலம் வளம் மிக்கது. சுமார் 50 சிறுவர்களுக்கான பத்திரிகைகள் தமிழில் வந்திருக்கின்றன. பாலியர் நேசன், பாலர் முரசு, அணில், சங்கு, டமாரம், டிங்-டாங், கண்ணன், முயல், மத்தாப்பு, பூந்தளிர், அம்புலிமாமா, கோகுலம், துளிர், காமிக்ஸ், போன்றவை அதில் சில. அதே போல 1950-களில் குழந்தைக்கவிஞர் அழ.வள்ளியப்பா அவர்களின்,முயற்சியில் குழந்தை எழுத்தாளர் சங்கம் துவங்கப்பட்டு ஏராளமான குழந்தை எழுத்தாளர்கள் எழுதிய காலமும் ஒன்றிருந்தது. சில்ட்ரன் புக் டிரஸ்ட்டின் பிறமொழி சிறுவர் இலக்கிய நூல்கள், சோவியத்திலிருந்து வெளியான சிறுவர் இலக்கிய நூல்கள், வாசிப்பெல்லையை விரிவுபடுத்தின.

குழந்தை இலக்கிய முன்னோடிகளான அழ.வள்ளியப்பாவின் மலரும் உள்ளம், நல்ல நண்பர்கள், குதிரைச்சவாரி, பெ.தூரனின் சிறுவர் கதைக்களஞ்சியம், வாண்டுமாமாவின் நெருப்புக்கோட்டை, ரேவதியின் பவளம் தந்த பரிசு, தும்பி சிறகை மடக்குமா? மா.கமலவேலனின் அந்தோணியின் ஆட்டுக்குட்டி, குழந்தைக்கவிஞர் செல்ல கணபதியின் தேடல்வேட்டை, கோ.மா.கோதண்டத்தின் வானகத்தில் ஒரு கானகம்,கவிமணியின் குழந்தைப்பாடல்கள், பூவண்ணன், ஆர்வி, தமிழ்வாணன், பெ.நா.அப்புஸ்வாமி, பூதலூர் முத்து, கூத்தபிரான், என்று ஒரு பெரிய படையே கடந்த காலத்தில் குழந்தை இலக்கியம் படைத்துக்கொண்டிருந்தார்கள். அணிலும், கல்கண்டும், அம்புலிமாமாவும் முயலும், கண்ணனும், ஆயிரக்கணக்கான பிரதிகள் எல்லோர் வீடுகளிலும் வாசித்த காலம் ஒன்றிருந்தது. அரசு நூலகங்களில் கிடைத்த எண்ணற்ற குழந்தை இலக்கிய நூல்கள், பள்ளியில் இருந்த நூலக வகுப்பு, கதைவகுப்பு நீதிபோதனை வகுப்பு, எல்லாமும் குழந்தைகளின் படைப்பூக்கத்தையும் வாசிப்பு ஆர்வத்தையும் தூண்டியது. இப்போது பள்ளிகளில் அவை இல்லை.

இன்று சமகாலத்தில் குழந்தை இலக்கியம் மறுபடியும் பரவலாக வளர்ச்சி பெற்றுக்கொண்டிருக்கிறது. என்.ஸ்ரீராம் மொழிபெயர்த்த குட்டி இளவரசன், எஸ்.ராமகிருஷ்ணன் மொழிபெயர்த்த அற்புத உலகில் ஆலிஸ், யூமாவாசுகி மொழிபெயர்த்த எண்ணற்ற மலையாள குழந்தைஇலக்கிய நூல்கள், அழகான அம்மா, மாத்தன் மண்புழுவழக்கு, அன்பின் வெற்றி, கடல் கடந்த பல்லு, ஒற்றைக்கால் நண்டு, உதயசங்கர் மொழிபெயர்த்த புத்தகப்பூங்கொத்து, புத்தகப்பரிசுப்பெட்டி, இயற்கையின் அற்புத உலகில், மீன் காய்க்கும் மரம், பறந்து பரந்து, கோ.மா.கோ. இளங்கோவின் மொழிபெயர்ப்பு நூல்கள், ஜெயந்தி சங்கரின் மொழிபெயர்ப்பு நூல்கள், சரவணன் பார்த்தசாரதியின் மொழிபெயர்ப்பு நூல்கள், போன்றவையும் ஆதிவள்ளியப்பனின் மொழிபெயர்ப்பில் வெளியான நாவலான வீரம் விளைந்தது சிறார்களுக்காகச் சுருக்கப்பட்ட வடிவமும், லெனினைப்பற்றிய நூலும் பிறமொழி குழந்தை இலக்கியத்தை தமிழுக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறன. இவை தமிழ்க்குழந்தை இலக்கியப்போக்குகளில் குறிப்பிடத்தக்க பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கின்றன.

 இரா.நடராசனின் ஆயிஷா, டார்வின் ஸ்கூல், ஜெயமோகனின் பனிமனிதன், எஸ்.ராமகிருஷ்ணனின் கிறுகிறு வானம், அக்கடா, உலகிலேயே மிகச்சிறிய தவளை, பூனையின் மனைவி, படிக்கத்தெர்ந்த புலி, எலியின் பாஸ்வேர்டு, கோ.மா.கோ.இளங்கோவின் ஜூமாவின் கைபேசி, மந்திரக்கைக்குட்டை, சஞ்சீவி மாமா, விஷ்ணுபுரம் சரவணனின் வாத்து ராஜா, விழியனின் மாகடிகாரம், வளையல்கள் அடித்த லூட்டி, டாலும், ழீயும், கடல்ல்ல், பாவண்ணனின் யானைச்சவாரி, மு.முருகேஷின் பறக்கும் பப்பிப்பூவும் அட்டைக்கத்தி ராஜாவும், யெஸ்.பாலபாரதியின் ஆமைகள் காட்டிய அற்புத உலகம், சுண்டைக்காய் இளவரசன், புதையல் டைரி, மரப்பாச்சி சொன்ன ரகசியம், உதயசங்கரின் மாயக்கண்ணாடி பேசும் தாடி, விரால் மீனின் சாகசப்பயணம், பேய் பிசாசு இருக்கா? சுகுமாரனின் வண்ணத்துப்பூச்சி சொன்ன கதை, விஜய்பாஸ்கர் விஜய்யின் காணாமல் போன சிப்பாய், பறக்கும் ஹேர்கிளிப், ரமேஷ்வைத்யாவின் அபாயப்பேட்டை, இருட்டு எனக்குப்பிடிக்கும், க.சீ.சிவக்குமாரின் புதல்வி சிவஸ்வேதா செல்வி எழுதிய பயங்களின் திருவிழா, ஆகிய நூல்கள் சமகால குழந்தை இலக்கியப்போக்குகளை பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. சுகுமாரன் எழுதிய தமிழ்க்குழந்தை இலக்கியம் என்ற நூல் குழந்தை இலக்கியம் குறித்த விவாதங்களை எழுப்புகிறது.

குழந்தைகளுக்கான பெரும் வணிகநிறுவனங்கள் நடத்துகிற சுட்டி விகடன், பட்டம், கோகுலம், பூந்தளிர் ஆகிய பத்திரிகைகளைத் தாண்டி குழந்தைகளுக்கான சிறுபத்திரிகைகள் நிறைய வந்து கொண்டிருக்கிற காலமாக இருக்கிறது. துளிர், வண்ணநதி, பஞ்சுமிட்டாய், தும்பி, குட்டி ஆகாயம், றெக்கை, வகுப்பறை, சிறார், என்று பல பத்திரிகைகள் வந்து கொண்டிருக்கின்றன.

குழந்தைகளுக்கான கலை இலக்கியக் கொண்டாட்டங்கள்  சிலபல இடங்களில் நடந்து வருகின்றன. குழந்தைச்செயல்பாட்டாளர்களாக, கதை சொல்பவர்களாக விளையாட்டுகளை அறிமுகப்படுத்துகிறவர்களாக, பலர் இந்தக்காலகட்டத்தில் முன்னெழுந்து வந்திருக்கிறார்கள். இனியன், பஞ்சுமிட்டாய் பிரபு, கதைசொல்லி சதீஷ், வனிதாகதைசொல்லி, விஷ்ணுபுரம் சரவணன், என்று பலரையும் சொல்லமுடிகிறது. இந்த மாற்றம் குழந்தைகள் குறித்த நம்முடைய சமூகத்தின் அக்கறையைக் குறிக்கிறது என்று சுட்டிக்காட்ட வேண்டியதிருக்கிறது.

குழந்தை இலக்கியத்தில் குழந்தைகளுக்கான இலக்கியம், குழந்தைகளைப்பற்றி பெரியவர்களுக்கான இலக்கியம், குழந்தைகளே படைக்கும் இலக்கியம் என்று மூன்று வகைமைகளைப் பொதுவாகச் சொல்லலாம் என்றாலும் குழந்தைகளுக்கான இலக்கிய நூல்கள், குழந்தைகளைப்பற்றிய இலக்கிய நூல்கள் வெளிவந்திருக்கிற அளவுக்கு குழந்தைகள் படைக்கும் இலக்கியம் வெளிவரவில்லை. அதற்கு முக்கிய காரணம் குழந்தை இலக்கிய நூல்களுக்கான சந்தை. குழந்தைகளுக்கு கல்வி சம்பந்தமான புத்தகங்களை வாங்கிக் கொடுப்பதையே தங்களுடைய முன்னுரிமையாகக் கொண்ட பெற்றோர்கள், குழந்தை இலக்கியப்புத்தகங்களை வாங்கிக் கொடுப்பதற்குத் தயங்குகிறார்கள். கேரளாவில் பாலசாகித்ய இன்ஸ்டிடியூட் என்ற அரசு அமைப்பு குழந்தை இலக்கிய நூல்களை அச்சிட்டு அனைத்துப்பள்ளி நூலகங்களுக்கும் கொடுக்கிறது. அதனால் மற்ற பதிப்பாளர்களும் விரிவான சந்தை கருதி ஏராளமான குழந்தை இலக்கிய நூல்களை வெளியிடுகிறார்கள். அத்தகைய ஆதரவு தமிழக அரசிடமிருந்தும் கிடைக்கும்பட்சத்தில் இன்னும் ஏராளமான குழந்தை இலக்கிய நூல்கள் வெளிவரவும் குழந்தைப்படைப்பாளிகளும் குழந்தை இலக்கிய எழுத்தாளர்களும் உருவாக வாய்ப்புகள் ஏற்படும்.

Leave a comment